குடியுரிமை சட்டத்திருத்தம் CAB – மோடி எழுப்பிய பிரிவினை சுவர்
கடந்த புதன் அன்று அமைச்சரவை ஒப்புதல் பெற்ற குடியுரிமை சட்டத்திருத்தம் திசம்பர் 10 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு மாலை சுமாராக 8:50 மணி அளவில் மாநிலங்களவையிலும் வெற்றிப் பெற்றுவிட்டது. மக்களவையில் பா.ச.க.வுக்கு 303 இடங்கள் இருக்க, மாநிலங்களவையில்தான் சட்டம் நிறைவேறாமல் தடுப்பதற்கான வாய்ப்பு இருந்தது. பா.ச.க.வின் சொந்த பலம் 83 தான். மொத்தம் 116 வாக்குகள் பெற வேண்டும். ஆனால், 125 மாநிலங்களவை உறுப்பினர்கள் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டனர். 105 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
வெவ்வேறு காலகட்டத்தில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தும் மேற்கு வங்கத்தில் இருந்து அசாமில் குடியேறியும் வாழ்ந்து வந்த இலட்சக்கணக்கான வங்காள இஸ்லாமியர்கள் தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் இடம்பெறாமல் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். அவர்களோடு நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான வங்காள இந்துக்களுக்கு குடியுரிமை கொடுக்க வழிசெய்யும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் விடுபட்ட வங்காள இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுவிட்டது. இனி அவர்களை ஊருவல்காரர்களாக அறிவித்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவதற்கு இந்தியா அணியமாகிவிட்டது.
தமிழர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் இந்த சட்டத்திருத்தத்திற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரும் பாமக உறுப்பினர் அன்புமணியும் ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டிற்கு நீங்காப் பழியைத் தேடி தந்துவிட்டனர். எலும்புத் துண்டுக்கு அழையும் நாய்களைப் போல் அதிமுக உற்ப்பினர்களும் பாமக உறுப்பினரும் தங்கள் எஜமான விசுவாசத்தை பா.ச.கவுக்கு காட்டிவிட்டனர். கோடிகளில் பொதுசொத்தைக் கொள்ளை அடிப்பதற்காக இந்நாட்டின் 20 கோடி இஸ்லாமியர்களையும் தமிழீழ ஏதிலியர்களையும் (அகதிகளையும்) ரோஹிங்கிய ஏதிலிகளையும்(அகதிகளையும்) பிற நாடுகளில் இருந்து தஞ்சம் புகும் இஸ்லாமிய ஏதிலிகளையும்(அகதிகளையும்) கைவிட்டுள்ளனர். இவர்கள் பதவி சுகத்திற்காக தமிழ்நாட்டையும் தமிழ் மக்கள் நலன்களையும் விட்டுக்கொடுப்பதில் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதை தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட வேண்டாம்.
ஏதிலிகளிடம்(அகதிகளிடம்) மதத்தைக் கேட்பதா?
நாட்டை இழந்து ஏதிலிகளாக(அகதிகளாக) இந்தியாவுக்குள் வருபவர்களுக்கு குடியுரிமை கொடுக்கும் சட்டத் திருத்தம் தான் இது. ஆனால், அப்படி நாடற்றவர்களாக வருபவர்களிடம் மதத்தைப் பார்த்து குடியுரிமை கொடுக்கச் சொல்லும் சட்டத் திருத்தம் இது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மதத்தின் அடிப்படையிலான துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்குள் தஞ்சம் புக நிர்பந்திக்கப்பட்ட இந்துக்கள், சமணர்கள், பெளத்தர்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறித்தவர்களுக்கு சட்ட விரோத குடியேறிகளாக வரையறுக்கும் சட்டங்கள் பொருந்தாது என்கிறது திருத்தம். மேலும், 2014 திசம்பர் 31 க்கு முன்பு இவர்கள் இந்தியாவுக்குள் வந்திருக்க வேண்டும். 11 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற வரையறைக்குப் பதிலாக 6 ஆண்டுகள் இருந்தாலே குடியுரிமைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிறது திருத்தம். இச்சட்டத்திருத்தம் மதரீதியான பாரபட்சம் காட்டவில்லை என்று அமித் ஷா சொல்கிறார். ஆனால்,
- இந்தியாவைச் சுற்றி பல்வேறு அண்டை நாடுகள் இருக்கும் போது வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மட்டும் தெரிவு செய்யப்பட்டதேன்? இதற்கான அடிப்படை என்ன? இம்மூன்று நாடுகள் முஸ்லிம் பெரும்பான்மை நாடு என்பதாலா? இலங்கை, பர்மா, திபெத் போன்ற நாடுகள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் அல்ல, மாறாக பெளத்த பெரும்பான்மையைக் கொண்ட நாடுகள். எனவே மத அடிப்படையிலான தெரிவே இது.
- இதே இஸ்லாமிய நாடுகளில் இருந்து அகமதியர்கள், சியாக்கள் போன்ற இஸ்லாமியப் பிரிவினரும் வேறுபாடு காட்டப்பட்டு உயிருக்கு அஞ்சி இந்தியாவுக்குள் தஞ்சம் புகுகின்றனர். குடியுரிமை வழங்குவதில் இவர்களுக்கு விலக்கு கொடுக்கப்பட்டிருப்பது ஏன்? இவர்கள் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தில்தான் மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு விளக்கம் கேட்டபோது இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”இஸ்லாமியர்கள் இஸ்லாமிய நாடுகளில் தஞ்சம் கேட்கலாம்” என்று பதிலளித்துள்ளார். அப்படியென்றால், இந்தியா இஸ்லாமியர்களுக்கான நாடில்லையா?
- உயிருக்கு தஞ்சம் கேட்டு இந்தியாவுக்கு வருபவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்துமட்டும் வருவதில்லை. வஜ்ராயனப் பெளத்தத்தைக் கடைபிடிக்கும் திபெத்தியர்கள் சீன ஆக்கிரமிப்புக் காரணமாக இந்தியாவுக்குள் ஏதிலிகளாக(அகதிகளாக) தஞ்சம் புகுந்துள்ளனர். மியான்மரில் பர்மியபெளத்தப் பேரினவாத அரசின் அடக்குமுறையால் ரோஹிங்கிய மொழி பேசக்கூடிய இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஏதிலிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கைத் தீவில் இருந்து சிங்களப் பெளத்தப் பேரினவாத ஒடுக்குமுறை காரணமாக மதத்தால் இந்துக்களும் கிறித்தவர்களுமான ஈழத் தமிழர்களும் இலட்சக்கணக்கில் இந்தியாவில் தஞ்சம் புகுந்து குடியுரிமைக்காக 35 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இவர்கள் எல்லோரையும் விலக்கி வைத்து உயிருக்கு தஞ்சம் கேட்டுவரும் ஏதிலிகளில்(அகதிகளில்) ஒருசாராருக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தம் இது. உயிருக்கு தஞ்சம் கேட்டு வருபவர்களுக்கு குடியுரிமை என்ற வாதத்திலும்கூட கள யதார்த்தம் சர்வதேச பரிந்துரைகளும் வேறாக இருக்கிறது. 1967 ஆம் ஆண்டின் ஐ.நா. மன்றத்தின் ஏதிலிகளுக்கான(அகதிகளுக்கான), நாடற்றவர்களுக்கான உடன்படிக்கையின்படி, எவர் ஒருவர் மரபின, மத, தேசிய, அரசியல் கருத்து அல்லது குறிப்பிட்ட சமூக குழுவின் உறுப்பினர் என்ற காரணத்திற்காக துன்புறுத்தல், போர் அல்லது வன்முறைக்கு உள்ளாகி தன் நாட்டை விட்டு வெளியேற நேர்க்கிறதோ அவர்கள் ஏதிலியாக(அகதியாக) கருதப்படுகிறார். இந்த அனைத்துலக வரையறையின் பரந்த முன்மொழிவுக்கும் முரணாக இருக்கிறது இந்த சட்டத்திருத்தம்.
- காங்கிரசு பிரிவினைக்கு வழிவகுத்துவிட்டதால்தான் இந்த சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது என்று எப்போதும் போல ஒரு பொய்யை அள்ளிவிட்டுள்ளார் அமித் ஷா. 1939 திசம்பரில் நடந்த இந்துமகா சபை மாநாட்டின் தலைமையுரையில் சாவர்க்கர் இரு தேசக் கோட்பாட்டை முன்வைத்துப் பேசுகிறார். உண்மையில் ஜின்னாவின் இரு தேசக் கோட்பாட்டிற்கான தீர்மானம் முஸ்லீம் லீக்கால் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது 1940 இல் தான். ”திரு ஜின்னாவின் இரு தேசக் கோட்பாட்டில் எனக்கு முரண்பாடில்லை. இந்துக்களாகிய நாங்கள் இயல்பிலேயே ஒரு தேசம் மற்றும் இந்துக்களும் முஸ்லிம்களும் இரு தேசங்கள் என்பதொரு வரலாற்று உண்மையுமாகும்” என்று 1943 இல் சாவர்க்கர் தெளிவுபடுத்தியுள்ளார். முஸ்லிம் லீக்கும் இந்துத்துவ ஆற்றல்களும் தான் இரு தேசக் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தவை. இன்றைக்கும் இந்தியா இந்துக்களுக்கு மட்டுமான நாடு, இந்துராஷ்டிரம் என்பதை எல்லாம் இலட்சியமாக கொண்டிருப்பது ஆர்.எஸ்.எஸ். தான். எனவே, இந்தியாவுக்குள் இஸ்லாமியர் மற்றும் இஸ்லாமியர் அல்லாத ஏனைய மதத்தினர் எனப் பிரித்தாளும் அரசியலுக்கு சட்டத் தகுதி கொடுக்கிறது இச்சட்டத்திருத்தம்.
- ’ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற பல்லவி பாடும் மோடி-அமித் ஷா கும்பலால் இச்சட்டத் திருத்தத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டுவர முடியவில்லை. இந்திய அரசமைப்பின் ஆறாவது பட்டியலில் வரும் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களில் உள்ள பழங்குடிகள் பெரும்பான்மையாக கொண்ட பகுதிகளுக்கு இச்சட்டத்திருத்தம் பொருந்தாது. மேலும் நுழைவுச் சீட்டு அனுமதி பெற்று உள்ளே நுழைய வேண்டிய மாநிலங்களான அருணாச்சல் பிரதேசம், நாகலாந்து, மிசோரம் ஆகியவற்றிற்கும் பொருந்தாது. எனவே, வட கிழக்கு மாநிலங்களிடம் இருந்து எதிர்ப்பை சந்திக்காமல் இச்சட்டத் திருத்தத்தை நிறைவேற்றும் பொருட்டு இந்த விதிவிலக்கை வைத்துள்ளார் அமித் ஷா. ஆயினும் அசாமிலும் திரிபுராவில் வங்க தேசத்து ஏதிலிகளுக்கு(அகதிகளுக்கு) குடியுரிமை தருவதை எதிர்த்துப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
- இச்சட்டத் திருத்தம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் வரும் உறுப்பு 14 க்கு எதிரானதாகும். உறுப்பு 14 எல்லா மனிதர்களின் சமத்துவத்தை உறுதிசெய்கிறது. அப்படியிருக்கும்போது மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் ஒரு சட்டத்திருத்தத்திற்கு அரசமைப்பு சட்டம் அனுமதிக்கவில்லை. ”அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற முடியாது” என்று கேசவானந்தா பாரதி வழக்கில் 12 நீதியர்கள் அடங்கிய உச்ச நீதிமன்ற ஆயம் தீர்ப்பளித்துள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்தம் – தேசிய குடியுரிமை பதிவேடு(என்.ஆர்.சி). – கர் வாப்சி
இந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமித் ஷா பொய் வாக்குறுதி ஒன்றை சொல்லியுள்ளார். இதன் உடனடி இலக்கு இந்த மூன்று நாடுகளில் இருந்து வந்துள்ள சில இலட்சம் ஏதிலிகளுக்கு(அகதிகளுக்கு) குடியுரிமை வழங்குவதாக இருக்கும். அதிலும் குறிப்பாக அசாமில் மேற்கொள்ளப்பட்ட குடியுரிமைப் பதிவேட்டுக் கணக்கில் விடுப்படுள்ள 19 இலட்சம் பேரில் 12 இலட்சம் பேர் இந்துக்கள் ஆவர். எனவே, இவர்களுக்கு குடியுரிமைக் கொடுத்து தனது வாக்கு வங்கியில் சேர்த்து கொள்வதும் அசாமில் உள்ள பாசகவினரிடம் எழுந்துள்ள அதிப்தியைச் சரிகட்டுவதும் இந்தச் சட்டத் திருத்தத்தின் நோக்கமாகும். ஆனால், நீண்ட கால இலக்கொன்று ஆர்.எஸ்.எஸ். க்கு உண்டு. மேற்கு வங்கத்திற்கு சென்று கல்கத்தா நகரில் நின்றபடி மேற்கு வங்கத்திலும் தேசிய குடியுரிமை பதிவேட்டுக் கணக்கெடுப்பை நடத்துவோம் என்றும் அது குறித்து இந்துக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அமித் ஷா சொன்னார். இந்துக்கள் தொடங்கி கிறித்தவர் வரை இஸ்லாமியர் அல்லாத எல்லோருக்கும் குடியுரிமை உண்டு. ஆனால், ஊடுருவல்காரர்களை விரட்டியடிப்போம் என்று சொன்னார் அவர். குடியுரிமை கொடுக்கப்படுபவர்களின் பட்டியலில் இஸ்லாமியர்களை மட்டும் விட்டுவிட்டு ஊடுருவல்காரர்களை விரட்டியடிப்போம் என்று சொன்னதில் இருந்து இஸ்லாமியர்களை ஊடுருவல்காரர்கள் என்று வரையறுத்துக் காட்டினார் அமித் ஷா. குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவோம் என்றும் சொல்லியிருந்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேட்டை நடைமுறைப்படுத்துவோம் என்று அமித் ஷா அறிவிக்கவும் செய்தார்.
எனவே, முதலில் குடியுரிமைச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, அசாமைப் போலன்றி மிக எளிதான முறையில் தேசிய குடியுரிமைப் பதிவேட்டு முறையை (என்.ஆர்.சி. யை) நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வழிவகுக்கப்படும்.
- ஒருவர் இந்துவாகவோ பெளத்தராகவோ சமணராகவோ சீக்கியராகவோ பார்சியாகவோ கிறித்தவராகவோ இருந்தால் அவரிடம் தன் குடியுரிமையை மெய்பிக்கும் காகித சான்றுகள் இல்லாவிட்டாலும் அவர் இஸ்லாமியர் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் குடியுரிமைக் கொண்டவராக மேற்படி சட்டத்தின் படி கருதப்படுவார். ஆனால், ஒவ்வொரு இஸ்லாமியரும் தான் இம்மண்ணின் மைந்தன் என்பதை மெய்பிக்கும் ஆவணத்தைக் காட்டும் நிலைக்கு தள்ளப்படுவார். அதாவது, இஸ்லாமியர் அல்லாதவர்கள் தனது ஆதார் அட்டையையோ, வாக்காளர் அட்டையோ அல்லது குடும்ப அட்டையைக் காட்டி தன் குடியுரிமையை உறுதிசெய்து கொள்வர். ஆனால், ஓர் இஸ்லாமியர் தனது தாய், தகப்பனின், பாட்டன், முப்பாட்டனின் காகித ஆவணங்களைத் தேடி அலையும் நிலைக்கு தள்ளப்படுவார். எப்படி 500 ரூ, 1000 ரூ செல்லாதென அறிவித்த போது வங்கிகளின் வாசலில் வரிசையில் நின்று தாம் கருப்புப் பணம் வைத்திருக்கவில்லை என்று மெய்ப்பிக்க மக்கள் நிர்பந்திக்கப்பட்டார்களோ அதுபோல் இஸ்லாமியர்கள் தாம் இம்மண்ணின் மைந்தர் என்று மெய்பிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
- அப்போது ஆவணங்கள் இல்லாத இஸ்லாமியர்களை நாடற்றவர்களாகப் பட்டியலிட்டு, ”நீங்கள் தடுப்பு முகாம்களுக்கு செல்லுங்கள் அல்லது கர் வாப்சியின் மூலம் தாய் மதத்திற்கு அதாவது இந்து மதத்திற்கு மாறி குடியுரிமைப் பெற்றுக்க் கொள்ளுங்கள்” என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லும்.
எனவே குடியுரிமைச் சட்டத்திருத்தம் என்பது தேசிய குடியுரிமை பதிவேடு ( என்.ஆர்.சி.) யோடும் கர் வாப்சியோடு இஸ்லாமியர்களை ஊடுருவல்காரர்களாகவும் படையெடுப்பாளர்களாகவும் அன்னியர்களாகவும் எதிரிகளாகவும் சித்திரிக்கும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தோடும் இணைத்துப் பார்த்தால்தான் இச்சட்டத் திருத்தம் எதிர்காலத்தில் விளைவிக்கப் போகும் அபாயங்களைப் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் வரலாற்றுப் பொருளில் இஸ்லாமியர்களை இன அழிப்பு செய்வதற்கான கூறுகள் இச்சட்டத் திருத்தத்தில் கருக்கொண்டுள்ளன.
இது இரண்டாம் பிரிவினை:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலேயே எல்லைக் கோடுகள் வரையப்பட்டு இரு நாடுகள் உருவாயின. அது மாந்த சமூகம் கண்டிராத மாபெரும் இடப்பெயர்வுகளை நிகழ்த்தியது. அது மட்டுமல்ல, மாந்த நாகரிகத்தின் மாறாத கரையாக மாபெரும் படுகொலைகளும் நடந்தன. இந்துக்களும் இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் மாபெரும் அளவில் படுகொலைக்கு உள்ளானார்கள். அன்றைக்கு நிலத்தில் வரையப்பட்ட அந்த பிரிவினைக் கோடு இன்றைக்கு இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் வரையப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவில் இருந்து ஏதிலிகளாக(அகதிகளாக) வருபவர்களை தடுப்பதற்காக அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சவர் கட்டப் போவதாக மோடியின் நண்பர் அமெரிக்க அதிபர் டிரம்ப். சொன்னார். சட்டத்தின் வழியாக இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமியர் அல்லாத ஏனையோருக்கும் இடையில் சுவரை எழுப்பியுள்ளார் மோடி. இது இந்தியாவில் வாழும் 20 கோடி இஸ்லாமியர்களுக்கும் ஏனைய மக்களுக்கு இடையே ஓர் உளவியல் சுவரை எழுப்பிவிடும். இந்த சட்டத்திருத்தம் உரையில் இடப்பட்ட வாளாகும். அந்த வாள் இன்னுமொரு தருணத்தில் இஸ்லாமியர்களின் குடிமக்கள் தகுநிலையை வெட்டி எறிந்துவிட்டு அடிமை சப்பாத்துப் போட்டு தடுப்பு முகாம்களில் தள்ளுவதற்கு வழிசெய்யும். எத்தனை பேர் அப்படி தடுப்பு முகாமகளுக்கு அனுப்பப்பட போகிறார்கள் என்பதல்ல கேள்வி. இந்த சட்டத்திருத்தம் தொடங்கி தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) வரையான செயல்முறையே போதும், 20 கோடி இஸ்லாமியர்கள் இந்நாட்டின் ஏனைய மக்களின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை முடிவுக்கு கொண்டுவந்துவிடும்.
இந்துராஷ்டிரப் பிரகடனம்:
இந்தியா எல்லா மதத்தினரும் சமத்துவமாக வாழ்வதற்குரிய நாடு என்ற வரையறையை அரசமைப்பு சட்டத்தின் சிற்பிகள் வகுத்திருந்தனர். அத்தகைய விருப்பதுடனேயே இந்திய விடுதலைப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய தேசம் உருவான போதும் தன்னை ஒரு மதசார்பற்ற அரசாக இந்தியா அறிவித்துக் கொண்டது. இஸ்லாமியர்களின் உரிமையையும் பாதுகாப்பையும் உயர்த்திப் பிடித்த காரணத்திற்காகவே இந்தியாவின் மாபெரும் தலைவரான காந்தி கொல்லப்பட்டார். அவர் சிந்திய இரத்தத்தினால் இந்தியா மதச்சார்பற்ற நாடென்று தன்னை அறிவித்துக் கொண்டே தனது குடியரசு வாழ்க்கையைத் தொடங்கியது.
ஆனால், அரசமைப்புச் சட்டத்தின்படி மதச்சார்பின்மை என்ற வண்ணம்பூசிக் கொண்டிருந்தாலும் இந்திய அரசும் அதிகார வர்க்கமும் சமூகப் பண்பாட்டு சூழலும் பண்பளவில் இந்துப் பெரும்பான்மைவாதக் கூறுகளைக் கொண்டே இருந்தது. இஸ்லாமியர்களுக்கு அவர்களுக்கு உரியப் பங்கை கொடுப்பதில் இந்திய அரசும் இந்திய சமூகமும் தவறியிருந்தது. பாகிஸ்தான் அரசு தன் நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையினரைப் பெருமளவில் கழித்தும் கரைத்தும் கட்டியது போல் இந்தியா தன் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களை ஒழித்துக்கட்டவில்லை என்பதையே இந்தியாவின் மதச்சார்பின்மைக்கானப் பெருமையாக மார்தட்டிக் கொண்டிருந்த ’மதச்சார்பற்ற’ கட்சிகள், இப்போது விழிப்பிதுங்கி நிற்கிறார்க.ள். ஆனால், தங்களுடைய தேர்தல் வாக்குறுதியின் பகுதி இதுவென்றும் தமக்கு மக்களின் கட்டளை இருக்கிறது என்றும் பா.ச.க. சொல்கிறது. இந்த 70 ஆண்டுகளில் இந்துப் பெரும்பான்மை வாதத்திற்கு முட்டுக் கொடுப்பதன் மூலம் வாக்குவங்கி அரசியலை செய்து கொண்டே மதச்சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாப்பதையும் வாக்கு வங்கி அரசியலாக செய்துவந்த காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போது இறுதி நம்பிக்கையாக உச்சநீதிமன்றத்தை நம்பியிருக்கின்றன. இப்படித்தான் பாபர் மசூதி வழக்கிலும் உச்சநீதிமன்றத்தை நம்பி இவர்கள் காலந்தள்ளி வந்தனர். இறுதியில் அநீதியான தீர்ப்பை வரவேற்று தமது தோல்வியை ஒப்புக் கொண்டனர்.
குடியுரிமை எல்லா உரிமைகளுக்கும் தாய் உரிமை. குடியுரிமைக் கொடுப்பதில் இஸ்லாமியர்களை விலக்கி வைக்கும் இந்த சட்டத்திருத்தம் ஏற்கெனவே அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளத்தில் இருந்துவந்த இந்துராஷ்டிர யதார்த்தத்திற்கு முத்திரைப் பதித்தாற் போன்று சட்டத் தகுதியைக் கொடுத்துவிட்டது.
முன்னதாக, முத்தலாக் சட்டம் என்பது மனைவியை விட்டுப்பிரிபவர்களில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டி, குற்றவாளிகளாக்கும் சட்டமாகும். அதுவும் இந்துராஷ்டிரத்திற்கு சட்டத் தகுதி கொடுக்கும் சட்ட ஏற்பாடாகும்.
பின்னர், இந்தியாவின் வரைப்படத்தில் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாக கொண்ட காசுமீருக்கான சிறப்பு தகுதியை உறுப்பு 370 நீக்கும் சட்டத்திருத்தத்தின் மூலம் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாக கொண்ட காசுமீர் பள்ளத்தாக்கை திறந்தவெளி சிறைச்சாலையாக்கி காசுமீரிகளை அடிமைகளாகப் பிரகடனப்படுத்தி இந்துராஷ்டிரத்திற்கு சட்டத் தகுதி கொடுக்கும் திருத்தத்தை அரசமைப்பு சட்டத்தில் உருவாக்கியது பா.ச.க. அரசு. இன்று குடியுரிமை சட்டத் திருத்தம். அடுத்து வரவிருப்பது பொதுசிவில் சட்டம். இந்த தொடர் சட்டத் திருத்தங்களின் மூலம் இந்துப் பெரும்பான்மைவாதத்தை நிறுவும் சட்டரீதியான ஏற்பாடுகளையும் இஸ்லாமியர்களுக்கு சட்டரீதியான உரிமை மறுப்புகளையும் பாதுகாப்பின்மையையும் உறுதி செய்துவிட்டாலே இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பற்றது என்ற தகுதியை இழந்துவிடும். இனி, இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் ‘மதச்சார்பின்மை’ என்பது உயிரற்ற வார்த்தையாக இருக்கும். ஆனால், உள்ளடக்கத்தில் அது ஓர் இந்துராஷ்டிரத்தின் சட்டமாக இருக்கும்.
திரிகொளுத்திவிட்ட பா.ச.க.:
மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கும் கண்ணி வெடிகளைப் போல் இந்தியா என்ற அரசியல் ஏற்பாட்டிற்குள் பல்வேறு முரண்பாடுகள் புதைந்து கிடக்கின்றன. பாகிஸ்தானை முன்மாதிரியாக கொண்டு இந்தியாவை இந்து தேசமாக்கும் நோக்கத்தில் திரி கொளுத்திக் கொண்டிருக்கும் பா.ச.க. இனிதான் இந்தியாவென்ற பூதத்தின் விளையாட்டைப் பார்க்கப் போகிறது. இன்றைக்கு அசாமும் திரிபுராவும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. காசுமீரில் மட்டும் இணையத்திற்கு தடை விதித்திருந்த பா.ச.க. அரசு இன்று மாலை முதல் அசாமிலும் இணையத்திற்கு தடை விதிக்க ஆணைப் பிறப்பித்துள்ளது. காசுமீரில் இருந்து 5000 படைவீரர்களை அசாமுக்கு மாற்றும் ஆணையைப் போட்டுள்ளது. காசுமீரும் பற்றி எரியப் போகும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. இன்னும் பலப் புதிய போர்முனைகளும் திறந்துவிடப் படும். சிறுபான்மையினரை இல்லாதொழிப்பதற்கு இந்தியா ஒன்றும் பாகிஸ்தானோ இலங்கையோ அல்ல என்பதை ஆர்.எஸ்.எஸ். புரிந்து கொண்டால் நல்லது.
”நாங்கள் மூன்றாவது பெரிய கட்சி. எனக்கு இன்னும் இரண்டு நிமிடம் பேச வாய்ப்பளியுங்கள்” என்று திரினாமூல் காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ ப்ரையன் அவைத் தலைவரிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார். இன்றளவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் செய்யக் கூடியது இதற்கு எதுவும் இல்லை.
மக்களவையும் மாநிலங்களவையும் பா.ச.க.வின் கையில் இருக்கிறது.. அமித் ஷாவே சொல்வது போல் , இந்தச் சட்டத்திருத்தம் வரலாற்றுத் திருத்தம்தான். இதை இந்தியா என்ற ஏற்பாட்டின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போர் பிரகடனமாக கருதி மக்கள் மன்றத்தில் ’உண்டு? இல்லை?’ என்ற போராட்டத்திற்கு அணியமாவதை தவிர வேறு வழியில்லை. அடிமேல் அடிவைத்து இந்திய அரசையும் இந்திய மக்களையும் பாசிசத்தை நோக்கி இட்டுச் செல்கிறது பா.ச.க. தண்ணீர் இடுப்புக்கு மேலே ஏறிக் கொண்டிருக்கிறது. மூக்கைத் எட்டும் வரை காத்திருக்கப் போகிறோமா?
– செந்தில், இளந்தமிழகம்