இந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன?

04 Dec 2019

……இந்துத்துவத்தின் நீண்ட கால இலக்கு இஸ்ரேலை போன்றதொரு இந்து தேச கட்டமைப்பே”

 

‘இந்து ராஜ்யம்’ அல்லது ‘இந்து தேசம்’  என்கிற கருத்தியலை புரிந்து கொள்வது எப்படி? அது நிகழ் கால யதார்த்தமா? அல்லது முன் நிர்ணயிக்கப்பட்ட செயல் திட்டமா? சங்க் பரிவாரிய அமைப்பினர் இந்து தேசத்தினை நீண்ட காலமாக இருந்து வரும் வரலாற்று நிலப்பரப்பாக பறை சாற்றும் அதே வேளையில் இந்தியாவை இந்து தேசமாக மாற்ற வேண்டிய தேவை குறித்தும் பேசுகின்றனர். எனவே இந்து தேச உருவாக்கம் என்பது இன்னும் நிறைவுபெறாத திட்டமாகவே கருதப்படுகிறது.

 

இன்று இந்துத்துவ சித்தாந்தம் புதிய உயரங்களை அடைந்து விட்டது. அது எல்லா நிலப்பரப்பிலும் எல்லா சமூக மட்டங்களிலும் ஒற்றை மேலாதிக்கத்தை கோருகிறது. அது இன்னும் ஆழமாக விரிவடைய வேண்டும் என்பதையே இந்துத்துவவாதிகள் விரும்புகின்றனர்.

எனில் அதன் இறுதி இலக்கு தான் என்ன? இந்து தேச உருவாக்கம் எப்போது நிறைவு பெற்றதாக கருதப்படும்? வெறும் பெயரளவில் மட்டுமில்லாமல் அதன் எல்லா சாராம்சங்களிலும் இந்துமயமாகும் வரை இந்து தேசம் முழுமையாகாது.

வரலாற்றில் மிக நீண்ட காலமாக,  இந்து தேச கட்டமைப்பு  அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் அரசின் செயல்பாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றே ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட சங்க் பரிவாரிய அமைப்புகள் நம்பினர்.

1970 களின் இடைப்பட்ட காலத்தில் இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டு இந்து தேசத்தின் அடித்தள கூறுகளை கட்டமைக்கவும் அதை நிர்மாணிக்கவும் அரசின் எல்லையற்ற அதிகாரம் ஒரு முக்கிய தேவையாக பார்க்கப்பட்டது.

இதன் விளைவாக இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒன்று ஒருபுறம் பாரதிய ஜனதாவுக்கும் ஆர். எஸ். எஸ் க்கும் இடையிலான உறவு வலுப்பெற மறு புறம் பிற சங்க் பரிவாரிய அமைப்புகளும் பாஜகவை நோக்கி நகர்ந்தது.

மற்றொன்று பாரதிய ஜனதா கட்சியின் ஒட்டுமொத்த அதிகாரமும் ஒற்றை தலைமையை நோக்கி நரேந்திர மோடி மற்றும் அவரை சார்ந்துள்ள சில குறிப்பிட்ட தலைவர்களிடம் குவிந்துள்ளது. ஆனால் பா.ஜ.க வின் ஓட்டு வங்கியை தக்கவைப்பதிலும் பரந்துபட்ட சமுதாயத்தில் ஒற்றை சித்தாந்த கொள்கையை பரப்புவதிலும் சங்க் பரிவாரிய அமைப்புகளின் தொண்டர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பாஜகவிற்கும் ஆர்எஸ்எஸ் முதலான  சங்க் பரிவாரிய அமைப்புகளுக்கும் இடையிலான உறவில் தற்போது விரிசல் ஏற்பட வாய்ப்பு இல்லை; இதன் பொருள் இந்துத்துவம் ஒருபோதும் ஒருநபர் தலைமையின் கீழ் இருக்கப்போவதில்லை.

ஆரம்பத்திலும் தொடர்ச்சியாகவும் வலது சாரிய பாசிசம் தான் பா.ஜ.க வின் கருத்தியல் என்பதை சுட்டிக்காட்டியதன் பெருமை இடது சாரி அறிஞர்களை சேரும். அவர்களும் இந்து தேசம் என்பது பாசிச அரச வடிவம் எடுக்காது என்று கருதுகின்றனர் .

தாராளவாதிகள் பா.ஜ.க வை ‘துரதிஷ்டமான மதசாயம் கொண்ட வலது சாரி’ என்ற அளவிலேயே புரிந்து கொள்கின்றனர். மேலும் மத்திய ஆட்சியினால் ஏற்படும் பொறுப்புணர்வின் மூலம் அதன் மத அடிப்படைவாதம் தளர்த்தப்படும் எனவும் நம்புகின்றனர். ஒற்றை கட்சியின் சர்வாதிகாரத்தின் கீழ் ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாக அழிப்பது  இந்து தேசத்தின் இலக்கு இல்லையெனில், பெரும்பாண்மையால் நம்பப்படும் தேர்தல் முறை தான் அனைத்து படிநிலை ஆட்சியமைப்பையும் தீர்மானிக்கும் எனில் இந்து தேசத்தின் இறுதி இலக்கு என்ன?

இனி வரும் காலங்களில் இந்திய ஜனநாயகத்தை உள்ளிலிருந்து சிதைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும் என கூறுதல் மிகையாகாது. இதை சாத்தியப்படுத்த சமூக சுதந்திரங்களில் தலையிடுதல்,ஏற்கனவே உள்ள அடக்குமுறை சட்டங்களை பயன்படுத்துதல், இன்னும் அதிகமாக பொது ஊடகங்களை கட்டுப்படுத்துதல், தேர்தல் ஆணையம்,உச்ச நீதிமன்றம் முதலிய அரசு நிறுவனங்களை விருப்ப பிரமாணங்களின் மூலம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துதல் போன்ற உத்திகள் கையாளப்படும். இந்த செயல்பாடுகள் மோடியின் முதற் ஐந்தாண்டு ஆட்சியின் தொடர்ச்சியாகவே இருக்கும்.

இந்து தேச கட்டமைப்பின் முனைப்பில் அரசியல் சாசனத்தை மீறிய புதிய சட்டங்கள் இயற்றப்படும். அச்சட்டங்கள் மற்ற சமயத்தினருக்கு இல்லாத சிறப்பு அந்தஸ்தினை இந்து சமயத்தினருக்கு வழங்குவதோடு பிற சமயத்தினரை குறிப்பாக இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தவும் வகை செய்யும்.

பா.ஜ.க வும் சங்க் பரிவாரிய அமைப்புகளும் நீண்ட காலமாக கோரி வரும் அரசியல் சாசன திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இது ஆர்டிக்கள் 370  நீக்குதலோடு  நின்று விடப்போவதில்லை நேபாளை போல் நாடு மதச்சார்பற்றதாக இருப்பினும் இந்து மதத்திற்கு சிறப்பு சட்டங்களின் மூலம் தனி அந்தஸ்தினை வழங்கும் வரை நீடிக்கும்.

இந்துத்துவத்தின் நீண்ட கால இலக்கு இஸ்ரேலை போன்றதொரு இந்து தேச கட்டமைப்பே. இதை கிறாஸ்டாஃபர் ஜாஃப்ரேலோட் உள்ளிட்ட அரசியல் ஆய்வாளர்கள் அங்கீகரிகின்றனர். எனினும் அவர்கள் இஸ்ரேல் யூத தேசமாக விளங்க அங்கு வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை நியாயப்படுத்தும் விதமாக பேராசிரியர் ஸாமி ஸ்மூகா இஸ்ரேலை ‘இன ஜனநாயகம்’ என்றழைப்பதன் அபாயகரத்தையும் விளக்குகின்றனர்.

ஆம் இஸ்ரேலில் ஜனநாயகமற்ற நிலை இருப்பினும் அது ‘இன ஜனநாயகம்’ என்கிற பெயரில்   இஸ்ரேல் ஆதரவு தாராளவாதிகளாலும் மேற்கத்திய நாடுகளாலும் ஜனநாயகமாக பிரகடண படுத்தப்படுகிறது. மேலும் இந்த மேற்கத்திய நாடுகள் தான் வெள்ளையர் அல்லாதவர்கள் தென் ஆப்ரிக்காவில் இரண்டாம் தர குடிமக்களாக  நடத்தப்படுவதை விவாதித்த படியே அது தான் தெற்கு ஆப்ரிக்காவின் ஒரே ஜனநாயக நாடென்று வாதிட்டனர்.

இந்து தேசம் என்பது அடிப்படையில் ஜனநாயக தன்மையற்ற நாடாகவும் சமூகமாகவும் இருக்கும். ஆனால் அதன் மதப் பெரும்பாண்மையினருக்கு அது ஜனநாயக உரிமைகளையும் அதைத் தாண்டிய உரிமைகளையும் வழங்கும். அது இஸ்ரேலைப் போல் ஜனநாயக தன்மையற்ற தேசமாக இருப்பதோடு கூடுதலாக ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் சாதிய கட்டமைப்போடும் இருக்கும்.

இஸ்ரேலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,  வலது சாரியோ இடது சாரியோ அல்லது நடுநிலை கட்சிகளோ, அது அடிப்படையில் யூத தேசம் என்பது மாறாது.  இந்துத்துவாவும் அது போன்றதொரு இந்து தேச கட்டமைப்பினை உருவாக்கவே முயலும்.

இதன் அடிப்படையில் இஸ்ரேலும் இந்தியாவும் இரண்டு புள்ளிகளில் ஒத்திருக்கின்றன.

ஒன்று இஸ்ரேலின் எந்தவொரு கட்சியும் அதனால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளுக்கு சுய அதிகாரத்தை வழங்காது. சர்வதேச சட்டங்களின் படி ஜம்மு காஷ்மீரின் நிலை பாலஸ்தீனத்தில் இருந்து வேறு பட்டு இருந்தாலும் அதற்கு இணையாகவே இந்தியாவின் எந்த கட்சியும் காஷ்மீர் இணைக்கப்பட்ட போது உறுதியளித்த தன்னாட்சியை மதிப்பதில்லை, அரசியல் சாசனத்தின் படி அதன் மக்களை சக இந்தியர்களாகவும் கருதுவதில்லை.

இஸ்ரேலிய மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தினருக்கு மக்களை விட நிலமே பிரதானம். இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதான அதன் ஆக்கிரமிப்பை தளர்த்தும் படி  சர்வதேச சட்டங்கள் கோரியதற்கு இணங்க எளிதில் திரும்பப் பெற கூடிய சுயாட்சியை வழங்கி அதன் மூலம் இன்னும் அதிகமான பகுதிகளை தனது கட்டுக்குள் வைக்க முயல்கிறது. அதே வேளையில் பா.ஐ.க, காஷ்மீர் சுயாட்சிக்கு அடித்தளமான இந்திய அரசியல் சாசன பிரிவு 35A மற்றும் 370 யை நீக்கியது.

மத்தியில் ஆண்ட பிற‌ கட்சிகள்  காஷ்மீருக்கு 1947ல் உறுதியளித்த சுயாட்சியை படிப்படியாக தளர்த்த பா.ஐ.க அதை முழுமையாக நீக்கியது.

இஸ்ரேலுக்கும் இந்தியாவிற்கும் உள்ள ஒற்றுமையில் இரண்டாவதாக இஸ்ரேல் உலகெங்கும் வாழும் யூத மக்கள் இஸ்ரேலில் குடியமவற்வதற்கான உரிமையை அதன் குடியுரிமை சட்டத்தின் ஒரு அங்கமாக வைத்துள்ளது. அதே போல் பா.ஜ.க வும் குடிமக்கள் திருத்த மசோதாவின் மூலம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் வாழும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்தியாவில் குடியேறுவதற்கான உரிமையை வழங்க பரிசீலிக்கிறது. அது நாளைடைவில் தெற்கு ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்த படலாம்.

எனினும் இந்த இரண்டு கொடும் பிரிவினைவாத நாடுகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது.

இஸ்ரேல் தற்போது இருக்கும் இஸ்லாமிய வெறுப்பு அலையில் பயணித்தாலும் அதன் முழுமுதல் எதிரி இஸ்லாம் அல்ல மாறாக பாலஸ்தீனியர்கள்.. அவர்கள் இஸ்லாமியர்களானாலும் கிருஸ்தவர்களானாலும் நாத்திகர்களானாலும். எனவே ஒப்பீட்டளவில் அது ஒப்பீட்டளவில் மத சகிப்புத்தன்மை கொன்ற அரசாக விளங்கக்கூடம்.

மாறாக இந்துத்துவாவின் அடிப்படையே இஸ்லாமிய வெறுப்பு எனவே இந்து தேசம் என்பது மத சகிப்புத் தன்மையற்ற நாடாகவே அமையும்.

நாம் இன்னும் அந்த நிலையை அடைய வில்லை எனினும் அதற்கான அபாய ஒலி சத்தமாக ஒலிக்க தொடங்கியுள்ளது.

 

( ‘The Wire’ மின்னிதழுக்காக ‘அச்சின் வானிக்’ எழுதிய கட்டுரையிலிருந்து மொழிபெயற்க்கப்பட்டது.)

தமிழில் : சர்ஜுன்

 

RELATED POST
1 comments

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW