பாத்திமாவுடைய தாயின் கண்ணீர் மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பட்டும்!   

17 Nov 2019

”போரை மனிதர்கள் விரும்புவார்களே ஆனால் இந்த உலகம் என்றோ அழிந்திருக்கும் ஆகையால் போருக்கு எதிராக மக்கள் நிற்பார்கள்” என்ற பொருள்பட காந்தி சொன்னார். அதுபோல், இத்தனை முரண்பாடுகள் நிரம்பிய இந்நாட்டில் மக்கள் மனசாட்சிக்கு அஞ்சாதவர்களாய் இருப்பார்களேயானால் இந்நாடு என்றோ சுடுகாடு ஆகியிருக்கும். எனவே, நான் மக்களின் மனசாட்சியை நம்பித்தான் இதை எழுதுகிறேன். ஒருவேளை என் அம்மா, அம்மாச்சி, சித்தி, அத்தை, தங்கை ஆகியோர் ஒரே ஒரு நொடிப் பொழுது பாத்திமாவின் அம்மாவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார்களாயின் அவர்கள் நிச்சயமாக இந்த ‘புதிய இந்தியாவை’ புறக்கணிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன். எனவே, அவர்களின் மனசாட்சியிடம் தான் இந்த மன்றாடல்.

நவம்பர் 9 –  பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு தீர்ப்பு கொடுக்கப்பட்ட அதே நாளில் அதே காலையில் சென்னை ஐஐடி விடுதியில் 19 வயது இஸ்லாமியப் பெண் மின்விசிறியில் தொங்கியபடி பிணமாக கிடந்தாள். இவை இரண்டும் ஒரே நாளில் நடந்தேறியது தற்செயலானதுதான். ஆனால், பாபர் மசூதி தீர்ப்பின் அநீதியை உருவகப்படுத்துவது போல் பாத்திமா சாகடிக்கப்பட்டிருந்தாள். இந்நாட்டில் கட்டமைக்கப்பட்டு வரும் இந்துப்பெரும்பான்மைவாதம்தான் பாபர் மசூதி தீர்ப்பையும் பாத்திமாவின் முடிவையும் தீர்மானித்ததாகும்.

அச்சுறுத்தலின் வழியாக இந்த தீர்ப்பை ஏற்காதவர்களின் வாயடைப்பதில் வெற்றி கண்டார்கள் ஆட்சியாளர்கள். பாபர் மசூதி கட்டப்பட்ட காலந்தொட்டு இன்றுவரையிலான சுமார் 500 ஆண்டுகளில் அயோத்தியில் அந்த 2.77 ஏக்கர் நிலத்தில் இராமனுக்கு கோயில் இல்லாததால் இந்நாட்டு மக்கள் ராமனை வழிபடாமலும் இல்லை, இராமன் மீதான பற்று மக்களுக்கு குறைந்துவிடவும் இல்லை. எனவே, மதவெறிக்கு ஆட்படாத பெரும்பான்மை ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு மற்றுமொரு செய்தியாகவே இந்த தீர்ப்பு கடந்துபோனது. அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதையும் மக்கள் கடந்து போனது என்பது மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தோல்வியாகத்தான் காட்சி தருகின்றது. ஆனால், பாத்திமாவின் சாவை மோடி-அமித் ஷா கூட்டணியால் மூடிமறைக்கவோ அல்லது அழுபவர்களின் கண்ணீரைத் தடுக்கவோ அல்லது கேள்விகேட்போரின் வாயை அடைக்கவோ முடியவில்லை. எச்.ராஜா, அர்ஜுன் சம்பத், நாராயணன், ராகவன் வகையறாக்கள் எல்லாம் இதுபோன்ற தருணங்களில் காணாமல் போய்விடுகின்றனர்.  எத்தனை காலம்தான் அழுகிக் கொண்டிருக்கும் இந்தியாவைப் ’புதிய இந்தியா’ எனப் படம்பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கமுடியும். அழுகலில் இருந்து வெளிப்படும் வாடையை இருட்டடிப்பு செய்தா மறைத்துவிட முடியும்?

பாத்திமா தற்கொலை செய்து கொண்டாள் என்று சொல்லப்படுகிறது. தன் சாவுக்கு காரணமாக அவள் சொல்லும் பேராசிரியர் துன்புறுத்தினாரா? அது மதரீதியான பாகுபாடா? அது எந்தவகையான துன்புறுத்தல்? என்பதெல்லாம் காவல்துறை விசாரணையில் தெரியவரக்கூடும். ஆனால், ’திரு மோடி’ ஆட்சிக்கு வந்த காலந்தொட்டு பாத்திமாவுடைய அம்மாவின் நெஞ்சில் தொற்றிக் கொண்டுள்ள அச்சத்தைப் புரிந்துகொள்ள எந்தப் புலனாய்வும் தேவையில்லை. மகளின் சாவைப் பற்றி சொல்லும்போது அவர் பின்வருமாறு சொல்கிறார்.

”எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.

முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதரணமாக கும்பல் படுகொலை(Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன்.  அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.”

பத்தொன்பது ஆண்டுகள் பாராட்டி, சீராட்டி வளர்த்த மகள் படிக்கப்போன இடத்தில் பிணமான நிலையில், ஒரு தாய் மேற்படி கருத்துகளை இந்த சமூகத்தோடு பகிர்ந்துகொள்கிறார். அவர் பாத்திமா லத்தீப்பின் தாய். அதாவது ஓர் இஸ்லாமியப் பெண்ணின் தாய். இரவு நேரத்தில் பெண்ணை வெளியூருக்கு தனியாக அனுப்பினாலோ அல்லது இரவு நேரத்தில் மகள் வெளியில் இருந்து வீட்டிற்கு வருவதானாலோ இந்தியத் தாய்கள் தன் மகள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று கவலை கொள்வார்கள். ஆனால், இரவோ பகலோ தன் மகளின் பெயரே அவளது பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் என்று ஒரு தாய் கருதுவாளானால் அவள் மனம் ஒவ்வொரு கனமும் எவ்வளவு பதைபதைக்கும்? தன் மகன் அல்லது மகள் அணியும் ஆடையே அவளைக் கொலை செய்வதற்கு வழிவகுக்குமானால் தாய் தன் பிள்ளையை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு எந்த நிலையில் இருப்பாள்? அவளால் நிம்மதியாக தூங்க முடியுமா? நிம்மதியாக சாப்பிட முடியுமா? தன் மகன் முகத்தில் வைத்திருக்கும் முடியின் அளவு அவன் கதையையே முடித்துவிடக் கூடும் என்று ஒரு தாய் அஞ்சுவாளாயின் இந்த நாட்டில் நடந்து கொண்டிருப்பதென்ன? தலையில் போட்டிருக்கும் குல்லாவோ நெற்றியில் பூசியிருக்கும் திருநீறு , குங்குமம் ,நாமம் அல்லது செந்தூரமோ அல்லது கழுத்தில் கட்டியிருக்கும் டாலரோ, கையில், காலில் கட்டியிருக்கும் கயிறோ தன் மகனையோ மகளையோ அடையாளம் காணச் செய்து சாகடிக்கச் செய்யுமாயின் அந்த தாய் தன்னுடைய பிள்ளை வீட்டுக்கு வெளியே இருக்கும் ஒவ்வொரு நொடியும் செத்துசெத்துப் பிழைக்க மாட்டாளா?

ஒரு கணம் நெஞ்சில் கைவைத்து பாத்திமாவின் இடத்தில் உங்களுடைய மகனையோ மகளையோ எண்ணிப் பாருங்கள். அவரது தாய் விவரித்த எதுவும் உங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படக் கூடுமாயின் இந்நாட்டில் ஏன் இப்படி நடக்கிறது என்று சிந்திக்க மாட்டீர்களா? தனக்காக மட்டுமே கண்ணீர் சிந்துவதற்காக மனிதனின் கண்கள் இன்னும் பழக்குவிக்கப்படவில்லை. அது ஒருவரது மதத்தாலோ இனத்தாலோ நிறத்தாலோ அன்றி அவரது மனத்தின் அளவால்தான் தீர்மானிக்கப்படுகின்றது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

வாரணாசியில் தன் மகளுக்குப் பாதுகாப்பு இருக்காது, தமிழ்நாட்டில் தன் மகளுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்று நம்பித்தான் சென்னை ஐஐடியில் பாத்திமாவை சேர்த்தார் அவரது அம்மா. படிப்புதான் எல்லாம் என்று கருதும் பாத்திமா ஓர் இஸ்லாமியர் என்ற காரணத்தினால் வாரணாசியில் பாதுகாப்புடன் படிக்க முடியாதெனில் அங்கு நடந்து கொண்டிருப்பதென்ன என்று கேள்வியை எழுப்ப வேண்டாமா? ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. வலுப்பெற்றிருக்கும் மாநிலங்களில் அதாவது சட்டமன்ற இடங்களைக் கணிசமாகப் பெற்றிருக்கும் மாநிலங்களில் அல்லது குஜராத், அரியானா, இராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் ஒர் இஸ்லாமியர் பட்டபகலில் வெட்டவெளிச்சத்தில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்படுவதற்கு அவர் ’இஸ்லாமியர்’ என்ற காரணமே போதும் என்ற நிலை இருக்கிறது. அம்னெஸ்டி அறிக்கை, அமெரிக்க அரசின் மனித உரிமை அறிக்கை, ஐநா மனித உரிமை ஆணைய அறிக்கை ஆகியவற்றில் மோடி தலைமையிலான பா.ச.க.வின் ஆட்சியில் ’வன்கும்பல் அடித்துக்கொலைகள்(mob lynching)’ அதிகரித்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய போது அவற்றை நிராகரித்தது இந்திய அரசு. ஆனால், பாத்திமாவின் அம்மாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை எப்படி நிராகரிக்கப் போகிறார்கள்?

’இந்நாட்டில் பாதுகாப்பு இல்லையே’ என்று அஞ்சிக் கொண்டிருப்பவர்கள் நேற்றுமின்றும் நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள். நம்மோடு பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாய் படித்தவர்கள், பணியிடங்களில் உடனிருப்பவர்கள். நம்மிடம் மளிகை பொருட்களை விற்றவர்கள், வாங்கியவர்கள். நாம் மசூதிக்கு பிள்ளையைக் கூட்டிச் சென்று மந்திரிக்கச் சொல்லி கேட்பதில்லையா? திடீரென்று ஒரு நாளில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதும் நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியவர்கள் யார்? அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடிக் கொண்டு ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு ’நல்ல காலம் ஒருநாள் வரும்’ என்று நம்பிக் கொண்டிருக்கும் மக்களா? தெருமுனையில் இருக்கும் முனீஸ்வரனைக் கும்பிட்டு,  பேருந்து நிறுத்தத்திற்கு போகிற வழியிலிருக்கும் மாரியம்மன் கோயிலைக் கடக்கும்போதும் ஒரு கும்பிடு போட்டுக் கொண்டே, ஐப்பசியில் வந்து கெடா வெட்டுவதாகக் குலதெய்வக் கோயிலில் வேண்டிக் கொண்டதை நினைத்துக் கொண்டே ஒரு நாளைத் தொடங்கும் மக்களா? இல்லை.

இந்த அச்சவுணர்வை விதைத்தது யாரோ அதைப் பரப்பியது யாரோ அவர்கள்தான் அதை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். மதத்தை அரசியல் ஆக்கியவர்கள். அரசியல் வியாபாரத்திற்கு கடவுள் ராமனைத் துணைக்கழைத்தவர்கள்.  ஞானிகளும் துறவிகளும் அணிந்த காவி ஆடையை மனித இரத்தத்தில் நனைத்து களங்கப்படுத்தியவர்கள். மனிதர்களைக் கொல்வதையும் மசூதியை இடிப்பதையும் ‘இயக்கமாக’ முன்னெடுத்தவர்கள். பசுப் பாதுகாப்பென்ற பெயரால் மாந்தக் கொலைகளை   செயல்திட்டமாக்கியவர்கள். இன்று ஆட்சியில் இருக்கும் இந்த சக்திகள்தான் ஒரு நூற்றாண்டு உழைப்பின் வழியாக வெறுப்பை மக்களது மனங்களில் வெற்றிகரமாக விதைத்துவிட்டவர்கள்.

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் காணாமலடிக்கப்பட்ட நஜீம், மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரால் அடித்துக் கொல்லப்பட்ட அக்லக், ஜுனைத், ’ஜெய் ஸ்ரீராம்’ எனச் சொல்ல மறுத்ததால் அடித்துக் கொல்லப்பட்ட தப்ரிஸ் அன்சாரி. என உறவை இழந்த இஸ்லாமியர்களின் விசும்பல் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருக்கிறது. அவர்தம் உள்ளக் குமுறல் ஒரு நாள் பேரிடியாக ஒலிக்கத்தான் போகிறது.

சோழ நாட்டில் பிறந்து பாண்டிய நாட்டுக்கு நீதி கேட்டு வந்த கண்ணகி கடைசியில் சேர நாட்டுக்கு போனாளாம். அவளது கண்ணீர் மதுரையை எரித்தது என்று நம்புகிறோம். அந்த ஐதீகத்தின்படி சேர நாட்டைச் சேர்ந்த பாத்திமா தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு வந்திருந்து அநியாயமாக செத்துப்போனாள். பாத்திமாவின் தாய் கண்ணீரோடு நீதிகேட்டு வந்துள்ளார். கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல் இந்த தாயின் கண்ணீர் ஒரு நாள் தில்லியை எரிக்கத் தான் போகிறது. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வம் தேய்க்கும் படை என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே.

ஆனால், என்னுடைய கவலையெல்லாம் என்னுடைய குடும்ப உறவுகளும், பள்ளி – கல்லூரி – அலுவலக நண்பர்களும் எந்தப் பக்கம் நிற்கப் போகிறார்கள் என்பதுதான்.  பாத்திமாவுடைய அம்மாவின் கண்ணீர் பேட்டி ஒரு தாயின் கண்ணீர் மட்டுமல்ல, இஸ்லாமியர்தம் மனசாட்சியின் குரல். இஸ்லாமியர்களிடையே எழுந்துள்ள அச்சவுணர்வு போக்கப்பட வேண்டும் என்று இவர்கள் எல்லாம் சொல்லப்போகிறார்களா? என்பதுதான் எனக்கிருக்கும் பதைபதைப்பு. அவர்களின் மனசாட்சி உயிர்ப்புடன் இருக்கும் என்றே நம்புகிறேன். கண்ணீரோடும் , விசும்பலோடும் நிற்கும் தாய்மார்களின் அச்சவுணர்வு துடைக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், தாயுணர்ச்சியும் தந்தையுணர்ச்சியும்  சாதி, சமயம், இன, நிறம் கடந்தது மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் உரியது!

 

-செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW