சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பின் நிறுவனப் படுகொலையிலாவது நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம் 

14 Nov 2019

ஐஐடியில் மாந்தநேயத் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்துவந்த கேரள மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஐஐடி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாகுபாடற்ற கல்விச்சூழலை உருவாக்கத் தவறிய ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு தமிழத்தேச மக்கள் முன்னணியின் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாத்திமாவின் தந்தை கேரள முதல்வருக்கும் பிரதமருக்கும் தனது மகளுக்கு நேர்ந்தது குறித்து கடிதம் எழுதியதைத் தொடர்ந்து கேரள் முதல்வர் தமிழக முதல்வரிடம் விசாரணைக்கு ஆணையிடுமாறு கேட்டுக்கொண்ட பிறகே காவல்துறை விசாரணை நடந்துவருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஐஐடியில் ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சூழல் சாதி-மதரீதியாகப் பாகுபாடுக் காட்டக்கூடியதாகவே இருந்துவருகிறது. அரும்பாடுபட்டு படித்து அந்த இடத்திற்கு செல்லும் தலித் மாணவர்கள், மதச் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், பெண்கள் ஆகியோர் உயர்கல்வி நிறுவனத்தில் நிலவும் அப்பட்டமான பாகுபாடுகள் காரணமாக படிப்பைப் பாதியில் நிறுத்தவோ அல்லது தற்கொலை செய்துகொள்ளவோ தள்ளப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக, கடந்த 2014 இல் மோடி தலைமையிலான பாசக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உயர்கல்வி நிறுவனங்கள் உயர்சாதியினரின் கோட்டையாகவும் துணிகரமானப் பாடுபாடுகள் நிரம்பிய சூழலாகவும் தொடர்ந்து வருகின்றன. பாடத் திட்டம் மட்டுமின்றி கல்வி நிலையங்களின் அனைத்து உறுப்புகளும் காவிமயமாகி வருகிறது. புதியக் கல்விகொள்கையை அமலாக்குவதன் மூலம் ஒட்டுமொத்த கல்வியுரிமையையும் மைய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு சென்று உயர்கல்வியை முழுக்கமுழுக்க தனியார்மயமாக்குவதைத் தீவிரப்படுத்தியுள்ளது மைய அரசு.

நிறுவனப் படுகொலையைப் பொருத்தவரை ஐதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர் ரோகித் வெமுலா 2016 இல் தற்கொலை செய்து கொண்டார். பல்கலைக் கழக துணைவேந்தர் அப்பாராவ் தண்டனைக்குள்ளாக்கப்பட வில்லை. ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் படித்து வந்த நஜீம் 2016 ஆம் ஆண்டு காணாமலடிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை மீண்டு வரவே இல்லை. சென்னையில் படித்துவந்த ஓவியக் கல்லூரி மாணவர் ஜோயல் பிரகாஷ் 2017 இல் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்திலும் அவரைத் துன்புறுத்திய பேராசிரியர் தண்டிக்கப்பட வில்லை. இந்நிலையில்தான் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள ஐஐடியில் பாத்திமாவின் நிறுவனப் படுகொலை நடந்துள்ளது.

தனது மரணக் குறிப்பில் தன் சாவுக்கு காரணம் இணைப்பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் என்றும் அது குறித்த விவரங்களைத் தனது அலைபேசியில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. மேலும் அவர் தன் பெற்றோர்களிடம் தான் முஸ்லிமாக இருப்பதே பிரச்சனை. என் பெயரே ஒரு பிரச்சனை என்று வருந்தியிருக்கிறார். தான் முஸ்லிமாக இருப்பதால் தன்னிடம் பாகுபாடுகாட்டப்பட்டதாக அவர் தன் பெற்றோர்களிடம் கவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரது அலைபேசியை அவரது சகோதரியிடம் கொடுக்க மறுக்கிறது காவல்துறை. அவரது பெற்றோர் ”எப்படியும் நாங்கள் நீதியைப் பெற்றே தீருவோம், இல்லையென்றால் நாங்கள் வாழ்வதற்கே பொருளில்லை” என்று சொல்லியுள்ளனர். பாத்திமாவுக்கு வாரணாசி ஐஐடியில் இடம் கிடைத்திருந்த நிலையில் அங்கு வன்கும்பல் அடித்துகொலைகள் வாடிக்கையாய் இருப்பதால் அங்கே படிக்க வேண்டாம் என்று அவர்கள் தடுத்துள்ளனர். தமிழகம் பாதுகாப்பான இடம் என்று நம்பியே அவர்கள் சென்னை ஐஐடியில் படிக்க அனுப்பியுள்ளனர். பொதுவாக தமிழகத்தில் ஒப்பீட்டுரீதியானப் பாதுகாப்பு மதச்சிறுபான்மையினருக்கு உண்டு என்றாலும் ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்கள் அந்த நம்பிக்கைக்கு எதிரானதாக இருக்கின்றன. எத்தனை நிறுவனப் படுகொலைகள் நடந்தாலும் குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பித்துவிடுவதோடு எவ்வித தன்னுணர்வும் இன்றி ஆசிரியர் பணியையே இழிவுப்படுத்தும் வகையில் சாதி-மத பாகுபாடுகளைக் கடைபிடித்துவருகின்றனர். பாத்திமா சாவிலும் இது நேர்ந்துவிடக் கூடாது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இணைப் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மீது வழக்குப் பதிந்து கைதுசெய்ய வேண்டும். காவல்துறை விசாரணை இடையூறின்றி நடப்பதற்கு ஏதுவாய் ஐஐடி நிர்வாகம் பேராசிரியர் சுதர்சனைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் ஐஐடி க்குள் நிலவும் சாதி-மதப் பாகுபாடுகள் குறித்த பொதுவிசாரணை ஒன்றை நடத்தி கல்விச் சூழலை சனநாயகப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். மாணவர்கள் இதுபோன்ற பாகுபாடுகளுக்கு எதிராகப் போராட முன்வர வேண்டுமே அன்றி தற்கொலை செய்துகொள்ளும் முடிவைக் கைகொள்ள கூடாது.

கல்வி நிலையங்கள் காவிமயமாகி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்துப்பெருபான்மைவாதத்தை வாழ்வின் அத்தனை துறைகளிலும் கட்டமைப்பதன் மூலம் ஒரு சமூக நெருக்கடியை இந்துத்துவ ஆற்றல்கள் உருவாக்கி வருகின்றன. இந்த சமூக நெருக்கடி இது போன்ற நிறுவனப் படுகொலைகளுக்கும் மெளனமாக ஒடுக்குமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கும் வழிவகுத்து வருகின்றது. இந்துமதப் பெரும்பான்மைவாதம் வெகுவேகமாக கட்டமைக்கப்பட்டு வருவதை தடுத்து நிறுத்துவதற்கானப் போராட்டத்தை சனநாயக ஆற்றல்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

பாலன், பொதுச்செயலாளர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW