ஆங்கில மொழி சமூக நீதிக்கானதா? பாசிச எதிர்ப்பு இயக்கத்தில் சனநாயகத்தின் வரம்பென்ன?

27 Sep 2019

அண்மையில் அமித் ஷா இந்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பேசிய பேச்சை ஒட்டி எழுந்த விவாதங்களில் இரு மொழிக் கொள்கை, hindi never, English ever, திமுக வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தியைச் சொல்லித் தருவது, தொடர்பு மொழி ஆகியவைப் பேசுபொருளாக இருந்தன.

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ‘hinid never English ever’ என்று எழுப்பப்பட்ட முழக்கம் சரிதானா? பா.ச.க. வை எதிர்க்கும் பொருட்டு திமுக வின் தவறான மொழிக் கொள்கையை ஆதரிப்பதா? மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதற்காக இருமொழிக் கொள்கையை ஆதரிப்பதா?  இதில் முற்போக்கான ஆற்றல்களிடமும் முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.

Hindi never, English ever

”’Hindi never, Tamil ever’ என்று முழங்காமல் ’hindi never English ever’ என்று திமுக முழங்கியது” என்று விமர்சனத்தை எதிர்கொள்ளும் திமுக ஆதரவு ஆற்றல்கள், இந்தி தவிர வேறெந்த மொழியும் ஆட்சி மொழியாகாத நிலையில் திமுக வை எப்படி குறை சொல்ல முடியும் என்று கேட்டுவிட்டு தமிழுக்கு செம்மொழி தகுதி, தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம், தமிழராய்ச்சி நிறுவனம், தமிழ்வழிக் கல்வி போன்றவற்றை திமுக போராடி, லாபி செய்து வென்றெடுத்துள்ளது என்கின்றனர்.

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட எல்லாத் தேர்தல்களிலும் ’தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்துவோம்’ என்று திமுக தனது தேர்தல் அறிக்கைகளில் சொல்லிவருகிறது. இந்தி ஆட்சி மொழியாகவும் ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாகவும் இருந்தால் போதும் என்று திமுக சொல்லவில்லை. அப்படி இருக்கும் பொழுது, hindi never English ever என்று நாடாளுமன்றத்தில் முழங்கியது ஏன்? அதற்காகவா நூற்றுக்கணக்கான தமிழர்கள் உயிரை விட்டனர்?  ’English ever’ என்று திமுக சொன்னது சரியென்றால் எதற்காக தமிழையும் ஆட்சி மொழியாக்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கிறார்கள். ’இந்தி மட்டுமே ஆட்சி மொழி’ என்பதை எதிர்த்துத்தான் 1965 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. எனவே, கோரிக்கை குறித்து கோட்பாட்டு தெளிவின்றி எழுப்பப்பட்ட முழக்கம் தான் ‘hindi never, English ever’ என்பது ’Not only hindi but all scheduled languages’ என்பதே முழக்கமாக இருந்திருக்க வேண்டும். இந்தி மட்டுமல்ல, எல்லா அட்டவணை மொழிகளையும் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும். அதைத்தான் திமுக தனது தேர்தல் அறிக்கையில் வைத்திருக்கிறது.

திமுகவைக் கேள்வி எழுப்பக் கூடாதா?

நூற்றுக்கணக்கானோர் உயிர் ஈகம் செய்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக நீடித்து வருகிறது. இப்போராட்டத்தின் பலனாக திமுக ஆட்சிக்கு வந்ததே ஒழிய தமிழ் ஆட்சி மொழியாகிவிடவில்லை. 1971 இல் இருந்தே காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைத்து வருகிறது திமுக.  சிறிது காலம் தவிர 1989 இல் இருந்து 2014 வரை தொடர்ச்சியாக நடுவண் அரசிலும் பங்குபெற்று வந்தது திமுக. எந்த தேர்தல் கூட்டணியின் போதாவது தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று திமுக உடன்படிக்கை கண்டதா? நடுவண் அரசில் பங்குபெறும்போது அமைச்சர் பதவிகளுக்கு அடம்பிடித்தது போல் தமிழை ஆட்சி மொழியாக்க முயன்றதா? மக்களிடம் வாக்குறுதிகளைத் தந்து வாக்குகளைப் பெற்றவர்களை நோக்கித்தான் கேள்வி எழுப்ப முடியும். தமிழ்நாட்டு மக்கள் சந்திரபாபு நாயுடுவையும் மம்தா பானர்ஜியையும் தாக்கேரக்களையும் நோக்கியா கேள்வி எழுப்ப முடியும்?

நேரு வாக்குறுதி என்பதை ஒரு மாபெரும் வெற்றி போல் திமுக வினரும் திமுகவைக் கண்மூடித்தனமாக ஆதரிப்போரும் சொல்லி வருகின்றனர். நேரு ஆங்கிலத்தையும் துணை ஆட்சி மொழியாக்கியது பற்றி மெளலானா அபுல் கலாம் அசாத்துக்கு 26.08.1956 தேதியிட்டு ஒரு கடிதம் எழுதினார்

. அதில்,

”அன்பு நண்பர் திரு. மௌலானா அவர்களே, தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்! இன்றைய சூழலில் ஆங்கிலத்தின் இடத்தில் இந்தியைத் திணித்தால் மாநில மொழிகள் அந்தந்த இடத்தில் அமரும் பெரும் அபாயம் உள்ளது!

அப்படி ஒரு வேளை ஆங்கிலத்தையும் வெளியேற்றி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், இந்திக்கு அதற்குரிய இடம் ஒருபோதும் கிடைக்காமல் போய்விடும் அல்லவா? எனவே ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பிடிக்கும் வகையில் நாம் வேலை செய்ய வேண்டும் ஐயா!”

எனவே, துணை ஆட்சி மொழியாக ஆங்கிலத்தை வைத்திருப்பதே மாநில மொழிகள் ஆட்சி மொழி ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான். இந்தியை இந்திப் பேசாத மக்கள் ஏற்கும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் என்பதிலேயே அட்டவணை மொழிகள் ஆட்சிமொழி ஆவதற்கு இடமில்லை என்று தெளிவுப்படுத்தப்பட வில்லையா? மேலும் நேருவின்  வாக்குறுதிகளுக்கெல்லாம் இந்திய அரசியலில் மதிப்பென்ன என்பதற்கு காஷ்மீருக்கான உறுப்பு 370 செயலிழக்கப்பட்டதே அண்மைய எடுத்துக்காட்டு. 370 ஐ சாதனையாக காட்டிக் கொண்டிருந்த பரூக் அப்துல்லாக்களின் இன்றைய நிலையில் இருந்து திமுக பெறவேண்டிய செய்தி எதுவுமே இல்லையா?

எனவே, மொழிப் போர் முடியவில்லை. அதை வெற்றியடைய செய்வதில் திமுக தலைமை பாத்திரம் வகிக்கப்போவது இல்லை. வருங்காலத்தில், இதன் பொருட்டு மாபெரும் போராட்டம் நடக்கத்தான் போகிறது. அப்போது 1965 க்குப் பின் தமிழை ஆட்சி மொழியாக்கும் பொருட்டு திமுக செய்தது என்ன? என்ற கேள்வி திமுகவை நோக்கி எழத்தான் போகிறது.  திமுகவிடமோ அக்கட்சியை எந்த விமர்சனமுமின்றி ஆதரிப்பவர்களிடமோ இக்கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. அதனால்தான், தமிழர்களிடம் பிற தேசிய இனங்களைப் பார்த்து கேள்வி கேட்குமாறு சொல்கிறார்கள்!

தொடர்பு மொழியாக ஆங்கிலம் எதற்கு?

தொடர்பு மொழியாக ஆங்கிலம் தானே இருந்தாக முடியும் என்றொரு கருத்தும் நம்மவர்களிடையே செல்வாக்கு செலுத்துகிறது.  அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்படுமானால் தொடர்பு மொழி என்ற கேள்வி மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு பற்றியதும் நடுவண் அரசின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது பற்றியதும் தான்.

கேரளாவும் தமிழ்நாடும் ஏன் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள வேண்டும்? தமிழ் அல்லது மலையாளம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு மொழியில் தொடர்பு கொண்டால் என்ன கெட்டுவிடும்? இணைப்பு மொழி அல்லது தொடர்பு மொழி என்ற பெயரில் ஆங்கிலம் தவிர்க்க முடியாதது என்ற கருத்து செல்வாக்கு செலுத்துகிறது. நடுவண் அரசு அந்தந்த மாநிலங்களோடு தொடர்பு கொள்ளும்பொழுது அந்த மாநிலத்தின் மொழியைப் பயன்படுத்த வேண்டும். இரு மாநிலங்களுக்கு இடையில் தொடர்பு வேண்டும் என்றால் அந்த மாநிலங்கள் விரும்பும் மொழி ஒன்றில் தொடர்பு கொள்ளப் போகிறார்கள். ஆங்கிலம் எதற்கு இங்கே வருகிறது?

26 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் மொத்தம் 24 மொழிகள் ஆட்சிமொழியாகும். ஐரோப்பிய நாடாளுமன்றம் 24 மொழிகளையும் செய்மொழிகளாக ஏற்றுக்கொள்கிறது. அந்தஅந்த மொழியினர் அவர்தம் மொழியிலேயே கேள்விகேட்டு பதில் பெற முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தில் மொழிபெயர்ப்புத் துறையே மிகவும் பெரியது. ஐரோப்பிய ஒன்றிய அலுவலர்களில் மூன்றில் ஒரு பங்கு மொழி தொடர்பான வேலைகளிலே பணி புரிகின்றனர். இந்தியாவில் இருக்கும் மனித வளமும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியும் ஆங்கிலத்தையோ அல்லது இந்தியையோ அல்லது வேறெந்தவொரு மொழியை மட்டுமோ சார்ந்திருக்க வேண்டிய தேவையைக் கடக்கச் செய்கிறது. ஆங்கிலமும் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் தான். ஏனெனில் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட சமூகக் குழுக்களும் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆனால், தொடர்பு மொழி, இணைப்பு மொழி என்ற பெயரால் ஆங்கிலத்தை எல்லோருக்குமான மொழியாக கட்டாயமாக்க வேண்டிய தேவை சமகாலத்தில் நிச்சமயாக இல்லை.

இருமொழிக் கொள்கை அறிவியல் பூர்வமானதா?

இருமொழிக் கொள்கை என்பதன் பெயரால் ஆங்கிலத்தைத் திணித்து வருகின்றன கழக ஆட்சிகள்.  கட்டாயமாக ஆங்கிலம் படிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி பள்ளிக் கல்வியின் முதல் நாளில் இருந்து தாய்மொழி அல்லாத மொழியைக் கற்பிக்கும் வன்முறை நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஒரு குழந்தை முதல் பயில் மொழியை நன்றாக கற்றப்பின்பு அதன்வழியாகத்தான் ஏனைய அனைத்தையும் கற்கிறது. தமிழே எழுதப் படிக்க தெரிவதற்கு முன் ஆங்கிலத்தை திணிக்கும் காட்டுமிராண்டித்தனம் நடந்துவருகிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் போய் முடிந்துள்ளது திமுகவின் கல்விக்கொள்கை. 2011 இல் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தியது அதிமுக அரசு. கல்வி அமைச்சர் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்துவோம் என்று இப்போது சொல்லியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கற்போரின் எண்ணிக்கை பத்து விழுக்காடு குறைந்து வருகிறது. கடந்த 2018 கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் வெறும் 33 விழுக்காட்டினர் தான் அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியைத் தேர்வு செய்துள்ளனர். தொடக்கத்திலேயே சிந்தனை வளர்ச்சியையும், கற்றலையும் பாழ் செய்யும் ஒரு கல்விமுறைக்கு தமிழக அரசு மாறிவிட்டது. ஆசிரியர்களுக்கும் ஆங்கிலம் தெரியாது, மாணவர்களுக்கு அது தாய் மொழி அல்ல, ஆனால், ஆங்கில வழியில் கல்வி என்ற அவலம் நடந்துவருகிறது. இதை எதிர்த்து போராட்டங்கள் எதையும் திமுக நடத்தவில்லை. ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் இந்த கொள்கையில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. திமுக, அதிமுக வின் இருமொழிக் கொள்கை கடைசியில் வந்தடைந்திருக்கும் இடம் இதுதான். இதனால் ஏற்படப் போகும் விளைவுகள் கல்வித் துறை மட்டுமின்றி சமுதாயத் துறைகளிலும் வெளிப்படும், அரை குறை ஆங்கில அறிவு, அரைகுறை தமிழ் அறிவு, அரைகுறை பொது அறிவு என சாறமற்ற கூலிகளை உருவாக்கப் போகிறோம். படைப்பூக்கமில்லாத தற்குறி தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு வழிவகுத்துவிட்டது இருமொழிக் கொள்கை.

தாய்மொழிக் கல்வித்தான் உலக அளவில் கல்வியாளர்களால் ஏற்கப்பட்ட கல்வி. இரண்டாம் மொழி என்பதை விருப்பப்பாடமாகவே கற்கின்றனர். அதுவும் 8 அல்லது பத்து வயதுக்கு மேல் இரண்டாம் மொழியைக் கற்பதைத்தான் அறிவியல் பரிந்துரைக்கிறது. இரண்டாம் மொழி என்பது குழந்தையின் சுதந்திரமான தேர்வாக இருக்கலாம்.

ஆங்கிலத்தின் வழியாக அறிவியலைக் கற்க முடியும் என்பது மற்றுமொரு கற்பிதம். ஆங்கிலத்தின் வழியாகத் தான் மனித மூளை அறிவியலை உள்வாங்க முடியுமா? உலக அளவில் அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கக் குறியீட்டின் தர வரிசையில் முன்னிலையில் இருப்பவை நான்கு ஆட்சி மொழிகளைக் கொண்ட  சிங்கப்பூரும், தாய்மொழிக் கல்வி தரும் ஜப்பானும், எஸ்தோனியாவும், ஃபின்லாந்தும்தான்.. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிரிட்டன் 17ஆவது இடத்தில்தான் உள்ளது. பன்னாட்டு மாணவர் மதிப்பீட்டுத் திட்டத்தின் (PISA) தரவரிசையிலும் சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், எஸ்தோனியா, ஃபின்லாந்து, கனடா முன்னிலையில் உள்ளன. பிரிட்டனோ 23வது இடத்தில்தான் உள்ளது. அறிவியல் தமிழை வளர்த்தெடுத்தால் தமிழ்வழியிலேயே அறிவியலைக் கற்க முடியும்.

இருமொழிக் கொள்கை, இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைக் கட்டாயம் கற்க வேண்டும் என்பது அறிவியலுக்கு  முரணானது.

சமூக மாற்றமும் ஆங்கிலமும்”

கடந்த நூற்றாண்டில் சமூக மாற்றத்திலும் சமூக சனநாயகத்திலும் அக்கறை கொண்டோர் ஆங்கிலம் அதற்கு துணை செய்யும் எனக் கருதியது உண்டு. ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டு இருந்த நிலையில் அறிவியில், தொழில்நுட்ப வளர்ச்சி, அரசியல் அமைப்பில் சனநாயக கட்டுமானங்களின் வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், வாழ்க்கை தரத்திலான வளர்ச்சி என எல்லாவற்றிலும் கீழைத் தேசங்களைவிட ஆங்கிலேயர் உள்ளிட்ட ஐரோப்பியர்கள் வளர்ச்சி அடைந்திருந்ததை அன்றைய தலைவர்கள் கண்டனர். இத்தகைய வளர்ச்சியை அவர்கள் அடைந்ததற்கும் ஆங்கில மொழிக்கும் தொடர்பு இருப்பதாக கருதினர். தமிழில் போதிய அறிவியல் சொற்கள் இல்லாமல் இருந்தமை, ஏராளமான எழுத்துகள் ஆகியவை மட்டுமின்றி முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலையிலான மொழியின் வளர்ச்சியே தமிழில் இருந்தது. ஆனால், ஆங்கில மொழியில் அறிவியில், சமூகம், அரசியல் ஆகிய எல்லாத்துறைகளிலும் பெரிய வளர்ச்சி இருந்தது. தமிழ்ச் சமூகத்தில் அரசியல் வெளிக்கு வந்திருந்த முன்னோடிகள் பலரும் வெள்நாட்டுக்குச் சென்று பட்டம் பெற்றவர்களாகவும், உள்ளூரிலேயும் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவும் ஆங்கிலம் கற்றவர்களாகவும் இருந்தனர். அதனால், பின் தங்கிய சமூக நிலைமையில் இருக்கும் இந்நாட்டைப் பாய்ச்சலில் முன்னகர்த்தி செல்வதற்கு ஆங்கிலத்தைக் கற்பது உதவும் என்று உளப்பூர்வமாகவே நம்பினர். ஆனால், அது பெரிய அளவில் வெற்றிப் பெறவில்லை. பாய்ச்சலில் வளர்ச்சி காண வேண்டும் என்றால் அது ஒரு மொழியைக் கற்பது தொடர்பான விவகாரம் மட்டுமல்ல, பொருளாக்கத்தில் முதலியத்தின் வளர்ச்சியோடு இணைந்த விவகாரம் ஆகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலிய வளர்ச்சியின் பகுதியாகத்தான் ஏராளமான அரசு பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட்டன, கல்வித் துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும், இருமொழிக் கொள்கை என்பதன் பெயரால் கட்டாயமாக ஆங்கிலம் கற்பிக்கும் முறை படிப்பில் இருந்து மாணவர்களை விரட்டியடிக்கும் வேலையையே செய்து வந்தது. பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது மேம்பட்ட வளர்ச்சி அடைந்திருக்கக் காண்கிறோமே ஒழிய உலகளவிலான தரத்தோடு ஒப்பிடும் போது தமிழகம் கல்வியில் பின் தங்கியே இருக்கிறது.

சீனப் புரட்சியாளர் மாவோவும்கூட கல்வித்துறையில் பாய்ச்சல் ரீதியான வளர்ச்சியை அடைய வேண்டும் என்று விரும்பினார். சீன எழுத்துரு மிகவும் கடினமாக இருக்கிறதே, எப்படி கோடிக்கணக்கான மக்களுக்கு இதை கொண்டு சேர்ப்பது என்று சிந்தித்தார். ரோமானிய எழுத்துருவிலோ அல்லது ஆங்கில எழுத்துருவிலோ சீன மொழியை எழுதலாம் என்ற கருத்தை முன் வைத்தார். ஆனால், அது வெற்றிப் பெறவில்லை. பின்னர் தமது கொள்கையை மாற்றிக் கொண்டார்.

பின்தங்கிய நாடுகளில் வாழ்ந்த முன்னோடிகள் சமூக மாற்றத்தில் கொண்ட வேட்கை காரணமாக ஆங்கிலத்தின் வழி வேகமான வளர்ச்சி காண முடியும் என்று எண்ணியது பொதுப்போக்காக இருக்கிறது. ஆனால், அது பலனளிக்கவில்லை என்று புரிந்து கொண்டவிடத்து தமது கொள்கையை மாற்றிக் கொண்டனர். எனவே, இதற்கு முன்னாள் இருமொழிக்கொள்கையை வலியுறுத்தப்பட்டது, ஆங்கிலத்தைக் கட்டாயமாக படிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது என்பதற்காக அந்த கொள்கையையே நாமும் பிடித்து தொங்கி கொண்டிருக்க வேண்டியதில்லை. அரை நூற்றாண்டுகால பட்டறிவில் இருந்து, கால ஓட்டத்தில் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி, கல்விப் பற்றி வளர்ந்திருக்கும் அறிவியல் கண்ணோட்டம் ஆகியவற்றைக் கருத்தில் எடுத்து இருமொழிக் கொள்கையை கைவிட்டு தாய்மொழிக்கல்விக்கு மாற வேண்டும்.

ஆங்கிலம் சமூக நீதிக்கானதா?

திமுக இருமொழிக் கொள்கையை முன் வைத்ததற்கு சமூக நீதிக் கண் கொண்டு பார்த்ததுதான் காரணம்  என்று திமுக ஆதரவு ஆற்றல்கள் வாதுரைக்கின்றனர்.

’கட்டாய ஆங்கிலம்’ எப்படி சமூக நீதிக்கு வேட்டு வைக்கிறது என்று பல கல்வியாளர்களும் விளக்கியுள்ளனர். உயர்கல்வி, ஆய்வுக் கல்வி ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கப்பெறுவதால் சாதி, வர்க்க ரீதியாக அடித்தட்டில் இருப்போர் உள்ளே வருவதற்கான கதவுகள் மூடப்படுகின்றன. எத்தனையோ வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்து வழக்கறிஞர் தொழில் பழகுவதற்கு வழியில்லாமல் செய்திருப்பது எது? தமிழுக்கு அங்கே இடமில்லை என்பதுதான்.. ஆங்கில ஆதிக்கத்தால் அப்படி பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் தலித் மக்கள், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், பழங்குடிகள் தான்.

முன்பு சமஸ்கிருதத்தை எப்படி சமூக அந்தஸ்துக்கும் உயர் கல்விக்கும் முன்நிபந்தனை ஆக்கி உயர்சாதியினர் பலனடைந்து வந்தனரோ அது போல் இன்று ஆங்கிலத்தைக் கொண்டு உயர்சாதி உயர்வர்க்கத்தினர் பலன்பெற்று வருகின்றனர். ஆங்கிலம் சமூக நீதிக்கு துணையாகும் என்று வாதத்தை முன்வைத்தால் பேராசியர் கல்விமணி கேட்டிருந்தால் கடுங்கோபம் கொண்டிருப்பார். கடந்த கால் நூற்றாண்டுகாலமாக பழங்குடி இருளர்களின் மாந்த உரிமைகளுக்காகவும் கல்வி உரிமைக்காகவும் அரும்பாடுபட்டு வரும் அவர், ஆங்கிலம் எந்தளவுக்கு சமூக நீதிக்கு எதிரானது என்பதை அவரது பட்டறிவில் இருந்து விளக்கக் கூடியவர். பேராசிரியர் கல்விமணி மட்டுமின்றி கல்வியாளர்கள் பேரா. சிவக்குமார், பேரா. அ.மார்க்ஸ், முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு என எந்த கல்வியாளரும் மேற்படி கருத்துக்கு உடன்பட மாட்டார்.. ஆங்கில மொழியைக் கட்டாயமாக்கி அதில் உயர் சாதி, உயர் வர்க்கத்தினர் பலன் பெறுவதும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள் வாய்ப்புகளை இழப்பதும் நடந்துவருகிறது. ஆங்கில மொழியைக் கட்டாயமாக்கியது சமூக நீதிக்கு ஊறு செய்துள்ளதே ஒழிய உதவவில்லை.

ஐடி. துறை போன்றவற்றில் ஆங்கில அறிவைக் கொண்டுதான் தமிழர்கள் போட்டியிடுகின்றனர், வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அந்த தமிழர்கள் யார்? அவர்களும் உயர்சாதி உயர் வர்க்கத்தினர் தானே. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்களுக்கு இந்த வளர்ச்சியில் எந்த அளவுக்குப் பங்கு கிடைத்துள்ளது? ஐயத்திற்கிடமின்றி மிகக் குறைவே. அதிலும் ஆங்கிலம் என்பது பின்தங்கிய சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களை கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கிறது.

சமூகநீதி என்பது முதலாவது அர்த்தத்தில் பரவலாக்கம்தான். தரப்படுத்தலுக்கும் பரவலாக்கத்திற்கும் இடையே எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது. முதலில் அடிப்படைக் கல்வியை இலட்சக்கணக்கானோருக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதில் இருந்து துறைதோறும் தேர்ச்சிப் பெற வேண்டியவர்கள் முன்னுக்கு வர முடியும். கட்டாய ஆங்கிலம் கல்வியைப் பரந்துபட்ட மக்களுக்கு  கொண்டு சேர்ப்பதற்கு தடையாக இருக்கிறது. பொதுவில் இட ஒதுக்கீடு முற்போக்கானதாக இருந்தாலும் உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு எப்படி எதிர்மறையான சமூக விளைவை ஏற்படுத்துகிறதோ அது போல் ஆங்கிலமும் ஆங்கிலவழிக் கல்வியும் எதிர்மறையான விளைவையே உருவாக்கியுள்ளது. பார்ப்பனரல்லாதோரில் ஒரு சிறுபிரிவினரை ‘priveleged’ சிறப்புரிமைப் பெற்றவர்களாக மாற்றியிருக்கிறது.

தாய்மொழிக் கல்வி வழியாகத்தான் சாதி படிநிலைகள், வர்க்க ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய ஒரு சமூகத்தில் கல்வியைச் சனநாயகப்படுத்தி பரவலான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். தாய்மொழிப் பயன்பாடுதான் வேலை வாய்ப்புகளிலும் சனநாயகத்தை உண்டாக்கி அடித்தட்டில் இருப்போரை அதில் பங்கேற்கச் செய்யும். எந்தவொரு அயல் மொழியும் அந்த சமூகத்தில் உள்ள அடித்தட்டுப் பிரிவினருக்கு துணை செய்துவிட முடியாது. எந்த ஏரணம்(தர்க்கம்) சமஸ்கிருதத்திற்கு பொருந்துமோ அதே ஏரணம் ஆங்கிலத்திற்கும் பொருந்தும்.  தாய்மொழிதான் ஏழைஎளியோருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் வலிமையான, சமூக விடுதலைக்கான கருவியாக அமைய முடியும். அந்த வலிமை அவர்களுக்கு கிட்டிவிடக் கூடாது என்பதால்தான் உயர்சாதி உயர்வர்க்கத்தினர் ஆங்கிலத் திணிப்புக்கு லாவணிப் பாடுகின்றனர்.

அறிவாலயத்தின் வாயிற்கதவு தான் சனநாயகத்தின் எல்லையா?

தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கு திமுக முயற்சி செய்யவில்லை, போராடவில்லை, வெற்றிப் பெறவில்லை என்பது பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், கல்வியாளர்கள், மொழிப்பற்றாளர்களின் கருத்தாகும்.

திமுக வின் இருமொழிக் கொள்கை கல்வி அமைப்பில் சீரழிவைத் தான்உருவாக்கி இருக்கிறது, சமூக நீதிக்கு ஊறு செய்துள்ளது.

பாசகவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கும் பொருட்டு திமுகவின் மேற்படி தவறான கொள்கைகளுக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை.  அறிவாலயம், அதிமுக அலுவலகம், கமலாலயம், சத்தியமூர்த்தி இல்லம் ஆகியவற்றின் வாயிற் கதவுகள் சனநாயக்த்தின் எல்லையைத் தீர்மானிக்கின்றன என்றால் பாலன் இல்லங்களும் அம்பேத்கர் திடல்களும் இருக்க வேண்டிய தேவை என்ன? பாசிச எதிர்ப்பு இயக்கத்தில் பொது எதிரிக்கு எதிரான ஐக்கியத்தில் இருக்க வேண்டிய கவனம் இவ்வியக்கதின் சனநாயக வரம்பை விரிவாக்குவதிலும் இருக்க வேண்டும். ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ அதை அளவுக்கு ஒன்றிற்கு ஒன்று உறவும் கொண்டது..

சனநாயக வரம்பு காங்கிரசு, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் வரம்பைக் கடக்கவில்லை என்றால் அந்த இடைவெளிதான் பாசிசம் வளர்வதற்கான விளைநிலமாக அமையும். அப்படித்தான் கடந்த காலங்களில் நடந்தும் உள்ளது. பாசிச சக்திகளை ஆட்சியில் இருந்து கீழிறக்குவதும் அச்சக்திகள் வளர்வதற்கு காரணமாக இருந்த தவறான கொள்கைகளுக்கு எதிராகப் போராடி அதை மாற்றியமைப்பதும் முரண்பட்ட கடமைகள் அல்ல. ஒன்றுக்கொன்று உறவுடைய,தும் நீண்ட கால கண்ணோட்டத்தின் அடிப்படையிலானதும் கூட.

பாசக வின் மும்மொழிக் கொள்கைக்கு மாற்று திமுகவின் இரு மொழிக் கொள்கை அல்ல, தாய் மொழிக் கொள்கையே ஆகும்.

 

-செந்தில், இளந்தமிழகம்

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW