காஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு? சங்கிகளே, இது 420 இல்லையா?

19 Sep 2019

 

அமித்ஷா அந்தர்பல்டி! ”இந்தியைத் திணிப்பதாக நான் எங்கும் சொல்லவில்லை, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது” என்கிறார் அவர்.  இந்தி தினத்தில் எல்லா உள்துறை அமைச்சரும் பேசியதை தான் அமித் ஷாவும் பேசினார் என பாஜகவினர் ஊடக  விவாதங்களில் பதிலளிக்கிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்து இந்தியை  மத்திய அரசு திணிக்காது என ஆளுநர்  பேசியவுடன் திமுக போராட்டத்தைத் தள்ளி வைத்திருக்கிறது. இவையெல்லாம் பல்வேறு எதிர்ப்புகள் வந்தவுடன் இந்தித் திணிப்பில் பாஜக பின் வாங்கியது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் நமது கோரிக்கை இந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டுமா? நிச்சயமாக இல்லை. அந்த திணிப்பிற்கு அடிப்படையாக அரசமைப்புச் சட்டத்தில் இருந்து வருகிற இந்திக்கான சிறப்புரிமை, தனியுரிமை அந்தஸ்தை நீக்க வேண்டும் என்பதுதான், அலுவல் மொழி அந்தஸ்தை நீக்க வேண்டும் என்பதுதான் தேசிய மொழி என்ற பொய்ம்மையை உடைக்க வேண்டும் என்பது தான்.

 

எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள 32  இன மக்களின் தாய்மொழிகளுக்கும் இல்லாத தனி உரிமை இந்திக்கு மட்டும் எதற்கு? என்பதுதான் நமது கேள்வி. இந்தி அல்லாத பிற மொழிகளுக்கு இல்லாத தகுதி இந்திக்கு மட்டும் என்ன இருக்கிறது என்பதுதான் நமது பாமர கேள்வி.

 

தன்னோடு விரும்பி சேராத காஷ்மீரிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு ’சமத்துவம்’ என்ற பெயரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்கிறீர்களே, தமிழர்களும் பிறமொழி இனத்தவரும் விரும்பி கேட்காத இந்திக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கிறீர்களே, 351 சட்டப்பிரிவில் இந்திக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து அம்மொழியை மேம்படுத்துவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் நிதி  ஒதுக்குகிறீகளே, இந்தி தினத்தைக் கொண்டாடுகிறீர்களே,  இது சமத்துவமின்மை இல்லையா? காஷ்மீருக்கு மட்டும் என்ன சிறப்பு அந்தஸ்து என்று கேள்வி எழுப்பிய இந்திய தேசியவாதிகளைப் பார்த்து நாம் கேட்கிறோம் – உங்களின் சமத்துவவாதம் போலியானதும் ஒருதலைப்பட்சமானதும் இல்லையா? விரும்பி  சேர்ந்த இருவருக்கிடையில் தானே சமத்துவம் என்ற ஒப்பீட்டைப்  பார்க்க முடியும். விரும்பியே சேராத காஷ்மீரத்துகாரனிடம் ஒரு நாடு, ஒரு அரசியல் அமைப்புச் சட்ட சமத்துவத்தைப் பற்றி பேசுகிறார் உங்கள் பிரதமர். சமத்துவம் பேசலாம், ஆனால் அதற்கு முன் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துங்கள் என காஷ்மீரிகள் கோரினால் அமுக்குனி போல வாயை மூடிக்கொண்டு இருக்கிறீர்களே.  ஆனால் இணைந்து இருக்கிற மாநிலங்கள் தங்கள் மொழிவழி உரிமையின் அடிப்படையில் இந்தி மொழிக்கு தனியுரிமை அந்தஸ்து கூடாது, எல்லா மொழிகளும் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் எனக் கோரினால் சமத்துவம் பற்றி வாய்மூடி இருப்பது மட்டுமல்லாமல் பிரிவினைவாதம், தேசவிரோதம் என கூச்சலிடுகிறீர்களே, ஏன்?

 

எனவேதான்,  நாங்கள் உண்மையான சமத்துவத்தைப் பற்றி பேசுகிறோம். ஒரு நாடு இருக்க வேண்டுமென்றால் அது சமத்துவமான வழிமுறையில் ஒன்றிணைக்கபட்டால் மட்டும்தான் நீடித்திருக்க முடியும். மொழிவழி அடிப்படையிலும் இனக்குழு அடிப்படையிலும் பிரதேச அடிப்படையிலும் இந்தியாவில். வளர்ந்திருக்கிற மக்களினங்களுடைய சமத்துவமான விருப்பத்தின் அடிப்படையில் நாட்டை மறுகட்டுமானம் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் யாருடைய சிறப்பு அந்தஸ்தையும் பறிக்க வேண்டிய தேவையோ எதற்கும் சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டிய தேவையோ இருக்காது.

’ஒரே’ என்ற பதத்திற்கு சமத்துவம் என்ற பதத்தை இணைவைத்து அதனடிப்படையில் இந்த நாட்டை மறுகட்டுமானம் செய்ய விழைகிறோம், அதற்கு வாரிசு அரசியல்வாதிகளும் ஊழல் பேர்வழிகளும் தேச விரோதிகளும் தடையாக இருக்கிறார்கள்” என்ற பொய்யையும் சமீபகாலமாக நீங்கள் பேசி வருகிறீர்களே,  நீங்கள் உண்மையிலேயே சமத்துவத்தை நம்புகிறீர்களா?   சமத்துவம் என்ற கோட்பாட்டிற்கு நீங்கள் இழைத்த அநீதியை போல் இவ்வுலகில் வேறொருவரும் இழைத்திருக்க முடியுமா? சமத்துவமற்ற வேற்றுமைகள் நிலவுகின்ற சூழலில் அனைவரும் எப்படி சமமாகி விடமுடியும். அங்கு சமத்துவம் அற்று இருப்பவனை தனி அந்தஸ்து கொடுத்து கை தூக்கி விடுவது  மூலம் மட்டும் தானே சமத்துவத்தை  உருவாக்க முடியும். ஆனால் நீங்களோ ஆதிக்கம் செய்யும் இந்திக்கு தனி அந்தஸ்து கொடுப்பதன் வாயிலாக சமத்துவம் என்கிறீர்கள். ஒப்பந்தம் செய்து துரோகம் இழைக்கப்பட்ட காஷ்மீரத்துகாரனின் தனி அந்தஸ்தை பறிப்பதன் வாயிலாக சமத்துவம் பேசுகிறீர்கள். உங்கள் உலகம் வேடிக்கையானதாக இல்லையா?

 

மாநில சுயாட்சியையும் இந்தித் திணிப்பு எதிர்ப்பையும் பேசும் எங்கள் தலைவர்களின் சந்தர்ப்பவாதத்தை அம்பலப்படுத்துவதன் வாயிலாக உங்கள் இந்தித் திணிப்பை நியாயப்படுத்துகீறிகள். உங்களை மூடி மறைத்துக் கொள்ள முயற்சிக்கிறீர்களே. அதற்காக இரத்தம் சிந்திய ஆயிரம் தமிழ் மறவர்களின்  கோரிக்கைகளை நாங்கள் விட்டுவிட முடியுமா? தமிழ்நாட்டுத் தலைவர்களின் இரட்டை வேடமும் உங்களிடம் அவர்கள் பதுங்குவதும் எங்களுக்கு புரியாமல் இல்லை. எதிர்க்கட்சித் தலைவரின் மகளும் மாவட்டச் செயலாளர்களும் தமிழ் பேசினால் தண்டனை கொடுக்கும் இந்திப் பள்ளியை நடத்துகிறார்கள் எனக் குற்றச்சாட்டை வீசி நீங்கள் தப்பிக்க நினைக்கும் பொழுதுகூட எங்கள் அறிவாளிகள் அது தனிப்பட்ட விவகாரம் என சப்பைக்கட்டு கட்டும்போது  பல்லிளிக்கும் சந்தர்ப்பவாதத்தைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

மாநில சுயாட்சி  கேட்டவர்கள் டெல்லியிலே காஷ்மீருக்கு அரசியல் கைதிகளின் விடுதலை மட்டும் கேட்டுவிட்டு 370 ரத்தை அமல்படுத்திய முறையில்தான்  பிரச்சனை, 370ஐ காஷ்மீருக்கு இரத்து செய்ததில் பிரச்சினையில்லை என்று பல்டி அடித்ததையும் மாநில சுயாட்சியின் எல்லையையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதேபோலதான், ’இந்தியைத் திணிக்க மாட்டோம்’ என்ற உங்கள் நாடகத்தைக் காட்டி அவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என ஒதுங்குவதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

 

குஜராத்தி தான் எனது தாய்மொழி, இந்தி அல்ல. நியூசிலாந்தை போல ஆஸ்திரேலியாவைப் போல தாய் மொழிகள் அழிந்து விடக்கூடாது” என கரிசனத்தோடு பேசியிருக்கிற அமித்ஷா அவர்களே! எங்கள் கோரிக்கை இந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டுமல்ல. அந்த மொழியைத் திணிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வாய்ப்பாக  அமைந்துள்ள இந்திக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தை (351), அலுவல் மொழி அந்தஸ்தை நீக்கி ,அனைத்து தாய் மொழிகளும்( உங்களைப்போல் வட்டார மொழிகள் என்ற சமத்துவமற்ற சொல்லில் விளிக்க விரும்பவில்லை) தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. உடனே, ஆங்கில மொழியின் அடிமைகள் என தமிழகத்து சங்கிகளே ஊளையிடாதீர்கள். நாங்கள் யூனியன் ஜாக் கொடி ஏந்திவரும் இருமொழிக் கொள்கையாளர்கள் அல்ல, தாய்மொழிக் கொள்கையாளர்கள்.

 

இந்தி தேசியவாதிகளே, ஒருபோதும் இந்தியை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எங்கள் பிள்ளைகள் தங்கள் தாய்மொழியில் தங்கள் அறிவைப் பலப்படுத்திக் கொண்ட பின்னர் உலகத்தின் செல்வங்களை எல்லாம் எம் தேசத்திற்கு திரட்டி வர டச்சை, பிரெஞ்சை, ஜப்பானி மொழியை ஏன் வங்காளத்தை, பஞ்சாபியை, அமித் ஷாவின் குஜராத்தியைக்கூட தேவைப்படின் கற்றுக்கொள்வார்கள். ஒருபோதும் இந்தியை ஏற்க மாட்டோம். ஏனென்றால், அந்த மொழியின் மீதான வெறுப்பல்ல, மார்வாடிகளாலும் பனியாக்களும் சூறையாடப்பட்டு இந்தியாவுக்குள் மிகவும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள இந்தி மொழி பேசும் மக்கள் மீதான வெறுப்புமல்ல, உங்களின் அரசியல் ஆதிக்கத்திற்காக எங்கள் மீது திணித்துக் கொண்டிருக்கிற ஆக்கிரமிப்பு அரசியல் மொழி என்பதால்.

 

நாங்கள் ஒருபோதும் இந்தியை ஏற்கமாட்டோம்.

-பாலன்

vasan08@rediffmail.com

70100 94440

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW