நவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா?
நவீன அமெரிக்காவைக் கட்டியெழுப்பியது தெற்கின் பிற்போக்கு பிரபுக்களல்ல, வடக்கின் லிங்கனே!
நவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா?
மூன்று நாட்களுக்கு முன்பு ’இந்தி நாள்’ அன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”ஒரு தேசத்தை ஐக்கியப்படுத்த ஒரு மொழி வேண்டும். அதுதான் இந்தி” என்று பேசினார். உடனே, தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்தி பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியா? இந்தி தேசிய மொழியா? எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன. ’இந்தியைத் திணிக்க முற்படாதீர்கள்’ என்று எச்சரிக்கைகள் எழுந்தன. ஆனால், இவை எல்லாவற்றையும்விட எழுப்ப வேண்டிய கேள்வி, ’இந்தியா ஒரு தேசமா?’ இந்த கேள்வியை பெரியார் 1930 இலேயே எழுப்புகிறார். ’இந்தியா ஒரு நேசனா?’ என்று தலையங்கம் எழுதியிருக்கிறார்.
அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் போதுகூட, ”ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் இந்தியா எப்படி ஒரு தேசமாகும்? என்று அம்பேத்கர் கேள்வி எழுப்புகிறார். அமித் ஷா சொல்வது போல் ஒரு தேசத்தை ஒன்றுபடுத்த ஒரு பொது மொழி வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், இந்தியா ஒரு தேசமல்லவே. மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியாவை வரையறுக்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கக் கூடாதென அப்போதே ஆர்.எஸ்.எஸ். எதிர்த்தது. துண்டு துண்டாக 50 மாகாணங்களாக இந்தியாவைப் பிரித்தாள வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். இன் கருத்து. அண்மையில்கூட பா.ச.க. வின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பதிவில் மொழிவாரி மாநிலங்களாக இருப்பதுதான் ஒரு தேசத்தைக் உருவாக்குவதற்கு தடையாய் உள்ளது என்று சொல்லியிருந்தனர். ஒரே தேசம், ஒரே மொழி என்பது பா.ச.க.வின் கொள்கையாக இருக்கிறது. ஒரு புதிய இந்தியாவைக் கட்டியெழுப்பப் போவதாக அவர்கள் அலப்பறை செய்கிறார்கள்.
ஒரு புதிய இந்தியாவை உண்மையில் அமித் ஷாக்களால் கட்டியெழுப்ப முடியுமா? உலகம் முழுக்கச் சென்று வியாபாராம் செய்யும் குஜராத் வியாபாரிகளுக்கு வாங்குவது விற்பது என்ற கொடுக்கல்வாங்கல் கணக்கைத் தவிர வேறெதுவும் தெரியாது. இந்தியாவின் பல்வேறு வகையான தட்பவெட்ப நிலை, மாறுபட்ட சூழல், மொழிவழி தேசியங்கள், மதங்கள் என்பது பற்றிய நுட்பமான அறிவோ அல்லது சனநாயக உணர்வோ கிடையாது. இவர்களால் ’புதிய இந்தியாவை’ உருவாக்க முடியும் என்பதைவிட பெரிய வேடிக்கை எதுவும் இல்லை.
இந்தி மொழி பேசும் மக்களிடையேகூட சமத்துவ உணர்ச்சியை வளர்க்காமல் சாதி, மத உணர்ச்சியை வளர்த்து அரசியல் செய்பவர்கள் இவர்கள். மக்களவை உறுப்பினர் ஒருவர் பதவிப் பிரமாணம் எடுக்கப் போகும் போது அவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டவர்களால் எப்படி இந்தியாவை ஒன்றுபடுத்த முடியும? கஜினி முகமது கால படையெடுப்பு அச்சத்தில் இருந்து இன்றைக்கு வரை மீள முடியாமல் இருப்பவர்கள் அமித் ஷாக்கள். இந்தியாவின் வரலாற்றை முஸ்லிம் படையெடுப்புக்கு உள்ளால் மட்டும் பார்க்க முடிந்தவர்கள். எந்நேரமும் இந்து-முஸ்லிம் என்ற பேத உணர்ச்சியிலேயே காலந் தள்ளுபவர்கள். புதுமக் கால ஆடைகளை அணிந்து கொண்டு, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் எரிபொருட்களை வாங்கிக் கொண்டு முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் அன்னியர்கள் என்று சொல்பவர்கள் அவர்கள். முகலாயப் பேரரசை எண்ணி எண்ணி தூங்க முடியாமல் இருப்பவர்கள். பக்கத்தில் பாகிஸ்தான் இருக்கிறதென்று தானும் அஞ்சி இந்த ஒட்டுமொத்த நாட்டையும் பயத்தில் வைக்க முனைபவர்கள். தங்களுடைய வரலாற்று சுமையாலும் புவியமைப்பு யதார்த்தத்தாலும் சிந்தனைக்கு விலங்குப் போட்டுக் கொண்டவர்கள். மத்திய கால புராணக் குப்பைகளை, பொய்ப் புரட்டு சாஸ்திரங்கள், காப்பியங்கள் ஆகியவற்றின் பிடியில் இருந்து இன்னமும் விடுபடாதவர்கள். இத்தகைய மனநோயாளிகளால் எப்படி இவ்வளவு சிக்கலான இந்திய நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்?
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்து இந்தியாவின் வரலாற்றில் அழியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியவர்கள் அமித் ஷாக்கள். ”போதிய மருத்துவமனைகள் கிடையாது, பள்ளிக் கூடங்கள் கிடையாது, மருத்துவக் கல்லூரிகள் கிடையாது, போதிய சாலைக் கட்டமைப்பு வசதிகள் கிடையாது, இப்போதுதான் வீடு தோறும் கழிவறைகளைக் கட்டிக் கொண்டிருப்பவர்கள், இப்போதுதான் அடுப்புக்கு எரிவாயு தந்து கொண்டிருப்பவர்கள்” என இத்தனை ஆண்டுகள் மக்களின் அடிப்படை தேவைகளிலும் கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தாத பின் தங்கியப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் அமித் ஷாக்கள். 70 ஆண்டுகால இந்தியக் குடியரசு வாழ்வில் சமூக வளர்ச்சிக்கு என்ற சிந்தனை ஏதுமின்றி பெருந்திரளான மக்களின் வாழ்வை மேம்படுத்த தவறிய வடநாட்டுத் தலைவர்களால் எப்படி இந்தியா என்ற நாட்டை கட்டியெழுப்ப முடியும்?
சாதி ஏற்றத்தாழ்வோ இழிவோ ஒரு பிரச்சனையே கிடையாது என்று வர்ணாசிமர சேற்றை அள்ளிப் பூசி வருபவர்கள். இந்து-முஸ்லிம் பகை உணர்ச்சியைப் போக்க எந்த முயற்சியும் இல்லை என்பதை விட அதை ஊதிவிட்டு குளிர்காய்பவர்கள். ”இந்த 70 ஆண்டு காலத்தில் சொந்தமாக தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சியை ஏற்படுத்த முடியவில்லை. நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை இருப்பினும் கலை, கல்வி, அறிவியல், தொழில்நுட்ப, வாழ்க்கை தரம், பெண்களின் முன்னேற்றம், சுகாதாரம், விளையாட்டு என எந்த துறையிலும் எவ்வித சாதனையையும் மேற்கொள்ள முடியவில்லையே.” இதற்கெல்லாம் என்ன காரணம் என்று சிந்திக்காதவர்கள். முதலாளித்துவத்திற்கு முந்தைய பொருளாக்க உறவுகளில்( சாதி உறவுகளில்) பொருளாக்க ஆற்றல்களில் ஒன்றான மனித வளம் சிக்குண்டு கிடக்கிறது என்ற அறிதலோ இந்த நிலைமையை மாற்றும் முன்னெடுப்புகளோ இல்லாதவர்கள். தங்கள் நிலைமை இப்படியெல்லாம் இருக்கும் போது ஒப்பீட்டளவில் இதுவிசயத்தில் குறிப்பிடத்தக்கப் போராட்டத்தை நடத்தி வளர்ந்திருக்கும் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பார்த்து அறிவுரை சொல்வதும் நாட்டை ஒன்றுபடுத்துவதற்கு இந்திப் படிக்க சொல்வதும் எவ்வளவு நகைப்பிற்குரியது.
இந்தியா என்றால் என்ன? அது எப்படி உருவானது? இவ்வளவு வேறுபாடுகள் கொண்ட மக்கள் ‘நாம்’ என்ற உணர்வை எப்படி பெற்றனர்? என்பதைப் பற்றியெல்லாம் எந்த அடிப்படை அறிவோ புரிதலோ இல்லாத குஜராத் வியாபாரிகள் இந்தியாவைப் பற்றி பாடம் எடுத்து வருகின்றனர்.
இந்தியா முழுக்க ஒரே மொழி பேசாத போது இந்திய மக்கள் எப்படி ஒன்றுபட்டனர்? ’அந்நியனே வெளியேறு’ என்ற முழக்கத்தின் கீழ் ஒன்றுபட்டனர். ‘அந்நிய முதலீடே உள்ளே வா’ ‘இந்தியாவில் தயாரியுங்கள்’ என்று சொல்லி வருபவர்கள் ’அந்நியனே வெளியேறு’ என்ற முழக்கத்தின் கீழ் ஒன்றுபட்ட மக்களை எப்படி ஒன்றுபடுத்த முடியும். அம்பானி, அதானி, அனில் அகர்வால் போன்ற கார்ப்பரேட் முதலாளிகள், பனியாக்களின் நிதி மூலதனம் வீங்கிப் பெருகுவதற்காக ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் அமித் ஷாக்களால் எப்படி நாட்டை ஐக்கியப்படுத்த முடியும்? பல நாடுகளுக்கு பறந்து பறந்து சென்று குஜராத்தி மோடி குஜராத்தி அதானிக்கு ப்ராஜெக்ட் வாங்கிக் கொடுப்பதால் இந்தியாவை உருவாக்க முடியுமா? அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் இரசியாவுடனும் பிரிட்டனுடனும் சீனாவுடனும் கட்டிப் புரண்டு கொண்டிருப்பவர்கள் ’புதிய இந்தியாவை உருவாக்குகிறோம்’ என்று வாய்சவடால் விடுகின்றனர்.
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தண்டி யாத்திரையால் உருவான இந்தியா இது! ஏகாதிபத்திய எதிர்ப்பில் தான் ’நாம்’ என்ற உளவியலை இந்த துணைக்கண்டத்து மக்கள் பெற்றனர். அந்த வரலாறெல்லாம் அமித் ஷாக்களின் பரம்பரைக்கு எங்கே தெரியப் போகிறது. அவர்கள்தான் அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு முஸ்லிம் எதிர்ப்பிலும் நாட்டை இரண்டாக்குவதிலும் முனைப்பாய் இருந்தவர்கள் ஆயிற்றே! தண்டி யாத்திரையால் உருப்பெற்ற இந்தியாவை இரத யாத்திரைகளால் நவீனமாக்க முடியுமா?
சாதி ஏற்றத்தாழ்வுகள் ‘நாம்’ என்ற உணர்வைப் பெறத் தடையாக இருக்கிறது என்பதை ஏற்காதவர்கள் தான் அமித் ஷாக்கள். சமூகப் பொறியமைவு என்ற பெயரில் சாதி அரசியல் செய்து வாக்குகளைப் பெற்று தேர்தல் வெற்றிப் பெற்றுவரும் அமித் ஷாக்களால் எப்படி நவீன இந்தியாவைக் கட்டியெழுப்ப முடியும்? அல்லது எப்படி ‘நாம்’ என்ற உளவியலை வளர்க்க முடியும்? ஜாதவ்களுக்கு எதிராக ஜாதவ் அல்லாதவர்கள், யாதவ்களுக்கு எதிராக யாதவ் அல்லாதவர்கள் என வாக்குதிரட்சி அரசியல் செய்யும் இவர்களால் எப்படி புதிய இந்தியாவை உருவாக்க முடியும்?
இந்தியா ஒரு தேசம் அல்ல என்ற யதார்த்தைப் மறைத்து நிதி மூலதனத்தின் நுகத்தடியில் மையத்தில் அதிகாரத்தைக் குவித்து இந்திய தேசத்தை உருவாக்க முடியும் என்று கருதுகிறவர்கள். பாகிஸ்தானில் இருந்து வங்க தேசம் ஏன் பிரிந்து போனது? என்றதில் இருந்து படிப்பினையைப் பெறாதவர்கள். தேசிய இனங்களின் அடிமை முறியாக இருக்கும் இந்திய அரசமைப்பை எதிர்திசையில் அடியோடு மாற்றியமைத்தால்தான் சம உரிமைக் கொண்ட தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மலரச் செய்ய முடியும். மாறாக, ஒரே தேசம், ஒரே மொழி என்று அமித் ஷாக்கள் சொல்வார்களானால் எப்படி கடந்த நூற்றாண்டில் அமித் ஷாக்களின் முன்னோர்கள் செய்த இந்து-முஸ்லிம் பிரிவினை அரசியலால் பாகிஸ்தானை உருவாக்கினார்களோ அது போல் இந்தி-இந்திப் பேசோதோர் என்ற பிரிவினை அரசியலால் இன்னும் பல நாடுகளை மொழி அடிப்படையில் உருவாக்குவதில் போய் முடியும்.
இந்தியாவை ’ஃபெடரேசன்’ என்று அழைக்க முடியாது என்று அம்பேத்கர் வாதிட்டார். இவை விரும்பி சேர்ந்த அரசுகள் அல்ல என்றார். எனவே ’யூனியன்’ என்று அழைப்போம் என்று அரசியல் நிர்ணய சபையில் நிறுவினார். ஆனால், கால ஓட்டத்தில் சிறு குழந்தைகளாக இருந்த தேசிய இனங்கள் எல்லாம் இப்போது பருவம் எய்திவிட்டன. இனி விருப்பத்தோடு ஒன்றாக இருக்க வேண்மென்றால் நடுவண் அரசில் ஒரு சில அதிகாரங்களை வைத்துக் கொண்டு ஏனைய அதிகாரங்கள்(residual powers) அனைத்தையும் மாநிலங்களுக்கு விட்டுவிட வேண்டும் என்று தேசிய இனங்கள் முனுமுனுக்கத் தொடங்கியுள்ளன. அன்று இந்தித் திணிப்புக்கு தமிழகத்திலும் வங்காளத்திலும் எதிர்ப்பு எழுந்தது. இன்றோ இந்தியை இந்தியாவின் அடையாளம் என்ற அமித் ஷா சொன்னவுடன் தமிழகம், கேரளம், கர்நாடகம், மராட்டியம் என எதிர்ப்புகள் எழுவது சொல்லும் செய்தி என்ன? இனி, இந்த பம்மாத்து வேலைகளை இந்தியாவில் உள்ள தேசங்கள் ஏற்கப் போவதில்லை என்று பொருள்.
அமித் ஷாக்களைப் போன்ற குஜராத்தி முட்டாள்களால் இந்தியாவை உடைத்து சுக்குநூறாக்க முடியுமே ஒழிய இந்தியாவை உருவாக்க முடியாது. சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரானப் போராட்டத்தின் மூலம் சமூக வளர்ச்சிக் கண்ட, தேசிய இனத்தை சேர்ந்தவர்களுக்கு தனது தலைவிதியை தீர்மானித்துக் கொள்ளும் உரிமை வேண்டும் என்ற புத்துலக குடியாட்சிய கண்ணோட்டம் கொண்ட, ஏகாதிபத்திய சந்தைப் பொருளாதார சுரண்டலுக்கு எதிரான உணர்வுப் பெற்ற தேசிய இனத்தில் இருந்து வரக்கூடிய முன்னெடுப்புகள்தான் ஒரு புதிய இந்தியாவை கட்டியெழுப்ப முடியும். அது தமிழ்நாடு, கேரளா, வங்காளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்துதான் எழ முடியுமே ஒழிய குஜராத், உத்தரபிரதேசம் போன்ற அரசியல் சனநாயக உணர்வில் பின்தங்கிய இடங்களில் இருந்து வரமுடியாது. தமிழகத்தில் இருந்து எழும் உரிமைக் குரல்களைப் பிரிவினைவாதம், தேசத் துரோகம் என்று சொல்லும் அமித் ஷாக்கள்தான் உண்மையில் இந்தியாவை சிதறுண்டு போக வழிவகுத்தவர்களாக அறியப்படுவார்கள்.
-செந்தில், இளந்தமிழகம்