மெட்ராஸ் உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்றம் – வெளிப்படைதன்மையற்ற உச்ச நீதிமன்ற கொலிஜிய நடைமுறையை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
நாட்டின் நான்காவது பெரிய உயர்நீதிமன்றமான மூத்த நீதிமன்றங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் பணிபுரிகின்ற இந்திய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிலேயே அதிக அனுபவம் வாய்ந்த தலைமை நீதிபதி தஹில் ரமாணி அவர்களை நாட்டின் சிறிய நீதிமன்றமான மேகாலயா நீதிமன்றத்திற்கு பணி இடமாற்றம் செய்தும், அவரை விட பல வருடங்கள் அனுபவம் குறைந்த மேகாலயா உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டல் அவர்களை மெட்ராஸ் உயர்நீதி மன்றத்திற்கு மாற்றியும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் சமீபத்தில் பரிந்துரை செய்து இருந்தது. இதை எதிர்த்து தன்னை மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம் என கொலிஜியத்திற்கு நீதிபதி தஹில் ரமாணி அவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தார். அவரின் கோரிக்கை கொலிஜியத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று (07.09.2019) நீதிபதி பதவியில் இருந்து அவர் விலகுவதாக கடிதம் கொடுத்து இருக்கிறார் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நீதிபதி தஹில் ரமானி அவர்கள் ஆகஸ்டு மாதம், 2018 மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கு முன் மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார்.
2002 இல் குஜராத்தில் மோடி ஆட்சி காலத்தில் முஸ்லிம்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது பில்கிஸ் பானு என்ற பெண்ணின் குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்டதோடு கர்ப்பிணியாக இருந்த 19 வயதான பில்கிஸ் பானு கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பின்னர் உச்ச நீதிமன்றம் வழக்கை மும்பை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது. சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் தஹில் ரமாணி, மிருதுளா பட்கர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வு மே மாதம், 2017 இல் சிறப்பு நீதிமன்றத்தின் தண்டனையை உறுதி செய்ததோடு வழக்கில் இருந்து விடுதலைசெய்யப்பட்ட 5 காவல் அதிகாரிகள், 2 மருத்துவர்களையும் கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காகவும்(IPC not performing their duties 218), சாட்சியத்தை அழித்த குற்றத்திற்காகவும்(IPC tampering of evidence 201) குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது இங்கே குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், இட மாற்றம் போன்ற விசயங்களை சில உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட கொலிஜிய நடைமுறையால் கையாளப்படுகிறது. கொலிஜிய நடைமுறை என்பது அரசமைப்பு சட்டமுறைகளால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பு நடைமுறையல்ல. அந்த வகையில் வெளிப்படைத்தன்மையோ, சனநாயகமான நடைமுறையோ மேற்சொன்ன விசயங்களில் கையாளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பட்டு வருகிறது. அலுவலக உதவியாளர் பெண்ணால் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றாச்சாட்டை மிக மோசமாக கையாண்ட நீதிபதி ரஞ்சன் கோகாய் தான் கொலிஜியத்தின் தலைவராக இருக்கிறார் என்பதும் அவரே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொலிஜியத்தின் வெளிப்படைத்தன்மை, சனநாயகதன்மை மீதும் நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
சமீபத்தில் கொலிஜியம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக 4 பேரை பரிந்துரை செய்தது. அதில் இந்திய அளவிலான சீனியாரிட்டி பின்பற்றப்படவில்லை என குரல்கள் எழுந்துள்ளன. கொலிஜியம் 2019, மே மாதம், மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகில் குரோசியை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற தீர்மானம் இயற்றியது. ஆனால், ஆகஸ்டு மாதம் மத்திய அரசு இதை ஏற்க மறுத்து கடிதம் அனுப்பியுள்ளது, மத்திய அரசு என்ன காரணத்திற்க்காக மறுக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்ல மறுக்கிறது கொலிஜியம்.
குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக அகில் குரோசி இருந்தபோது, 2010 இல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காவல் துறை காவலில் எடுக்க உத்தரவு வழங்கினார் என்ற காரணத்திற்காக நீதிபதி அகில் குரோசியை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்ய மோடியின் மத்திய அரசு மறுக்கிறது என குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 2018 ஆண்டு உத்திரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் அவர்களை தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்த போது மோடி அரசு சீனியாரிட்டி என்று சொல்லி கால தாமதம் செய்தது. உத்திரகாண்டில் குடியரசு தலைவர் ஆட்சியை நீதிபதி கே.எம் ஜோசப் ரத்து செய்தார் என்ற காரணத்தால் மோடி அரசு அவரது நியமனத்தை கால தாமதம் செய்கிறது என்று பேசப்பட்டது. உச்ச நீதிமன்ற சுதந்திரமான செயல்பாட்டில் மோடி அரசின் தலையீட்டை கண்டித்து உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியதையும் நாம் பார்த்தோம். மூத்த நீதிபதிகளில் ஒருவரான குரியன் ஜோசப் மத்திய அரசு,’ நீதிபதிகள் நியமனத்தை காலதாமதம் செய்வது, நிறுத்தி வைப்பது போன்ற விதத்தில் தலையீடு செய்கிறது’ என்று குற்றம் சாட்டினார்.
மேற்கண்ட சூழலில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து தலைமை நீதிபதி தஹில் ரமாணி அவர்களை மேகாலயா நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் இடமாற்றம் செய்வதில் அரசியல் தலையீடு உள்ளதோ என்ற ஐயம் நீதித்துறையினர் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் நீதிபதி தஹில் ரமானி அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கு பதில் நாட்டின் மிகச்சிறிய உயர் நீதி மன்றமான மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றுவது என்பது அவரின் இத்தனை ஆண்டு கால நீதிதுறை பணியை அவமானப்படுத்துவதும், அவரின் நீதிபதி பதவிக்கு கண்ணியகுறைவை ஏற்படுத்துவதாகும்.
தலைமை நீதிபதி தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்ற விசயத்தில் உச்சநீதிமன்ற கொலிஜியம் வெளிப்படை தன்மையோடு கூடிய சனநாயக வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பெண்கள் இயக்கம் கோருகிறது.
தலைமை நீதிபதி தஹில் ரமாணி அவர்களை மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்து பணியாற்றிட உச்சநீதிமன்ற கொலிஜியம் அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது.
ஆரோக்கிய மேரி
தலைவர், தமிழ்நாடு பெண்கள் இயக்கம்.
குறிப்பு:
https://www.telegraphindia.com/india/supreme-court-looks-for-way-to-avert-judge-crisis/cid/1701918?ref=more-from-india_story-page
https://www.thehindubusinessline.com/news/national/not-elevating-uttarakhand-cj-to-sc-exposes-pms-revenge-politics-congress/article23680568.ece