காசுமீர் உடைப்பு – 370 நீக்கம் – படைக்குவிப்பு! – பின்னணியும் விளைவுகளும் – கருத்தரங்கம்

04 Sep 2019

நாள்: 7-9-2019, சனிக்கிழமை, மாலை 4 மணி

உண்மைகள் தெளிய உணர்வோடு வாரீர்!

தலைமை: தோழர் குணாளன், மாநிலச் செயலாளர் ,சிபிஐ(எம்-எல்)

தோழர் தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

தோழர் பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

தோழர் பழநி, பொதுச்செயலாளர், மக்கள் சனநாயக குடியரசு கட்சி

தோழர் முருகன், சிபிஐ(எம்-எல்) ரெட் ஸ்டார்

தோழர் மணி, பாட்டாளிவர்க்க சமரன் அணி

தோழர் VC.முருகையன், பொதுச்செயலாளர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்

தோழர் வித்யாசாகர், அகில இந்திய மக்கள் மேடை(AIPF)

தோழர் பிரபாகரன், தமிழ்த்தேசிய பாதுகாப்பு இயக்கம்

வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர்நீதிமன்றம்

வழக்கறிஞர் அஜிதா, சென்னை உயர்நீதிமன்றம்

 

ஜம்மு-காசுமீர் முழுமையான திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. உலகிலேயே அரசப் படைகள் அதிகம் குவிக்கப்பட்டுள்ள பகுதி இதுவே. காசுமீரில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஊடகங்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. இணைய வசதிகள் முடக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்திய ஆளும் வர்க்கம் தனது வரலாற்றுத் துரோகத்தின் கடைசி அத்தியாயத்தை எழுதி முடித்துள்ளது.

ஜம்மு-காசுமீருக்கு சிறப்பு தகுதியளிக்கும் அரசமைப்பு சட்ட உறுப்பு 370ஐயும், உறுப்பு 35Aஐயும் செயலிழக்கச் செய்ய ஆகஸ்ட் 5 அன்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீர்மானம் கொண்டுவந்தார். அத்துடன் அம்மாநிலத்தை ஜம்மு-காசுமீர் என்றும் லடாக் என்றும் இரு துண்டாக்கி ஒன்றிய ஆட்சிப்புலமாக மாற்றும் சட்டத்திருத்தத்தையும் மாநிலங்களவையில் முன்வைத்தார்.

உறுப்பு 370 காசுமீர் மாநிலம் தனக்கென்று தனி அரசமைப்பும் தனிக் கொடியும் வைத்துக்கொள்ள உரிமையளிக்கிறது; அதே போது இந்தியாவின் மாநிலங்களைப் பட்டியலிடும் உறுப்பு 1 காசுமீருக்கும் பொருந்தும்படி செய்கிறது; காசுமீர் மாநில அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரையின் பெயரால் இந்தியக் குடியரசுத் தலைவர் இச்சட்ட உறுப்பைச் செயலிழக்கச் செய்யலாம் என்கிறது. காசுமீர் அரசியல் நிர்ணய சபை இல்லை. காசுமீர் மாநில சட்டப் பேரவையும் கலைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகாலம் ஆகிறது. இப்போது ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலின் போது நடுவண் அரசு திட்டமிட்டே காசுமீர் தேர்தலை நடத்தவில்லை.

மாநிலச் சட்டப் பேரவை இல்லாத இடத்தில் நடுவண் அரசால் அமர்த்தப்படும் ஆளுநரே பரிந்துரை செய்வாராம்; நடுவண் அரசால் தெரிவு செய்யப்படும் குடியரசுத் தலைவரே உறுப்பு 370ஐ செயலிழக்கச் செய்யும் படி ஆணையிடுவாராம்; காசுமீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இல்லை.”எல்லோரும் இந்நாட்டு மன்னர், எல்லோரு ஓர் நிறை” என்று குடியாட்சிக்கு விளக்கம் தரப்படும். ஆனால், இந்த அதிரடி நடவடிக்கையிலோ ‘நானே ராஜா, நானே மந்திரி’ என்பது போல் அரசமைப்புச் சட்ட முறைகளையும் சனநாயக நெறிகளையும் கடைப்பிடிக்காமல் மோடி – அமித் ஷா – அஜித் தோவல் தலைமையிலான கும்பல் இந்த வேலையைச் செய்துள்ளது. இத்திருத்தங்கள் நீதிமன்றத்தில் செல்லுபடியாகமாட்டா என்று சட்ட அறிஞர்கள் சொல்கின்றனர்.

70 ஆண்டுகால காசுமீரிகளின் வரலாற்றையும் அவர்களின் நூறாண்டு விடுதலைக் கனவையும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காசுமீர் இருந்தததில்லை என்ற ஐயத்திற்கிடமற்ற உண்மையையும் தாங்கி நிற்பதுதான் உறுப்பு 370. காசுமீரின் குருதி தோய்ந்த போராட்ட வரலாறும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களும் இந்த உறுப்பில் பொதிந்து கிடக்கிறது. அந்த உறுப்பு நாடாளுமன்றத்தின் சில மணிநேர விவாதத்தில் செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு மாநிலம் ஒன்றிய ஆட்சிப்புலமாகத் தகுதிக் குறைவு செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேட்களுக்கு காசுமீரத்தின் கதவுகளைத் திறந்துவிட்டு முதலீடு செய்யுமாறு கூவிக்கூவி அழைப்பு விடுக்கிறார் மோடி.

காசுமீரை இந்தியாவோடு ஐக்கியப்படுத்துவதற்காகவே 370, 35A உறுப்புகளை நீக்குவதாக பாசக சொல்கிறது. இந்நடவடிக்கைகள் இதுவரை இல்லாத அளவுக்கு காசுமீர் மக்களை இந்திய அரசிடம் இருந்து அயன்மைப்படுத்தும் என்பதை ஆட்சியாளர்களும் இந்த அடாவடித்தனத்தை ஆதரித்து நிற்போரும் உணரவில்லை. வேறெந்த மாநிலத்திற்கும் இல்லாத தனித்த சிறப்பு வரலாறு காசுமீருக்கு உண்டு.

இன்று மோடி தலைமையிலான இந்திய அரசு இதை ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்கிறது. இது உள்நாட்டுப் பிரச்சனையோ அல்லது இந்திய-பாகிஸ்தான் எல்லைச் சிக்கலோ அல்லது இந்து-முஸ்லிம் மதச் சிக்கலோ கிடையாது. இது காசுமீர் மக்கள் என்ற ஒரு தேசிய இனத்தின் சிக்கல். இச்சிக்கலில் காசுமீர் தரப்பு என்ற ஒன்று இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் – காசுமீர் ஆகிய மூன்று தரப்பும் பேசி தீர்வு காண வேண்டும். காசுமீரிலும் அனைத்துத் தரப்பு அரசியல் ஆற்றல்களோடும் பேசுவதற்கு  இந்திய அரசு முன்வர வேண்டும்.

இந்திய மக்களிடம் இந்திய தேசிய வெறியை ஊட்டி, போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தி, அணு ஆயுதப் பயன்பாடு குறித்த ஆரவாரப் பேச்சுகளை நடத்திக் கொண்டிருக்கிறது நடுவண் அரசு. இந்திய தேசிய வெறியூட்டலுக்கு எதிராகவும் போர்வெறிக்கு எதிராகவும் காசுமீரிகள் மீதான தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் துணிந்து நிற்க வேண்டிய தருணம் இது.

  • காசுமீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் உறுப்பு 370, 35A யைச் செயலிழக்கச் செய்யும் குறிப்பாணையையும் காஷ்மீரைத் துண்டாடும் சட்டத் திருத்ததையும் திரும்பப் பெற வேண்டும்.
  • ஜம்மு-காசுமீரில் குவிக்கப்பட்டுள்ள இந்தியப் படைகளைத் திரும்ப பெற வேண்டும்.
  • இந்தியா-பாகிஸ்தான் – காசுமீர் மக்களிடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
  • காசுமீர் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்களின் விருப்பத்தை அறிய வேண்டும்.

காசுமீர் காசுமீரிகளுக்கே!

காசுமீர் தொடர்பாக முடிவெடுக்கும் உரிமையும் காசுமீர் மக்களுக்கே!   காசுமீரிகளோடு தோளோடு தோள்  நிற்போம்!

 

காசுமீர் தோழமைக் கூட்டியக்கம்

9003989414

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW