“பாஜக அரசின் அறிவிப்பு, பொருளாதார நெருக்கடி நிலைக்கான முன்னோட்டத்தின் வெளிப்பாடா? ” – என 2016 செல்லாக்காசு அறிவிப்பின்போது நாம் கவனப்படுத்தியிருந்தோம்! – இன்று அது எதார்த்தம் ஆகிவிட்டது.
கடந்த 2016 நவம்பரில் பாஜக மோடி அரசு மேற்கொண்ட செல்லாக்காசு நடவடிக்கையின் அரசியல்பொருளாதார பின்னணியை அம்பலப்படுத்தி “செல்லாக்காசின் அரசியல்” என்ற தலைப்பிலான வெளியீட்டை கொண்டு வந்தோம். அந்நூலின் ஐந்தாம் பகுதியில் (பாஜக அரசின் அறிவிப்பு, பொருளாதார நெருக்கடி நிலைக்கான முன்னோட்டத்தின் வெளிப்பாடா?) பாஜக அரசின் “செல்லாக்காசு அறிவிப்பு” என்பது (பெரு முதலாளிகளை காக்கிற, வங்கிகளை காக்கின்ற) ஒரு தற்காலிக தீர்வாக இருக்கமுடியும் என குறிப்பிட்டிருந்தோம். சவாலே இனிதான் உள்ளது எனவும் கவனப்படுத்தியிருந்தோம். இன்று அது எதார்த்தம் ஆகிவிட்டது. சமகால சூழல் கருதி அப்புகுதி இங்கு வெளியிடப்படுகிறது.
==================================================================================
பாஜக அரசின் அறிவிப்பு, பொருளாதார நெருக்கடி நிலைக்கான முன்னோட்டத்தின் வெளிப்பாடா?
இந்தியப் பெரு முதலாளி வர்கக்கத்தின் ஒட்டுண்ணிப் பண்பும் இந்தியப் பொருளாதாரமும் பின்னிப்பிணைந்தவை.
நாம் மேற்கூறியபடி, காலனியாதிக்க சூழலில் இருந்து அரசியல் விடுதலைப் பெற்ற ஐக்கிய இந்தியக் குடியரசின் பொருளாதாரக் கொள்கை,வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பம்,இயந்திர சாதனங்களுக்காக,வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி சார்ந்த இறக்குமதி பாணியிலான தொழில்மயக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது(Import Substituted Industrialization).
அதேவேளையில்,இந்தியப் பெருமுதலாளிய வர்க்கமோ,அதிகம் முதலீடு ஆபத்தற்ற,பாதுகாப்பான சந்தையுடன்,விரைவான வகையில் லாபம் தருகிற வர்த்தகத்திலேயே தொடக்கம் முதல், ஆர்வம் செலுத்தியது.இந்தப் பண்புகளின் காரணத்தாலேயே இந்தியப் பெரு முதலாளிய வர்க்கத்தை துணியாத முதலாளிகள்(Riskless capitalist) என ரகுராம் ராஜன் அழைத்தார்.பெரும் மூலதன முதலீடுகள் செய்து தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கும்,நிலச்சீர்திருத்தம் மேற்கொண்டு தொழில்மயத்தை பெருக்கவும் அது விரும்பவில்லை.பெரு முதலீடுடைய ஆற்றல்,உள்கட்டமைப்பு தேவைக்கு அது அரசின் நிதி முதலீட்டை கோரியது.
இந்தியாவில் தொழில்மய வளர்ச்சியானது, இவ்வாறான எதிர்த்திசைப் போக்கில் பயணத்தை தொடங்கியது.சலுகை,மானியம்,என அனைத்து உதவிகளையும்,அரசிடம் பெற்றுக் கொண்ட இந்தியப் பெரு முதலாளிய வர்க்கம்,தனது முதலீடுகளைக் கண்காணிக்கிற அரசின் நடவடிக்கையை ஆரம்பம் முதலே விரும்பவில்லை.
எனவே தனது விருப்பத்தின் பெயரிலான முதலீடுகளைத் தொடர்ந்த இந்தியப் பெரு முதலாளிய வர்க்கம், நீண்டகால அடிப்படையிலான தொழில்மய முதலீடுகளுக்கு மாறாக குறைவான காலத்தில் லாபம் தருகிற துறைகளில் அதிகம் கவனம் செலுத்தியது.
மேலும்,மேற்குலக நாடுகளின் உற்பத்தி தயாரிப்பிற்கான கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்வதைத் தாண்டி அது,முழு சரக்கை ஏற்றுமதி செய்கிற வகையில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உறுதியாக மேற்கொள்ளவிலை.
உள்நாட்டு சந்தையை அரசின் உதவியோடு மேற்கொள்வது,தொழில்நுட்பத்திற்கு வெளிநாடுகளின் உதவியைப் பெறுவது என தனது வாணிப,நிலப்பிரபுத்துவ பண்புகளின் எச்சங்களை துடைத்தெறியாத பழமையான பிற்போக்கு குணாம்சமுடைய வர்க்கமாக தேச கட்டுமானத்தில் பங்களிப்பு செய்தது.
90 களில் தாராளமயமாக்கல் கட்டத்திலும் 2008 ஆம் ஆண்டுகால பொருளாதார மந்த கட்டத்திலும் இந்தியப் பெரு முதலாளிகளின் இந்தப் பண்பு முழுதும் மாறவில்லை.பெரும்பாலும் உள்நாட்டு சந்தையை நம்பியுள்ள இந்திய பெரு முதலாளிகள் அந்நிய மூலதன சக்தியோடு போட்டி போடவேண்டுமென்றால் அரசின் நிதி உதவிகள் மேலதிக சலுகைகள் அவசியம் எனக் கோரியது.
இந்த சூழலில் தனது உள்நாட்டுப் பங்காளியைக் காக்க வேறு வழியில்லாமல்,இந்தியப் பெரு முதலாளிய வர்க்கத்திற்கு கடன் வழங்குகிற போக்கு அதிகரித்தது.2008 முதல் 2013 வரையிலான காலகட்டங்களில் மட்டும் வழங்கப்பட்ட கடன்கள் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாயைத் தொட்டது.
ஏற்றுமதி வர்த்தகத்தைப் பொறுத்தவரை கணினித் துறை,காப்பீடு போன்ற ஆபத்தில்லாத சேவைத் துறைகளில் மட்டுமே இந்தியப் பெரு முதலாளிய வர்க்கம் ஆர்வம் செலுத்தியது.இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகளவில் அமெரிக்காவை சார்ந்துள்ளது.
ஒட்டுமொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு மட்டும் 16 விழுக்காட்டு ஏற்றுமதி செய்கிறது.இதில் ஐம்பது விழுக்காட்டு அளவிற்கு கணினி போன்ற சேவைத் துறை ஏற்றுமதியே பங்களிப்பு செய்கிறது.
சேவைத்துறை நீங்கலாக,உலக சந்தையில் போட்டி போடுகிற வகையில்,சிறந்த தொழில்துறை பண்டங்களை (அளவு ரீதியாகவும்,பண்பு ரீதியாகவும்)ஏற்றுமதி செய்கிற வகையில் இந்தியப் பெரு முதலாளிய வர்க்கம் வளர்ச்சிப் பெறவில்லை.இதன் காரணாமாகவே கடந்த பத்து ஆண்டுகளாக ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான வர்த்தக வீதம் எதிர்மறையில் அதிகரித்து செல்லுகிறது.2015 ஆம் ஆண்டுகால (https://www.statista.com/statisti…/…/trade-balance-of-india/ )அறிக்கையின்படி இந்த வீதம் – 124 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.அதேபோல ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான பற்றாக்குறை சுமார் -190 பில்லியன் டாலரை தொட்டுவிட்டது.
பெரும்தூக்கத்தில் இருந்து விழித்திக்கொண்டது போல,தற்போது இந்திய ஆளும்வர்க்கமானது ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்,உலக சந்தையில் போட்டி போடுகிற வகையில் உற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என பலமாக பேசி வருகின்றன.ஆனாலும் ஒரே நாளில் இந்த மாற்றங்களுக்கு சாத்தியமே இல்லை என்பதே நமது முடிவு.
1947-1980 கள் வரையிலும்,அதற்குப் பின்பான நவதாராளமய கட்டத்திலும் தனது ஒட்டுண்ணித்தன,பாதுகாப்பான சந்தையில் முதலீடு செய்கிற,நிதி முதலீடுகளுக்கும்,உள்கட்டமைப்பிற்கும் அரசை சார்ந்துள்ள,அரசின் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்ட உதவாக்கரை வர்க்கமாகவே அதன் தோற்றம் தொட்டே இந்தியப் பெரு முதலாளிவர்க்கம் தொழில்படுகிறது.
இந்தியப் பெரு முதலாளியவர்க்கத்தின் இந்தப் பண்பானது இந்தியப் பொருளாதாரத்தை அழுகிப்போன, தேக்கம் பெற்ற, அரை தொழில்மய நாடாக அறுபதாண்டுகாலமாக வைத்துள்ளது.சமூகத்தின் சமச்சீரான வளர்ச்சிக்கு அடித்தளத்தை அமைத்தது.இந்தியப் பெரு முதலாளிகள்,அவர்களின் கூட்டாளிகள்,பன்னாடு நிதி மூலதன ஊடுருவலால் பலன்பெற்ற சிறு மக்கள் திரளைத் தவிர பெரும்பாலான மக்கள் கிராமத்தில்,துண்டித்த பிரிவினராக இருந்தனர்.இருக்கின்றனர்.
நகரத்தில் குவிமயப்பட்ட வளர்ச்சி, அதன் நுகர்வாளர்கள் ஒரு முனையிலும் கிராமத்தில் தொடருகிற பழைய பிற்போக்கு அம்சங்களின்,உற்பத்தி உறவுகளின் எச்சங்கள் மறுமுனையிலும் என மிகவும் சமச்சீரற்ற பொருளாதார வளர்ச்சி நிலைக்கு இந்நாட்டை நிறுத்தியுள்ளனர்.
இந்த கும்பல்தான்,தற்போது வெளிநாடுகளில் உள்ளது போல,ரொக்கப் பணப் பயன்பாடற்ற,கடன் அட்டை பரிவர்த்தனைக்கு இந்திய சமூகத்தை மாறக் கோருகிறது.அவ்வாறு மாறுவதற்கு மோடி அரசின் அறிவிப்பு துணை செய்கிறது எனக் கூசாமல் பேசுகிறது இந்திய தொழிலகக் கூட்டமைப்பு.இதுதான் எவ்வளவு பெரிய முரண்பாடு!
ஆக,நாட்டின் தொழில்மயத் துறையில்(Producitve sectors) துணிந்து முதலீடு செய்யாத,புதிய துறைகளில் துணிந்து இறங்காத, நாட்டின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் உத்தரவாதம் வழங்காத ஓர் மந்த வர்க்கத்திடம் வழங்கிய கடனைப் பெறுவதில் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆர்வம் காட்டியது ஒன்றும் பெரிய வியப்பில்லை.
ராஜனைப் பொறுத்தவரை,இந்த உதவாக்கரை வர்க்கத்தால் வளர்ச்சியும் இல்லை,நன்மையும் இல்லை என்ற முடிவுக்கு சீக்கிரமாகவே வந்து விட்டதாக தெரிகிறது.மேற்குலக முதலாளிய வர்க்கப் பண்புகளை அதிகம் உள்வாங்கிய ராஜனுக்கு இந்திய முதலாளிய வர்க்கத்தின் இப்பண்புகள் ஏமாற்றம் அளித்தாலும்,இந்திய சந்தையை மீட்க முயன்றார்.நவதாரளமய சந்தை ஊடுருவலுக்கு ஏற்ற சந்தைக் கட்டமைப்பை,வாய்ப்புகளை உருவாக்க ஆர்வம் கொண்டார்.பத்து பாரம்பரிய உதவாக்கரை முதலாளிகளால்,நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையாமல் இருக்க,ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு உகந்த சந்தையாக இந்தியாவை மாற்ற வங்கி சீர்திருத்தம் அவசியம் என உணர்ந்தார்.வாராக் கடனை வசூலிக்கிற நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.அவரின் முயற்சி பலிக்கவில்லை.
தற்போது,மக்களிடம் உள்ள பணத்தை உறிஞ்சுகிற ஆளும்வர்க்கத்தின் அயோக்கியத்தனம் தற்காலிகமாக வங்கிகளை மூச்சு விட வைக்கும் என்பது உண்மைதான்.ஆனால்,இதுமட்டுமே இந்தியப் பொருளாதாரத்தை,வங்கிகளை மீட்கிற இறுதி வழியில்ல.சவாலே இனிதான் உள்ளது!
-அருண் நெடுஞ்சழியன்