ப.சிதம்பரம் கைது; முன்னேறித் தாக்கும் பா.ச.க. – நிலைகுலையும் எதிர்க்கட்சிகள்

26 Aug 2019

ப.சிதம்பரம் – ஐ.கே. குஜ்ரால் ஆட்சிக் காலத்திலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரு முழு ஆட்சிக் காலத்திலும் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைக்குப் பட்டுக் கம்பளத்தை விரித்தவர்; அரசின் தலையீட்டை ’லைசன்ஸ் ராஜ்’ என்று விமர்சித்து கட்டுப்பாடுகளைத் தளர்த்த வாதிட்டவர்;  சூறையாடும் முதலாளிகளின் உற்ற நண்பனாக நாட்டின் கனிம வளக் கொள்ளைக்கு கொள்கை அமைத்தவர்; பழங்குடிகள் மீதான ’பச்சை வேட்டைப்’ போரை நடத்தியவர். அவர் அதே சூறையாடும் முதலாளிகளின் இன்றைய அரசியல் முகமான பா.ச.க.வின் கைவசம் உள்ள நடுவண் புலனாய்வுக் கழகத்தால் விசாரணைக்கென்று கைது செய்யப்பட்டுள்ளார். இப்படியொரு நிலைமை தனக்கு ஏற்படும் என்று அவரோ அல்லது இன்ன பிற ஆளும் வர்க்க அரசியல் ஆற்றல்களோ 2014 க்கு முன்பு கற்பனைகூட செய்திருக்க வாய்ப்பில்லை.

303 மக்களவை உறுப்பினர்களுடன் ஆட்சியைப் பிடித்திருக்கும் பா.ச.க. மேடு பள்ளம், நெளிவு சுழிவு பற்றியெல்லாம் கவலைப்படாமல் முன்னேறிச் செல்கிறது. சட்ட மசோதாக்களை நிறைவேற்றுமொரு தொழிற்சாலை போல் கடகடவென 35 மசோதாக்களை நிறைவேற்றி இந்த கூட்டத் தொடரை முடித்துக் கொண்டது. முத்தாய்ப்பாக காஷ்மீருக்கான 370  சட்டப்பிரிவை செயலிழக்கச் செய்தது, அது மட்டுமின்றி, முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றியது; தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு வகையினங்களுக்குள் கொண்டு வந்தது; தனி நபரைக்கூட பயங்கரவாதியாக அறிவிக்க வழி செய்யும் திருத்தங்களை ஊபா சட்டத்தில் கொண்டு வந்தது. பா.ச.க.வின் பெரும்பான்மை பலத்தைக் குறைச் சொல்லியபடி எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த அவையில் தாம் ஒரு   ’செல்லாக் காசு’ என அரசியல் மேடைகளில் ஒப்புக் கொண்டனர்.

ஆனால், பா.ச.க. இந்த ஒரு முனையோடு தனது முன்னேறித் தாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவில்லை. மராட்டியம், அரியானா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இவ்வாண்டு இறுதியில் வரவிருக்கும் தேர்தலுக்கு அணியமாகிக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் எதிர்க்கட்சிகளைச் சிதறடித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் என்று வரும்பொழுது டி.ஆர்.எஸ்., தெலுங்கு தேசம், பி.எஸ்.பி, எஸ்.பி., ஆர்.ஜே.டி., பிஜூ ஜனதாதளம், மஜத, ஆம் ஆத்மி, திரினாமுல் காங்கிரசு, திமுக ஆகியவை எல்லாம் மாநிலக் கட்சிகள்தாம். சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெயரளவில் அனைத்திந்திய கட்சிகள் தாம் என்றாலும் நடைமுறையில் மிகவும் வட்டாரம் தன்மை வாய்ந்தவை. சி.பி.ஐ.(எம்) ஐ எடுத்துக் கொண்டால் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் இருக்கின்றது. அதிலும் மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் அது சரிந்து கொண்டிருக்கிறது. எனவே, நாடு தழுவி அளவில் தடங்களைக் கொண்டிருக்கும் ஒரே எதிர்க்கட்சி காங்கிரசு தான். எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்துவதில் காங்கிரசை நொறுக்குவதே முதன்மையானதாகும். இதைத்தான் பா.ச.க. இப்போது செய்து கொண்டிருக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் சிங்கம் யானையின் தலையில் ஏறி கொடுக்கும் அடி போல் பா.ச.க. காங்கிரசை ஓங்கித் தாக்கியுள்ளது.

கர்நாடக கவிழ்ப்பு:

காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு நடுவண் புலனாய்வுக் கழகத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதுவும் ஆகஸ்ட் 21 ஆம் நாள் மாலை நாடக பாணியில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் ஆகஸ்ட் 26 வரை விசாரணையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. காங்கிரசு மட்டுமின்றி ஏனைய எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் எச்சி முழுங்க வைக்கும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. முன்னாள் உள்துறை அமைச்சரும் நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தால் தான் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது பா.ச.க.வின் எதிரணியில் நிற்கும் எல்லோருக்கும் ஒரு வலுவான செய்தியாகும். இந்த 75 நாட்களில் காங்கிரசுக்கு விழுந்த அடி இது மட்டுமன்று.

ஆட்சி அமைத்த 50 நாட்களுக்குள் கர்நாடகாவில் மஜத – காங்கிரசு கூட்டணி ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு பா.ச.க. ஆட்சி அமைத்தது. கிட்டத்தட்ட சொல்லியடிக்கும் பாணியில் எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்த்தார். அதிலும் காங்கிரசு எம்.எல்.ஏ.க்கள் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து ஆட்சியைக் கவிழ்த்தனர். சபாநாயகர் இராஜினாமாவை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் காலந் தாழ்த்திய நிலையில் காங்கிரசு எம்.எல்.ஏ. க்கள் உச்சநீதிமன்றம் சென்று தங்கள் இராஜினாமாவை ஏற்றுக் கொள்ள ஆணையிடுமாறு கோரினர்! கர்நாடக காங்கிரசின் முன்னணி தலைவர் சித்தராமையாவும், முதல்வர் குமாரசாமியும் எவ்வளவு முயன்றும் பதவி விலகிய 15 காங்கிரசு எம்.எல்.ஏ. க்களை மீட்க முடியவில்லை. மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவி ’அடுத்த தலைவர் யார்’ என்று காங்கிரசு தடுமாறிக் கொண்டிருந்த பொழுதே ஜுலை மாதத்தில் கர்நாடக ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திக் காட்டியது பா.ச.க. ஜூன் மாதத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் பா.ச.க.வுக்கு தாவினர். இவையன்றி தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், மூத்தத் தலைவர்கள் படகு மாறிக் கொண்டே இருந்தனர். கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள் என திரினாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் பா.ச.க.வுக்கு தாவி வருகின்றனர். கார்ப்பரேட்கள் கைமாறாக வாரித் தந்ததால் மோடி-அமித் ஷாவிடன் குவிந்து கிடக்கும் அளவற்ற பணத்தால் எளிதில் விலைக்கு வாங்கக் கூடியவர்களாகவே எதிர்க்கட்சிகள் முகாமில் உள்ள பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். மக்களவை தேர்தல் முடிந்து ஒரே மாதத்திற்குள் கர்நாடகாவில் சறுக்கி விழுந்தது காங்கிரசு.

காஷ்மீர் அதிரடி:

ஆகஸ்ட் முதல் வாரத்தில் காஷ்மீர் விசயத்திலும் காங்கிரசு  கூடாரமும் எதிர்க்கட்சிகளும் சிதறடிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளில் இந்தி வளையத்தில் உள்ள கட்சிகளான ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, பிஜு ஜனதா தளம் மட்டுமின்றி தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி போன்றவையும் பா.ச.க.வோடு நேர்க்கோட்டில் நின்றன. ஆகஸ்ட் 5 அன்று காங்கிரசின் மாநிலங்களவை கொறடா புபனேஸ்வர் கலிதா காங்கிரசின்  நிலைப்பாட்டைக் கண்டித்து இராஜினாமா செய்தார். ஜோதிராதித்யா எம்.சிந்தியா, ஜனார்த்தன திவேதி, டாக்டர் அஸ்வனி குமார், அரியானா முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஊடா, அவர் மகன் திபேந்தர் சிங் ஊடா, ஜெய்வீர் செர்கில் என பல காங்கிரசு முன்னோடிகள் 370 ஐ நீக்கியதை ஆதரித்து நின்றனர். அதில் ஒரு சிலர், அரசமைப்பு சட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டு அச்சட்டப்பிரிவு நீக்கப்படவில்லை என்பதற்காகவே எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

ஆகஸ்ட் 5 அன்றே மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் போன்றோர் 370 ஐ நீக்கியதைக் கடுமையாக எதிர்த்தனர். இதை ஒரு வரலாற்றுத் தவறு(monumental blunder) என்றும் மிக அடிப்படையானப் பாவச்செயல்(cardinal sin) என்றும் ப.சிதம்பரம் விமர்சித்தார். ஆகஸ்ட் 5 காஷ்மீர் அதிரடி வெளிப்பட்டு 24 மணி நேரம் கழித்துத்தான் ராகுல் காந்தி தனது கருத்தை வெளிப்படுத்தினார். அதற்குள் காங்கிரசு கூடாரத்தில் கனிசமானோர் பா.ச.க.வின் நிலைப்பாட்டை கட்டித் தழுவிவிட்டனர். ”உலக தொலைக்காட்சிகளில் முதல்முறையாக சுதந்திர தினச் சிறப்பு பட்டிமன்றம் 370 சட்டப்பிரிவு ரத்தால் – நன்மையா? தீமையா? – ’நன்மையே’ அணியில் பிரபல காங்கிரசு தலைவர்கள் டாக்டர் கரண் சிங், ஜோதிராதித்யா சிந்தியா, புபனேஷ்வர் கலிதா ஆகியோரும் ‘தீமையே’ அணியில் ராகுல், குலாம் நபி ஆசாத், சிதம்பரம் ஆகியோரும் பேசுவார்கள் – சபாஷ் சரியானப் போட்டி என அமித் ஷாவும் மோடியும் பேசிக் கொள்வது போல் ’துக்ளக்’ இதழ் அட்டைப் பட கேலிச் சித்திரம் போட்டது.

தமது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதையே தாம் செய்வதாக சொல்கிறது பா.ச.க. 370 ஐ நீக்குவதே எமது நிலைப்பாடு என்று அடித்துச் சொல்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளின் முகாமில் இப்படியான தெளிவான நிலைப்பாடு இல்லை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் பெயரால்  காங்கிரசு தடுமாறி நிற்கிறது. என்.ஐ.ஏ., காஷ்மீர், அயோத்திப் பிரச்சனை, அணு ஆயுதப் பயன்பாடு என பா.ச.க.வுக்கு வசதியான ஆடுகளங்களில் காங்கிரசும் ஏனைய எதிர்க்கட்சிகளும் கொண்டிருக்கும் சந்தர்ப்பவாத நிலைப்பாடு பா.ச.க.வை முன்னேறித் தாக்க வைக்கிறது. எதிர்க்கட்சிகளின் வெகுசன அணிகளைத் தமதாக்கிக் கொள்வதில் மோடி- அமித்ஷா சிறுகும்பல் சர்வாதிகார ஆற்றல்கள் வெற்றி காண்கின்றனர். காஷ்மீர் பிரச்சனையில்கூட காங்கிரசு நிலைப்பாட்டில் ஏற்பட்ட தடுமாற்றத்தை மாற்றி 370 ஐ நீக்கியதை எதிர்ப்பதாக நிலைப்பாடு எடுக்க வைத்ததில் ப.சிதம்பரத்திற்கு குறிப்பிடத்தக்கப் பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அடுத்த சில நாட்களில் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுவிட்டார்.

ஊழல் சங்கிலி:

காங்கிரசுக்குள்ளேயே பா.ச.க.வின் இந்துத்துவ கொள்கைகள் பால் சாய்வு கொண்டவர்கள் காங்கிரசின் காவி அணியாக இருக்கின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும்  தாராளவாத ஆற்றல்கள் – அதாவது உலகமயத்தை எதிர்க்காமல் இந்துத்துவத்திற்கு மாற்றாக மதச்சார்பின்மை கருத்துகளில் ஓரளவுக்குப் பிடிப்புக் கொண்டோர் ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டப்பட்டுவிடுகின்றனர். புரட்சிகர சனநாயக ஆற்றல்களைக் கட்டுப்படுத்த ஊபா சட்டத் திருத்தம் மற்றும் யாரையும் பயங்கரவாதி என முத்திரைக் குத்தும் அதிகாரம் படைத்த என்.ஐ.ஏ. வைக் கையில் வைத்திருக்கிறது பா.ச.க. இன்னொருபுறம் தாராளவாத முகாமில் உள்ள எதிர்க்கட்சியினரை முடக்கிப் போடுவதற்கு நடுவண் புலனாய்வுக் கழகம், அமலாக்கத் துறை ஆகியவற்றை சுழற்றிவிடுகிறது பா.ச.க.

அசட்டு சிரிப்போடு தாம் அஞ்சி ஓட வில்லை, தாம் சட்டத்தை எதிர்க்கொள்ள தயார் என பத்திரிகையாளரை சந்தித்துவிட்டு தோல்வி நிழல் கவிழ, துயரம் தோய்ந்த முகத்தில் கீறல் விழுந்தால் போன்ற சிர்ப்புடன் ப.சிதம்பரம் நடுவண் புலனாய்வுக் கழக அதிகாரிகளுடன் செல்கிறார். சுற்றி வளைத்து சுழற்றி அடிக்கும் அமித் ஷா – மோடி – அஜித் தோவல் கூட்டணியின் நகர்வுகளை எதிர்கொள்வதற்கான தயாரிப்பு ஏதுமின்றி புதிய ஆட்சி அமைந்த முதல் எழுபது நாட்கள் கேட்பன் இல்லாத கப்பல் போல் தலைவர் இல்லாமல் இருந்தது காங்கிரசு கட்சி. இப்போதும் ஒப்புக்குச் சப்பானிப் போல் சோனியா காந்தி தலைவர் ஆக்கப்பட்டுள்ளார். காங்கிரசு சரிவில் இருந்து மீள்வதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. எதிர்க்கட்சிகளிடமிருந்து கூட ப.சிதம்பரத்திற்கு ஆதரவான குரல்கள் அதிகம் ஒலிக்கவில்லை. மதச்சார்பின்மை மீது வெறுப்பு கொண்ட ஊடக அறிவுஜீவிகள் ஆசை தீர சிதம்பரத்தைக் கொச்சைப்படுத்தி, ஓடி ஒளிந்து கொண்ட ஒரு கிரிமினலைப் போல் சித்திரித்து தமது வெறியைத் தணித்துக் கொண்டனர்.

சதிக்கோட்பாட்டில் சளைக்காத தமிழர்கள்

மோடி – அமித் ஷா – அஜித் தோவல் கூட்டணி எதிர்முகாமை முன்னேறித் தாக்கும் பாணியின் அடுத்து அடுத்த அதிரடிகளாக இவற்றைப் பார்க்காமல் ஈழத் தமிழர் பிரச்சனையில் இனப்படுகொலைக்கு காங்கிரசு துணை போனதை மனதில் எண்ணி அதற்கு கிடைத்த தண்டனையாக ஒருசாரார் பேசி மகிழ்கின்றனர். முன்பொரு காலத்தில் இயற்கை அறிவியலில் சூரியன் பூமியைச் சுற்றுவதாக நம்பிக் கொண்டிருந்த மூட நம்பிக்கைப் போல், திமுகவை சுற்றியே இந்திய அரசியல் சுழல்வதாக நம்பும் தமிழர்கள் காஷ்மீர் பிரச்சனையில் திமுக நடத்திய போராட்டத்தைப் பின்னுக்கு தள்ளவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என பேசிக் கொண்டனர். நிர்மலா சீதாராமன் நிதி நிலை அறிக்கை வாசித்த போது கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார் ப.சிதம்பரம் என்பதால் அவருக்கு இந்த பரிசை நல்கியது நிர்மலாவின் கோபம் என்கின்றனர் சிலர். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது இஷ்ரத் ஜகான் மோதல் கொலை வழக்கில் அமித் ஷா இதே நபுக வால் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு பதிலடியாக, இன்று அமித் ஷா உள்துறை அமைச்சராக இருக்கும் போது ப.சிதம்பரம் அதே நபுக வால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பேசப்படுகிறது. இவையன்றி, ஆயிரம் தான் இருந்தாலும் ப.சிதம்பரம் தமிழர் என்றும் பார்ப்பனரல்லாதார் என்றும் அவருக்காக வருந்துகிறார்கள் சிலர்.

பணத்தைக் கொண்டும், நபுக, அமலாக்கத் துறை, வருவாய்த் துறையைக் கொண்டும், என்.ஐ.ஏ., உளவுத் துறையைக் கொண்டும் எதிரணியினரை சிதறடித்துக் கொண்டிருக்கிறது பா.ச.க. வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதால் விளையப் போவது எதுவும் இல்லை. எழுபது ஆண்டுகளில் இந்திய அரசியல் எதிர்கொள்ளாத புதிய நிலைமைகள். வழக்கமான பாணியில் ஒரு ஐந்து ஆண்டுகள் அல்லது இரண்டு ஐந்து ஆண்டுகள் காத்திருந்தால் பழம் நழுவி தானாக பாலில் விழுவது போல் ஆட்சி கைக்கு வந்துவிடும் என்ற நம்பிக் கொண்டிருப்பார்களே ஆனால் இன்னும் பத்து இருபது மாதங்களில் முழு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும். இப்போது ப.சிதம்பரம் அடுத்து இரண்டு முக்கிய காய்கள் இருக்கின்றன. அவையும் வெட்டப்பட்டுவிட்டால் பின் மண்டையில் அடிக்கப்பட்டு கண்கள் மங்கலாகும் நிலைக்கு காங்கிரசு தள்ளப்படும். பிரியங்காவின்  கணவர் ராபர்ட் வதேராவும் சசி தரூரும் பட்டியலில் இருக்கும் இரு பெருந் தலைகள். அந்த தலைகள் கைது செய்யப்படும் பொழுது நமது சதிக்கோட்பாட்டாளர்கள் எப்படி விளக்கம் தர போகிறார்கள் என்று தெரியவில்லை.

மக்களை நோக்கிய செயல் இல்லையேல் மரணம்

டிவிட்டர் பதிவுகள், போலி மதச்சார்பின்மை, மென்மையான இந்துத்துவம், அரைகுறை கூட்டாட்சி, இந்துப் பெரும்பான்மைவாதத்தோடு அனுசரித்தல் , அறிக்கைகள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என வழமையான எதிர்க்கட்சி அரசியல் உதவப் போவதில்லை. ஒற்றையாட்சி கும்பல், சர்வாதிகார ஆற்றல்களால் பாதிக்கப்படும் பல்வேறு பிரிவினருக்கான திட்டவட்டமான சனநாயக கோரிக்கைகளை முன் வைத்து மக்களை அணி திரட்ட வேண்டும்.  நடைபயணங்கள், ஊர்திப் பரப்புரைகள், விடாப்பிடியான தொடர் போராட்டங்கள், பட்டினிப் போராட்டங்கள் என எதிர்க்கட்சியினர் ஒரு வேலைத் திட்டத்துடன் களத்தில் இறங்காவிட்டால் முன்னேறித் தாக்கும் சர்வாதிகார ஆற்றல்களின் பேய் வேகத்திற்கு தடை போடக் கூட முடியாது. செயல், உடனடி செயல், மக்களை நோக்கிய செயல் ஒன்றே தீவிரப்படும் நிலைமைக்கு எதிரான உத்தியாக இருக்க முடியும்.

 

-செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW