இந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன?

24 Aug 2019

ஐந்து ரூபாய் பிஸ்கட் விற்கவில்லை, கார் விற்கவில்லை, வீட்டு மனைகள்  விற்கவில்லை, ஸ்டீல் பொருட்கள் விற்கவில்லை, துணிமணி ஜவுளிகள் விற்கவில்லை என கடந்த இரு வாரங்களாக இந்தியப் பொருளாதார மந்தப் போக்கு குறித்த விவாதங்கள் நாட்டின் முக்கியச் செய்தியாகி வருகின்றன.

ஆட்டோமொபைல் தொழிற்துறையைப் பொறுத்தவரை 2019ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டில் 9.9 விழுக்காடாக  இருந்த விற்பனை வளர்ச்சி, ஏப்ரல்-ஜூன் வரையான இரண்டாவது காலாண்டில் 6.2 விழுக்காடாக குறைந்துள்ளது (பிபிசி தரவு).

தொழில்மந்த காலத்தில், லாப வீதம் வீழ்ச்சியடையாமல் இருப்பதற்காக முதலாளித்துவ நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பிலும், ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுவருகின்றன. இந்தியாவின் முன்னணி பிஸ்கெட் நிறுவனமான பார்லே, பத்தாயிரம் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க முடிவெடுத்துள்ளது. டிவிஎஸ், நிசான்,  டாடா,  அசோக் லேலண்ட் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர் விடுமுறை அறிவிப்புகளும் ஆட் குறைப்பு அறிவிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றன.

“இந்தியப் பொருளாதாரம்  கடுமையான தொய்வு ஏற்பட்டுள்ளது. 5 ரூபாய் பிஸ்கட்டை வாங்கக்கூட வாடிக்கையாளர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கின்றனர்” என பிரிட்டானியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வருண் பெரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார சூழல் கவலை அளிக்கிறது என இந்திய ரிசர்வ் வங்கியின்  முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கவலை தெரிவிக்கிறார்.

2016-17 ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி வீதம் சரியத் தொடங்கியதிலிருந்து பொருளாதார மந்தப் போக்கு என்ற பிரச்சனை நடைமுறையில் வெளிப்படத் தொடங்கிவிட்டது. அப்போது பிரதமர் மோடியோ, எல்லாம் சரியாக செல்கிறது என்றார்.

தற்போது 2018-19 , ஜனவரி–மார்ச் காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி 5.8 விழுக்காடாக ஆக  வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஏப்ரல்-–ஜூன் காலாண்டில் 8 விழுக்காடாகவும் ஜூலை –செப்டம்பர் காலாண்டில் 7 விழுக்காடாகவும், அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 6.6 விழுக்காடாகவும் சரிந்து வந்த பொருளாதாரம் தற்போது 5.8 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், முதல் முறையாக இத்தொடர் சரிவு ஏற்பட்டுவருகிறது. (https://www.businesstoday.in/current/slowdown-blues/gdp-india-fall-march-quarter-q4-fy-2018-19/story/352601.html)

நாட்டின் பொருளாதார மந்தப் போக்கின் எதார்த்த உண்மை விவரங்கள் இவ்வாறு இருக்க நாட்டின் பிரதமர், வழக்கம் போல நடைமுறை சாத்தியப்பாடற்ற  பொய்   உறுதிமொழிகளை வழங்கிவருகிறார். கடந்த சுந்தந்திர தின உரையில், 2024-25 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தை  5 டிரில்லியன் டாலராக மாற்றுவோம் என்றார். பிரதமரின் வெற்று உறுதிமொழிகள் நிதி ஆயோக் தலைவரை அச்சப்படுத்தியிருக்கக் கூடும் போலும்.

“கடந்த 70 ஆண்டுகளில் (நாங்கள்) இந்த வகையான பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை. முழு நிதித்துறையும் சிக்கலில் உள்ளது. நாட்டின் பொருளாதார சரிந்துள்ளது” என நிதி ஆயோக்கின் தலைவர், ராஜீவ் குமார் கூட்டமொன்றில் பேசியுள்ளார். மோடியின் “ஐந்து ட்ரில்லியன் டாலர்” உரை முடிந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள்ளாக (அறுபது ஆண்டுகால திட்டகுழுவை கலைத்து உருவாக்கப்பட்ட) நிதி ஆயோக்கின் தலைவர் நாட்டின் பொருளாதரம் குறித்த உண்மையை உடைத்துவிட்டார்.

முன்னதாக 2008 உலக நெருக்கடியை முன் அனுமானித்த முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை பாஜக தூக்கி எறிந்தது. அடுத்த வந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்துவிட்டார்.  அடுத்து நிதி ஆயோக்கின் முன்னால் தலைவர் அரவிந்த் பனக்காரிய மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ஆகியோர் அடுத்தடுத்த “சொந்தக் காரணங்களுக்காக” ராஜினாமா செய்துவிட்டு நடையைக் கட்டினர். இந்த ராஜினாமாக்கள் பாஜக அரசுக்கும் லிபரல் பொருளாதார அறிவுஜீவி குழுக்குமான (அதிகாரவர்க்கத்தின்) வெளிப்படையான முரண்பாட்டை அம்பலப்படுத்தியது.

தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசோ இந்தியப் பொருளாதாரம்  ‘சரியாகிவிடும் என நினைத்தால் சரியாகிவிடும்’ என சொந்தக் காரண ராஜினாமாவை தவிர்க்குப் பொருட்டு கவனமாக பேசுகிறார். தாராளமயகட்டத்தில், முதலாளித்துவம்-மதமாகவும், சந்தை கடவுளாகவும், பொருளாதாரம்-ஏதோ இறையையில் நம்பிக்கை சார்ந்த விஷயம்போல ஆகிவிட்டது என்ற அலக்ஸ் ஆண்ட்ரூஸின்(கார்டியன் நாளிதழில்)மேற்கோளுக்கு,இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சமகால உதாரணமாகவும் மாறிவிட்டார்!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான காரணம்தான் என்ன? இது  தொழில் மந்தப் போக்கா?அல்லது இந்தியப் பொருளாதாரத்தின் structural நெருக்கடியா? என்பதை சற்று நெருங்கிப் பார்ப்போம்.

 

1

பாஜகவின் மோசடி ஜிடிபி பிரச்சாரமும், வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியும்

நாட்டின் பொருளாதாரம் பற்றி பேசும்போதும், நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. ஆகவே, இதிலிருந்தே நாமும்  தொடங்குவோம்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி( GDP) 7 விழுக்காடு வளர்ச்சியில் செல்லும்போது, வேலையில்லாமல் எப்படி இருக்கும் என பிரதமர் மோடி கதையளந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ராஜன், ஒருவேளை GDP எண்ணே தவறாக இருக்கலாம் என்றார். ராஜனைப் பொறுத்தவரை,  பாஜகவின் அழுத்தத்தின் பேரில் வேண்டுமென்ற GDP’யை மிகையாக உயர்த்தி கணக்கிடுவதை விமர்சித்து வந்தார். இதை மனதில் வைத்தே, விருப்ப வெறுப்பற்ற வகையில் சுதந்திரமான அமைப்பை கொண்டு  GDP கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வந்தார். (https://economictimes.indiatimes.com/news/economy/indicators/raghuram-rajan-raises-doubts-about-india-growing-at-7-says-cloud-over-gdp-data-needs-to-be-cleared/articleshow/68581012.cms?from=mdr)

2014 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்குவந்த சில காலத்திலயே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை  கணக்கிடும் முறையை மாற்றினார்கள்.  இதனால்  ஜி.டி.பி வளர்ச்சிவிகிதம் 2 விழுக்காடு அதிகரித்தது. இவ்வாறு ஜி.டி.பி கணக்கீட்டு முறைகளை மாற்றி, காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சியில்லை எனவும் பாஜக ஆட்சியில் 7 விழுக்காடு வளர்ச்சியடைந்ததது எனவும் பொய் விளம்பரப் பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டது. புதிய கணக்கீட்டு முறையால் பொருளாதார வளர்ச்சியானது மிகையாக 2.5 விழுக்காடு அதிகரித்துக் காட்டப்பட்டது என முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறினார். மேலும் ‘ரிசர்வ் வங்கியானது வலிமையான தன்னாட்சி அமைப்பாக இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது. அதன் சுயாட்சி மற்றும் சுதந்திரம் நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு வெளியிட்டுள்ள ஜி.டி.பி புள்ளி விவரங்கள் குழப்பத்துடன் இருக்கிறது. அதைத் தெளிவுபடுத்த வேண்டும் என பாஜகவின் ஜிடிபி எண் மோசடியை  மறைமுகமாக சாடினார்.

நாடு வளர்கிறது என்றால் வேலை வாய்ப்பு எங்கே? 2017-18 இல் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலைவாய்ப்பின்மை 6.1 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியில் ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை மறைக்க முயன்ற பாஜக அம்பலப்பட்டது. ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என வாக்குறுதி கொடுத்த பிரதமர் மோடியோ  தற்போது பக்கோடா விற்றால் கூட நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம் என்கிறார். உள்துறை அமைச்சர் அமித்சாவோ, வேலை இல்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்பது எவ்வளவோ மேல் என நாடாளுமன்றத்தில் பேசுகிறார்! வேலைவாய்ப்ப்பின்மை குறித்த ஆளும் கட்சியின் “அக்கறைக்கு” இந்த ஒரு எடுத்துக் காட்டுப் போதும்.

2

கூலிவீதத்தின் வீழ்ச்சி

வேலைவாய்ப்பின்மை பிரச்சனை ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் தொழிலாளர்களின் கூலி வீத சரிவு. நாட்டின்  மொத்த உற்பத்தியில் ஐந்து ரூபாய் பிஸ்கட்டிலிருந்து கார், வீடு வரையிலும் விற்பனைப் பண்டங்களின் தனிநபர் நுகர்வே(Private consumption)  தேச மொத்த உற்பத்தியில் 60  விழுக்காடு பங்களிப்பு செய்கிறது.  இந்நிலையில், தனி நபர் வருமானப் பற்றாக்குறையானது, சேமிப்பையும் செலவையும் குறைக்கிறது.  நுகர்வுச் சந்தை வீழ்ச்சியடைச் செய்கிறது. நுகர்வுச்சந்தை வீழ்ச்சியால் முதலீடும் வீழ்ச்சியடைகிறது.

தொழிலாளர்கள் கூலிவீதத்தின் சரிவு:

ILO-2018 ஆய்வறிக்கையின்படி, தொழிலாளர்களின் உழைப்புத்திறனுக்கு ஏற்ற கூலி விகிதமானது வேகமாக சரிந்துவருவதை சுட்டிக் காட்டுகிறது. 1981 ஆம் ஆண்டில் 38.5 விழுக்காடாக இருந்த கூலி வீதம் 2013 ஆம் ஆண்டில் 35.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது. அரசோ (2016 ஆம் ஆண்டின்) உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி குறைந்தபட்ச கூலியை உத்தரவாதப்படுத்த மறுத்துவருகிறது. ஒப்பந்த தொழிலாளர்களின் நிலை இன்னும் கொடுமையானது.

கிராமப்புற கூலி வீதத்தின் சரிவு:

கிராமப்புற வேலை வாய்ப்பையும் கிராம மக்களின் வருமானத்தையும் (குறிப்பாக நிலமற்ற ஏழை கூலி விவசாயிகள்) உத்தரவாதப்படுத்தியதில் மகாத்மா காந்தி  ஊரக வளர்ச்சித் திட்டம் முக்கியப் பங்காற்றியது. இத்திட்டத்தால் 2007-13  காலகட்டத்தில் கிராமப்புற கூலிவீதம் அதிகரித்தது.

அரசின் பொருளாதார அறிக்கைகள், ஊரக வளர்ச்சித் திட்டங்களை மேம்பபடுத்த வேண்டும் என்றது. ஆனால் தற்போது, இத்திட்டம் மோசமாக அமலாக்கப்பட்டு வருகிறது. நிதி ஒதுக்கீட்டில் தாமதம், கூலி வழங்குவதில் தாமதம் போன்ற காரணங்களால் இத்திட்டத்தில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.(https://www.businesstoday.in/opinion/slowdown-blues-govt-needs-raise-income-levels-working-population-boost-growth/story/373820.html)

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயராததால் தனி நபர் வருமானம் சுருங்கத் தொடங்கியது. அதேநேரத்தில் வேலையற்ற தொழிலாளர்களின் ரிசர்வ் பட்டாலும் ஆண்டுக்கும் ஆண்டுக்கு அதிகரித்துவருகிறது.

இப்போக்கு இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. இப்போது நமது கேள்விஎன்னவென்றால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்பை ஏன் உறுதிசெய்யவில்லை?.

3

இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தள கட்டமைப்பு சிக்கல் குறித்த இந்திய லிபரல் பொருளாதாரவாதிகளின் பகுப்பாய்வுகள்

கடந்த 2006 ஆம் ஆண்டில் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் , பன்னாட்டு நிதியகத்தின் (IMF) ஆய்வுத் துறை கட்டுரை ஒன்றை வெளியிட்டார்கள். ”இந்திய வளர்ச்சியின் பண்பு: என்ன நடந்துள்ளது? என்ன தொடரப்போகிறது?” (India’s Pattern of Development: What Happened, What Follows?) என்ற தலைப்பிலான அக்கட்டுரையில் இந்தியப் பொருளாதாரத்தின் பண்புகள் குறித்த சில  குறிப்பான  காரணங்களை  முன் வைக்கின்றனர்.

அடுத்த நாற்பது ஆண்டுகளில், ஆண்டுக்கு 13 மில்லியன் மக்கள், தொழிலாளர்  சந்தையில் வந்து சேர்வர். அடுத்த பதினைந்து ஆண்டுகால வேலையற்ற வளர்ச்சி குறித்த பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர் என தொடங்குகிற அந்த ஆய்வுக் கட்டுரையானது, இந்தியாவின் பொருளாதாரப் பண்புகள் குறித்து கீழ்வரும் அவதானிப்புகளை முன்வைகிறது.

  • உலகின் உற்பத்திக் கூடமாக உள்ள சீனாவில், விவசாயத் துறையின் உபரி தொழிலாளர்களை, தொழிற்சாலைகள் சுவீகரித்துக் கொண்டது. இந்தியாவிலோ பின்தங்கிய தொழில்துறை வளர்ச்சியானது, விவசாய உபரித் தொழிலாளர்களை ஈர்க்கத் தவறியது.
  • 1947 களுக்கும் 80 களுக்கும் இடையிலான பொருளாதாரக் கொள்கையானது, பொதுத்துறை நிறுவனங்களை மையப்படுத்தியதாக இருந்தது. பெரும் கனரக தொழிற்சாலைகளை அரசே ஏற்று நடத்தியது. அதே நேரத்தில் அந்நிய முதலீடுகளை பெறுவதில் தனியார் முதலாளிகளுக்கு கட்டுப்பாடு, கடுமையான தொழிலாளர் நலச் சட்டங்கள் போன்ற மத்திய அரசின் தொழிற்கொள்கையால், இந்தியாவில் தனியார் முதலாளித்துவ வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டது.
  • .IIT ,IIM  போன்ற கல்வி நிறுவனங்கள், திறன் சார்ந்த தொழிலாளர்களை அதிகளவில் உருவாக்கின. குறைவான கூலியுடன் அதிக திறன் சார் தொழிலாளர்கள் உருவாவதற்கு இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. 80’களுக்கு பிறகு, திறன் சார் தொழிலாளர்களை (skill intensive lanour)  அடித்தளமாகக் கொண்ட சேவைப் துறை வளர்ச்சிக்கு இது முக்கியக் காரணமாகியது.
  • 1980’இல் நாட்டின் மொத்த உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு 37 விழுக்காடாக இருந்தது. 2002’இல் இது 49 விழுக்காடாக உயர்ந்தது. நாட்டின் தொழிற்துறையோ 1980-2002 முன்னேற்றம் இல்லாமல் 16 விழுக்காடாக இருந்தது. சேவைத் துறையைப் பொறுத்தவரை பெருமளவு தொழிலாளர்களை ஈர்க்கவில்லை. நாட்டின் மொத்த உற்பத்தியில் பாதிக்கு மேல் பங்களிப்பு  செய்கிற சேவை துறை,குறைவான வேலைவாய்ப்பையே வழங்குகிறது.
  • 90 களுக்கு பிறகும் நாட்டின் தொழிற்துறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக சேவைத் துறை வளர்ச்சியடைந்து வந்தது.
  • மற்ற கிழக்காசிய நாடுகளை விட இந்தியாவின்  தனியார் நிறுவனங்கள் சிறியவையாக இருந்தன. இதன் உற்பத்தியும் தொழிலாளர் எண்ணிக்கையும் சொற்பமாக இருந்தன
  • நாட்டின் தீபகற்ப மாநிலங்களின் அதிக வளர்ச்சியும்  நாட்டின் உள்மாநிலங்களில் குறை வளர்ச்சியாகவும் சமச்சீரற்ற வளர்ச்சி நிலவுகிறது.

மேற்கூறிய அம்சங்களை நாம் கவனத்தில் கொண்டால், இந்தியப் பொருளாதாரத்தின் முரண்பாடுகள் குறித்த ஒரு பொதுத் சித்திரத்திற்கு வந்து சேருகிறோம். அவை வருமாறு

  • பின்தங்கிய தொழில்துறை வளர்ச்சி, விவசாய உபரித் தொழிலாளர்களை ஈர்க்கவில்லை
  • விவசாயத்துறை-தொழில்துறை-சேவைத்துறை என்ற முதலாளித்துவ வளர்ச்சிப் படிநிலைகளில், தொழிற்துறையை கடக்காமல், நேரடியாக சேவைத் துறைக்குள் இந்தியா சென்றது ஏற்றத்தாழ்வான வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் ஆதாரமாகிறது
  • விவசாயப் பொருட்கள் இறக்குமதியால், உள்நாட்டு சந்தையில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு விலை கிடைப்பதில்லை. இது உள்நாட்டு சந்தையில் விவசாய உற்பத்திப் பொருளை மிகையாகக் குவிக்கிறது. உணவு விலையை கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. அதேநேரம் உள்நாட்டு விவசாயிகளின் ரத்தத்தை சுரண்டியே உணவுப்பொருட்களின் விலையேற்றம் கட்டுக்கொள் வைக்கிறது அரசு.

4

 அடித்தள கட்டமமைப்பு பிரச்சனையை தற்காலிகமாக அமுக்குகிற ஆளும் கட்சிகள்

மேற்கூறிய முரண்பாடுகள் இந்தியாவின் அரசியல் சுதந்திர காலம் முதலாக தற்போதைய  உலகமய காலம் வரையிலும் தொடர்கிறது. இந்தியப் பொருளாதாராத்தின் அடிப்படைக் கட்டமைப்பு சிக்கலை தீர்க்க இயலாமல் மேம்போக்கான தற்காலிக தீர்வை எட்டுவதிலேயே  ஆளும்கட்சிகள் ஈடுபட்டுவந்தன.அவை வருமாறு

  • கிராமப்பற வேலைவாய்ப்பு பிரச்சனையை  மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு மட்டுப்படுத்தியது.
  • உள்நாட்டு பண்டத் தேவையை பூர்த்தி செய்ய அந்நிய முதலீடுகளை அதிகரிக்கவைத்தது.
  • பெரு முதலாளிகளுக்கு அதிகளவில் வங்கிக் கடன் வழங்குவது, பிறகு வாராக் கடன்களால் வங்கிகள்  தவிப்பது, மீண்டும் வங்கிககளுக்கு அரசு மறு மூலதனம் வழங்குவது தொடர் நிகழ்வாகிறது.

இதுபோன்ற  தற்காலிக ஏற்பாடுகள், பொருளாதார நெருக்கடிகளை அமுக்கிவைக்கவே பயன்பட்டன. அவ்வப்போது இந்த கட்டமைப்பு சிக்கல் ரூபாய் மதிப்பு சரிவாக,  வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பாக, பண்ட விற்பனை தேக்கமாக வெளிப்பட்டு வருகின்றன.

5

பொருளாதார அழிவை மேலும்  ஆழப்படுத்திய பாஜக அரசு

காங்கிரஸ் காலத்தில் இருந்து தொடர்கிற இந்த அடிப்படை சிக்கலை இந்தியாவில் ஆளும் கட்சியாக அமர்கிற எந்தக் கட்சியாலும் தீர்க்க இயலவில்லை. காரணம், ஏகாதிபத்திய சார்பு கொள்கை, இந்தியாவின் சுயசார்பு பொருளாதாரத்தை அழித்துவிட்டது. இந்தியாவின் முதலாளிகள்-பன்னாட்டு முதலாளிகள்- இந்திய ஆளும் கட்சிகள் என்ற கூட்டணி, பொருளாதார அழிவை ஆழப்படுத்தியதே அன்றி தீர்க்க இயலவில்லை. ஆளும்கட்சிகள் இந்த முதலாளிகளின் நலன் சார்த்த கொள்கைகளையே மேற்கொள்கின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்கு 2014 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த மோடி அரசோ, பண மதிப்பிழப்பு நீக்க அறிவிப்பு மற்றும் மிக மோசமாக திட்டமிடப்பட்ட ஜி.எஸ்.டி வரி அமலாக்கத்தால் சிக்கலை மேலும் ஆழப்படுத்தியது. மோடியின் இரட்டை தாக்குதலான இந்த  “பொருளாதார சீர்திருத்தங்கள்” நாட்டின் சிறு குறு நிறுவனங்களை நாசம் செய்தது, தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பறித்தது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கில், குறிப்பாக முதலாளித்துவத்தின் ஏகபோக கட்டமான ஏகாதிபத்திய கட்டத்தில், சிறு வணிகர்களை பெரும் ஏகபோக முதலாளியம் விழுங்குகிறது. மோடி அரசின் பொருளாதார சீர்திருத்தம் யாவுமே சிறு வணிகர்களை காவு வாங்குகிறது..

“முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வளர்ச்சியால் மட்டுமின்றி, அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலையினாலும் அவதிப்படுகிறோம்….”என 150 வருடத்திற்கு முன்பாக தனது மூலதன முன்னுரையில் (முதலாம் ஜெர்மன் பதிப்பு) மார்க்ஸ் எழுதியது இன்றைய இந்திய சூழலை விவரிப்பதாக உள்ளது. இன்னும் பொருத்தமாக சொல்லவேண்டுமென்றால், இந்தியாவின் சமச்சீரற்ற உதிரி லும்பன் வளர்ச்சியால் ஏற்றத் தாழ்வால் நெருக்கடியால் நாம் அவதிப்படுகிறோம். பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை தொழிலாளர்களின் தோள்மேல் ஏற்றிவிடுகிறது.

 

-அருண் நெடுஞ்சழியன், சோசலிச தொழிலாளர் மையம் 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW