நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்!
தருமபுரி வெங்கட்டம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த தோழர் சிவி ரங்கநாதன் 95 வயதில் மறைந்துவிட்டார். இன்று அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
1960 முதல் தோழர் திராவிட இயக்கத்திலும், பின் சிபிஐ – சிபிஎம் கட்சியிலும் பணிபுரிந்தவர். அதிலிருந்து வெளியேறி, சாருமஜூம்தாரோடு இணைந்து சிபிஐ (எம்எல்) இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டவர். போராட்டத்திலும் முன் நின்றவர். தன் இளம் வயதில் தலைவர் சாருமஜூம்தார் உடன் இருந்து பணிபுரிந்தவர், ரகசிய வழக்கை, அழித்தொழிப்பு, விவசாயிகள் போராட்டத்தில் என தம் வாழ்வை கிராமப்புறங்களில்
அர்ப்பணித்த தோழர், ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றி உள்ளார்.
நக்சல்பாரி எழுச்சியை தொடர்ந்து சாரும்ஜும்தார், ரங்கநாதன் உள்ளிட்ட தோழர்கள் அடங்கிய தலைமைக்குழு உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் எம்.எல் இயக்கத்தை வழி நடத்திய தலைவர்களாக இருந்தவர்களில் தோழர் ரங்கநாதன் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக 1967ல் நக்சல்பாரி இயக்கம் உருவாக்கிய நேரத்தில் தருமபுரி மாவட்டத்தில் முதன் முதலாக மார்க்சிய கழகம் என்கிற பெயரில் அமைப்பை உருவாக்கி, மார்க்சிய அரசியலை மக்களிடம் சேர்த்தவர் தோழர் ரங்கநாதன். 1980 இல் கொல்லப்பட்ட தியாகி தோழர் பாலனை வென்றெடுத்த தோழர். இன்று தருமபுரியில் பல எம்.எல் இயக்கங்களில் பணியாற்றும் தோழர்களை கட்சிக்கு வென்றெடுத்தவர் தோழர் ரங்கநாதன் என்னும் போது அவரின் அரசியல்-தத்துவ ஆளுமையால் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவராக இருந்திருக்கிறார்.
தருமபுரியில் 1980ல் அடக்குமுறை வந்த போது தருமபுரி பாலன் உடன் தோழர் ரங்கநாதன், தோழர் சித்தானந்தம் அவர்களையும் சுட்டுபிடிக்க உத்தரவு இருந்திருக்கிறது. சீரியம்பட்டி கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் பாலன் கைது செய்யப்பட்டார். அப்பொழுது தோழர் ரங்கநாதன் அவர்களும் கைது செய்யப்பட்டார். 3மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்தார். கடும் அடக்குமுறையிலும் கொள்கை விலகாமல், இயக்கத்திற்கு துரோகம் செய்யாமல் களத்தில் நின்று மக்களுக்கு நேர்மையாக உழைத்தவர் தோழர் ரங்கநாதன். மார்க்சியமும், ‘மக்கள் யுத்தமும்’ வெல்லும் என்று அசையா நம்பிக்கை வைத்துள்ளார். அனைத்து எம்.எல், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றிணையாதா? என்கிற ஏக்கத்துடன் இயக்க தலைவர்களோடு தோழர்களோடு இறுதிவரை உரையாடலை நடத்தியிருக்கிறார். அந்தளவிற்கு கம்யூனிச கொள்கையின் மீதும், புரட்சியின் மீதும் மாறா பற்றுக்கொண்டவராக இருந்திருக்கிறார். திரிபுவாதம், சந்தர்ப்பவாதம் போன்ற போக்குகள் தலை தூக்கிய போது அதற்கு எதிராக நின்றிருக்கிறார். சரியான கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட முயற்சித்திருக்கிறார். எத்தனை பிளவுகள், அடக்குமுறைகள் துயரங்கள் வந்தும் இறுதி வரை மார்க்சியக் கோட்பாட்டில் உறுதிகொண்டு வாழ்ந்திருக்கிறார்.
இத்தகைய 60 ஆண்டு கால வரலாற்று அனுபவ மிக்க தோழரின் இழப்பு, இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் எம்.எல் இயக்கங்களுக்கும் பெரும் இழப்பு.
தோழர் ரங்கநாதன் அவர்களின் கனவை நெஞ்சில் ஏந்துவோம்! செங்கொடி பயணத்தில் தம்மை உரம் ஏற்றி கொள்வோம்!
தியாகிகள் கனவை நினைவாக்குவோம் !
தியாகிகளின் நினைவு நீடுழி வாழ்க !
-ரமணி, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா)