பாசிசமும் அதி மனித வழிபாடும்

20 Aug 2019

மோடி என்ற ஒற்றை பிம்பத்தை நம்பியே  2019  பாராளுமன்றத் தேர்தலை ஆர் எஸ் எஸ்- பாஜக எதிர்கொண்டது. அதில் மகத்தான வெற்றியும் பெற்றது. கடந்த கால மோடி அலை உருவாக்க அரசியல் அனுபவமானது, 2019 தேர்தல் பிரச்சார உக்தியை பாஜகவிற்கு எளிதாக்கியது.

2014 தேர்தலில் குஜராத் மாநில வளர்ச்சி நாயகன், முன்னேற்றத்திற்கான தலைவர், ஊழலுக்கு எதிரானவர் போன்ற கவர்ச்சிகர விளம்பர உக்தியால் நாட்டின் பட்டி தொட்டிகளிளெல்லாம்  மோடி அலை உருவாக்கப்பட்டது. தொழில்ரீதியான விளம்பர நிறுவனங்களான மாடிசன் வேர்ல்ட்(Madison world) மேக் கான்(Mccann worldgroup) போன்ற நிறுவனங்களின் துணையுடனும் இந்திய முதலாளிகளின் அளப்பரிய நன்கொடையிலும் கார்ப்பரேட்பாணியிலான  மோடி அலை திட்டமானது வெறும் ஆறே மாதத்தில் வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது.

பிரம்மாண்டமாய் மேற்கொள்ளபட்ட இந்த பிரச்சாரமானது, ஆட்சியை கைப்பற்றிய பின்புபு சர்வதேச அளவிற்கு தீவிரப்படுத்தப்பட்டது.2014 ஆம் ஆண்டுக்கு பின்பு மோடியையும்  கட்சியையும் பிரபலப்படுத்த மட்டும் சுமார் 700 மில்லியன் டாலர் விளம்பரத்திற்கு செலவிடப்பட்டதாக பிஸ்னெஸ் இன்சைடர் பத்திரிக்கை தெரிவிக்கிறது.

தற்போது டிஸ்கவரி சேனலில் பிரில் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் சூழல் காப்பாளராக மோடி பங்கேற்பது தொட்டு நாட்டு மக்களுக்கு மான் கி பாத் உரை வரையிலும் இந்த பிம்ப உருவாக்க அரசியல் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது. வாக்கு வங்கி தேர்தல் பங்கேற்பிற்கும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் உருவாக்கப்பட்ட மோடி என்ற பாபுலிச பிம்பத்தை  இன்று வேறொரு பரிணாமத்திற்கு இட்டுச்செல்கிறது ஆர் எஸ் எஸ்.

சமூகத்தை தனக்கு கீழ் படியவைக்கவும்,தனது தன்னிச்சையான அதிகாரத்திற்கு சமூக ஒப்புதல் பெறவும் அதி மனித வழிபாடு அவசியமாகிறது. மேலும் உலகமயக் கொள்கையின் பொருளாதார சீரழிவால் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில்  பாதிக்கப்படுகிற மக்களின் மீட்பராக,ரட்சகராக,சர்வ பலம் பொருந்திய தலைவராக மோடி உள்ளார்  என்கிற  கருத்தியல் ஊடுருவலை ஆர் எஸ் எஸ் மேற்கொள்கிறது.

1

மோடி எனும் அதி மனித உருவாக்கம்

கடந்த ஐந்தாண்டுகால பாஜக ஆட்சியில் திட்டமிட்ட மேற்கொள்ளப்பட்ட சில மோடி பிம்ப உருவாக்க அரசியல் வருமாறு

  • நாட்டு மக்களின் மீதும் பேரிடியாக இறக்கப்பட்ட செல்லாக்காசு அறிவிப்பை,தொலைக்காட்சி ஊடாக பிரதமர் மோடி நேரடியாக அறிவிக்கிறார். நாட்டின் ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சரும் ஓரங்கட்டப்பட்டு தன்னிச்சியாக மோடி எனும் தலைவரின் கருப்பு பண மீட்பு கள்ளப் பண ஒழிப்பு முயற்சியாக காட்டப்பட்டது.
  • பாகிஸ்தான் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய ராணுவ தாக்குதலை மோடியின் துல்லிய தாக்குதல் எனப் பிரமாதப்படுத்தப்பட்டது.கடந்த காலத்தில் இது போல பல துல்லிய தாக்குதலை காங்கிரஸ் கூட்டணி மேற்கொண்டது எனவும், ஆனால் இதுபோன்று விளம்பரப்படுத்தவில்லை எனவும் காங்கிரஸ் நொந்துகொண்டது!
  • உலக யோகா தினமானது, மோடியை மையப்படுத்திய நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது. பழம்பெருமை மீட்பு என யோகாவை மையப்படுத்திய மோடியின் செய்கை யாவும் மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது.
  • போலவே இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கோலியின் சவாலை ஏற்று மோடி உடற்பயிற்சி செய்கிற காணொளி சாதனைபோல  விளம்பரப்படுத்தப்பட்டது.
  • வலிமையான தலைவர் அன்னையை சந்திக்கிற நாடகமாகட்டும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ஆலோசனை வழங்குவதாகட்டும் நாட்டின் அன்றாட செய்திகளில் மோடியை நல்லொழுக்க மனிதராக கட்டமைக்கிற முயற்சி கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.
  • 2019 தேர்தல் நெருங்கும் நேரத்திலோ, புல்வோமா தாக்குதலுக்கு பதிலடியாக பல்கொட்டில் குண்டு போட்டு முன்னூறு தீவிரவாதிகளை மோடி அழித்தார் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
  • வலுவான அரசியல் தலைவர் ஆனாலும் ஆன்மீகத்தில் அவர் ஒரு மகான் என்ற விளம்பரத்தை மேற்கொள்ள இமயமலையில் காவி உடை தரித்தமோடியின் தியான புகைப்படம் வெளியிடப்பட்டது.
  • இதற்கு நடுவே,இந்திய இராணுவ விமானங்களை எதிரி நாட்டு ராடர் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க மேகங்களில் மறைந்து கொள்ளவேண்டும் என்ற மோடியின்  ராணுவ ஆலோசனையும் பிரமாதப்படுத்தப்பட்டது.

 

மேற்கூறிய நிகழ்வுகள் யாவையும் தொகுத்தப் பார்ப்பின் தற்போதைய ப்ரில்ரில் க்ரில்ஸ் நிகழ்ச்சி ஒன்றும் தற்செயலானது அல்ல என்பதும்,மோடியின் ஒவ்வொரு அசைவும் மிகவும் திட்டமிட்ட வகையில்  என்பதும் தெளிவாகும்.

சமூகத்தின் மீதான தனது பலவந்தத்தை, ஒடுக்குமுறையை நியாயப்படுத்த, பொய் பிரச்சாரத்தை கூச்சமின்றி மேற்கொள்ள, தனது மேலாண்மையை தொடர்ந்து காத்துப் பேண, எதிர்கட்சிகளின் விமர்சனங்களை முறியடிக்க மோடி எனும் அதிமனித உருவாக்கம்  திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்படுகிறது

நாடெங்கிலும் காவி குண்டர்களால் தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தாக்கப்படும்போது கள்ள மௌனம் காத்த மோடி, ஒரு கட்டத்தில் என்னை வேண்டுமானால் அடியுங்கள் உதையுங்கள் அவர்களை விட்டு விடுங்கள் என்ற நாடகப் பாணியிலான ஆரவாரப் பேச்சும் இந்த அதி மனிதனின் அன்பான இதய உணர்வின் வெளிப்பாடாம்!

2

பாசிசமும் அதி மனித வழிபாடும்

மன்னராட்சி காலத்தைய ஆட்சி வடிவில், மன்னனே கடவுள். மன்னன் அனைத்திற்கும் எஜமானன்.மன்னனின் ஆணையை ஏற்பதே குடிகளின் கடமையே தவிர குடிகளுக்கு ஜனநாயக உரிமைகைள் ஏதும் இல்லை. மன்னன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன். இன்றையநவீன கால ஜனநாயக  குடியரசு ஆட்சி  வடிவில் வலதுசாரி தலைமை சக்திகள் மன்னனைப் போல உருவாக்கப்படுகிறார்.மன்னர் வழிபாடு,திரைப்பட சினிமா கதாநாயக வழிபாடு,கிரிக்கெட் விளையாட்டு வீரர் வழிபாடு என தனி நபர் வழிபாடு செல்வாக்கு செலுத்துகிற இந்திய சமூகத்தில் மோடி எனும் அதி மனித உருவாக்கம் சுலபமாகின்றது.மேலும் ஆளும் கட்சியாக இருப்பதாலும் நாட்டின் ஊடகத்தை சர்வாதிகரமாக கட்டுப்படுத்துவதாலும் மோடி எனும் அதிமனித கருத்துருவாக்கம் மிக எளிமையாகிறது.

சிவில் சமூகத்தின் மீதான பாசிசத்தின்  அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கும்  அரச  வன்முறைக்கும் ஒழுக்கக்கேடுகளுக்கும், வரைமுறையற்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் அதி மனித வழிபாடு என்பது அவசியமானதொரு கருத்தியல் மேலாண்மைக்கான ஆயுதமாக வளர்த்தெடுக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேசிய சபைக்கு கட்டுப்படாமல், அரசியல் சாசன  உரிமைகளாக நம்பப்படுகிற சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் போன்ற ஜனநாயக விழுமியுங்களை  மீறுவதற்கு  இந்த அதி மனித வழிபாடு பாசிஸ்ட்களுக்கு அவசியப்படுகிறது.பாசிஸ்ட்கள் இசைக்கிற பிடிலுக்கு நடனமாடுவதைத்தவிர சிவில் சமூகத்திற்கு வேறு வழியேதும் இல்லை என்பதற்கு இது அவசியப்படுகிறது. அதி மனித உருவாக்கத்தை இந்துத்துவ பாசிசம், நாசிக்களிடமிருந்தும்  பாசிஸ்ட்களிடமிருந்தும்  வரித்துகொண்டது எனலாம்.நாசிச சர்வாதிகாரியான ஹிட்லரும் பாசிச சர்வாதிகாரியான முசோலினியும் அதி மனித வழிபாட்டின் அரசியல் வடிவமே என்பார் எம்.என். ராய்.

பழம் பெருமை மீட்புவாதத்தை(இன வாதம்/மதவாதம்)ஆதாரமாக கொண்டுள்ள வலது பாசிசம்,மன்னர் கால எதேச்சதிகார பண்பை தனது ஆட்சியின் ஆதர்சமாக தழுவிக்கொள்கிறது.மண்ணின் ஆணையை மக்கள் கைகட்டி ஏற்பதுபோல பாசிஸ்ட்களின் ஆணைகளுக்கு சிவில் சமூகம் எதிர்ப்பின்றி ஒப்ப வேண்டும் என வேண்டுகிறது.மாறாக இந்த மன்னர் கால உத்தரவு பாணியிலான  ஆட்சிக்கு நவீன கால நாடாளுமன்ற ஆட்சி அதிகார நடைமுறை இடராக இருப்பதால், அதை  ஒழித்துக் கட்டுவதில் இயல்பாகவே ஆர்வம் கொண்டுள்ளது.இதுகாறும் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக  ஆட்சி என்ற போர்வையில் சமூகத்தை சுரண்டிய ஏகாதிபத்திய, இந்திய முதலாளித்துவ சக்திகள் தற்போது, இந்துத்துவ பாசிஸ்ட்களுடன் இழிவான கூட்டணி அமைத்துக் கொண்டு வெளிப்படையான வகையில் சமூகத்தை சுரண்டுவதோடு,நாடாளுமன்றத்தை செங்கல் செங்கலாக பெயர்த்து எடுப்பதிலும் பங்கேற்பாளராகின்றது.

உதாரணமாக,இந்திய அரசியல் சட்டத்திற்கு வெளியே உள்ள காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவை,சட்ட விரோதமாக ஜனாதிபதி  உத்தரவின் பேரில் ரத்து செய்வதாக நாடாளுமன்றத்தில் பாஜகவின் உள்துறை அமைச்சர் அறிவிக்கிறார். சில நாட்களில் பிரதமரின் கோரிக்கையின் பேரில்,காஷ்மீரில்  முதலீடுகள் மேற்கொள்ளப்படள்ளவுதாக அம்பானி அறிவிக்கிறார். இந்திய முதலாளிகளின் கூட்டமைப்புத்(CII) தலைவரும் இதேபோன்று முதலீட்டு ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்.

வளர்ச்சியின் பேரில் தொழிலாளர்கள் மற்றும் இயற்கை வளங்கள்  மீதான கட்டுப்பாடற்ற சூறையாடலுக்கு,சமூகத்தை தியாகம் செய்ய கோருவதற்கு அதி மனித வழிபாடு முதலாளித்துவ நலனிற்கு சேவை செய்கிறது. மோடியே அரசு, மோடியே கட்சி, மோடியே இந்தியா, இந்தியாவின் வளர்ச்சிக்கு மோடி பாடுபடுகிறார். வல்லரசாக போகிற இந்தியாவின் வளர்ச்சிக்கு நாம் தியாக செய்யக் கூடாதா என இந்துத்துவ  பாசிஸ்ட்கள் பேசுவதன் பின்புலம் இதுதான்.நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகத்தை தியாகம் செய்யக் கூடாதா என்ற பொன்னாரின் பேச்சையும் இந்த பின்புலத்தில் இருந்துதான் புரிந்துகொள்ளவேண்டும்.

இராணுவ வீரர்கள் எல்லையில்  போராடுகிறார்கள், நீங்கள் தியாகம் செய்யக்கூடாதா என செல்லாக் காசு அறிவிப்பின்போதும் இவர்கள் பிரச்சாரம் செய்தது நினைவிருக்கலாம். மக்களைப் பொறுத்தவரை யாருக்கு வளர்ச்சி என்ற கேள்விக்குள் செல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கு தேச நலனுக்கு  மக்கள் ரத்தம் சிந்தவேண்டும் தியாகம் செய்யவேண்டும் என மக்களை தனது செயலுக்கு இனங்கச்சொல்லி பலிபீடத்தில் தலை வைக்க தயார்படுத்துகிறது.

மொத்தத்தில் குடிமக்களை கொடூரமாக நசுக்குவதற்கும்,மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி ஆட்சி செய்வதற்கும்  சர்வாதிகார ஆட்சியை நியாயப்படுத்தவும்  இந்த அதி மனித உருவ வழிபாடு ஆளும் இந்துத்துவ பாஸிஸ்ட்களுக்கு அவசியமாகிறது.

வரலாற்றில் சர்வாதிகாரிகள் தங்களை அவதார புருஷர்களாக காட்டிக்கொண்டதும் சார்லி சாப்ளின்கள் கிரேட் டிக்டேடர்ஸ் ஊடாக இவர்களை  கோமாளியாக்கியதும் இன்று  வரலாற்று உண்மையாகிவிட்டது.அதி மனித மெய்யான மானுட விரோத முகத்தை மக்களிடம் தோலுரித்து அம்பலப்படுத்த அணியாவோம்!

 

– அருண் நெடுஞ்சழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW