பசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்!
கடந்த 2017 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் –டெல்லி நெடுஞ்சாலையில்,பசுக்களை ஏற்றி வந்த பஹ்லூ கானை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்த பசுகுண்டர் கொலையாளிகளை அல்வார் மாவட்ட நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. பசுக்களை கடத்திச் செல்வதாகக் கூறி பஹ்லூகானை பசுகுண்டர்கள் கண்மூடித்தனமாக தாக்குகிற வீடியோ காட்சிகள், நேரடி சாட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் இருந்தும் நீதிமன்றம் பசுகுண்டர்களை விடுதலை செய்துள்ளது. பசுகுண்டர்களின் வன்முறைக்கு எதிராக இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் சிறப்பு சட்டம் இயற்றப்படவேண்டும், யாரும் தன் பொறுப்பிலிருந்து நழுவி செல்லக்கூடாது என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை, அல்வார் தீர்ப்பு கேலிக்குள்ளாக்கியுள்ளது! மேலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பசுகுண்டர்களுக்கு எதிராக சிறப்பு சட்டமியிற்றிய இரண்டாவது மாநிலமான ராஜஸ்தானில் இந்த “வரலாற்று சிறப்பு மிக்க” தீர்ப்பு வெளிவந்துள்ளது!
அல்வார் தாக்குதல் தொடர்பாக,கொல்லப்பட்ட பஹ்லூ கான் மீதும் அவருடன் வந்த இரு மகன்களின் மீதும் வழக்கு போட்ட போலீஸ் மற்றும் ராஜஸ்தான் அரசின் “நேர்மையில்” இருந்தே இவ்வழக்கின் திசைபோக்கை எளிதாக புரிந்து கொள்ளமுடியும். பசுக் காவலர்களை உருவாக்குகிற, வன்முறையைத் தூண்டுகிற வெறுப்பு பேச்சு உற்பத்தி இயந்திரமான ஆர். எஸ். எஸ் பாஜக கூட்டணி, பசு அரசியலின் மையமாக உள்ளது. வெறுப்பு பேச்சு,வன்முறை,சட்டத்தை கையெலெடுத்தல் ,போலீசுடன் ஊழல் கூட்டணி அமைத்தல்,ஆளும் கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கில் இருந்து மீண்டு சுதந்திரமாக திரிதல் ஆகிய அனைத்தும் இன்றைய சாதாரண போக்காக மாறிவிட்டது.
1
தற்போது வந்துள்ள இத்தீர்ப்பானது போலீஸ்-பசுகுண்டர்கள்-ஆளும் பாஜகவின் அதிகாரம் ஆகியவற்றின் இணைப்பை எதார்த்த உண்மையாகிவிட்டது. வறுமையான சூழலிலும் கொலைக்கு நீதி வேண்டும் என்ற ஆதங்கத்தில் நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்திய பஹ்லூ கானின் சகோதரர், எங்கள் குடம்பத்திற்கு நீதி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். இவர்களுக்கு மட்டுமள்ள இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும், மதச் சிறுபான்மையினர்களும் இனி நீதியே கிடைக்கப்போவதில்லை என்பதையே இத்தீர்ப்பு முன் அறிவிக்கிறது.
தனது சுதந்திரதின உரையில் இந்தியாவை ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றுவோம் என்றும், எளிதாக முதலீடு செய்யக்கூடிய முதல் ஐம்பது நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்வோம் என்றும்,நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நூறு கோடி செலவிடப்படும் என்றும் ஆரவார பொய் வளர்ச்சி உறுதிமொழிகளை அள்ளித் தெளிக்கிற பிரதமர் மோடி,பசுக் குண்டர் படைகளின் வன்முறை குறித்து என்ன சொல்கிறார்?
சட்டவிரோதமாக வன்முறையில் ஈடுபட்ட பசு குண்டர்களை தண்டிப்பதற்கு பாஜக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மோடியிடம் நேர்க்காணல் செய்கிற அக்சய் குமாரும்,மோடியும் அமித் ஷாவும் கிர்ஷ்ணன் அர்ஜுனன் என்கிற ரஜினியும் பசு குண்டர்களுக்கு எதிராக ஆளும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது எனக் கேட்டுச் சொல்வார்களா?
பசு குண்டர்களின் வன்முறைகளை தடுப்பதற்கும் அது தொடர்பாக பிரதமரிடம் நேரிடையாக ஆலோசனைகள் கூற அமைக்கப்பட்ட ராஜ்நாத்சிங் தலைமையிலான நான்கு நபர் குழு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?இந்தக் குழு இதுவரை எத்தனை முறை கூடியுள்ளது?என்னென்ன முடிவுகள் எடுத்துள்ளது?பிரதமருக்கு என்ன ஆலோசனைகளை வழங்கியுள்ளது?யாருக்கும் தெரியாது.
2
பசு அரசியலை தனது மத அடிப்படைவாத அரசியல் நலனுக்கான பிரதான உத்தியாக பாஜக பயன்படுதிவருகிற நிலையில்,பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் வரையிலும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்கள் மீது கண்மூடித்தனமாக வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிடும்போதும்,பசுகுண்டர் படையின் வன்முறைக்கு சட்டப்பூர்வ ஒப்புதலை அரசே வழங்கி வரும்போதும், கொல்லப்பட்ட பஹ்லூகான் மீதே வழக்குப்போடுகிற இந்துத்துவ பாசிச அரசிடம் நாம் நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்?
2017 ஆம் ஆண்டில் வெளிவந்த indiaspend.com இன் ஆய்வின்படி,2010 இல் இருந்து 2017 வரையான கும்பல் வன்முறைகளில் கொல்லப்பட்டவர்களில் 84% இஸ்லாமியர்கள் என்கிறது.மேலும் இந்நிகழ்வுகளில் 97% மோடி ஆட்சிக்கு வந்தபின்(2014 மே மாதத்திற்குப் பிறகு) நடைபெற்றதாக ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறது.மத அடிப்படைவாதத்தால் சமூகத்தை துண்டாடி மக்களிடம் பொய்யான ஜனநாநாயக விரோத,மானுட நாகரிக விரோத கருத்துக்களை பரப்புகிற அடிப்படைவாத கும்பல்களிடம் நாட்டின் ஆட்சி அதிகாரம் சிக்கினால் என்ன கதி ஆவோம் என்பதை இனியும் காலம் தாமதியாது மக்கள் உணர வேண்டும்.
அரசியல் சாசனத்திற்கு எதிரான பசுகுண்டர்களின் தாக்குதல்களை அரசியல் சாசன பாதுகாவலனான அரசு இயந்திரமே ஊக்கப்படுத்துகிற முரண்பாடான அவமானகரமான காலத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம். பசுகுண்டர்களின் தொடர் சங்கிலியான தாக்குதல் பெரும் வகுப்புவாத கலவரங்களை முன் அறிவிக்கின்ற நிகழ்வாக இதை நாம் பார்க்கவேண்டும்.
இந்திய அரசியல் வரலாற்றில் இக்கட்டம் போல துயரமானதொரு இருண்ட காலம் ஒன்றும் இருந்ததில்லை என்பது போன்றதொரு சூழல் நிலவுகிறது.
தனது தான்தோன்றித்தன செயல்பாடுகளால், நவீன குடிமைச் சமூகத்தின் வரலாற்றை பின்னோக்கி இழுத்துத் செல்கிற ஆன்மீக பாசிசமாம் இந்துத்துவ பாசிசத்தின் இத்தாக்குதல்கள் நூற்று முப்பது கோடி மக்களின் சகோதரத்துவ வாழ்விற்க்கான பெரும் கூட்டுச் சவக்குழியை வெட்டிவருகிறது.
எனவே இனியும் தாமதமின்றி பாசிசத்தை வீழ்த்தவும் மக்களை சனநாயகத்திற்காக ஒன்றுபடுத்தவும் அணியமாவோம்!
– அருண் நெடுஞ்சழியன்
ஆதாரம்: