முன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்!

நேற்று, நாடறிந்த வியாபார மையமான திநகர் உஸ்மான் சாலையில் இருக்கும் வியாபாரிகள் பதற்றத்தோடு நின்றிருந்தனர். வியாபார அடையாள அட்டை இருந்தும் ஒரு புதுப் பூச்சாண்டியோடு மாநகராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர். உங்கள் அடையாள அட்டையில் வியாபாரம் செய்யும் இடம் என்ற இடத்தில் திநகர் என்று இருக்கிறது, உஸ்மான் சாலை என்றில்லை, எனவே, இங்கு வியாபாரம் செய்யக் கூடாது’ என்று சொன்னார்கள். உஸ்மான் சாலை என்று போடாமல் திநகர் என்று போட்டு அடையாள அட்டைக் கொடுத்ததே நீங்கள் தான்’ என்று வியாபாரிகள் பதில் சொன்னார்கள். ஆனால், அவர்கள் காது கொடுப்பதாயில்லை. மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினர், அப்புறப்படுத்தும் வாகனம் என்ற மூன்றும் இணைந்த காட்சியைக் கண்டாலே வியாபாரிகளிடம் பதற்றம் தொற்றிக் கொண்டது. நேற்றும் அப்படித்தான் நடந்தது. உடனே, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுக்கு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினர்.
உஸ்மான் சாலை வியாபார சங்கங்களின் தலைவர்கள் மணிமாறன், கண்ணன் ஆகியோர் ’அடையாள அட்டை குளறுபடிக்கு காரணம் மாநகராட்சி தான்’ என்று சொல்லி திருப்பி அனுப்பினர். அதே நேரத்தில், சோசலிச வியாபாரிகள் சங்கத் தலைவர் தோழர் சதீஷ் மற்றும் செந்தில், ஜாகீர், காயத்ரி ஆகியோர் அவ்விடத்திற்கு சென்றோம். வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலப் பொறுப்பாளர் கிருஷ்ணனும் அவ்விடத்திற்கு வந்துவிட்டார்.
பின்னர், மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது டிராபிக் இராமசாமி போட்ட வழக்கின் காரணமாக சர்வே எடுக்க வந்தோம் என்றார்கள். மீண்டும் மதியம் வருகிறோம் என்றார். அதுபோலவே மதியம் 2:30 மணி போல வந்தவர்கள் 6 மணி வரை கணக்கெடுப்பு நடத்தினர். பக்ரீத் நேரத்தில் இப்படி முன்னறிவிப்பு இன்றி வந்தால் எப்படி என்று வியாபாரிகள் நொந்து கொண்டனர். அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. சர்வே எடுக்க வருபவர்கள் என பெரிய காவல் துறைப் படையை அழைத்து வருகிறார்கள். சாலையோர வியாபாரிகள் என்ன சமூக விரோதிகளா? குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களா? அந்த இடத்தை ஏன் பதற்றம் நிறைந்ததாக மாற்றுகிறார்கள்? சாலையோர வியாபாரிகளுக்கான சட்டம் வந்து ஐந்து ஆண்டுகள் ஆன நிலையிலும் கடந்த காலக் காட்சிகளே தொடர்கின்றன.
நாடு முழுவதிலும் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மீது மாநகர காவல்துறை, போக்குவரத்து காவல் துறை இரயில்வே காவல்துறை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரின் லஞ்ச வேட்டைக்கு, பெட்டிகேஸ், அபராதம், ’ஆக்கரமிப்பாளன்’ என அடித்து துரத்துவது இப்படி தினமும் நடத்தும் அதிகார வெறியர்களின் பேய் ஆட்டத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதே சாலையோர வியாபாரிகள் சட்டம் THE STREET VENDORS (PROTECTION OF LIVELIHOODS AND REGULATION OF STREET VENDING) ACT,2014 (No.7 OF 2014)
இந்த சட்டத்தை நடைமுறைபடுத்தும் விதமாக மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளைக் கணக்கெடுப்பது, வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது, நகரவிற்பனைக் குழுவுக்கு தேர்தல் நடத்துவது ஆகியவற்றை செய்ய வேண்டும். அதன் பின்னர் நகர விற்பனைக் குழுவுக்கே முழு அதிகாரம். இதில் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து காவலரோ இரயில்வே அதிகாரிகள் ஆகிய எவரும் தன்னிச்சையாக வியாபாரிகளை அகற்ற முடியாது என சட்டம் மிக தெளிவாக சொல்கிறது
பல்வேறு போராட்டங்களுக்கு பின்னால் போராடி பெற்ற இச்சட்டத்தை நடைமுறை படுத்த அரசு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. சென்னை மாநகராட்சியில் வியாபாரிகள் மிக அடர்த்தியாக உள்ள பகுதிகளில் ஒன்று திநகர். இது மண்டலம் 10ன் கீழ் வருகிறது. அந்த மாநகராட்சி சார்பில் ஒரு தனியார் நிறுவனத்தை கொண்டு கணக்கெடுப்பை நடத்தி, அவர்கள் மூலமே அடையாள அட்டை வழங்கியது. கணக்கெடுப்பு பற்றியும், அடையாள அட்டையின் பயன்பாடு குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யாமல் ஆளுங் கட்சிக்காரர்களுக்கும், வியாபாரத்தில் ஈடுபடாத ஆட்டோ ஒட்டுநர்கள், செக்யூரிட்டி என பிற துறையில் பணி புரிபவர்கள் மற்றும் ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி, பெற்றோர் என ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கனிசமான உண்மையான வியாபாரிகளிடம் அடையாள அட்டை இல்லை.
தற்போது வியாபாரத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத ஆளுங்கட்சி பிரமுகர்கள் தான் நகர விற்பனைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மாநகராட்சி இவர்களை கையில் வைத்துக்கொண்டு புகழ்பெற்ற வியாபாரத் தெருக்களை எல்லாம் வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதிகளாக(No vending zone) அறிவிப்பது பின்னர் மக்கள் கூட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு வியாபாரிகளை விரட்டியடிப்பது என மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக வியாபாரிகள் மிக சொற்பமாக உள்ள பகுதிகளான சிங்கார வேலர் சாலை, லோடிக்கான் சாலை, சிவப்பிரகாசம் சாலை, வடக்கு போக் சாலை, தெற்கு போக் சாலை என பத்துக்கும் மேற்பட்ட சாலையில் உள்ள வியாபாரிகளை 30 நாட்களில் அகற்றுவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இங்கு இயல்பாகவே எதிர்ப்புக் குறைவாகவோ அல்லது எதிர்ப்பே இல்லாமல் இருக்கும்.
மேலும் வியாபாரிகளும், சங்கமும் வலுவாக உள்ள உஸ்மான் சாலை, இரங்கநாதன் சாலையில் வியாபாரிகளைப் பிரித்து கையாள்வது என்ற உத்தியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதன் தொடக்கமாகவே நேற்று (9-8-2019) அன்று டிராபிக் ராமசாமி என்ற தனி நபர் அடையாள அட்டையின்றி பலர் வியாபாரம் செய்கிறார்கள் எனவே கணக்கெடுத்து முறைப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதால் நீதிமன்றம் ஆணையின் பேரில் வியாபாரிகளிடம் கணக்கெடுத்து அடையாள அட்டையில்லாத வியாபாரிகளை அப்புறபடுத்துவதற்காக காவல்துறை அதிகாரிகளுடன் வந்துள்ளனர்..
ஏற்கனவே சோசலிஷ சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் வியாபாரிகளுக்கு முழுமையாக அடையாள அட்டை வழங்கவில்லை என மாநகராட்சி அலுவலகத்திலும், மாநகராட்சி ஆணையருக்கும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னைப் பெருநகர வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நகர விற்பனைக் குழுவே தகுதியற்றது முறைப்படி தேர்தல் நடத்து என வழக்கு தொடுக்கப்பட்டு தற்போது நிலுவையில் உள்ளது. இவை எதையும் பொருட்படுத்தாது கைப்பாகையாக இருக்கும் நகரவிற்பனைக் குழுவை வைத்துக் கொண்டு வேகவேகமாக வியாபாரிகளை அகற்ற முயல்வதன் உள்ளார்ந்த நோக்கம் என்ன?
ஸ்மாட் சிட்டி திட்டம் வரபோகின்றது என்றும், தினமும் 1000-க்கணக்கான வாகனங்கள் செல்லும் பாலம் பழுதாகிவிட்டது அதனால் வியாபாரிகளுக்கு பாதுக்காப்பு இல்லை என்றும், போக்குவரத்து நெரிசல் அதனால் வியாபாரிகளை அப்புறப்படுத்துகிறோம் என்றும், டிராபிக் இராமசாமிகளின் தொல்லை அதனால் ஒழுங்கு படுத்துகின்றோம் என்றும் நித்தமும் புதுப்புது கதைகளை வியாபாரிகள் மத்தில் பரப்பிவிட்டு ஆழம் பார்க்க நினைக்கிறது மாநகராட்சி.
இதே உஸ்மான் சாலையில்தான் வானளாவிய அடுக்குமாடி துணிக்கடைகளும், நகைகடைகளும் உள்ளன. ஸ்மாட் சிட்டிக்காக, நகரத்தின் வளர்ச்சிக்காக இவர்களை அகற்றுவார்களா? என்றும் இங்கு பெரிய கடைகள் எல்லாம் வியாபாரம் செய்யும் போது சாலையோர வியாபாரிகளுக்கு மட்டும் ஏன் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக மாறுகிறது என சந்தேகம் வியாபாரிகள் மத்தியிலும் எழுகிறது
பள்ளி, கல்லூரி வாயில்கள், பேருந்து நிறுத்தங்கள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள் பூங்காக்கள், வழிபடும் ஆலையங்கள், அரசு மருத்துவணைகளின் வாயில்கள் சுற்றுலாத் தலங்கள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தான் வியாபாரம் செய்ய முடியும். இந்த பகுதிகளை தேர்வு செய்து ஒரு வியாபாரப் பகுதியை உருவாக்குபவர்கள் வியாபாரிகளே.
பாரம்பரியமாக வியாபாரம் செய்யும் பகுதிகளை எப்போதும் மாற்ற கூடாது என சட்டம் மிக தெளிவாக கூறிப்பிடுகிறது. மேலும் சாலையோர வியாபாரிகள் நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு வாங்கும் விலையில் தரமான பொருட்களைல் கொண்டுவந்து சேர்த்து சேவை செய்கிறார் என்று நீதிமன்றம் பாராட்டுகிறது.
சாலையோர வியாபாரிகளுக்கான சட்டத்தைப் பயன்படுத்தி நகர விற்பனைக் குழு மூலமாகவே சாலையோர வியாபாரிகளைக் கலைத்துப் போடும் வேலைக்கு தயாராகிறது மாநகராட்சி. இச்சட்டம் வழங்கியுள்ள உரிமைகளையும் பாதுகாப்பையும் புரிந்து கொண்டு விழிப்புடன் நகர விற்பனைக் குழு கூட்டங்களையும் அதில் எடுக்கப்படும் முடிவுகளையும் உற்று கவனிக்க வேண்டியுள்ளது. விழிப்புணர்வும் ஒன்றுபட்ட எதிர்ப்புமே நம் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உதவும்.
அமுது, சோசலிச தொழிலாளர் மையம்