ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யாதே, ஜம்மு-காஷ்மீரைத் துண்டாடாதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் கண்டனம்

05 Aug 2019

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை மீதான இந்திய அரசின் இறுதி தாக்குதலாக இன்றைய பா.ச.க. தலைமையிலான நடுவண் அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தும் ஜம்மு-காஷ்மீரைத் துண்டாடியும் அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் அரசமைப்பு சட்ட  உறுப்பு 370 மற்றும் 35 A ரத்து செய்யும் சட்டத் திருத்தமும் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாகவும் லடாக்கை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் துண்டாடும் சட்டமும் நடுவண் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே காஷ்மீர் சட்டப் பேரவையைக் கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது நடுவண் பா.ச.க. அரசு. இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஆகஸ்ட் 7 வரை நீடித்த போதே ஏதோ சதித்தனமான சட்டத் திருத்தத்திற்கு நடுவண் அரசு அணியமாகிறது என்று ஊகிக்க முடிந்தது. கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த அனுசரணை செய்யுமாறு இந்திய தலைமை அமைச்சர் மோடி அழைத்ததாக குறிப்பிட்டார். பின்னர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அப்படி எதுவும் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தது. கடந்த இரண்டு நாட்களில் சுமார் 38000 இந்தியப் படையினரை இன்னும் அதிகமாக காஷ்மீரில் குவித்தது நடுவண் அரசு. அமர்நாத் யாத்திரையில் இருந்து பக்தர்களை அவசர அவசரமாக திரும்பச் சொல்லி அழைப்பு விடுத்தது. நேற்று ஓமர் அப்துல்லா வீட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்று கூடி இந்த நிலைமைப் பற்றி ஆலோசித்தனர். நேற்று நள்ளிரவில் இருந்து அவர்கள் எல்லோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதற்கிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் கடந்த இரண்டு நாட்களாக கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தி இந்தியப் படைகள் தாக்குதல் நடத்திவருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவிய 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய அரசு செய்தி தந்துள்ளது.

திங்கட் கிழமை என்ன நடக்கப் போகிறதோ என்று எல்லோரும் பதைபதைத்து இருந்த நிலையில் இந்நாள் இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்களின் மீதான பண்பளவிலான இறுதிகட்ட தாக்குதலின் தொடக்கமாக விடிந்துள்ளது. காலை 9 மணி அளவில் மோடியின் இல்லத்தில் கூடிய அமைச்சரவை மேற்படி முடிவுகளை எடுத்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துவிட்டு மாநிலங்களவையில் அவசர சட்டத் திருத்த மசோதாவை  முன்வைத்தது. முன்கூட்டியே எவருக்கும் வழங்கப்படாமல் சட்டத் திருத்த மசோதவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வாசித்தார். எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெவித்துக் கொண்டிருக்கின்றன. வெட்கங்கெட்ட அடிமை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் இத்திருத்தங்களை ஆதரித்துப் பேசினார். பகுஜன் சமாஜ் கட்சியும் ஆம் ஆத்மியும் இத்திருத்தங்களை ஆதரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் இந்தியா ஒப்புக்கொண்ட எதையும் மதித்து நடக்கவில்லை. ஐ.நா.வில் இந்தியா ஒப்புக்கொண்ட காஷ்மீர் மக்களின் விருப்பம் அறியும் பொதுவாக்கெடுப்பையும் நடத்தவில்லை. வலுக்கட்டாயமாக ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அறிவித்துக் கொண்டது. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை இராணுவத்தைக் கொண்டு அடக்கியது. கடந்த 1989 இல் இன்றைக்கு வரை இந்தியப் படைகளால் காஷ்மீரிகள் சுமார் 70,000 த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 7 இலட்சம் படையினர் குவிக்கப்பட்டு இராவணுப் பிடியில் இருந்து வருகிறது காஷ்மீர். அரசமைப்பு சட்ட அளவில் அரைஅடிமை நிலையில் இருந்த காஷ்மீரை இன்று இந்தியாவின் முழு அடிமையாகப் பிரகடனப்படுத்தி இருக்கிறது பா.ச.க. அரசு. இனி நடுவண் அரசின் சட்டங்கள் எப்படி இந்தியாவின் மாநிலங்கள் மீது கேள்வியற்று திணிக்கப்படுகிறதோ அதுபோல் காஷ்மீரிலும் திணிக்கப்படவுள்ளது. அதாவது அரசமைப்பு சட்ட உறுப்பு 238 இனி காஷ்மீருக்கும் பொருந்தும்.

2015 இல் நாகலாந்துக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் ஒப்பந்தத்தை அரசமைப்பு சட்ட உறுப்பு 371 இன் வழியாக மோடி அரசு ஏற்படுத்தியது. அதேநேரத்தில் காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்துள்ளது. முன்னுக்குப் பின் முரணாக தெரிந்தாலும் பா.ச.க.வின் இலக்கு ஒன்றே. ஒற்றை தேசியத்திற்குள் எல்லாவற்றையும் கொண்டு வருவது. பாகிஸ்தான் எதிர்ப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு என்பதன் பெயரால் காஷ்மீரின் மீதான தாக்குதலை நிகழ்த்துவதன் மூலம் இந்திய தேசிய வெறியை ஊட்டி ஒற்றை தேச, ஒற்றை மதம், ஒற்றை பண்பாடு, ஒற்றையாட்சி நிகழ்ச்சிநிரலை முன்னகர்த்தி செல்வதே பா.ச.க.வின் இலக்கு. எனவே, நாகலாந்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை தருவதும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தைப் பறிப்பதும் ஒரே இலக்கை நோக்கியதே.

இந்த மக்களவை கூட்டத்தொடரில் நடுவண் அரசு நிறைவேற்றியுள்ள சட்ட மசோதாக்கள் யாவும் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே வரி, ஒரே ஆற்று நீர் தீர்ப்பாயம், ஒரே அணைப் பாதுகாப்பு சட்டம், ஒரே கல்விக் கொள்கை, ஒரே போலீஸ்(NIA) என அளவு ரீதியான மைய அதிகாரக் குவிப்பை செய்து வந்தது. இந்த நிகழ்ச்சி போக்கில் இந்தியாவை ஒற்றையாட்சியாக மாற்றுவதில் பண்புரீதியான பாய்ச்சல்தான் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதை மாநில தகு நிலையில் இருந்து யூனியன் பிரதேசமாக மாற்றி இருப்பதாகும். இதன் தொடர்ச்சி என்பது பொது சிவில் சட்டம் என்பதில் தொடங்கி எல்லா மாநிலங்களையும் சட்டப்பூர்வமான மாநகராட்சிகளாக மாற்றுவதில் சென்று நிறைவடையும். எனவே, ஜம்மு காஷ்மீர் மீது நடத்தப்பட்டிருக்கும் இத்தாக்குதல் காஷ்மீரிகளின் பிரச்சனை மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களின் மீதும் நீளப் போகும் கொடுங்கரங்களைக் காட்டி நிற்கும் சட்டத்திருத்தமாகும்.

நாடாளுமன்றப் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு அவசர அவசரமாக சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருகிறது பா.ச.க. நாடாளுமன்றப் பெரும்பான்மையின் வழியாக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்பதற்கான அறிவிப்பாகத் தான் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து காட்டியுள்ளனர். அரசமைப்பு சட்டத் திருத்தத்தின் வழியாகப் பாசிசத்தை நோக்கி வேகமாக முன்னேறிச் செல்கிறது இந்திய அரசு. இதன் இறுதி எல்லை என்பது இந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை அடியோடு மாற்றுவதில் போய் முடியும். அரசைப் பாசிசமயமாக்குவதோடு காஷ்மீர் சிக்கலை எரிபொருளாக்கி இந்திய தேசிய வெறி என்னும் நெருப்பை வளர்க்கப் பார்க்கிறது பா.ச.க. இவை காஷ்மீரில் மட்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தப் போவதில்லை, இந்த பாசிசப் போக்கு இந்திய தேசிய வெறியின் காரணமாக இந்தியாவுக்குள் உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும். அத்தகைய வன்முறை நாடெங்கும் வெடித்துக் கிளம்புவதுதான் பாசிச பா.ச.க.வின் விருப்பமும்கூட. எனவே, இதை காஷ்மீரின் மீதான தாக்குதலாக சுருக்கிப் பார்த்துவிடாமல் காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்திற்கு அனைத்து சனநாயக ஆற்றல்களும் அணியமாக வேண்டும்.

உலகின் மிகப் பெரிய சனநாயக நாடென்று தன்னைக் காட்டிக் கொண்டு அரைக் கூட்டாட்சி நிலவுவதாக அரசமைப்புச் சட்டத்தின் வரிகளை எடுத்துக்காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த இந்திய அரசு முழுக்க அம்பலப்பட்டு நிற்கிறது. அரைகுறைக் கூட்டாட்சி அம்சங்கள் அரை மணி நேர விவாதத்தில் வங்கக் கடலில் கரைக்கப்படுவதுதான் இந்தியாவில் நிலவிவரும் சனநாயகம் என்பதை மக்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மிருகப் பலத்துடனான பெரும்பான்மையை வைத்திருக்கிறது பா.ச.க. என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை எள்முனையளவும் பா.ச.க. பொருட்படுத்துவதில்லை. மக்களவையிலும் மாநிலங்களையிலும் உரையாற்றுவதன் மூலமாகவும் தொலைக்காட்சிப் பேட்டிகளின் வாயிலாகவும் மட்டும் இந்த சட்டத் திருத்தங்களைத் தடுத்துவிட முடியாது என்பது வெட்ட வெளிச்சாமியுள்ளது. மாபெரும் மக்கள் எழுச்சியை தெருக்களில் கட்டமைப்பதன் வழியாகத்தான் பாசிசத்தின் படையெடுப்பை தடுக்கவோ, எதிர்த்து நிற்கவோ முடியும். எனவே, எதிர்க்கட்சிகள் மக்களோடு தெருவில் இறங்கிப் போடுவதற்கு முன்வர வேண்டும்.

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட வேண்டும், ஜம்மு-காஷ்மீரை உடைக்கக் கூடாது, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யக் கூடாதென வலியுறுத்திப் காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்திற்கு எதிரானக் கிளர்ச்சியை முன்னெடுப்போம்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW