பாயத் தயாராகும் பாசிசம், பதுங்கும் ‘தாராளவாதிகள்’ என்.ஐ.ஏ. சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த எதிர்க்கட்சிகள்!

21 Jul 2019

 

ஜூலை 15 ஆம் தேதி அன்று என்.ஐ.ஏ. சட்டத்தில் புதிய திருத்தங்கள் மீதான விவாதம் மக்களவையில் நடந்தது. காங்கிரசு எம்.பி. திரு மனீஷ் திவாரி, திமுக எம்.பி. திரு அ.ராசா போன்றோர் திருத்தத்தின் மீது காரசாரமாக கருத்து சொல்லிவிட்டு வாக்கெடுப்பின் போது அதை ஆதரித்து வாக்களித்துள்ளனர். அதை எதிர்த்து வாக்களித்தோர் வெறும் ஆறு பேர் மட்டுமே. ஆதரித்தோர் 278 பேர். வாக்கெடுப்புக் கோரியது திரு. அசாதிதீன் ஒவைசி அவர்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாக்கெடுப்பை வலியுறுத்தினார். அப்போது, ”யார் பயங்கரவாதிகளின் பக்கம் நிற்கிறார், யார் எதிர்க்கிறார்கள் என்பதை நாடு தெரிந்து கொள்ளட்டும்” என்றார். வழக்கம் போல் காங்கிரசு, திமுக, திரினாமூல், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர் என கட்சிகள் எல்லாம் ‘கிளின் போல்டு’ ஆகி சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்துவிட்டன. திருப்பூர் எம்.பி. சுப்பராயன்(சி.பி.ஐ), கோவை எம்.பி. நடராஜன் சி.பி.ஐ.(எம்), கேரளத்தில் இருந்து சிபி.ஐ.(எம்) எம்.பி. அப்துல் மஜீத் ஆரிஃப், தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த ஹஸ்னைன் மசூதி, ஏ.ஐ.எம்.ஐ.எம். ஐ சேர்ந்த அசாதிதீன் ஒவைசி மற்றும் சையது இம்தியாஸ் ஜலீல்  ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.

மாநிலங்களவையில் வாக்கெடுப்பின்றி இச்சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடதுசாரிகள் இச்சட்டத் திருத்தத்தை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று முன்வைத்தனர். ஆனால், ஏனைய எதிர்க்கட்சிகள் இக்கோரிக்கையை எழுப்பவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாநில அதிகாரத்தில் குறுக்கீடு என்ற காரணத்தின் பொருட்டு என்.ஐ.ஏ. வைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், இன்றோ அடிமை சேவகம் புரியும் எடப்பாடி, ஓ.பி.எஸ். தலைமையில் அதிமுக இச்சட்டத் திருத்தத்தைப் பற்றி மூச்சு கூட விட்டதாக தெரியவில்லை.
திமுக மீது  கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் திமுக வின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி திரு அ.ராசா அறிக்கை வெளியிட்டுள்ளார். வேலூர் தேர்தலை மையமிட்டு திமுக பற்றி பொய்ப் பரப்புரைகளை மேற்கொள்கின்றனர் என்று விமர்சிப்போரை நோக்கி குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். மக்களவை உரைகள் அனைத்தும் பதிவாகியுள்ளதாகவும் அதைப் பார்க்குமாறு அறிவுறுத்தியுமுள்ளார்.  இது ஒரு சாதாரண சட்டத் திருத்தம்தான் என்றும் சொல்லியுள்ளார்.
மக்களவைப் பதிவேட்டில் எதிர்க்கட்சிகள் இச்சட்டத் திருத்தத்தின் மீது என்னப் பேசினார்கள் என்று பார்ப்போம். திரு அ.ராசா ‘ பாரத், இந்துஸ்தான், இந்தியா துண்டாகும்’  என்றெல்லாம் நீட்டி முழக்கிப்  பேசியிருக்காரே ஒழிய இத்திருத்தத்தை எதிர்ப்பதாக அவர் மக்களவையில் பேசவில்ல. திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் இரத்தின சுருக்கமாக இந்த சட்டத் திருத்தத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி  பத்தே வரிகளில் பேசி முடித்துள்ளார். ”எதிர்ப்புக் குரல்களுக்கு எதிரான நிறுவனரீதியான பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுதற்கான அதிகாரத்தை என்.ஐ.ஏ.வுக்கு இந்த சட்டத் திருத்தம் வழங்கும்” என்று அவர் சொல்கிறார். திமுக இதை மறுக்கின்றதா?

 

திரு. ஓவைசி இந்த சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதற்கு நான்கு காரணங்களை முன்வைக்கின்றார். அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் செய்சட்டத்தில்(statute) இந்தியா கையெழுத்திடாத நிலையில் இந்தியாவுக்கு வெளியே இச்சட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும? எனக் கேட்கிறார். உலக அளவில் செயல்படக் கூடிய சட்டம் என்பது மானுட விரோதக் குற்றங்கள், இனக்கொலைக் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளன என்று சுட்டிக்காட்டுகிறார்.

இரண்டாவதாக,  ”இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிலாவது இச்சட்டத்தின்படி குற்றங்கள் நடக்கும்பட்சத்தில் அந்நாட்டின் உள்நாட்டுச் சட்டம்தான் அங்கு செயல்பட முடியுமே ஒழிய என்.ஐ.ஏ சட்டம் அங்கு செயல்பட முடியாது. மேலும் ’இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும்  செயல்கள்’ என்று இச்சட்டத் திருத்தத்தில் பொத்தாம் பொதுவாக குறிப்பிடப்படுகின்றது. எனவே, இதன் மூலம், உங்களுடைய கருத்தியலுக்கு எதிராக யாரேனும் இணையத்தில் எழுதினால்கூட அவர்களைக் குற்றவாளியாக்குவதற்கு வழிசெய்யும் ஒரு சட்டத்தை நீங்கள் இயற்றிக்கொள்கிறீர்கள்” என்று குற்றஞ்சாட்டுகிறார்.

மூன்றாவதாக, ஒரு பகுதிக்கோ அல்லது பகுதிகளுக்கோ சிறப்பு நீதிமன்ற அமைப்பதைப் பற்றி இத்திருத்தம் குறிப்பிடுகிறது. இது அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14 ஐ மீறுவதாகும். நான்காவதாக, என்.ஐ.ஏ. வுக்கென்று சிறப்புப் புலனாய்வு செய்நுட்பங்கள் உண்டா? அப்படி உண்டெனில், அதற்கு அரசமைப்புச் சட்ட ஏற்பு உண்டா? ஏனெனில், அரசமைப்பு சட்டப்படி ஒவ்வொரு அதிகாரமும் பொறுப்புக்கூறலுடன் இணைக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. வால் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களிடம் அரசு வருத்தம் தெரிவிக்க முன் வருமா? என்று கேட்கிறார். மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்குகிலும் சம்ஜூதா விரைவுரயில் குண்டுவெடிப்பு வழக்கிலும் நீங்கள் ஏன் மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை? அதில் கொல்லப்பட்டவர்களுக்கு யார் பொறுப்பு? அவையெல்லாம் பயங்கரவாதக் குற்றங்களே. உண்மையில் பயங்கரவாதத்திற்கு எதிராக அரசுக்கு உறுதித்தன்மை இருக்கிறதா? ஆகிய கேள்விகளை எழுப்புகிறார். ஆகவே, இந்த சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதாக ஓவைசி சொல்கிறார். ஓவைசி எழுப்பிய கேள்விகளுக்கு இத்திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த திமுகவிடம் பதில் இருக்கிறதா?

 

தேர்தலுக்கு முன்பு ’பாசிச பாசக ஆட்சி, பாசிஸ்ட் மோடி’ என்றெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். மோடி ஆட்சியில் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாது என்று அமித் ஷா உறுதி தருகிறார். அமித் ஷாவின் வாக்குறுதியை நம்பி திமுக இச்சட்டத் திருத்தத்தை ஆதரிப்பது ஏற்புடையதா?

 

2009 இல் இருந்து இன்றைக்கு வரை இச்சட்டமும் என்.ஐ.ஏ. அமைப்பும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் காவி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சனநாயக அமைப்புகள் இச்சட்டத்தையே நீக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இச்சட்டத்தை நீக்க வேண்டுமென வலியுறுத்தி தனது கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இச்சட்டம் இயற்றப்பட்ட நாள் தொட்டு இது மாநில அதிகாரத்திற்கு எதிரானது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்து வந்துள்ளார். வெகுகாலம் என்.ஐ.ஏ. வுக்கு என்றொரு அலுவலகம் கூட தமிழ்நாட்டில் இல்லை.

 

சட்டம் ஒழுங்கு மாநில அரசின் பட்டியலில் இருக்கும் நிலையில் நடுவண் சேமக் காவல் படை(CRPF) கூட மாநில அதிகாரத்தில் தலையிடுவதுதான் என மறைந்த  முரசொலி மாறன் ’மாநில சுயாட்சி’ என்ற நூலில் எழுதுகிறார். ஐ.பி., ரா (RAW) போன்ற உளவு நிறுவனங்கள் எப்படி குடியாட்சியத்திற்கும் கூட்டாட்சிக்கும் எதிராக இருக்கிறது என்று ‘இந்தியக் கூட்டாட்சியியல் – அதிகாரக் குவிப்பா? பகிர்வா?’ என்ற நூலில் பேராசிரியர் மு.நாகநாதன் எழுதியுள்ளார் . அப்படியெனில் மாநிலக் காவல் தலைவரிடம் எவ்வித அனுமதியுமின்றி எவரை வேண்டுமானாலும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து, சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் வழக்கு நடத்தலாம் என்ற அதிகாரம் கொண்ட என்.ஐ.ஏ. போன்ற நிறுவனத்தை என்னவென்று சொல்வது? மாநில சுயாட்சி, இராஜமன்னார் ஆணையத்தின் பரிந்துரைகள் என அரைநூற்றாண்டு காலமாக மங்கலம் பாடிவரும் திமுக, என்.ஐ.ஏ. சட்டத்தையும் அதில் இத்தகைய சட்டத் திருத்தங்களையும் ஆதரிப்பது எவ்வளவு மானங்கெட்டத்தனம் என்றுகூட திமுகவினர் உணர்வதில்லை.

சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் கோட்பாட்டளவில் அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியத்தால் வடிவமைக்கப்பட்டு எதிர்ப்பு இயக்கங்கள், இஸ்லாமிய இயக்கங்கள், விடுதலை இயக்கங்கள், புரட்சிகர அமைப்புகள், இஸ்லாமிய அரசுகள் ஆகியவற்றை ஒடுக்குவதற்கு கொண்டுவரப்பட்டது. இன்றைய சந்தைப் பொருளாதார ஊழியில் உலகமயமும் புதிய தாராளியமும் பொருளியல் கொள்கை என்றால் அதன் இராணுவ சித்தாந்தம் தான் ’பயங்கரவாதத்திற்கு எதிரான்ப் போர்’ என்பதாகும். உலக அளவில் அனைத்து ஆளும்வர்க்க ஆற்றல்களும் அதன் அரசுகளும் இந்த சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு அரசியலோடு உடன்பட்டு நின்று தத்தமது நாடுகளில் போராடும் அமைப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்திக் கொள்கின்றன. பயங்கரவாத எதிர்ப்பின் பெயராலேயே விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரும் தமிழின அழிப்பும் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டது. 2006 இல் பயங்கரவாத எதிர்ப்பின் பெயராலேயே ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு எதிராக லெபனான் மீது போர் தொடுத்தது இஸ்ரேல். அண்மையில் ஈரானியப் புரட்சிப் படை என்றழைக்கப்படும் ஈரானிய இராணுவத்தைக் கூட பயங்கரவாத அமைப்பு என முத்திரையிட்டு சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு அரசியலின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது அமெரிக்கா. ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் என்பதே இல்லாத கார்ப்பரேட்களின் கட்சியான திமுக, உலமயத்தோடும் புதிய தாராளியத்தோடும் முரண்பட்டு நின்றதில்லை. இன்னும் சொல்லப் போனால், அதை இந்தியாவில் அமல்படுத்துவதில் திமுக நடைமுறையளவிலான பங்களிப்பு செய்துள்ள கட்சிகளில் ஒன்றாகும். புதிய தாராளிப் பொருளியல் கொள்கையோடு உடன்படும் திமுக அதன் இராணுவ விளைபொருளான சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு அரசியலோடு மாறுபடுவதற்கான கோட்பாட்டு அடிப்படை இல்லை. ஆகவே, தேசப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரால் இச்சட்டத் திருத்தத்தை திமுக ஆதரித்து நிற்பதில் வியப்பென்ன இருக்கிறது?

 

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(ஊபா) என்ற கருப்பு சட்டத்தின் படியான குற்றங்களும் என்.ஐ.ஏ. சட்டத்தின் குற்றப்பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது. பொடாவை நீக்கியதைக் கூட வாக்கு அரசியலுக்காக காங்கிரசு செய்த செயல் என அமித் ஷா சொல்கிறார். பொடா தவறாகப் பயன்படுத்தப்பட வில்லை என்கிறார் அவர். ஆனால், பொடா தவறாகப் பயன்படுத்தப்பட்டதென அத்வானியே ஒப்புக்கொண்டார் என்பதை அமித் ஷா மறந்துவிட்டார் போலும். அல்லது தெரிந்தே பொய் சொல்வது அமித் ஷாவுக்கு புதிதல்லவே. எல்லாவற்றிலும் பெரும்பொய்யாக, இரத்தங் குடிக்கும் பூனை ஒன்றைக் காட்டி அது பால்கூட குடிக்காது என்று சொன்னால் எப்படியோ அப்படி மோடி அரசு இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தாது என்று மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பேசுகிறார் அமித் ஷா. இச்சட்டம் காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்டது என்பதால் அதில் திருத்தம் செய்வதற்கு அமித் ஷாவுக்கு மிகப் பெரிய கேடயமாக அமைந்துவிட்டது. சுருங்கச் சொல்லின் பாசிசம் நடந்துவருவதற்கு இராஜபாட்டைப் போட்டு தந்தது காங்கிரசு என்பதற்கு அது கொண்டு வந்த என்.ஐ.ஏ. சட்டமும் அதில் பா.ச.க. கொண்டு வந்த திருத்தமும் நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது..

காங்கிரசு இச்சட்டத்தைக் கொண்டு வந்தது. எனவே, காங்கிரசால் இப்போது வரும் சட்டத்திருத்தத்தையும் எதிர்த்து வாக்களிக்க முடியவில்லை. அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தது திமுக. எனவே, திமுகவும் இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து வாக்களிக்க முடியவில்லை. மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் உள்ள சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இச்சட்டத்தை எதிர்த்து நின்றாலும் இத்தகைய அடக்குமுறைச் சட்டத்தைப் பொருத்தவரை குழப்பம் ஏதமின்றி காங்கிரசின் பக்கம் நிற்கிறது. திமுக.  பாசிசம் மெல்ல தலையெடுக்கும் போது இடதுதிசையில் நகர்வதற்கு மாறாக வலதுபக்கம் திமுக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

 

2004 நாடாளுமன்றத் தேர்தலில் பொடாவை எதிர்த்து மக்களிடம் வாக்குகேட்டு வெற்றி வாகை சூடி ஆட்சியில் பங்குப் பெற்ற திமுக, பொடாவை நீக்கிய கையோடு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தைக் காங்கிரசு கொண்டு வந்தபோது அதை ஆதரித்து நின்றது. எனவே,  காங்கிரசின் சனநாயக மட்டம் எதுவோ அதுவே திமுகவின் சனநாயக மட்டமாக சுருங்கி விடுகிறது வெள்ளத்து அனைய மலர் நீட்டம் என்பது போல் காங்கிரசின் எல்லையே திமுகவின் எல்லையாக நின்றுவிடுகிறது. ஏனெனில், காங்கிரசும் திமுகவும் கைவிலங்குப் பூட்டப்பட்ட ஊழல் கூட்டாளிகள். ஒருவரைவிட்டு ஒருவர் விலக முடியாது, பிரிய முடியாது. முன்பு ஒட்டிக் கொண்டே பதவியில் அமர்ந்தபடி தங்கச் சுரங்கத்தில் இறங்கியதுபோல் இப்போது ஒட்டிக் கொண்டே படுகுழியில் இறங்க வேண்டியதுதான் திமுகவின் தலைவிதி!

 

இன்னும் சொல்லப்போனால், பொடா சட்டம் கொண்டுவரப்பட்ட போது திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தது. ஊபா சட்டம் கொண்டுவரப்பட்ட போதும் திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தது. என்.ஐ.ஏ. சட்டம் கொண்டுவரப் பட்ட போதும் திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தது. அரசை வலுப்படுத்தும் அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டு வரப்படும்போது அதை எதிர்த்து நின்றதில்லை திமுக. எப்போதும் இந்திய அரசின் அதிகார வலுப்படுத்தலுக்கு துணையாகவே நின்றுள்ளது.

 

அமித்ஷாவைப் பொருத்தவரை இச்சட்டத்திருத்தத்தின் மேலான வாக்கெடுப்பு என்பது ’பயங்கரவாதிகள் பக்கம் யார்? எதிர்ப்பவர் யார்?’ என நாட்டுக்கு வெளிப்படுத்துவதாகும். நம்மைப் பொருத்தவரை, ’பாசிசத்தின் பக்கம் யார்? முரணற்ற சனநாயகத்தின் பக்கம் யார்? என்பதைக் காட்டக்கூடியது இந்த வாக்கெடுப்பு. அதில் வெறும் ஆறு பேர் மட்டுமே சனநாயகத்தின் பக்கம் என்று தம்மைப் பிரகடனப்படுத்தப்படுத்தியுள்ளனர். எஞ்சிய எதிர்க்கட்சியினரில் பெரும்பாலானோர் வாய்ச்சொல் வீரர்கள் என அம்பலப்படுத்தியுள்ளது இந்த வாக்கெடுப்பு.

 

காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம் பாசிசத்தை நோக்கி அடிமேல் அடிவைத்து முன்னேறும் பொழுது ’தாராளவாதிகள்’ அந்த அடிச்சுவட்டின் பின்னாலேயே நடைபோட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ’தாராளவாதிகள்’ தமது எல்லைக் கோட்டை அடையாளம் காட்டி நிற்கின்றனர்.

 

பாசிச எதிர்ப்பில் திமுக நிற்கிறது என்று சொல்லப்படுவதையும் அவ்வப்போது அதுவும் தன்னை அப்படி வண்ணனை செய்து கொள்வதையும் காண்கிறோம். திரு அ.ராசா சொல்வது போல் இச்சட்டத் திருத்தம் அவ்வளவு எளிதில் கடந்து போகக் கூடியதா? பாசிசம் என்றால் என்ன? பாசிசம் என்பது இந்துத்துவ எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, 10% இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஆகியவையா? அரசமைப்பு ரீதியான மாற்றங்களின் மூலம் அரசு எடுக்கும் ஒருவகை வடிவமே பாசிசம், அரசிடம் அளவற்ற அதிகாரம் குவிக்கப்படும். பாசிசத்தின் அடிப்படைகளில் முதன்மையானது அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் சட்டபூர்வமானதாக மாற்றுவது. அரசின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுக்கு எல்லையற்ற அதிகாரத்தை சட்டபூர்வமாக வழங்குவது.

 

ஒருமுறை ஆர்.எஸ்.எஸ். ஐ சேர்ந்த கோவிந்தாச்சார்யா ஒரு பேட்டியில் சொன்னார். பா.ச.க. காங்கிரசு இரண்டுமே ‘pro rich, pro US’. அரசியல் பொருளியல் கொள்கையில் வேறுபாடில்லை என்று ஒப்புக்கொண்டார். இங்கு பாசிசம் என்று சொல்லப்படும் அதிகாரம் குவிக்கப்பட்ட அரசின் வடிவத்தை கோரி நிற்கும் அரசியல் பொருளியல் கொள்கை என்ன? ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே குடும்ப அட்டை, ஒரே ஆற்று நீர் தீர்ப்பாயம், ஒரே கல்விக் கொள்கை, ஒற்றையாட்சி ஆகியவற்றைக் கோரி நிற்கும் அரசியல் பொருளியல் கொள்கை என்ன? அடக்குமுறை சட்டங்களை மென்மேலும் சார்ந்து நிற்கும் அளவில் அரசை வலுப்படுத்தக் கோரும் அரசியல் பொருளியல் காரணிகள் என்ன? அதுதான் இந்திய அரசின் உலகமய, புதிய தாராளிய, தனியார்மயப் பொருளியல் கொள்கையாகும். பாசிசத்திற்கு வழிவகுத்துள்ள, ஒற்றையாட்சியைக் கோரி நிற்கின்ற அரசியல் பொருளியல் காரணிகளை எதிர்க்காமல் பாசிச எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி என்றெல்லாம் வாய் நிறையப் பேசிக் கொண்டிருப்பதால்தான் அடக்குமுறை அரசு இயந்திரம் வலுப்படுத்தப்படும்பொழுது அதை ஆதரித்து நிற்கும் முரண்பட்ட போக்கு ஏற்படுகிறது. அதனால்தான், பாசிசத்திற்கு வழிவகுக்கக் கூடிய அரசியல் பொருளியல் கொள்கைகளைக் கொண்டுள்ள காங்கிரசு, திமுக போன்ற எதிர்க்கட்சிகள்தான் உண்மையில் பாசிச ஆற்றல்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டியுள்ளது.

 

அ.ராசா சொல்வது போல் இச்சட்டத் திருத்தம் மதச்சிறுபான்மையினரை மட்டும் இலக்காக்கவில்லை, ’இடது தீவிரவாதம்’ என்ற பெயரில் மாவோவியர் தலைமையில் போராடும் மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடிகளைக் குறிவைக்கிறது. தமிழகத்தைச் சூழும் பேரழிவுத் திட்டங்களையும் இந்திய ஒற்றையாட்சியையும் எதிர்த்து நிற்கும் புரட்சிகர தமிழ்த்தேசிய ஆற்றல்களையும், அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் அனைத்து சனநாயக ஆற்றல்களையும் குறிவைக்கிறது என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம்..

 

என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம் என்பது சனநாயக ஆற்றல்களை நோக்கி அமித் ஷா விட்டிருக்கும் சவால். ’தாராளவாதிகள்’ இரு கைகளையும் தூக்கியபடி அமித் ஷாவின் காலடியில் சரணடைந்துவிட்டனர். காரணம், பாசிசத்திற்கு வழிவகுக்கும் அரசியல் பொருளியல் கொள்கைகளுக்கு மாற்றான அரசியல் பொருளியல் கொள்கையைக் கொண்டிருக்கும் ஆற்றல்கள் மட்டுமே பாசிசத்தை எதிர்த்து நிற்க முடியும்.

 

-செந்தில், இளந்தமிழகம்

 

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW