வீட்டில் எதற்கு கள்ளிச்செடி? தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி?

15 Jul 2019

இதுதான் ’இந்து மக்கள் கட்சி’ என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்வதற்கு மற்றுமொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 12-7-2019 அன்று நாகை மாவட்டத்தில் உள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான் என்ற இளைஞரை வீடு புகுந்து தாக்கியுள்ளது இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கும்பல். கும்பல் என்றால் நான்கைந்து பேர் அல்ல, இருபது பேர்! தாக்கியதோ கத்தியால், இரும்பு கம்பியால்! படுகாயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மாட்டுக்கறி சூப் குடித்த போது அந்த புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தார். அதுதான் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை வீடு புகுந்து தாக்கச் செய்துள்ளது. இதுவரை தினேஷ் குமார், கணேஷ் குமார், அகஸ்தியன், மோகன் குமார் என நான்கு பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதே, நாகை மாவட்டத்தில்தான் கெயில் குழாயை விளைநிலத்தில் பதிப்பதை எதிர்த்து உழவர்களும் உணர்வுள்ள இளைஞர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக வல்லூறுகளைப் போல் கார்ப்பரேட்டுகள் காவிரிப் படுகையை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. ’ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்கக் கூடாது’ என சட்டசபையிலும் நாடாளூமன்றத்திலும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் குரல்கொடுத்து வருகின்றனர். ஹைட்ரோகார்பன் திட்டம் நடைமுறையானால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் உருக்குலைந்து போகும், நீரும் நிலமும் மாசுபடும், உழவுத் தொழில் காணாமல் போகும் என எல்லோரும் கலங்கி நிற்கும் நேரமிது. ஹைட்ரோகார்பன், மீத்தேன், சேல் எரிவாயு எடுப்பதற்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசாத கட்சி இந்து மக்கள் கட்சி. மாறாக வேதாந்தாவும் ஓ.என்.ஜி.சி. யும் ஹைட்ரோகார்பன் எடுத்தால் என்ன கெட்டுவிடப் போகிறது? என இதையெல்லாம் ஆதரிக்கும் கட்சி அது. யாருக்காக கட்சி நடத்துவதாக சொல்லிக்கொள்கிறோர்களோ அந்த இந்து மக்களுடைய விவசாய நிலம், கடல் வளம், நீர் என எல்லாம் மாசுபடுவதற்கு எதிராகப் பேசத் துணியாதவர்கள்.

 

’காவிரி நீரை தரமுடியாது’ என அண்மையில் கர்நாடகா சொன்ன போது எல்லாக் கட்சிகளும் எதிர்த்துக் குரல் கொண்டிருந்த வேளையில் இந்து மக்கள் கட்சி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. இந்துக்களின் உரிமையைப் பறிக்கக் கூடாது என கர்நாடகாவை எதிர்த்து இந்து மக்கள் கட்சிப் போராடவில்லை.

கஜாப் புயலில் இதே நாகை மாவட்டம் சிதைந்து போன போது எட்டிக் கூடப் பார்க்காத மோடியைப் பார்த்து ’பாதிக்கப்பட்டிருக்கும் இந்துக்களைக் ஏன் காண வரவில்லை’ என்று இந்து மக்கள் கட்சி கேள்வி எழுப்பவில்லை.

புதிய கல்விக் கொள்கை கல்வியை வியாபார பண்டமாக்கச் சொல்கிறது என்று எல்லோரும் கண்டித்துக் கொண்டிருக்கும் போது அவர்களால் இந்துக்கள் என்று குறிப்பிடப்படுவோரின் குழந்தைகளின் கல்வி களவாடப் படுவதுப் பற்றி வாய்த் திறக்காததுதான் இந்து மக்கள் கட்சி!

இந்தியாவில் முதல் அணுக் கழிவு மையத்தை திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் புதைக்கத் துடிக்கிறது இந்திய அரசு. அணு விபத்தேற்பட்டால் நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்கள் கதிர்வீச்சுப் பாதிப்புக்கு ஆளாகும் என்று அஞ்சி எல்லோரும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். அணுக் கதிர்விச்சு சாதி பார்த்தோ, மதம் பார்த்தோ பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. ஏன் மாந்தர் மட்டுமின்றி அனைத்து உயிர்களையும் பாதிக்கக் கூடியது. பா.ச.க. ஆளும் எந்த மாநிலத்திலும் அணுக் கழிவைப் புதைக்க முடியாத நிலையில் தமிழ்நாட்டை தெரிவு செய்கிறது மோடி அரசு. தமிழ்நாட்டில் உள்ள இந்து மக்களுக்காகப் பாடுபடுவதாக சொல்லிக் கொள்ளும் இந்து மக்கள் கட்சி அணுக் கழிவைப் புதைப்பதை எதிர்க்கவில்லை.

இப்படி பட்டியலிட்டுக் கொண்டு போனால் மோடி அரசால் தமிழ்நாட்டின் மீது அன்றாடம் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் எல்லாவற்றிலும் அதை எதிர்க்காதது மட்டுமின்றி அவற்றை ஆதரித்துக் கொண்டிருப்பதுதான் இந்து மக்கள் கட்சி.

இந்து மக்கள் கட்சி செய்து கிழித்தது என்ன? தமிழர்களுக்கு தீங்கைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. தாக்கப்பட்ட தமிழன் மருத்துவமனையில். தாக்கிய தமிழர்கள் சிறைச்சாலையில். காவிரி உரிமைக்காகவோ ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தோ இவர்கள் சிறை சென்றிருந்தால் அது மண்ணுக்கும் மக்களுக்கும் செய்த நன்மையாகப் பார்க்கப்பட்டிருக்கும். பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக, அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்காக கைகோர்த்துப் போராடியிருக்க வேண்டியவர்கள் ஒருவரை ஒருவர் எதிரியாக கருதி மோதிக் கொள்ள வைத்ததுதான் இந்து மக்கள் கட்சி செய்ததும் செய்ய நினைப்பதும் ஆகும்.

ஜி.எஸ்.டி. யை விமர்சித்து நடிகர் விஜய் படத்தில் நடித்தால் ’கிறித்தவர்’ என்று சொல்லி மோடி அரசைப் பாதுகாப்பது. ஆசிரியர், அரசு ஊழியர் போராடிக் கொண்டிருக்கும் போது ஜாக்டோ-ஜியோ சங்க நிர்வாகிகள் எல்லாம் கிறித்தவர்கள் என்று சொல்லி அவர்களின் கோரிக்கையைப் பற்றிய பேச்சை திசை திருப்பிவிடுவது. யாராவது இந்த அரசின் கொள்கையை விமர்சித்தால், தமிழர்களின் உரிமைக்காகப் பேசினால் அவர்களையெல்லாம் கிறித்தவர், இஸ்லாமியர், அன்னியக் கைக்கூலி, இந்து விரோதி என்று முத்திரையிட்டு அவர்கள் எழுப்பும் கேள்விகளை காணாமல் போகச் செய்வது. இப்படி, தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்பதையோ போராடுவதையோ விரும்பாத கட்சி அது. எப்படியாவது, தமிழர்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தி அதன் மூலம் வாக்கு வங்கியைத் திரட்டிக் கொள்ளப் பார்ப்பதுதான் இந்து மக்கள் கட்சியைப் போன்ற ஆர்.எஸ்.எஸ். இன் உறுப்பு அமைப்புகளின் இலக்காக இருக்கிறது.

வீட்டுக்குள் கள்ளிச்செடி வளர்ப்பது போல் தமிழ்நாட்டுக்குள் இது போன்ற கட்சிகளால் வெறுப்பு அரசியல் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒரே கிராமத்தில் மாட்டை வழிபடுவோரும் மாட்டை வழிபட்டுக் கொண்டே உணவாய் உண்போரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஒன்றாய் வாழ்ந்து வருகின்றனர். பசுவின் பெயரால் இப்படியான வன்முறை எந்த கிராமத்திலாவது இதுவரை நடந்ததுண்டா?

பசு மாட்டைப் புனிதம் என்று கருதி வ்ழிபடுவது ஒருவரின் உரிமை என்றால் மாட்டை உணவாய் உண்பது மற்றொருவரின் உரிமையாகும். ஒன்று ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கை சார்ந்த உரிமை, வழிபாட்டுரிமை. மற்றொன்று ஒருவருக்கு இருக்கும் உணவு உரிமை. மாட்டை வழிபடுவதையோ அல்லது மாட்டை உண்பதையோ இங்கு யாரும் உயர்த்திப் பிடிக்கவில்லை. மாட்டை வழிபடுவதற்கு இருக்கும் உரிமையையும் மாட்டை உணவாய் உண்பதற்கு இருக்கும் உரிமையையுமே நாம் உயர்த்திப் பிடிக்கிறோம். இவ்விரண்டும் ஒருவருக்கு இருக்கும் பிறப்புரிமைகளாகும். இவற்றை மதிக்க வேண்டியது இருதரப்பாரின் கடமையாகும். எல்லோரும் மாட்டை வழிபட்டே ஆக வேண்டும் என்று எவரும் நம்பிக்கையைத் திணிக்க முடியாது. அதே போல், எல்லோரும் மாட்டுக் கறியை உண்ண வேண்டுமென்று தன் விருப்பத்தையும் திணிக்க முடியாது. இந்த குறைந்தபட்ச சனநாயக கண்ணோட்டம் இல்லாதததால் ஒவ்வொரு நாளும் வட இந்தியாவில் ’பசுப் பாதுகாப்பு’ என்பதன் பெயரில் வன்கும்பல் அடித்துக் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. வி.எச்.பி, பஜ்ரங் தள், பா.ச.க. போன்ற ஆர்.எஸ்.எஸ். இன் கிளை அமைப்புகள் இப்படி கும்பல் தாக்குதல் நடத்திக் கொலை செய்வதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்து வருகின்றன. இந்த அருவெறுக்கத்தக்க நாகரிமற்றப் பண்பாடு இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்துக் கொண்டிருக்கிறது அத்தகைய தலைக்குனிவைத் தமிழ்நாட்டிற்கும் ஏற்படுத்துவதற்குத்தான் இந்து மக்கள் கட்சி வகையறாக்கள் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த வெறுப்பு அரசியலைத் தமிழ்நாட்டிலும் பரப்புவதுதான் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, ராஷ்டிரய இந்து மகாசபா போன்ற அமைப்புகளின் இலக்காகும். அவர்களின் அரசியல் என்பது மதச் சிறுபானமியினர் மீதான  வெறுப்பைப் பரப்பி வன்முறையைத் தூண்டும் கலவர அரசியல் ஆகும்

’அன்பின் வழியது உயிர்நிலை’ என்றார் வள்ளுவர். ‘அன்பும் சிவமும் வேறென்பார் அறிகிலார்’ என்றார் திருமூலர். ‘ஆரூயிர்க்கட்கு எல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்’ என்றார் வள்ளலார். ‘அன்பு செய்தல் ஒன்றே தொழில் என்று கண்டீர்’ என்றான் பாரதி. ‘அன்பே தவம்’ என்று விகடனில் தொடர் எழுதிவருகிறார் குன்றக்குடி அடிகளார். இப்படி அன்பு செய்தலைப் பற்றிப் பேசும் தமிழ் இலக்கிய, சமய மரபை சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு நேரெதிரானதுதான், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, ராஷ்டிரய இந்து மகாசபா போன்ற அமைப்புகளின் சித்தாந்தமாகும். அவர்களின் அரசியல் வெறுப்பு அரசியல் மதச் சிறுபான்மையினர் மீதான வெறுப்பை விசம் போல் கக்குவதே அவர்களின் அரசியல்.

கர சேவகமும் கார்ப்பரேட் சேவகமும் கைகோர்த்து நிற்பதே இந்து மக்கள் கட்சியின் அரசியல். இது போன்ற கட்சிகளின் சித்தாந்தத்தை தமிழர்கள் புரிந்துக் கொண்டு இவற்றிலிருந்து விலகி நிற்க வேண்டும். ஏனென்றால் யாரும் கள்ளிச் செடியை வீட்டில் வளர்க்க மாட்டார்கள். அது போல்தான், அன்பும் அறிவும் உடைய எவரும் இந்து மக்கள் கட்சியில் இணைய மாட்டார்கள். இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் இவர்கள் கூப்பாடு போடுவதெல்லாம் பச்சைப் பொய், முதலைக் கண்ணீராகும். இஸ்லாமியர்கள், கிறித்தவர்களை எதிர்ப்பதே இவர்கள் கொள்கை, கோட்பாடு, இலக்கு. வட இந்தியாவைப் போல் தமிழகத்திலும் வன்முறைகள் வெடிக்க வேண்டும் என்பதே இவர்களின் அடிமன வேட்கை.

இளைஞர்களை மத வெறிப் பிடித்த வன்முறைக் கும்பலாக மாற்றும் இந்து மக்கள் கட்சியைப்  புறக்கணித்து அதுபோன்ற கட்சிகளைத் தமிழகத்தில் இல்லாமலாக்க வேண்டும்.

 

செந்தில், இளந்தமிழகம்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW