ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு!
சட்டசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரும் கவனயீர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வெற்று வாக்குறுதி தேவையில்லை…உடனடி நடவடிக்கைக்கான தீர்மானமே தேவை!
தமிழகம் முன்னோடி மாநிலம், அறிவியல் பூர்வமான திட்டங்களை அமலாக்குவதில் முன்னேறிய மாநிலம், காற்றாலை மின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது, சூரிய ஒளி மின் திட்டங்கள் பற்றிய கண்ணோட்டத்திலும் முன்னேறிய பார்வையை கொண்டிருக்கிறது, அதுமட்டுமன்றி அறிவியல் வல்லுனர்களாக எரிபொருள் துறையில், மின் ஆற்றல் துறையில் தமிழகத்தில் மட்டுமன்றி உலக அளவில் புகழ்பெற்ற வல்லுனர்களாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எரிபொருள் தேவை மற்றும் மின் உற்பத்தி தேவையை நிறைவு செய்வதற்காக ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்துகிறோம் என அரசுத் துறையும் அமைச்சகங்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், எண்ணெய் எரிவாயு மற்றும் நிலக்கரி எடுப்பது என பல்வேறு வடிவங்களில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அனல்மின் நிலைய எரிபொருள் தேவைகளுக்காக புதை படிவமாக மண்ணுக்குக் கீழே உள்ள இந்த பொருட்களை அகழ்ந்து எடுப்பது அவசியமாக இருக்கிறது என விளக்கம் அளிக்கப்படுகிறது. நாட்டின் எரிபொருள் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கும் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும் திட்டங்களுக்கு ஏலம் விடுப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இந்த வாதங்கள் எல்லாம் காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கின்றன.
உலகத்தில் பல்வேறு அரசுகள் இந்த வாதங்களை எல்லாம் நிராகரித்து, மாற்றத்தை நோக்கி தீர்மானகரமாக விரைந்துகொண்டிருக்கிறது. நாமும் அந்த பாதையை தான் பின்பற்ற வேண்டும்… மத்திய அரசினுடைய பிற்போக்குத்தனமான, காலம் கடந்த, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்ற கூடாது. ஏனென்றால் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் உலக வெப்பமயமாதலுக்கும், சூழலியல் பேரழிவுகளுக்கும் வளமான நைஜர் போன்ற ஆற்றங்கரையோர படுகைகள் நாசம் அடைவதற்கும் காரணமாக அமைந்து இருப்பதை உலகம் கண்டு உணர்ந்துவிட்டது. அது மட்டுமின்றி இந்த பேரழிவுகளால் இடம்பெயரும் மனிதர்கள் வாழ முடியாத உலகமும் உருவாகி வருவதை எதிர்ப்பு போராட்டங்கள் நம்மை எச்சரிக்கின்றன. எனவே நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் படுகையில் ஓ.என்.ஜி.சி’யால் தொடங்கப்பட்ட எண்ணெய் கிணறுகள் உட்பட இன்றைக்கு புதுச்சேரி, ராமநாதபுரம் சோழமண்டல கடற்பகுதிகள் என விரியும் புதிய வேலைத் திட்டங்கள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்!
மத்திய அரசின் இந்த திட்டங்கள் அனைத்தையும் மூடிவிட்டு அந்நிறுவனங்களை வெளியேறுவதற்கு அவர்களை வலியுறுத்த வேண்டும். ஏனென்றால் பல்லாயிரம் ஆண்டுகாலமாக செழித்து வளர்ந்து இருக்கிற நமது தமிழ் தாயகத்தின் வளமான நிலப்பகுதிகளை ஆற்றங்கரை படுகைகளை அந்நிய சக்திகளும், கார்ப்பரேட்டுகளும் சூறையாடுவதை நாம் அனுமதிக்க முடியாது. அதேபோன்று நிலம் அழிந்து, வளம் அழிந்து இடப்பெயர்வுக்கு ஆளாகி இன அழிப்புக்கு ஆளாகி தப்பி ஓடிக் கொண்டிருக்கிற தேசிய இன சமூகங்கள் போல் நாம் இந்த உலகத்தின் நெருக்கடியில் சிக்கிக் கொள்ள முடியாது.
ஆகவே நமது நிலத்தை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்… வளர்ச்சி என்ற பெயரில் பலி கொடுக்க முடியாது! இன்னொன்று.. வளர்ந்து கொண்டிருக்கிற சமூகமாகிய நாம் பழைய அழிவு
தொழில்நுட்பங்களை நமது மண்ணில் பயன்படுத்த அனுமதித்து, உலகத்தின் சூழலியல் பேரழிவுகளுக்கு துணைபோக முடியாது. ஆகவே நீடித்த வளர்ச்சி தரக்கூடிய அறிவியல்பூர்வமான உலகத்தின் பாதையில் நாம் அடியெடுத்து வைக்க வேண்டும். பிற்போக்குத்தனமான இந்திய பேரரசு வாதத்தின் அழிவு கொள்கையில் நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது. எனவே தமிழக அரசே இந்தியாவிலேயே மின்மயமாக்கத்தில் முன்னோடி மாநிலமாக இருந்த நாம், புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் வளங்களை உருவாக்குவதில் முன்னேறி இருக்கிற நாம், ஹைட்ரோகார்பன் பேரழிவு திட்டங்களை கைவிடுவதில் இந்தியாவில் முன்னோடியாகத் திகழ வேண்டும்.
நாசாவில் பணியாற்றிய திருச்சியைச் சார்ந்த ப்ளூம்பெர்க் ஸ்ரீதர் தொடங்கி இன்றைக்கு கோவையில் ஹைட்ரஜனைப் பிரித்து எரிபொருளாக பயன்படுத்துவதற்கு ஜப்பான் நிறுவனத்திடம் உரிமை பெற்றுள்ள சௌந்தரராஜன் குமாரசாமி வரை புதிய தொழில்நுட்பங்கள் ஆக்குவதற்கான மனித வளங்கல் நம் மண்ணிலேயே இருக்கக்கூடிய சூழலில் அதைப் பயன்படுத்தி முன்னேற்றத்தை உருவாக்குவதற்கு வாய்ப்புகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
ஆகவே உடனடியாக ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிடுவதற்கான தீர்மானத்தை சட்டசபையில் ஒருமனதாக ஏற்றுவதற்கான வேண்டுகோளை காவிரிப் படுகையில் விழிப்புணர்வு பெற்று மக்கள் போராடி வருகின்ற இந்த சரியான தருணத்தில் வலியுறுத்த விரும்புகிறோம். 2012 முதல் மீத்தேன்/ ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் களம் கண்ட நமது தோழர்கள் சமீபத்தில் மேமாத்தூர் முதல் மாகாணம் வரையான கெயில் குழாய் பாதிப்பிற்கு எதிராக போராட்டத்தில் அரசு அடக்குமுறையை எதிர்கொண்டனர். இதனை தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 30 அன்று மண்ணை காக்கும் மாநாட்டை மயிலாடுதுறையில் மக்கள்திரள் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு!
மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து!
காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு!
– பாலன் பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி