முகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை!
நேற்று ஜூன் 27 அன்று முகிலனின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கம் போலவே சீலிடப்பட்ட கவரில் முன்னேற்ற அறிக்கையைக் கொடுத்தது சிபிசிஐடி. நிர்மல் குமார், எம்.எம். சுந்தரேசன் ஆகிய இரு நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர். சிபிசிஐடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றும் பெண்டுல்லம் போல் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு வழக்கின் திசைப் போவதாகவும் சிபிசிஐடியிடம் சில க்ளு இருப்பதாகவும் ஆனால் அவர்களால் அதை துல்லியமாக்க முடியவில்லை என்றும் திரு எம்.எம்.எஸ். கூறினார். ஒருவர் பின் ஒருவராக விசாரணை செய்து வருகின்றனர். இன்னும் ஆழமாகப் போக வேண்டியிருக்கிறது என்றும் நீதிபதி எம்.எம்.எஸ். சொன்னார்.
ஜுன் 3 தேதியிட்ட இந்து தமிழ் நாளிதழில் ’முகிலன் உயிருடன் இருக்கிறார்’ என்ற தலைப்பிட்டு இத்தகவல் சிபிசிஐடியிடம் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லி ஒரு செய்தி வந்தது. இப்படியான புரளிகள் பரப்பபடுகின்றன என்றும் முன்பு முகநூலில் ஒரு காவல் ஆய்வாளரே முகிலன் ‘சமாதி’ எனப் பதிவிட்டுள்ளார் என்றும் வழக்கறிஞர் சுதாராமிலங்கம் நீதிபதியிடம் முறையிட்டார். சிபிசிஐடி விசாரித்துக் கொண்டிருக்கிறது என்று நீதிபதி சொன்னார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் ’எட்டு வாரம்’ அவகாசம் கேட்டார். வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆறு வாரம் மட்டுமே கொடுக்கச் சொல்லி கேட்டார். நீதிபதி எட்டு வாரத்திற்கு ஒப்புக் கொண்டார். வழக்கு விசாரணை ஆகஸ்டு 22 ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
கடந்த மூன்று முறையாக சிபிசிஐடி தரப்பில் இருந்து இரகசிய அறிக்கையே கொடுக்கப்படுகிறது. விசாரணை நடந்துகொண்டிருப்பதால் இப்படி தருகிறோம் என்கிறார்கள். ஆனால், அதே சிபிசிஐடி பத்திரிகைகளுக்கு செய்தி கொடுக்கிறது. விசாரணை எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்ற விவரம் தெரிந்தால் அது விசாரணையைப் பாதித்துவிடும் என்று கவலைப்படும் சிபிசிஐடி, ’முகிலன் உயிருடன் இருக்கிறார், வட இந்தியாவில் இருக்கிறார், மாவோயிஸ்ட்டுகளோடு இருக்கிறார்’ என விதவிதமான செய்திகள் வருவதால் விசாரணை பாதிக்கப்படும் என்று கவலைப்படுவதாக தெரியவில்லை. அப்படி வரும் செய்திகள் சிபிசிஐடி அதிகாரிகள் சொல்வதாகவே வருகிறது. முன்னேற்ற அறிக்கையை இரகசியமாக தரும் சிபிசிஐடி அதிகாரிகள் ஊடகங்களில் வரும் செய்திகளை மறுப்பதோ அல்லது கட்டுப்படுத்தவோ இல்லை. ஊடகங்களில் வெளிவரும் புரளிகளால் பாதிக்கப்படாத விசாரணைதான், சிபிசிஐடி யின் விசாரணை அறிக்கையை எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் பார்ப்பதால் பாதிக்கப்பட்டு விடுமா? அல்லது நத்தைப் போல் நடக்கும் விசாரணையை மறைப்பதற்கா செய்யும் மாய்மாலமா இது?
ஒருவழியாக முகிலன் தானே தலைமறைவாகி இருக்கக் கூடும் என்ற செய்தியை நம்ப வைக்கும்படி உளவுத்துறையும் அரசும் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இன்னும் எட்டு வாரங்கள் கழித்து சிபிசிஐடி, ’இதற்கு மேல் எங்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று சொல்லிவிடுவதற்கு தான் ஊடகங்கள் வழியாக இந்த பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பிப்ரவரி 15 முதல் ஜூன் 27 வரை சொல்லிக் கொள்ளும் படியான எந்த துப்பும் துலக்க முடியாத சிபிசிஐடி மேலும் எட்டு வாரம் அவகாசம் கேட்டுப் பெற்றுள்ளது.
அரசுத் தரப்பில் முதல் பத்து நாட்கள் விசாரணையையே தொடங்கவில்லை. பின்னர், எழும்பூர் ரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை என்று சொன்னார்கள். ஒருமாதம் கழித்து, அவர் மீண்டும் ரயில் நிலையத்திற்கு வந்து மதுரை மகால் ரயில் நிற்கும் நடைபாதையில் இருக்கும் பதிவு கிடைத்துள்ளது என்றனர்.
மதுரை மகால் ரயில் இரவு 11:50 மணிக்கு புறப்படுகிறது. பத்தரை மணியில் இருந்து 11: 50 வரையான ஒன்றே கால் மணிநேர சிசிடிவி பதிவைக் கூட ஒழுங்காகப் பார்க்காமல் முகிலன் ரயில் நிலையத்தை விட்டு வெளியே போய் விட்டார் என்ற செய்தியைப் பரப்புவானேன். தொடக்கம் முதலே அவர் திட்டமிட்டு தலைமறைவாகிவிட்டார் என்ற குழப்பதை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளை நம்மால் அடையாளம் காண முடிகிறது.
காலம் கடந்து போக போக முகிலனுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையும்கூட காணாமலாக்கப்பட்டுவிடுமோ என்று தோன்றுகிறது. ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு, தாது மணல் கொள்ளை எதிர்ப்பு, கிரானைட் மலைக் கொள்ளை எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அம்பலப்படுத்தல் என முகிலன் பயணித்த களங்கள் எல்லாம் பல்லாயிரம் கோடி பணம் புரள்பவை. இதனால் அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்குமோ என்பதுதான் எல்லோரது கவலையும். ஆனால், நீதிபதிகளோ அத்தகைய எவ்வித கவலையுமின்றி துளியும் சமூகப் பொறுப்பு இன்றி இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கிறார்கள். அதனால்தான், அவர்களால் எட்டு வாரம் கால அவகாசத்தை அள்ளிக் கொடுக்க முடிகிறது!
– செந்தில், இளந்தமிழகம்