தமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்!

19 Jun 2019

“ உலகத்தில் எந்த நாட்டு வரலாற்றைப் பார்த்தாலும்

கர்வப்பட ஏதுமில்லை.

இன்னொருவனைப் பரிதவிக்கவிடுவது

போரின் இரத்தத்தில் மிதப்பது

அருவெறுப்புத் தரும் பேய்களின் கூத்து..

ஏழைகளைக் கொடுமைப் படுத்துதல்

அவர்களைச் சுட்டுத் தின்னுதல்..

இதுதானே வரலாறு?

யுத்த பூமி இல்லாத இடமேயில்லை

இறந்தகாலம் இரத்தத்தில் நனைந்து கிடக்கிறது

அல்லது

கண்ணீரால் நனைந்திருக்கிறது..

:

இதுவரை சொன்னதில்

வரலாறே இல்லை.

நைல் நதி நாகரிகத்தில்

ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை

ஷாஜகானின் தாஜ்மகாலைக் கட்டக்

கல் எடுத்தக் கூலி

சாம்ராஜ்ய யுத்தத்தில்

சாதாரண வீரனின் சாகசம்

அரசன் ஏறியபல்லக்கல்லாமல்

அதை சுமப்பவன் கதை…

இவையல்லவோ….வரலாறு…”

(ஆந்திரப் புரட்சிக் கவிஞர் ஸ்ரீ ஸ்ரீ யின் கவிதை வரிகள் கவிஞர் வைரமுத்துவின் மொழிபெயர்ப்பில்)

இராஜராஜ சோழனின் மீதான சூடேறிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன.

திராவிட அரசியல் ஆற்றல்கள், தமிழ்த்தேசிய ஆற்றல்கள், இடதுசாரி ஆற்றல்கள், தலித்திய ஆற்றல்கள், இந்துத்துவ ஆற்றல்கள், சாதியவாத ஆற்றல்கள் எனப் பல்வேறு முகாம்களும் ஒரு புள்ளியில் இரு அணிகளாகப் பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றன. இராஜராஜ சோழர் காலத்தில் பார்ப்பனர்கள், வெள்ளாளர்களுக்கு தரப்பட்ட நிலங்கள் குறித்த கல்வெட்டு சான்றுகள், இலக்கியச் சான்றுகள் ஏற்கெனவே உண்டு. பார்ப்பனியக் கட்டமைப்பு காலூன்றிய காலம், தேவரடியார் முறை இருந்தது ஆகியவை முன்பே சுட்டிக்காட்டப்பட்ட ஒன்று.  திமுக இராஜராஜசோழனுக்கு விழாஎடுத்தது. பெரியாரின் திராவிட இயக்கம் இராஜராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்கள் எல்லோரையும் பார்ப்பன அடிமைகள் என்று விமர்சித்தது. இடதுசாரிகள் ஆளப்பட்ட வர்க்கங்களின் நோக்கு நிலையிலிருந்து இராஜராஜ சோழனை விமர்சித்தனர். தமிழ்த்தேசிய களத்தில் ஒருசாராரும் தமிழினவாத அரசியல் ஆற்றல்களும் இராஜராஜ சோழனை ’மாமன்னர்’ என உயர்த்திப் பிடித்து பெருமிதம் கொள்கின்றனர். சாதி அரசியல் ஆற்றல்கள் இராஜராஜனை தத்தமது சாதியைச் சேர்ந்தவர் எனவொரு வரலாறு பகர்கின்றனர். இப்போது இந்துத்துவ ஆற்றல்களும் புது உத்தியாக இராஜராஜ சோழனைக் கையில் எடுத்துள்ளன.

இந்நிலையில் கோட்பாட்டு நிலையில் இருந்து மன்னராட்சி, தேசியம் ஆகியவை குறித்த கண்ணோட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது.

மன்னன் என்பவன் யார்?

எந்தவொரு குமுகத்திலும் ( சமூகத்திலும்) உபரியை அனுபவிக்கும் ஆளும்வர்க்கத்தின் தலைவன்தான் மன்னன் என்பவன். அவ்வகையில் மன்னர்கள் கொள்ளைக்காரர்களாகவும் மக்கள் கொள்ளையிடப்பட்டவர்களாகவும் நிற்கக் காண்கிறோம். உபரியின் பெருக்கம் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் நகரக் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் வழி வகுத்தது. சோழ மன்னன் கடல் கடந்து படை நடத்திச் சென்று நாடு பிடிக்கும் வேலையும் செய்ததால் அம்மன்னனைக் கொண்டு பெருமைவாதம் பேசுவதற்கு அது கூடுதல் காரணமாகிவிட்டது. இதுவரை வரலாறு என்பது மன்னர்களின் வரலாறாகப் பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வந்ததால் மக்களின் உழைப்புக்கும் மக்களின் படைப்புக்கும் கிடைக்க வேண்டிய பெருமையெல்லாம் இராஜ இராஜ சோழனின் மணி மகுடத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அக்காலகட்டம் ’பொற்காலம்’ என்று பாடப்புத்தகம் வரை வந்துவிட்டது. வரலாற்றில் பொற்காலம் என்றொன்று இருப்பின் அதை எப்படியேனும் மனிதன் பாதுகாத்து தக்க வைத்திருப்பான். ஆதலால், கடந்த காலம் எதுவும் பொற்காலம் என்றில்லாததால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வளர்ச்சிக் கண்டு மனிதன் நகர்ந்துள்ளான். எனவே, வேத காலமோ, சங்க காலமோ, கிரேக்க யுகமோ, சோழர் காலமோ பொற்காலம் ஆகிவிட முடியாது. கடந்த காலம் எல்லாவற்றையும்விடவும் மக்களின் முக்கியத்துவம் ஏற்கப்பட்ட காலமாக இக்காலமே இருக்கிறது.  

ஏதோ ஒரு மன்னர் காலத்தைப் பொற்காலம் என்று சொல்லி வாதிடுவோர் எவரும் அந்த மன்னன் கல்லறையில் இருந்து இன்று உயிர்ப்பெற்று வந்தால் அவரைத் தலைவராக ஏற்பார்களா? அவன் இராஜராஜசோழனே என்றாலும் தேர்தலில் பங்குபெற்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாக வேண்டிய குடியரசு காலம் இதுவாயிற்றே.

பேரரச பெருமிதமும் அடிமைத்தன எதிர்ப்பும்

இராஜராஜ சோழன் மட்டுமின்றி எல்லா மன்னர்களும் இறையாண்மையைத் தம்மிடமே கொண்டிருந்தனர். ஒரு மன்னனோ அல்லது அவனைச் சுற்றியுள்ள ஒரு சிறு குழுவோதான் அரசியல் தீர்மானங்களை எடுத்தனர். அப்படி தனி மனிதனோ அல்லது ஒரு சிறு குழுவோ மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் முறையை ஏற்காத காலம் இது. இறைமை மக்களுக்கே உரித்தானது என்று சொல்லும் காலம் இன்றைய காலம். மன்னர்கள் அரண்மனைகளில் வாழ்ந்தனர், அந்தப்புரங்களைக் கொண்டிருந்தனர், மக்களைப் போரில் ஈடுபடுத்தினர், சொந்த நாட்டையும், அக்கம்பக்கத்து நாட்டையும் தமது வலிமைக்கு ஏற்றாற் போல் கொள்ளையடித்தனர். மன்னன் படைநடத்தி ஈட்டிய வெற்றி இன்னொரு மக்களுக்கு தோல்வியாகும். ஒரு பேரரசின் படர்ச்சி இன்னொரு மண்ணுக்கு ஆக்கிரமிப்பு. மன்னர்களின் பேரரசப் படர்ச்சிக்கு உரிமைக் கொண்டாடும் எவரும் தங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கும் ஆதிக்கத்திற்கும் எதிராகப் போராடும் உரிமையை இழந்துவிடுகின்றனர். அதாவது சோழப் பேரரசுக்கு உரிமைக் கொண்டாடும் எந்தவொரு தமிழரும் இந்தியப் பேரரசின் கீழ் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு எதிராய் போராடுவதில் உள்ள நியாயத்தை இழந்துவிடுகிறார்.

மன்னர்களும் அவர்களது கொடி, குடை, ஆலவட்டங்களும் வரலாற்றின் குப்பைத் தொட்டிகக்குள் வீசப்பட்டுவிட்டன. அரண்மனைகள் அருங்காட்சியகங்கள் ஆக்கப்பட்டுவிட்டன. அதுமட்டுமல்ல, மன்னர்கால சிந்தனை முறை, மன்னர் காலப் பண்பாடு, மன்னர் கால முடிவெடுக்கும் முறை, மன்னர் கால ஆதிக்க மனப்பாங்கு, மன்னர் கால நாடுபிடிவெறி இவையெல்லாம் அருவெறுக்கத்தக்கனவாகப் பார்க்கப்படுகின்றன. அப்படியெனில் இராஜராஜ சோழன் எதற்கு துணைக்கழைக்கப்படுகிறார், அதுவும் தமிழ்த்தேசியத்தின் பெயரால்?

 

மன்னராட்சியின் முடிவுரையும், தேசியத்தின் முன்னுரையும்

தேசியம் அதன் வரலாற்றை மன்னராட்சிக்கு எதிராகவே தொடங்கியது. ஆங்கிலேய மன்னராட்சிக்கு எதிராக முதல் தேசிய விடுதலைப் போராட்டத்தை அமெரிக்கர்கள் நடத்தினர். பிரெஞ்சு மன்னனுக்கு எதிராக பிரெஞ்சு மக்கள் நடத்தியதே பிரெஞ்சு தேசிய விடுதலைப் போராட்டமாகும். நேபாள தேசியப் போராட்டமும் நேபாள மன்னனுக்கு எதிரானதே. வரலாறு மன்னர்களோடு தனது கணக்கை முடித்துக் கொள்வதற்கு பிரசவித்ததே தேசியமாகும். His excellency, his majesty ’மேதகு’, ’மாட்சிமை தங்கிய’ போன்ற சொற்களை தூக்கி எறியெந்து திரு அதிபர், Mr. President என்றழைத்தது அமெரிக்க தேசியம். மன்னர் கால பட்டங்கள், புகழாரங்கள் ஆகியவற்றை தேசியம் ஏற்கமறுத்தது. மாபெரும் வல்லமைப் பொருந்திய மாமன்னர்களுக்கு முன்னால் மக்கள் புழுக்களைப் போல் நிறுத்தப்பட்டனர். இந்த அருவெறுக்கத்தக்க நிலையைவிட்டொழித்து ’எல்லோரும் இந்நாட்டு மன்னர், எல்லோரும் ஓர் நிறை’ என்று தேசியம் முழங்கியது. ஒவ்வொரு மாந்தரும் பிறப்பால் அரசியல் பண்பாட்டு சமத்துவத்திற்கு உரியவரென்பதை வரலாற்றில் உரக்கச் சொன்னது தேசியம்.

ஆயினும் ஆசியாவில் அந்நிய குடியேற்றத்திற்கு எதிராக எழுந்த தேசிய விடுதலைப் போராட்டங்களில் அதன் கருத்தியலாளர்கள் மக்களுக்கு ஊக்கமளித்துப் போராட்டங்களுக்கு அணிதிரட்டுவதற்கு மன்னர்களைத் துணைக்கழைத்தனர். ஆங்கிலேயக் குடியேற்றங்களாக ஆவதற்கு முந்தைய மன்னர் காலத்தை பொற்காலமென்றனர். பழமைவாத சேற்றை எடுத்து அள்ளி பூசிக்கொண்டனர். இதற்கு இந்திய தேசியமும், மராட்டிய தேசியமும் சிங்கள தேசியமும் தமிழீழத் தமிழ்த்தேசியமும் தமிழ்நாட்டுத் தமிழ்த்தேசியமும் விதிவிலக்கல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியாய் சோழர்களின் புலிக் கொடியை அடியொற்றி ஒரு கொடியை வடிவமைத்ததிலும் மன்னர்கால சிந்தனையும் பெருமிதமும் இருக்கிறது. சிங்கள மக்கள் மகிந்த இராசபக்சேவை சிங்கள மன்னன் துட்டகைமுன்னாகப் பார்க்கின்றனர். மாட்டிறைச்சி அரசியலுக்கு மன்னன் ராணா பிரதாப் சிங்கை துணைக்கழைக்கிறார் மோடி. மராட்டிய தேசியத்திற்கு சிவாஜி துணைக்கழைப்பட்டார். இஸ்லாமியர்களிடையே இஸ்லாமிய மன்னர்களை முன்னிட்டு இந்தியாவை ஆண்ட பெருமைவாதம் உண்டு.

ஜப்பான் தேசியத்திற்குள் இருந்த மன்னராட்சிக் கலாச்சாரம் முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் ஆசியாவை விழுங்க முயன்றது. சீன தேசியம் தன்னை சீனப் பேரரசப் பண்பாட்டில் இருந்து விடுவித்துக் கொள்ளவில்லை. ஈரானிய தேசியத்திற்குள் பாரசீகப் பேரரசவாதம் பொதிந்து கிடக்கிறது. வரலாற்றில் மன்னர் கால ஆக்கிரமிப்புகள், படையெடுப்புகளின் மறுபதிப்பாக இன்றைய ஆக்கிரமிப்புப் போர்களும், ஏகாதிபத்தியப் படர்ச்சியும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. மாபெரும் மக்கள் தலைவர்களும்கூட மன்னர் காலப் பண்பாட்டில் இருந்து துண்டித்துக் கொண்டவர்களாக இல்லை என்பதே வருந்தற்குரிய உண்மையாக இருக்கிறது.

குடியரசுக்கு முந்தைய முடியரசு காலம் இன்றைக்கு 5500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று வரலாற்றாய்வாளர்கள் சொல்கின்றனர். அப்படியென்றால், இந்த 5500 ஆண்டுகளில் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்புதான் மாந்தக் குமுகம் குடியாட்சியம் என்ற சனநாயக ஊழியில் காலெடுத்து வைத்துள்ளது. அது அரசியல் தளத்தில் தேசிய அரசு என்று வடிவம் பெற்றுள்ளது. பொருளியல் தளத்தில் முதலமைப் பொருளாக்கத்தின் வருகை இந்த ஊழிக்கு அடித்தளமாக இருக்கிறது. எனவே, வெறும் 300 ஆண்டுகளே வயதுடைய குடியாட்சிய அரசுகள் பூமியில் இருக்கின்றனவே ஒழிய அரசியல் பண்பாட்டில் மன்னர் காலப் பண்பாடு, வாரிசு அரசியல், ஆணாதிக்கம், ஆக்கிரமிப்பு வேட்கை இவையெல்லாம் நீடித்துக் கொண்டிருக்க காண்கிறோம். நிலைமை இப்படியிருக்க, தேசியத்தின் முதல் எதிரி மன்னன் என்ற வகையில் தேசியத்தின் வரலாற்று வளர்ச்சிப் பாதையில் இருந்து பாடங்கற்றவர்களாக தமிழ்த்தேசிய அரசியலை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு சனநாயக ஆற்றல்களுக்கு உண்டு.

எதிலிருந்து ஊக்கம்பெறுவது?

அடிமைப்பட்டிருக்கும் மக்களினங்களுக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு கடந்த கால மன்னர் பெருமைகளை எடுத்தியம்புவதாக சிலர் சொல்லி வருகின்றனர். இது உலகளாவியப் போக்காகவும் இருந்துவந்துள்ளது. ஆனால், இராஜராஜ சோழனை அழைத்து வருவது விடுதலை உணர்வை வளர்ப்பதற்கு மாறாக ஆண்ட பெருமை உணர்வையும் பேரரசிய உளப்பாங்கையுமே வளர்த்தெடுக்கும். தேசங்களுக்கிடையேயான சமத்துவ உணர்வையும், இன்னொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிரான உளப்பாங்கையும் வளர்த்தெடுப்பதற்கு இது மாறானது. ஒவ்வொரு மாந்தரும் சமம், ஒவ்வொரு தேசமும் சமம் என்ற நீதியுணர்ச்சிக்கு வழிவகுக்காது. மன்னர் காலப் பெருமிதங்களுக்கு முன்பு மக்கள் புழுக்களாக மாற்றப்பட்டுவிடுகின்றனர். இப்படி மன்னர்களை சமகால அரசியலுக்கு துணைக்கழைப்பது பற்றி பதினெட்டாம் புரூமோர் நூலில் மார்க்ஸ் பின் வருமாறு சொல்கிறார்.

” பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகப் புரட்சித் தன்னுடைய கவித்திறனைப் பழங்காலத்திலிருந்து பெற முடியாது; எதிர்காலத்திலிருந்துதான் பெற முடியும், அது தன்னுடைய பணிகளை ஆரம்பிப்பதென்றால் கடந்த காலத்தைப் பற்றிய எல்லா மூடநம்பிக்கைகளையும் முதலில் ஒழிக்க வேண்டும். முன்பு நடைபெற்ற புரட்சிகள் தங்களுடைய உள்ளடக்கத்தை தாங்களே முனைப்பில்லாமல் செய்வதற்காக உலக வரலாற்றில் கடந்த கால சம்பவங்களை நினைவு கூர்ந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புரட்சி தன்னுடைய உள்ளடக்கத்தைச் சரியாகப் புரிந்துக் கொள்வதற்கு செத்துப் போனவர்களே செத்துப் போனவர்களைப் புதைக்குமாறு விட்டுவிட வேண்டும். அங்கே உள்ளடக்கத்தைக் காட்டிலும் சொற்கள் முக்கியமானவை. இங்கே சொற்களைக்  காட்டிலும் உள்ளடக்கம் முக்கியமானது. ”

 

அப்படியென்றால், விடுதலைக்கு போராடுமாறு மக்களை தட்டியெழுப்புவதற்கு வரலாற்றில் இருந்து எப்படி ஊக்கம் பெறுவது? சோழர் காலத்தின் வானளாவிய கோயில்கள், வேளான் செழிப்பு, கலை இலக்கிய வளர்ச்சி, இரும்பு, வெள்ளி, தங்க சிலை வடிவமைப்புகள் ஆகியவற்றின் பெருமைகள் உழைக்கும் மக்களுக்கும், அறிவாளிகளுக்கும், தொழில்நுட்பவியலாளர்களுக்கும் உரித்தானதே அன்றி சோழ மன்னனுக்கு அல்ல. மருத்துவம், வேளாண்மை, பாசன முறை, கட்டிடக் கலை, நீர் மேலாண்மை, நீதிக் கோட்பாடுகள், இலக்கண, இலக்கிய மொழி வளம் என குறிப்பிட்டத்தக்க அறிவியல்துறைசார் வளர்ச்சிகள் தமிழர் வரலாற்றில் உண்டு. புதுமக் கால வரலாற்றில் இந்திய தேசிய ஆதிக்கத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் எதிரான  சுயமரியாதை குரல் தமிழர்களுடையது, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, அணுஉலை எதிர்ப்பு, மரண தண்டனை எதிர்ப்பு, சூழலியல் பாதுகாப்பு என்று அண்மைக் கால வரலாற்றில் மாந்த நாகரிக வளர்ச்சிக்கு தமிழ் மக்கள் பங்களித்து வருகின்றனர். இவற்றிலிருந்து எல்லாம் மக்களைத் தட்டி எழுப்புவதற்கான வாய்ப்புகள் தமிழ்த்தேசியத்திற்கு உண்டு.

சாறமற்ற சோழர் எதிர்ப்பும் முரண்பாடுகளும்

சோழர்கள் மட்டுமல்ல இராஜபுத்திரர்களும், பல்லவ மன்னர்களும், நாயக்க மன்னர்களும், பாண்டிய மன்னர்களும், சிங்கள மன்னர்களும், இஸ்லாமிய மன்னர்களும் உள்ளிட்ட மெளரியர்களும் என எல்லா மன்னர்களும் கொள்ளைக்காரர்களே. மன்னர் என்று ஆகிவிட்டால் இன, மத, மொழி வேறுபாடெல்லாம் கிடையாது.

திராவிடர் கழகத்தார் பார்ப்பனிய எதிர்ப்பு என்ற நோக்கு நிலையில் இருந்து மட்டுமே இராஜராஜ சோழனை விமர்ச்சிக்கின்றனர். ஆனால் தேரில் உலா வருவதிலோ, மேடை தோறும் கலைஞரின் வாரிசு மு.க. ஸ்டாலினை தளபதியென்று வாய்நிறைய சொல்வதிலோ மன்னர் காலப் பண்பாட்டிற்கு எதிரான சுயமரியாதை உணர்ச்சி அவர்களிடம் காணக்கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கலைஞர் தன்னை சோழ மன்னனாகவே கருதிக் கொண்டார். கலைஞரையோ, திமுகவையோ யாரேனும் விமர்சித்தால் அவர்களைப் பார்ப்பன ஆதரவாளர்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகள் என்றும் முத்திரையிடுவதுகூட மன்னர் காலப் பண்பாட்டின் வெளிப்பாடே.

அனைத்திந்திய இடதுசாரிகளில் ஒரு சாராரும் இராஜராஜ சோழனை விமர்சனம் செய்கின்றனர். ஆனால், முன்பு எப்போதும் இல்லாததைவிடவும் இந்திய நிலப்பரப்பு முழுவதும் மனுதர்மம் சட்ட வடிவம்பெற்று வீற்றிருப்பது இந்தியக் குடியரசில்தான். இராஜராஜ சோழனின் பார்ப்பன அடிவருடித்தனத்திற்காக அவரை விமர்சிப்பவர்கள் இந்திய அரசின் பார்ப்பனியப் பண்புக்காக அதை விமர்சிப்பதில்லை. சாதியச் சிக்கலில் இவர்களின் முரண்பாடான நிலைப்பாடு காரணமாக, உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஓதுக்கீட்டைக் கொண்டுவந்து பா.ச.க. தகிடுதத்தம் செய்த போது கையறு நிலையில் நின்றார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னன் பார்ப்பன-வெள்ளாள அடிவருடியாக இருந்தது உண்மையே. ஆனால், நிகழ்காலத்தில் பார்ப்பனியத்தின் பாசாங்குக்குள் மாட்டிக் கொண்டவர்களாக அனைத்திந்திய இடதுசாரிகளில் ஒருசாரார் இருக்கிறார்கள் என்பதை என்ன சொல்வது?

சோழனின் பேரரசியத்திற்கு எதிரானவர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள்தான் சோழர்காலத்தின் மறுபதிப்பாய் இந்தியப் பேரரசியம் தென் கிழக்காசியாவில் படர்ந்து வருவதை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீரை இந்திய பேரரசியம் தனது படைபலத்தால் அடிமைப்படுத்தி வைத்திருப்பதை எதிர்க்கவில்லை, அதிலும் பொதுவாக்கெடுப்பின் வழி காஷ்மீரிகளின் விருப்பம் அறிய வேண்டும் என்ற கோரிக்கையைகூட ஏற்காதவர்கள்தான் இவர்கள்! இராஜராஜ சோழனை விமர்சனத்திற்குள்ளாகப் பார்ப்பது என்பது பார்ப்பனிய எதிர்ப்பு, பேரரசிய எதிர்ப்பு, தேசிய இன ஒடுக்குமுறை எதிர்ப்பு, இனப் படுகொலை எதிர்ப்பு, வாரிசு அரசியல் எதிர்ப்பு, மன்னர் காலப் பண்பாட்டு எதிர்ப்பு, மன்னர் கால முடிவெடுக்கும் முறை எதிர்ப்பு ஆகிய புதுமக் கால சனநாயக விழுமியங்களில் ஊறித் திளைப்பதில் இருந்து எழ வேண்டும்.

முடிவாக, இராஜராஜ சோழன் என்ற மன்னனை உயர்த்திப் பிடிப்பது சரியல்ல என்பது மட்டுமின்றி தமிழ்த்தேசியத்திற்கு அதன் சாறத்திலேயே எதிரானது. இனவாதத்திற்கும், பேரரச மனப்பாங்குக்குமே இது வழிவகுக்கும். தமிழ்த்தேசியத்தின் பெயரால் இராஜராஜ சோழனை உயர்த்திப்பிடிப்பது கைவிடப்பட வேண்டும், தமிழ்நாட்டின் வரலாறு மன்னர்களின் வரலாறாகவன்றி மக்களின் வரலாறாக  மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அடிமைத்தனத்திற்கும் ஆதிக்கத்திற்கும் எதிராக மக்களைத் தட்டியெழுப்பி மாந்த நாகரித்திற்கு தமிழ்த்தேசியம் பங்களிப்பதற்கு இதுவே உதவும். வருங்காலத் தமிழ்த்தேச குடியரசில் பல்லவர் காலம், பாண்டியர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் என்று வரலாற்று காலங்களை விளக்கப்படுத்தாமல் பாடப்புத்தகத்தில் வேறுவகையில் இவற்றை விளக்கப்படுத்த வரலாற்று ஆய்வாளர்கள் துணைசெய்ய வேண்டும்.

தமிழ்த்தேசியமும் இராஜராஜசோழனும் இணைந்திருக்க முடியாது. ஒன்று குடியரசுக் கோரிக்கை, மற்றையது முடியரசு மயக்கம். அப்படி இணைப்பது என்பது தேனில் ஊறும் பலா சுளைகள் இருக்கும் பாத்திரத்தில் பச்சை மிளகாய்களைப் போடுவதற்கு ஒப்பாகும்.

-செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW