கூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா?

12 Jun 2019

 

புவிக்கோளத்தின் சூழல் அமைவிற்கும் மனித இனத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அணு உலைகள் இருப்பதை கடந்த கால விபத்துகள் போதுமான படிப்பினைகள் வழங்கியும் ஆளும் அரசுகள் அணுவுலை அமைக்கும் முயற்சிகளை கைவிடுவதாக தெரியவில்லை. 1500 நாட்களுக்கு மேல் தமிழகத்தில், கூடங்குளம் – இடிந்தகரையில் போராடிய மக்களை சட்டப்பூர்வ வன்முறையால் ஒடுக்கி அணு உலைப் பூங்கா திட்டத்தை திணித்து வருகிறது.

முதல் இரண்டு அனுவுலைகளில் இருந்து வந்துள்ள அணுவுலைக் கழிவுகளுக்கு இவ்வரசு என்ன தீர்வு வைத்துள்ளது? இதுவரை கட்டியுள்ள அணுவுலைகளின் உபகரணங்கள் எந்தளவில் பாதுகாப்பானவை? என்ற கேள்விகளுக்கு இதுவரை நம்பகத்தன்மையுள்ள பதிலை வழங்கிராத மத்தியஅரசு, தற்போது இந்தியாவில் முதல் அணுக்கழிவு மையம் கூடங்குளத்தில் வரவுள்ளதாக அறிவிப்பு வெளியுட்டுள்ளது.

முன்னதாக அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான அணுக்கழிவு மையத்தை (away from reactor) ஐந்து  ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என கடந்த 2013 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்திய அணுசக்தி துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஐந்தாண்டு கெடு முடிவுறுகிற நிலையில் 2018 ஆம் ஆண்டில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான தொழிநுட்பம் இல்லை எனவும் மேலும் ஐந்தாண்டுகள் அவகாசம் வேண்டும் எனவும்  நீதிமன்றத்திடம் கோரியது. நீதிமன்றமும் இம்மனுவை ஏற்று ஐந்தாண்டு நீட்டிப்பு வழங்கிய நிலையில் தான் தற்போது இந்தியாவில் முதல் அணுக்கழிவு மையம் கூடங்குளத்தில் அமையவுள்ளதாக அறிவித்துள்ளது.

இம்முடிவில் உள்ள முரண்பாடுகள் வருமாறு:

  • அணு உலைக் கழிவுகளை கையாள்வதற்கான தற்காலிகள் கழிவு மையத்தை அமைப்பதற்கே இத்தனை காலம் எடுத்துக்கொண்ட அணுசக்தி துறை, நிரந்தர அணுக்கழிவு சேமிப்பு கிடங்கை எப்போது எவ்வாறு அமைக்கப்போகிறது என்ற கேள்விக்கு கள்ள மௌனம் காத்து வருகிறது.
  • அமெரிக்காவின் அணுக்கழிவு கொள்கை சட்டம் 1982 இன் படி புவியின் ஆழத்தில் அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமிப்பதற்கான திட்டத்தை 1998 ஆம் ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என்றது. ஆனால் இன்றளவிலும் இந்த சட்டத்தை அமெரிக்க பெடரல் அரசால் செயல்படுத்த இயலவில்லை. இங்கிலாந்து,ஜெர்மனி மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் மலைபோல் குவிக்கப்படுகிற ஆபத்தான அணுக்கழிவுகளை பாதுகாப்பாக சேமிப்பதற்கு வழியற்று தற்காலிக ஏற்பாட்டிலேயே மக்களை அச்சப்படுத்தி  வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இயங்கிவருகிற அணு உலைகளின் அணுக்கழிவுகளை நிரந்தரமாகவும் பாதுகாப்பாகவும் சேமிக்கிற ஆழ் புவிசார் கிடங்குகள் அமைப்பது குறித்து மத்திய அரசின் கொள்கையும் நடைமுறையும் முற்றிலும் தெளிவற்றதாக உள்ளது.
  • அணுக்கழிவு மேலாண்மை விவகாரத்தில் ஒரு தற்காலிக ஏற்பாடாக(அதுவும் நீதிமன்ற உத்தரவை ஐந்தாண்டுகள் இழுத்தடித்த பிறகு) உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான அணுக்கழிவு மையத்தை(AFR ) கூடங்குளத்திலேயே அமைப்பதாக அறிவித்துள்ளது மிகப்பெரிய ஆபத்தாகும். அதுவும் இந்த தற்காலிக சேமிப்பகத்தை எந்த கருதுகோள்களின் அடிப்படையில் எவ்வளவு கொள்ளளவிற்கு கட்டப்போகிறார்கள் என்பதிலும் தெளிவில்லை.
  • 2011 ஆம் ஆண்டில் ஜப்பான்,புகிசமாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதைத்தொடர்ந்த சுனாமியால் புகிசமா அணு உலை விபத்து ஏற்பட்டது. செர்நோபிலுக்கு அடுத்து மிக மோசமான அணு உலை விபத்தாக கருதப்படுகிற புகிசமா அணுஉலை விபத்தின் போது, ஆலையின் அணுக்கழிவுகள்(தற்காலிகமாக) சேமித்து வைக்கப்பட்டிருந்த யூனிட் -4 மட்டும் வெடித்திருந்தால் இன்று டோக்கியா நகரத்தில் மக்கள் வசித்திருக்க இயலாது. இந்த நிகழ்விற்கு பிறகு அணுக்கழிவுகளை சேமித்து வைக்கிற கிடங்குகளில் குளிர்வியாக பயன்படுத்தப்படுக்கிற நீரின் அளவை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும், சில காலத்திற்கு பிறகு வேறு தொட்டிக்கு மாற்ற வேண்டும் போன்ற பல விதிகளை பரிந்துரைக்கப்பட்டன. இவை எல்லாம் எந்தளவிற்குக் கூடங்குளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அணுக்கழிவு கிடங்கில் செயல்படுத்த உள்ளார்கள் என்பது தெரியவில்லை.

ஆகவே, எரிமலையில் மேல் மக்களை வாழ்வதற்கு நிர்பந்திக்காமல், அனைத்து அணு உலைகளையும் இழுத்து மூடுவதே இதற்கான நிரந்தரத் தீர்வாகும். ஏனெனில் மக்களுக்காகத்தான் அரசே தவிர, அரசின் பிடில் வாசிப்பிற்கு ஏற்ப நடனமாட வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை.

 

-அருண்  நெடுஞ்சழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW