இயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்!

12 Jun 2019
இராசராச சோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட பறையர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதை, தேவரடியார் முறை பலமானதையும் பற்றிப் பேசிய செய்தி தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருவதுடன், இரஞ்சித் மீது தாமே முன் வந்து வழக்குப் பதிந்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தூண்டுதலில்லாமல் இது போன்ற வழக்குப் பதிவது நடப்பதில்லை.
இராசேந்திர சோழனின் வாரிசுகள் எனத் தங்களை திமுக தலைவர்கள் நிறுவிய காலங்களில் கூலி, நிலத்திற்கான போராட்டங்கள் மட்டுமல்லாமல், சோழப்பேரசின் பார்ப்னீய அடிவருடித்தனத்தை எதிர்த்த கருத்தாக்கத்தை பரப்பியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்! தஞ்சை பெரிய கோவில் முன்பு நிறுத்தப்பட்டுள்ள இராசரராசனின் சிலை மழையில் நனைவதைப் பற்றி உருகும் கலைஞரின் நிலைக்கு எதிராக
மக்கள் கவிஞர் இன்குலாப் எழுதிய கவிதை இன்றும் சாட்சியமாகிறது. இராசராசன் எந்தச் சாதி என நடக்கும் போட்டியில் வராத சாதிய மோதல் இரஞ்சித் சொன்ன கருத்தால் வரப் போகிறதா? கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட்டுகளும், பெரியார் சிந்தனையாளர்களும் முன்வைத்த கருத்துக்களை இயக்குனர் இரஞ்சித் பேசியுள்ளார். வரலாற்றைப் பேசியதில் மாறுபாடென்றால் வரலாற்றாய்வாளர்கள் பேசலாம்.  மன்னர் வரலாற்றை தமிழர் வரலாறாகப் பிதற்றும் இனவாத  அரசியல் பேசுவோரும், பார்ப்பனீய காவிபயங்கரவாதிகளும், சாதி வெறியர்களும் கத்துவது பொருத்தமற்ற செயலாகும். வரலாற்றைப் பேசியதற்கு திருப்பனந்தாள் பார்ப்பன, சைவ மடாதிபதிகளைப் பாதுகாக்கும் காவல்துறை வழக்குப் போடும் என்றால் கருத்துரிமை, பேச்சுரிமை பறிப்பாகும்.  தமிழக அரசின் காவல்துறையை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மக்கள் கவிஞர் இன்குலாப் கவிதை…..
ராஜராஜ சோழன் பற்றிய  கவிதை
கண்மணி ராஜம்
——————————
ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்
ராஜராஜனின் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
சிலையாகுமுன் ஜீவித்திருந்த இம்மன்னன்
என்ன செய்து கிழித்துவிட்டானாம்?
ஈழம் வென்றானாம்
சாவகம் வென்றானாம்
காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்?
கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்
பிரக்தீஸ்வரர் ஆலயத்துக்காக
குடும்ப விளக்கின் கொழுந்துகளை எல்லாம
மண்ணில் தேய்த்த மாபாதகன் இவன்
தஞ்சை நகரில் தேவரடியார் தெருக்களுக்குக்
கால்கோள் விழச்செய்த காமுகன்
இம்மன்னன்.
மக்களாட்சியின் மகத்துவத்தைச்
சிலையான பின்னும் கற்பழிக்கிறான்….
 —————————–
-மீ.த.பாண்டியன்
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW