தருமபுரி இளவரசன் கொலையை மூடிமறைத்து தற்கொலை என அறிக்கை சமர்பித்த சிங்காரவேலர் ஆணையத்தை வன்மையாக கண்டிப்போம்
ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வலியுறுத்துவோம்.
தருமபுரி இளவரசன் இறப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. திட்டமிட்ட கொலையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததால் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்திட பல இயக்கங்கள் வலுயுறுத்திவந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அமைத்த ஒருநபர் ஆணையர் ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலர் அவர்களை நியமித்தது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த ஆணையத்தின் விசாரணை முடிவுக்குவந்து கடந்த ஆண்டு அறிக்கையை ஆணையம் சமர்ப்பித்திருக்கிறது. ஆனால் இந்த அறிக்கையை இன்றுவரை தமிழக அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் ஃப்ரண்ட் லைன் ஆங்கில இதழ் அறிக்கையின் முடிவை வெளியிட்டிருக்கிறது. “இளவரசன் கடும் மனஉளைச்சலில் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்“ என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. இதனை தற்போது ஃப்ரண்ட் லைன் இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. 1100 பக்கங்களைக்கொண்ட இந்த அறிக்கையினை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்..
2013ல் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளவரசனை மீண்டுமொருமுறை கொன்றிருக்கிறது சிங்காரவேலர் ஆணையம். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கும் ஆணவக்கொலை செய்யப்பட்ட இளவரசன் குடும்பத்திற்கும் துரோகம் செய்திருக்கிறார் நீதிபதி சிங்காரவேலர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கும் இத்தகைய ஆணையம் எதற்கு? தலித் மக்களை ஏமாற்றவா? உண்மையை மூடிமறைக்கவா?
இதுவரை அடக்குமுறை, வன்முறை கொலை குறித்து உண்மையை வெளிக்கொணர்ந்திட அமைத்திடும் ஆணையங்கள் ஆளும் வர்க்கத்திற்கும், சாதி ஆதிக்கத்தை கட்டிக்காக்கும் சக்திகளுக்கு சேவை செய்யும் கமிசன் பார்ட்டிகளாக இருந்திருக்கிறது. அதற்கு விதிவிலக்கல்ல சிங்காரவேலர் ஆணையம் என்பதை நிரூபித்திருக்கிறது.
ஃரண்ட்லைன் இதழுக்கு எமது நன்றி. இச்செய்தியை அக்கறையுடன் பதிவுசெய்த செய்தியாளர் இளங்கோவன் ராஜசேகரன் அவர்களுக்கும் எமது அமைப்பின் சார்பில் நன்றி.
https://frontline.thehindu.com/social-issues/social-justice/article27615514.ece?homepage=true
ரமணி, பொதுச்செயலாளர்
சாதி ஒழிப்பு முன்னணி