கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன் கைது – கண்டனம்!

நாகை மாவட்டம் மே.மாத்தூர் முதல் மாகாணம் வரை நாற்று நட்டுள்ள விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு வேலைகளைக் காவல்துறைப் பாதுகாப்புடன் பொக்லீன் எந்திரங்களை இறக்கி விரைவுபடுத்தி வருகிறது.
இதற்கெதிராக தமிழக நிலம்-நீர் பாதுகாப்புக் இயக்கம், தமிழ்த்தேச மக்கள் முன்னணியும் விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வந்ததையொட்டி தமிழக நிலம்-நீர் பாதுகாப்புக் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் இரணியன் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் மற்றும் தமிழக நிலம்-நீர் பாதுகாப்புக் இயக்கத்தின் நாகை மாவட்ட செயலாளர் தோழர் விஷ்ணு இருவரும் நாகையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் வரும் சூழலில் வாக்களித்த மை காயும் முன்னே காவிரிப் படுகையில் விளை நிலங்களில் பொக்லீன் எந்திரங்களை பயிர்களின் நடுவே இறக்கி விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடுகிறது எடப்பாடியின் தமிழக அரசு.. காலில் செருப்புப் போட்டு வயலில் இறங்கத் தயங்கும் விவசாயிகளின் மனது காயப்படும் நிலையில் பொக்லீன் எந்திரத்தை கெயில் நிறுவனமும், காவல்துறையும், அரசு அதிகாரிகளும் ஈடுபடுகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டி பலியான 15 ஈகியருக்கு தமிழ்நாடே வீரவணக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காவிரிபடுகையைக் காக்கப் போராடும் விவசாயிகள் மீதும், விவசாயிகளின் பாதுகாவலர்கள் மீதும் அரசின் அடக்குமுறை பாய்கிறது. காவிரிச் சமவெளியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரிவிக்க வலியுறுத்தி நாம் போராடி வரும் வேளையில், காவிரிச் சமவெளியை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா கார்ப்பரேட் உள்ளிட்டவர்கள் கையில் இந்திய அரசும், எடுபிடி எடப்பாடி அரசும் ஒப்படைக்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போல காவிரிப் படுகையிலும் விவசாயிகளின் போராட்டங்களை ஒடுக்க தமிழக அரசு முயலுகிறது. விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடும் அரசின் செயல்களை நிறுத்த போராடும் மக்கள் இயக்கங்கள் முன் கை எடுக்க வேண்டும்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழ்ர் பாலன், தமிழக நிலம்-நீர் பாதுகாப்புக் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் இரணியன், தோழர் விஷ்ணு உள்ளிட்டோரை விடுதலை செய்யக் குரலெழுப்புவோம்!
தூத்துக்குடி தொடங்கி நாகை வரை நீடிக்கும் எடப்பாடி அரசின் காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக அணி திரள்வோம்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051
22.05.2019