விருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை

17 May 2019

கடந்த 8.5.2019 அன்று கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவிலுள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதி மாலை 5 மணி அளவில் அவரது வீட்டிலேயே மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சமூகத்தில் பெண்கள் மீது நடக்கும் பல்வேறு வடிவங்களிலான வன்முறைக் கொலைகளின் தொடர்ச்சியாக இன்று திலகவதியும் பலியாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலைசெய்ததாக ஆகாஷ் என்கிற மாணவன் கைதுசெய்யப்பட்டார். திலகவதியை ஒருதலைக்காதலால் ஆகாஷ் கொலை செய்துவிட்டார் என்கிற செய்திகள் வரத்தொடங்கின. இக்கொலையில் சந்தேகங்களும் ஆகாஷ் செய்திருக்க வாய்ப்பில்லை என்கிற கருத்தும் வெளிவரத் தொடங்கின. இதன் உண்மை நிலவரம் அறிந்திட கடந்த 13.05.19 அன்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி, சாதி ஒழிப்பு முன்னணி, இளந்தமிழகம் செயல்பாட்டாளர்கள் தோழர்கள் ரமணி, ஸ்ரீராம், சாலமன், ஜெயக்குமார், ராஜேந்திரன், ஆகியோர் நேரில் சென்று திலகவதி குடும்பத்தினரையும், ஆகாஷ் குடும்பத்தினரையும் அப்பகுதியிலுள்ள மக்களையும் சந்தித்தோம்.

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் தாலுக்காவில் வன்னியர், பறையர் ஆகிய இரு சமூக மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய மாவட்டம். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிற சமூக மக்களும் வாழ்கிறார்கள். குறிப்பாக விருதாச்சலம் பகுதியிலுள்ள அடித்தட்டு மக்கள் பெரும்பாலும் கரும்பு வெட்டும் தொழிலையும் விவசாயத்தையும் நம்பி உள்ளனர். கரும்பு விவசாய சங்கங்கள் அங்கு வலுவாக இயங்குகின்றன. பெருவாரியான வன்னியர், பறையர் சமூக மக்கள் அடித்தட்டு கூலி ஏழைகளாக இருக்கிறார்கள். சாதிமறுப்புத் திருமணங்கள் பல நடந்திருக்கின்றன. ஆனால், பாமக முன்னெடுத்த சாதிவெறி அரசியல் தருமபுரி வன்முறைக்குப் பிறகு கடலூர் – விருதாச்சலம், விழுப்புரம் ஆகிய பகுதிகள் பாமகவின் சாதிவன்முறைக்கான களமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சாதிய வன்முறைகளும் ஆணவக் கொலைகளும் நடக்க ஆரம்பித்துள்ளன. சாதி மாறி காதலிப்பவர்களை மிரட்டுவது, துன்புறுத்தி பிரிப்பது, அல்லது கொலை செய்வது போன்ற செயலை செய்திட ஆங்காங்கே கூலிப்படைகள் இயங்குவதாக தகவல் வருகிறது. கடந்த ஆண்டுகளில் விழுப்புரம் சேச சமுத்திரம் தலித் கிராமங்கள் எரிக்கப்பட்டது முதல் அண்மையில் நடந்த இறையூர் தலித் இளைஞன் பரந்தாமன் ஆணவக்கொலை செய்யப்பட்டதே இதற்கு ஓர் உதாரணம். திலகவதியின் கொலையை மையமிட்டு வேகமாக அறிக்கைவிடுவதிலும், விசிகவை வம்பிழுத்து, தலித் மக்களுக்கு எதிரான அனைத்து சாதி சங்கங்களையும் ஒன்றிணைப்பதிலும் பாமக இராமதாசு முனைப்பு காட்டி வந்தார். அங்கு நடந்த மறியல் ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியதில், அக்குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பது பாஜக நிர்வாகிகளும் பாமக நிர்வாகிகளுமே. அரசியல் ஆதாயத்திற்காக தன் குடும்ப நலனுக்காக உழைக்கும் வர்க்க மக்களை மோதவிட்டு குளிர்காயும் சாதி மதவெறி கும்பலின் வன்முறைகளும், ஆணவக்கொலைகளும் தமிழகம் முழுக்க நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திலகவதி குடும்பத்தினரை சந்தித்தபோது

விருத்தாச்சலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் இருக்கிறது. கருவேப்பிலங்குறிச்சி கடைவீதிப்பகுதியாகும். கருவேப்பிலங்குறிச்சி பேருந்துநிறுத்தும் மெயின் பகுதியிலிருந்து சுமார் 100 மீ தூரம் உள்ள கே.கே நகரில் திலகவதியின் வீடு அமைந்திருக்கிறது. திலகவதி குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். தகப்பனார் சுந்தரமூர்த்தி தாய் கொளஞ்சி இருவரும் கூலி வேலை செய்துவருபவர்கள். இவர்களுக்கு இரண்டு மகள்களில் மூத்த மகள் திவ்யபிரியா திருமணம் செய்துகொடுத்த இடத்தில் தற்கொலை? செய்து இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.. இரண்டாவது மகளான திலகவதி (19) தனியார் சிஎஸ்எம் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் கொல்லப்பட்ட திலகவதியின் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றோம். திலகவதி வீட்டிற்கு சென்றதுமே பாஜகவின் பகுதிச் செயலாளர் சண்முகம் என்பவர் வந்தார். நம்மை விசாரித்தார். அவரின் முன்னிலையில்தான் நம்மிடம் நிலவரங்களை திலகவதி குடும்பத்தினர் விளக்கினார்கள்.

திலகவதி அம்மா அழுதுகொண்டே தன் பேச்சை ஆரம்பித்தார். “நான் ஊருக்கு போயிட்டேன். வீட்டில இல்ல, மதியம் நேரம். என் பொண்ணு போன் பண்ணா. நான் சமைச்சி சாப்பிடபோறேன்னு சொன்னா. அதுக்குப் பின்னாடி இப்படி நடந்திருக்குன்னு தகவல் வந்துச்சு. கொலையும் செஞ்சுட்டு அந்த பையன் அவ்வளோ தைரியமா பேசுறான். ஆகாஷ் ஒருமுறை வீட்டுக்கு வந்தான். திலகவதி நண்பன் என்பதால் எனக்குத் தெரியும். டீ கொடுத்தேன். குடித்துவிட்டு போனான் அவ்வளவுதான் தெரியும். என் தம்பி பத்தி தப்பா அவதூறா வெளியில பேசுறாங்க. வீட்டுக்கு வந்தா உள்ளகூட வரமாட்டான். அவன்தான் கொன்னான்னு பேசுறாங்க. போலீசு என் தம்பிய ஒத்துக்க சொல்லி துன்புறுத்தியிருக்காங்க.“ என்று அழுதுகொண்டே கூறினார்.

திலகவதி மாமா மகேந்திரன் கூறுகையில், “நான் வாடகைக்கு கார் ஓட்டிட்டு இருக்கேன். 5 மணி அளவில் எனக்கு போன் வந்துச்சு. உடனே நான் போய் பார்த்தேன். வீடு வெளியில தாழ்பாள் போட்டிருந்தது. திறந்து பார்த்தா ரத்தவெள்ளத்தில் இருந்தாள். என் வண்டியிலேயே ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன். கொஞ்ச நேரத்துல இறந்துட்டதாக சொன்னாங்க. 8ஆம் தேதி இரவு போலீசு என்னை விசாரிக்க அழைச்சிட்டு போனாங்க. மனரீதியாக துன்புறுத்தினாங்க. கொலை பண்ணதா என்னை ஒத்துக்க சொல்லி தொடர்ந்து நெருக்கடி கொடுத்தாங்க. விட்டிருந்தா இன்னும் கொஞ்ச நேரத்தில் நானே ஒத்திருப்பேன். அவ்ளோ டார்ச்சர் பண்ணாங்க. காலைலதான் விட்டாங்க.“ என்றார். திலகவதி அப்பா கூறுகையில், “அவள படிக்க வச்சது தப்பா போச்சு. அவனுக்கு தண்டனை கொடுக்கனும். என்று கோபமாக கூறினார்.

 

சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களிடம் விவரங்கள் கிடைக்கவில்லை. மிகவும் எச்சரிக்கையுடன் பேசுகிறார்கள். அருகில் இருந்த கடைக்காரர்களை விசாரித்தபோது “5 மணிக்கு நாங்கள் இங்கு இல்லை“ என்றே பதில் வந்தது.

அடுத்ததாக, குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவன் ஆகாசின் கிராமமான பேரளையூர் சென்றோம்.

பேரளையூர் கிராமம்

கருவேப்பிலங்குறிச்சி கடைவீதிப்பகுதியிலிருந்து 1 கி.மீட்டரில் பேரளையூர் கிராமம் இருக்கிறது. இக்கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலான இளைஞர்கள் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார்கள். பேரளையூர் கிராம மக்கள் பெரும்பாலானோர் கரும்புவெட்டும் தொழிலுக்கு செல்லும் கூலி விவசாயிகள்தான் பேரளையூர் கிராமத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதி குடும்பங்கள் இருக்கின்றன. சாதி சண்டைகளோ, சிக்கலோ வந்ததில்லை. படித்த பட்டதாரிகளான அந்த தம்பதிகளைப் பார்த்துபேசினோம். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பெண் கூறுகையில் ”நாங்க இப்போ நன்றாக இருக்கிறோம். தொடக்கத்தில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு விட்டுவிட்டார்கள். இன்னைக்கு வரை எந்த தொல்லையும் இல்ல“ ஆனால் திலகவதி கொலைக்குப் பிறகு எங்களை அடிக்கனும்னு விசாரிக்கிறாங்களாம்“ என்று  பாதுகாப்பில்லா கவலையுடன் கூறினார்.

பிச்சமுத்து

“திலகவதியும் ஆகாசும் நல்ல நண்பர்கள். ஒன்றாக படித்தவர்கள். திலகவதி இங்கு வந்திருக்கிறார். திலகவதி ஆகாஷ் இருவரும் 9 ஆம் வகுப்பிலிருந்தே காதலித்து வந்தார்கள். இது இரண்டு குடும்பத்திற்குமே தெரியும்.. கொலை செய்யுற அளவிற்கு ஆகாஷ் அப்படிபட்ட பையன் இல்லைங்க. 5.30 மணிக்கு அந்த பொண்ணு செத்துட்டதா தகவல் தெரிஞ்சுச்சு. அப்போதான் ஆகாச தேடி போலீஸ் வந்து கேட்டாங்க. தப்பு செஞ்சிருந்தாதான பயப்படனும்னு நாங்க வீட்டில் இருந்த ஆகாசை அனுப்பி வச்சோம். ஊருக்குள்ள இருக்கிற குடிசை வீட்டில வச்சு ரொம்ப நேரம் விசாரிச்சாங்க. உடம்பையும், போட்டிருந்த சட்டையையும் ரத்தவாடை இருக்கான்னு செக் பண்ணி பார்த்தாங்க. கொஞ்ச நேரத்துல விசாரிச்சுட்டு விட்டுவிடுகிறோம்னு சொன்னதால கூடவே அனுப்பி வச்சோம். இப்படி பொய் கேசுபோட்டு பண்ணாத தப்புக்கு பழிய போட்டு ஜெயில்ல அடைச்சிட்டாங்க இது நியாயமா? என்று கொத்தளித்துப் பேசினார்.

 

அமுதா

“அந்தப் பொண்ணோட பழகுனதால இந்த பையன் மேல  பழிபோட்டிருக்காங்க. போலீசு விசாரிச்சு செஞ்சவன் எவன்னு கண்டுபிடிக்கவேண்டியதுதானே?. அடிச்சு சித்திரவதை செஞ்சு ஒத்துக்கோ, ஒத்துக்கோ இல்லாட்டி உங்க வீட்டுல இருக்கிறவங்கள கொன்னுடுவோம்னு மிரட்டி வாக்குமூலம் வாங்கியிருக்காங்க. போலீசு இப்படியா பண்றது? அங்க மாமன் மகேந்திரன் சொல்றாரு போன் வந்துச்சு போய் பார்த்தேன் கத்திய பிடுங்கி போட்டுட்டு மருத்துவமனைக்கு கொண்டுபோனேன்னு சொல்றாரு. அது 5.30 இருக்கும். ஆனா போலீசு விசாரிச்சதுல கத்திய எங்கடா போட்டன்னு ஆகாஷ்கிட்ட வீடியோ வாக்குமூலத்துல கேட்குறாங்க. அவன் கொல்லைப்புறமுன்னு சொல்றான். அப்புறம் எப்படி ஆகாஷ் கையில கத்தி வந்துச்சு. வாக்குமூல வீடியோவில ஒரு போலீசு விசாரிக்கிறாரு. அவங்க யாரு? போலீசுதானான்னு சந்தேகம் எழுது? அவர், எந்த நேரத்துக்கு குத்துனன்னு கேட்குறாரு. “சும்மா குத்துமதிப்பா சொல்லுன்னு சொல்றாரு“. அவன், “ஒரு 6, 6.30 ன்னு சொல்றான்.“ இது சொல்லிக்குடுத்தது தவிர வேற என்ன? கத்தியைக் கொல்லையில போட்டுவிட்டதாக சொல்கிறான். அப்புறம் எதுக்கு மறுநாள்தான் போலீசு ஆகாஷ் வீட்டில் உள்ள கரும்புவெட்டும் கத்திய எடுத்துட்டுபோனாங்க. அப்போ கொலை பண்ணி கத்தி எங்க எங்களுக்குத் தெரியனும்? அப்போ பிளான் பண்ணி இந்த பையன மாட்டிவிட்டிருக்காங்கதான?. கொலை பண்ணா நாங்க எதுக்கு ஆதரிக்கனும்? பண்ணவனா இருந்தா நாங்களே பிடிச்சிக் கொடுப்போம். மறைக்கவேண்டிய அவசியமில்ல. தப்பு செஞ்சவன் தண்டனைய அனுபவிச்சிட்டுப் போறான். பண்ணாத அப்பாவி பையன் எதுக்கு சார் கொலைகுற்றத்த சுமக்கனும். “அவன கொல்லனும் கொல்லனும்“னு பேசிக்கிறாங்களாம் என்ன அநியாயம் இது?  எவனோ பண்ண தப்புக்கு தண்டனையை நாங்க அனுபவிக்கனுமா? இதுல போலீசு நடவடிக்கையே சரியில்லைங்க. வீட்டுல தூங்க முடியல. பயந்துகிட்டு சோறு தண்ணி இல்லாம ஊரைவிட்டு வெளியில கிடந்தோம்” என்றார். ஆகாஷ் கூட இருந்த பசங்களையெல்லாம் தேடுறாங்க போலீசு. கொலை பண்ணினவன விட்டுட்டு எங்க ஊரையே மிரட்டுறாங்க.

 

தையல்நாயகி

“படையாச்சிங்களும் நாங்களும் தாயா பிள்ளையா பழகிட்டு இருக்கோம். எனக்கு 70 வயசு ஆகுது. இதுவரை ஒரு சண்டையும் வந்ததில்ல. திலகவதி கொலைய வச்சி இங்க சண்டை வரும்னு பேசிக்கிட்டாங்க. ஆனா எங்க ஊரு பக்கத்துல இருக்கிற படையாச்சிங்க எங்களுக்கு ஆதரவாதான் இருக்காங்க. “அமைதியாக பொறுமையாக இருங்க“ன்னு அந்தப் பையன் அப்படி பண்ணியிருக்க மாட்டான்“ ன்னுதான் பேசுறாங்க. மறியல் நடந்தப்ப கூட இவங்கள கூப்பிட்டிருக்காங்க. படையாச்சிங்க யாரும் வரமாட்டோம்னு சொல்லிட்டாங்களாம். நாங்க இப்படி ஒன்னும்பன்னுமா இருக்கோம். சண்டைய மூட்ட பார்க்கறாங்களே“ என்று கொந்தளித்தார்.

ஆகாஷின் அப்பா அன்பழகன்

“நான் வெளியில் போயிருந்தேன். என் பையன் ஊருக்குள்ளதான் இருந்தான். கிரிக்கெட் விளையாடபோயிட்டுவந்து மதியம் சாப்பிட்டுவிட்டு, முத்துவீட்டில் தூங்கியிருந்தான். மாலை சுமார் 5.30மணியளவில் எழுந்து குளித்துவிட்டு பசங்களோட கடைவீதிக்கு போயிருக்கான். 5.30க்கு அந்த பொண்ண யாரோ குத்திட்டதா ஊரே செய்தி பரவிடுச்சு. அந்த பொண்ணோட போன்ல இருந்து ஆகாஷ்க்கு அடிக்கடி போன் செய்திருப்பதால் ஆகாஷை தேடி எஸ்பிசிஐடி ஊருக்கு வந்து விசாரிச்சிட்டு ஆகாஷ ஸ்டேசன் வரச்சொல்லிட்டு போயிருக்காங்க. பிறகு ஆகாஷை வரவைத்து பேசி நாங்களே ஸ்டேசனுக்கு அனுப்பிவைத்தோம் போனா போலீசு யாரும் இல்லன்னு திரும்பிப வந்துட்டாங்க பசங்க. திரும்ப போலீசு ஆகாஷ தேடி வந்தாங்க. ஊருக்குள்ளதான் இருந்தான் ஆகாஷ். ஆகாஷ அழைத்து உடம்பெல்லாம் சோதனை பண்ணி பார்த்துட்டு கூட்டிட்டு போயிட்டாங்க. அப்போ ஸ்டேசனில் வச்சி விசாரிச்சாங்க. பிறகு 11 மணியளவில் வேனில் விருத்தாச்சலம் நோக்கி அழைச்சிட்டு போனாங்க. எங்க கூட்டிட்டு போறீங்கன்னு நாங்க கேட்டோம். போலீசு எந்த பதிலும் சொல்லல. அடுத்தநாள் பிற்பகல் வரை ஆகாஷ் எந்த இடத்தில இருக்கிறான்னு எங்களுக்கு தெரியாது. மதியம் 2.30 மணிக்குத்தான் கோர்ட்டுல ஆஜர்படுத்தினதாக எங்களுக்கு போன்ல குறுஞ்செய்தி வந்துச்சு. அடுத்த நாள் எஸ்பிக்கு நான் மனு கொடுத்தேன்.

 சிறையில் ஆகாஷ் கூறியது

என் பையன ஜெயிலுக்குப் போயி பார்த்தேன். ரொம்ப அடிச்சி துன்புறுத்தியதா சொல்லிக்கிட்டே அழுதான். கை காலிலுள்ள காயத்த காட்டுனான். உடம்பெல்லாம் ரத்தக்கட்டு. நீதான் இந்த கொலைய செஞ்சியாடா? என்று கேட்டேன். அதற்கு, “நான் பண்ணலப்பா. 9ஆம் வகுப்புல இருந்து நாங்க பழகுறோம். நான் எப்படிப்பா கொல்லுவேன்?. “ஒத்துக்க சொல்லி அடிச்சாங்கப்பா. அடிதாங்க முடியாம நான் செஞ்சதா ஒத்துக்கிட்டேன். இல்லாட்டி உன் குடும்பத்த கொன்னுடுவோம்னு மிரட்டுனாங்க. நான் கொலை பண்ணலப்பா“ என்றான். ஜெயிலில் திலகவதி உறவினர் ஒருவர் வந்து என்னை மிரட்டிவிட்டு செல்கிறார்“ என்று என் பையன் என்னிடம் சொன்னான். “எனக்கு 3 பேர் மீது சந்தேகம் இருக்குப்பா. நான் பழகுனதால என் மேல பழியப் போட்டிருக்காங்க. அவங்கள விசாரிச்சா உண்மை தெரியும்.“ என்று  சொன்னான்.

“எனக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒருத்தரு போன் பண்ணி, “பறப் பையனுக்கு வன்னியர் பொண்ணு கேட்குதா? என்று அசிங்கமாக திட்டினாரு. ”திலகவதி கூட பழகக்கூடாது, பழகினா உயிர் இருக்காது“ ன்னு மிரட்டினாரு.“ அதே நெம்பர்லிருந்து திலகவதிக்கும் போன் செய்து மிரட்டியிருக்கிறாரு. அசிங்கமா திட்டியதால அந்தப்பொண்ணு அப்பாகிட்ட கொடுத்திருக்கு. அவர் அந்த நபரை திட்டியிருக்கிறார். இதை திலகவதி என்னிடம் சொன்னாப்பா.“  வேற நபர் ஒருத்தரு ஒருமுறை நேர்ல கூட்டி மிரட்டினாரு“ 3 பேரு மேலதான் எனக்கு சந்தேகம் இருக்குப்பா. இவங்கள விசாரிச்சா உண்மை தெரியும். ஜெயில்ல இருக்க எனக்கு பயமா இருக்குப்பா, என்னை உடனே வெளியே எடுங்கப்பா.“ என்று என் மகன் அழுதுகிட்டே  சொன்னான். என்றார். “இந்த விசாரணையெல்லாம் செய்யாம, உண்மைக் குற்றவாளிய கண்டுபிடிக்காம என் புள்ளைய போலீசு இப்படி பலியாக்கிடுச்சே“ என்று ஆதங்கத்துடன் பேசினார். என் மகன் உயிருக்கு ஆபத்து இருக்கு. அவனுக்கு பாதுகாப்பு இல்ல“ என்று கூறினார்.

அப்பகுதியிலுள்ள முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் சிலரை சந்தித்தோம்.

“கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இதுவரை சாதி சண்டையோ மோதலோ வந்ததில்லை. திட்டமிட்டு சாதி கலவரம் செய்ய பலமுறை பாமக முயற்சி எடுத்திருக்கிறது. மக்கள்கிட்ட அது எடுபடல. திரும்பத் திரும்ப சாதிய சிக்கல தூண்டிவிட சாதிவெறி சக்திகள் முயற்சிக்கிறாங்க. அவங்கள நாம புறந்தள்ளவேண்டும். திலகவதி கொலையைக் கண்டனத்துக்குரியது. ஆகாஷ் சம்பந்தப்படனு செய்தி வருது உண்மையா என விசாரிக்க சொல்லனும். உண்மைக் குற்றவாளி யாருன்னு கண்டுபிடிக்கனும். என்ற கருத்தை வலியுறுத்திக் கூறினார்.  இன்னொருவர், “இது இரண்டு குடும்பத்திற்கும் இடையிலான சிக்கல். அந்த பொண்ணும் பையனும் பழகியிருக்காங்க. எதோ நடந்திருக்கு. குடும்ப பிரச்னைய சாதிக்கான கலவரமாக மாத்துறது எவ்வளவு மோசம்?. ஜனங்கள மோத விடப்பாக்குறாங்க இங்க இருக்கும் பாஜக, பாமக கட்சிக்காரங்க. அந்தப் பையன் தான் செஞ்சிருப்பான் என்று நம்பினேன். ஆனால் இப்போ இந்த கொலையில் காவல்துறை மும்முரமாக செயல்படுறத பார்த்தாதான் சந்தேகம் எழுகிறது. அந்த பையன் வாக்குமூலம் வீடியோ வெளியிட்டது. விசிக தலித் மக்களுக்கு எதிரான கலவரமாக திருப்ப பார்க்கிறார்கள். அன்றைக்கு நடந்த மறியலில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் வெளியூரிலிருந்து திரட்டி அழைத்து வரப்பட்டவர்கள்தான். இந்த பகுதியில் இருக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இங்க அனைத்து சமுதாயமும் சகஜமாக பழகுறாங்க. மாமன், மச்சான்னு கூப்பிட்டுக்குவாங்க. இணக்கமாக இருக்கிற இடத்துல பூசலாக்கும் வேலையை நகர்த்துறாங்க. இதுக்கு போலீசு உடந்தையா இருக்கு.“ நாங்க ஜனங்ககிட்ட பேசிட்டிருக்கோம். அதனாலதான் கலவரமாக வெடிக்கல.“ என்று பொறுப்புணர்வுடன் பதிவு செய்தார்.

 

நமது பார்வை

  • பெண்கள் மீதான வன்முறை; பெண்கள் மீதான வன்முறை ஒடுக்குமுறை என்பது பிற்போக்கு நிலவுடமை சமூகத்தின் தொடர்ச்சியாக ஆணாதிக்கத்தின் உருவமாக நிகழ்த்தப்படுகிறது. பெண், இச்சமூகத்தில் பெண்கள் சாதி, மதம் பண்பாடு வடிவங்களில் அரசியல், பொருளாதாரம், சமூக நிலையில் இரண்டாம் தர குடிமகளாகவே நடத்தப்படுகிறாள். ஒரு பெண் தனக்கான காதலை, திருமணத்தை சாதி, மதம் மீறிய வாழ்க்கையை தேர்வுசெய்துகொள்வதற்குகூட இந்த சனநாயக நாட்டில் காவல்நிலையம், நீதிமன்றம் என்று படியேறி மன்றாட வேண்டியிருக்கிறது. ‘பெண்களின் முன்னேற்றமே இந்நாட்டின் முன்னேற்றம், பெண்களே இந்நாட்டின் கண்கள்‘ என்றெல்லாம் போற்றி புகழ்ந்தாலும் அரசு நிர்வாகம், நீதித்துறை வரை பெண் குறித்த பிம்பத்தை ஆணாதிக்க கருத்தியலை நிலைநாட்டியே தீர்ப்புகளை வழங்குகிறது. முன்பைவிட பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்திருக்கிறது என்றே தேசிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சமூகத்தில் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்கள் ஓரளவு சுதந்திரத்தை பெற்று வெளியில் வருகிறார்கள். தனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆக, சாதி, குடும்ப அமைப்பின் இறுக்கம் உடைகிறது.  இதன் எதிர்விளைவாக பெண்கள் மீதான வன்முறைகளும் ஆதிக்கமும் மேலோங்கி வருகிறது. சாதி, மதவாத சக்திகள் பெண்ணை குற்றவாளியாக்கி பின்னோக்கி இழுப்பதை பார்க்கிறோம். இன்னொருபுறம் வளர்ந்துவரும் முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரம் பெண்ணை காமப்பொருளாக, பெண்ணை போகப்பொருளாக பார்க்கும் பண்பாட்டை ஊக்குவிக்கிறது. ஆண்-பெண் அந்தரங்கள் அனைத்தையும் வியாபாரமாக்குகிறது. இதற்கு தூணாக அரசின் கொள்கைகள் காவல்துறையின் ஆதிக்கங்கள் தீணிபோடுகின்றன. பெண்களின் சனநாயக சக்திகளின் போராட்டத்தின்மூலமே இதனை உடைத்திட முடியும். பெண்கள் இயக்கங்களை நோக்கி பெண்கள் திரள வேண்டியது அவசியத்தை திலகவதி கொலை நமக்கு உணர்த்துகிறது.
  • திலகவதி கொலை: திலகவதி குடும்பம் நிலமற்றகூலி ஏழைக்குடும்பம். திலகவதியின் கொலை  அக்குடும்பத்திற்கு பெரும் இழப்பு. திலகவதி கொலை கண்டிக்கத்தக்கது. உண்மைக் குற்றவாளிகள் யார்? என்பதை கண்டறிய வேண்டும். இக்கொலை சாதிய- இந்துத்துவ சக்திகளின் தூண்டுதலால் நடந்த ஆணவக் கொலையா? வேறு காரணத்திற்கான கொலையா? என்கிற சந்தேகம் இருக்கிறது.
  • திலகவதி- ஆகாஷ் இருவருக்கும் மிரட்டல்: கள விசாரணையில் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக காதலித்துவருகிறார்கள் என்பது உண்மை. ‘ஒரு தலைக்காதல் என்பது கட்டுக்கதை. ஒரு மாதத்திற்கு முன்பு வெளி நபர்களிடமிருந்து ஆகாசுக்கு போன் அழைப்பு வந்திருக்கிறது. “பறையனக்கு வன்னிய பொண்ணு கேட்குதா“ பழகுறத இத்தோட நிறுத்திக்கோ இல்லன்னா கொன்னுடுவோம்“ என்று மிரட்டியிருக்கிறார். அதே நபர் திலகவதிக்கும் போன் செய்து மிரட்டியிருக்கிறார் என்கிற செய்தியை ஆகாஷ் சொல்கிறார். அத்தோடு மட்டுமின்றி 3 நபர்கள் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. அவர்களை விசாரித்தால்  உண்மை வெளிவரும் என்று கூறியுள்ளார்.
  • முதல் தகவல் அறிக்கையில் உள்ள முரண்திலகவதியின் தாய்மாமன் மகேந்திரன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி மற்றும் கள விசாரணையில் கூறியது என்னவென்றால் திலகவதி தனக்கு போன் செய்ததாகவும் அவர் வீட்டிற்கு வந்தபோது வீடு வெளியே தாப்பாள் போட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் வீட்டிற்கு வரும்போது ‘ஆகாஷ் படியில் இருந்து இறங்கி ஓடினான்’ என்று வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது. ஆக முதல் தகவல் அறிக்கையில் பதியபட்டுள்ள விவரம் உண்மைக்கு புறம்பானது என்று தெளிவாகிறது. முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்ட விதத்தில் காவல்துறையின் உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.
  • ஆகாஷ் கைது மற்றும் ஒப்புதல் வாக்குமூலம்:  நாள் முழுவதும்  மாணவன் ஆகாஷ் தனது கிராமத்திலேயே இருந்தார் என்பதை அக்கிராம மக்கள் உறுதியாகக் கூறினார்கள். காவல் துறையின் விதிமுறைகளுக்கு முரணாக ஆகாஷின் ஒப்புதல் வாக்குமூலத்தை காணொளி எடுத்து வெளியிட்டுள்ளது காவல்துறை. அந்த காணொளியில் கூட கொலை நடந்த நேரம் குறித்து ஆகாஷ் இடம் விசாரிக்கும்போது அவர் தவறான நேரத்தையே கூறியுள்ளார். முதல் தகவல் அறிக்கையில் ஆகாஷை நேரில் கண்டதாக சொல்லப்பட்டிருப்பது புனையப்பட்ட செய்தியாக தெரிகிறது.
  • திலகவதி கொலையின் தடயங்கள்: திலகவதியைக் கொல்ல பயன்படுத்திய கத்தியை, ஆடைகளை, மோப்ப நாய்களை கொண்டும் சோதனை போன்ற முறைகளில்தான் உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிக்கமுடியும் அதை செய்யவில்லை. மாறாக ஆகாஷ் வாக்குமூலத்தில் கத்தியை கொல்லையில் வீசிவிட்டேன் என்று சொல்கிறான். அப்படி பார்த்தால் காவல்துறை அந்த கத்தியைத்தானே தேடி எடுத்திருக்க வேண்டும். அடுத்தநாள் ஆகாஷ் வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டு கரும்பு வெட்டும் பழைய கத்தியை எடுத்துச்செல்கிறது. என்பதிலிருந்தே இது பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று தெரிகிறது. காவல்துறை திட்டமிட்டு ஆகாஷை திலகவதி கொலைவழக்கில் இணைத்துள்ளது என்கிற சந்தேகத்தை அதிகரித்திருக்கிறது. கொலையின் உண்மையை மறைத்திட காவல்துறை விரைவாக செயல்பட்டிருக்கிறது.
  • திலகவதி கொலையை அரசியலாக்கிய பாமக- பாஜக: இக்கொலையை பயன்படுத்தி பாமக-பாஜக சாதிமதவெறி கூட்டத்தால் ‘நாடகக் காதல்‘ என திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு, விசிகவை வம்பிழுத்து தலித் மக்களுக்கு எதிரான வன்முறையாக மாற்றத் துடித்தது, பிற்படுத்தப்பட்ட சாதி சங்கங்களை அணிதிரட்ட முயற்சித்தார் டாக்டர் ராமதாசு, சண்முகம் போன்றவர்கள். சாதி மோதலை உண்டாக்கிட ஆகாஷ் பலியாக்கப்பட்டுள்ளார் என்றே தெரிகிறது.

கோரிக்கைகள

1.திலகவதி கொலையில் பல மர்மங்கள் இருக்கும் காரணத்தால் உண்மையை வெளிக்கொண்டுவர இக்கொலைவழக்கை சி.பி.சி.ஐ.டி (CB-CID)  விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்.

2.கொல்லப்பட்ட திலகவதியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டையும் வேலைவாய்ப்பையும் தமிழக அரசு வழங்கவேண்டும்.

3. திலகவதி கொலையின் உண்மைத் தன்மையை விசாரிக்காமலேயே குற்றம்சாட்டப்பட்ட ஆகாஷின்  வாக்குமூல வீடியோவை வெளியிட்ட காவல் அதிகாரிமீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4. அச்சத்தில் வாழும் ஆகாஷ் குடும்பம் மற்றும் பேரளையூர் கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

 5. பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுத்திட பெண்களுக்கான பாதுகாப்பை, சம உரிமையை                    உத்தரவாதம் செய்திட வழிவகை செய்ய வேண்டும். குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

6. அரசியல் ஆதாயத்திற்காக, பதவி நலனுக்காக மக்களை பிளவுபடுத்தி சாதி-மதவெறி மோதலை தூண்டிவிடும் சக்திகளை மக்கள் புறக்கணிக்கவேண்டும்.

 

 

கள ஆய்வுக்குழு சார்பாக

ரமணி

பொதுச்செயலாளர், சாதி ஒழிப்பு முன்னணி

17.5.2019

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW