கம்யூனிஸ்ட்கள் முரணற்ற சனநாயகத்திற்கு நிற்க வேண்டும்! தோழர் முத்தரசனின் பொன்பரப்பி ஆர்ப்பாட்ட உரை மீதான விமர்சனம்

08 May 2019

ஏப்ரல் 24 அன்று சென்னையில் பொன்பரப்பி வன்முறையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனின் உரை விமர்சனத்திற்கு உரியது. அவ்வுரையில் வாக்களிக்க விடாமல் தலித் மக்களை தடுத்தது சனநாயக மறுப்பு என்று சொல்வதோடு பொத்தாம் பொதுவாக ‘வன்முறை’ என்பது சனநாயக மறுப்பு என்று சொல்லி, ”நக்சலைட்கள் சனநாயகப் பாதையைக் கைவிட்டு வன்முறைப் பாதையில் செல்கிறார்கள். எனவே, அவ்வமைப்பு தடை செய்யப்படுகிறது, நக்சலைகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். அவ்வமைப்பு தடை செய்யப்பட்டிருப்பது சரியென்று சொன்னால் தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி தடைசெய்யப்பட வேண்டும். ஏனென்றால் சனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத கட்சியை அனுமதிக்க கூடாது” என்று தோழர் பேசுகிறார். (https://www.youtube.com/watch?v=6NscIsr_Qr8)

சாறத்தில் பா.ம.க. வின் சனநாயக மறுப்பு சாதி ஆதிக்க அரசியலுக்கு எடுத்துக்காட்டாக நக்சலைட்களைச் சுட்டிக் காட்டுகிறார். நக்சலைட்டுகள் ஆளும்வர்க்கத்திற்கு எதிரானப் போராட்டத்தில் நிறைய விலை கொடுத்தவர்கள். சிறைவாசம், தலைமறைவு வாழ்க்கை, உயிர்த்தியாகம் என காயங்களைs சுமப்பவர்கள். மாவோயிஸ்ட்களுக்கு எதிரான அரசின் பச்சை வேட்டை நடவடிக்கையை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுத்து வருவதை தோழர் மறந்துவிட்டாரா? 1952 க்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தல் அமைப்பு முறைக்கு வெளியே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பதை மறந்துவிட்டாரா? அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் தோழர் சீனிவாசராவ் பணி தொடங்கிய போது கட்சித் தடை செய்யப்பட்டிருந்தது என்பதை மறந்துவிட்டாரா? ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் வர்க்கத்தால் தடைசெய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி அதனுடன்  பா.ம.க. போன்ற ஒரு கட்சியை எப்படி இணைத்துப் பேச முடிகிறது? அதுவும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அப்படி பேசலாமா?

நக்சலைட்களின் அரசியல் நாடாளுமன்றப் பதவி, சொத்து சேர்ப்பதற்கான அரசியல் அல்ல. பா.ம.க. வினுடையதோ நாடாளுமன்றப் பதவி அரசியலுக்காக மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காயக் கூடிய, உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கக் கூடிய அரசியல். அது அதன் முதலாவது அர்த்தத்திலேயே ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்யக் கூடியது. பா.ம.க. அண்மைக் காலமாக முன்னெடுத்து வரும் அரசியலுக்கு அரசு இயந்திரத்தினுடைய சத்தமில்லாத ஆதரவு உண்டு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பா.ம.க. வையும் நக்சலைட்டுகளையும் ஒப்பிட்டது முற்றிலும் தவறானது.

நாடாளுமன்ற சனநாயகத்தை நக்சலைட்கள் ஏற்கவில்லை என்பதும் பா.ம.க. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியதும் ஒன்றா? வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவது, தேர்தல் நேரத்தில் வன்முறைகளில் ஈடுபடுவது, வாக்குக்கு பணம் கொடுப்பது என்பவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கும் கட்சிகள் தானே தி.மு.க.வும் அதிமுகவும். சி.பி.ஐ.(எம்) மும், சி.பி.ஐ.யையும் கூட தாம் வலுவாக இருக்கும் மாநிலங்களில் கள்ள வாக்குகள் போடாத கட்சிகளா? பொன்பரப்பி விவகாரத்தில் பா.ம.க.வின் மிக குறிப்பானப் பிரச்சனை தலித் எதிர்ப்பு அரசியல். இந்த மையக் கண்ணியை விட்டுவிட்டு சுற்றிசுற்றி வருவதால்தான் பொருத்தமற்ற எடுத்துக்காட்டுகளை முன் வைக்க நேர்கிறது.

முன்பொரு முறை பேராசிரியரும் தோழருமான அருணன் ’காவிநக்சல்’ என்று பேசி கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். இப்போது தோழர் முத்தரசனோ பா.ம.க.வையும் நக்சலைட்டுகளையும் ஒப்பிட்டுள்ளார். ஆழ்மனத்தில் நக்சலைட்டுகள் பற்றி கொண்டிருக்கும் வன்மமும் எதிர்ப்புணர்ச்சியும் இப்படியெல்லாம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அளப்பரிய ஈகத்துடன் களத்தில் நிற்கும் மார்க்சிய லெனினிய நீரோட்டத்தை சி.பி.ஐ.யும் சி.பி.ஐ(எம்) மும் சனநாயக ஆற்றல்களாககூட கருதிப் பார்ப்பதில்லை,  சாதியவாத மதவாத ஆற்றல்களோடு ஒப்பிடுகின்றன. இந்த முரண்பாடான சனநாயக கண்ணோட்டம் பிற்போக்காளர்களுக்கே சேவை செய்வதாக முடியும் என்பதற்கு தோழர் முத்தரசனின் பொன்பரப்பிப் பேச்சு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இரண்டாவதாக, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக சரியான தருணத்தை எல்லாம் விட்டுவிட்டு இப்போது வந்து வாயளப்பதாகவே தோழரின் பேச்சு அமைந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக மிக ஆபத்தான ஓர் அரசியலைப் பாமக முன்னெடுத்துவருகிறது. பொன்பரப்பி தான் பா.ம.க. வால் தலைமை தாங்கப்பட்ட முதல் நிகழ்வா? இத்தனை ஆண்டுகளில் பா.ம.க. வை அம்பலப்படுத்தும் பொருட்டு ஏதேனும் செயல்திட்டமும் நடைமுறைப்படுத்தலும் நாடாளுமன்றக் கம்யூனிஸ்ட்களிடம் இருந்ததா? விடுதலை சிறுத்தைகள் போட்டுத் தந்த மேடையில் உரைவீச்சுகள் நிகழ்த்துவதால் பா.ம.க. வின் அரசியலை முறியடித்துவிட முடியுமா?

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கிட்டதட்ட பா.ம.க. வைப் போலவே தலித் எதிர்ப்பு அரசியலை அவ்வப்போது மேற்கொள்ளும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும் பங்குபெற்றிருப்பதை மறந்துவிட்டாரா?. அந்தக் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க. கூட்டணியில் இருந்ததோடு சாதி கலப்பு திருமணங்களை எதிர்த்தும் சாதி ஆணவக் கொலைகளைக் கண்டிக்காமலும் அரசியல் செய்வதுதானே. அக்கட்சி சாதி ஆணவக் கொலைக்கு எதிரான தனிச்சட்டத்தை எதிர்க்கும் கட்சி. சாதி ஆணவக் கொலையால் துணையை இழந்த கெளசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து அவர் தற்போது பணிபுரியும் துறையில் நீடித்தால் இராணுவ இரசிகயங்களுக்கு பாதுகாப்பற்றுப் போய்விடும், அவரை அத்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்று அறிக்கைவிட்டவர்தான் கொங்கு ஈஸ்வரன்.

இதே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்துள்ள இந்திய ஜனநாயக கட்சியும் சாதிக் கட்சி தானே. இவையெல்லாம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குள்ளேயே இருக்கும் முரண்பாடுகளல்லவா?

தலித் எதிர்ப்பு அரசியல் செய்யும் ஆற்றல்களை அம்பலப்படுத்தி உறுதியாக நிற்கும் பொழுது தேர்தல் நேரத்திலான சந்தர்ப்பவாதக் கூட்டணிகளுக்கு இடம் இல்லாமல் போய்விடும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமே இலக்காக்கி அதன் வழியாகவே எல்லாவற்றையும் செய்து காட்ட முடியும் என்ற கண்ணோட்டம் தான் பிரச்சனை. வர்க்கங்களுக்கு இடையிலான இடைவிடாதப் போராட்டத்தில் சமூகம் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். சமூகத்தின் வளர்ச்சி மட்டம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்திலான செயலுத்திகள் தேவை. அதை விரைவுப்படுத்துவதற்கும் உந்தித் தள்ளுவதற்குமே அரசியல் அதிகாரம் தேவை. நாடாளுமன்றத் தேர்தல் சந்தர்ப்பவாத அணுகுமுறை கம்யூனிஸ்ட்களைக் கேலிக்குரியவர்களாக காட்சிப் படுத்தியிருக்கிறது. வன்னியர்களிடையே உள்ள உழைக்கும் மக்களிடமிருந்து பா.ம.க.வைத் தனிமைப்படுத்துவதைக் குறிவைத்து செயலாற்ற வேண்டும். பா.ம.க. வோ அதை ஒத்த ஆற்றல்களோ சாதி வெறியைத் தூண்டிவிட்டு பலன்பெற முடியாத அளவுக்கு சமூகத்தின் சனநாயக மட்டம் உயர்த்தப்பட வேண்டும்.

  • செந்தில், இளந்தமிழகம்

 

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW