பொன்பரப்பி தலித் மக்கள் மீதான தாக்குதலும் அரசியல் பின்புலமும் –   கள ஆய்வறிக்கை

03 May 2019

 

கடந்த 18.4.2019 அன்று அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வசித்துவரும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள்மீது 70க்கும் மேற்பட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் சாதிவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள 60க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். சிதம்பரம் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இந்த வன்முறைதாக்குதல் நடந்திருக்கிறது. இந்த சம்பவத்தின் காணொளி பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான இத்தாக்குதல் என்ன நோக்கத்திற்காக நடத்தப்பட்டது? வெறும் தேர்தல் சண்டையா? கட்சிகளுக்குள் நடந்த சண்டையா?, இதற்குப் பின்னால் இருந்தவர்கள் யார்? இதற்கான சமூகப் பொருளாதார நிலைமைகள் என்ன? என்ற கேள்விகளுடன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உண்மை நிலவரத்தை அறிந்திட சாதி ஒழிப்பு முன்னணி, தமிழ்த்தேச மக்கள் முன்னணி அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் ரமணி, செந்தில், வழக்கறிஞர் சகிலா, ஜெயக்குமார் ஆகியோர் 26.4.2019 அன்று அப்பகுதிக்குச் சென்றோம். தகவலை சேகரிக்கவும் மக்களைச் சந்திக்கவும் பெரும் உதவியாக இருந்தவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த திராவிடர் கழகம் அமைப்பின் மண்டலப் பொறுப்பாளர் தோழர் மணிவண்ணன், தோழர்கள் மேகராஜன், கலைவாணன் மற்றும் பல தோழர்கள்.

பொன்பரப்பி கிராமம் ஓர் பார்வை

பழைய தென்னாற்காடு மாவட்டம் இன்று அரியலூர் மாவட்டத்தின் பொன்பரப்பி பகுதி என்பது முழுக்கமுழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த பகுதி. 70களில் வெடித்த நக்சல்பாரி அரசியல் கோலோச்சிய பகுதிகளில் இந்த பகுதியும் ஒன்று. கூலி உயர்வுப் போராட்டம் அறுவடை இயக்கம், இரட்டைக் குவளை ஒழிப்பு, கந்துவட்டி கொடுமை ஒழிப்பு என பிற்போக்கு நிலவுடமை சமூகத்தின் அனைத்து கொடூர சுரண்டலுக்கும் எதிராக களம்கண்ட மண் இது. இங்கிருந்து உருவானவர்கள்தான் தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், கணேசன், காளியப்பன், சர்ச்சில், வடமலை உள்ளிட்டவர்கள். இதுபோல் எண்ணற்ற தியாகிகளைப் புரட்சிகர அரசியலுக்கு வழங்கிய மண் இது.

பொன்பரப்பி அருகிலிருக்கும் குடிகாடு கிராமம்தான் தோழர் தமிழரசனின் சொந்த ஊர். சாதி ஒழிப்பையும், தமிழ்த்தேசிய விடுதலை அரசியலையும் உயர்த்திப் பிடித்து மீன்சுருட்டியில் நடந்த மாநாட்டிற்கு பொன்பரப்பி பகுதி முக்கியத் தளமாக இருந்தது. அதன் பிறகும்கூட தமிழ்நாடு விடுதலைப் படையின் அரசியல் செல்வாக்குமிக்க பகுதியாகவே நீண்டகாலம் இருந்துவந்தது. தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் ஒற்றுமைக்கும் கூட்டு போராட்டங்களுக்கும் முன் மாதிரியான பகுதியாக இது விளங்கியது. தமிழரசன் மறைவிற்குப் பிறகு தமிழ்நாடு விடுதலைப்படை அமைப்பு, அரசியல் ரீதியாக ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக புரட்சிகர அரசியல் இங்கு தொய்வடைந்தது. அதேவேளையில் அரசு, காவல்துறை பல்வேறு வடிவங்களில் எதிர்ப்புரட்சிகர அரசியலையும் பிழைப்புவாத கும்பல்களையும் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. ஒரு காலத்தில் அரசியல் சக்தியாக செயல்பட்டவர்கள்கூட இன்று சராசரியான சீரழிவுக்கு ஆளாகிவிட்டனர். இந்த பலவீனங்களின் மீதுதான் சாதிய அரசியல் சக்திகளும் பிழைப்புவாதிகளும் இந்து முன்னணி போன்ற பாசிச மதவெறிக் கும்பல்களும் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.

அதாவது பாசக ஆட்சியில் அமர்ந்ததற்குப் பிறகு அதிமுகவின் பிற்போக்கு கும்பலோடு இந்துத்துவப் பாசிசத்தை நிலைநாட்ட சாதிய சக்திகள் ஓரணியில் திரட்டப்படுவது நாம் அறிந்ததே. அந்த வகையில்தான் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாசக, பாமக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் கூட்டணி என்பது வெறும் தேர்தலில் வெற்றிபெறுவது என்ற இலக்கை மட்டும் கொண்டதல்ல. மாறாக, மார்க்சிய லெனினிய புரட்சிகர அரசியலையும் தமிழ்த்தேச விடுதலைக்கான அரசியலையும், சாதி ஒழிப்பு, சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமை, பழங்குடிகள் நலன் சார்ந்த தளங்களில் செயல்படும் அனைத்து சனநாயக அரசியல் அமைப்புகளையும் மக்களிடமிருந்து அகற்றுவது, அவ்விடத்தில் சாதி, காவி மதவெறி அரசியலை இட்டு நிரப்புவது, வர்க்க ஒற்றுமையை சீர்குலைப்பது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடையில் இயல்பாக இருக்கின்ற ஒற்றுமையை, பிணைப்பைத்  துண்டாடுவது அல்லது சீர்குலைப்பது என்ற அரசியல் இலக்கை நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. பொன்பரப்பி சம்பவத்திலும் இக்கூறுகள் ஆழமாகத் தெரிகிறது.

பொன்பரப்பி பகுதியில் இயக்கங்கள் முன்னெடுத்த போராட்டங்களில் சில.

மீன்பிடி உரிமை  போராட்டம்

1980களில் பொன்பரப்பி, மீன்சுருட்டி பகுதிகளில் நிலவுடமையாளர்கள், பாசன உரிமையாளர்கள் முதலிலும் பிறகு பிற்படுத்தப்பட்டவர்கள் பொது ஏரியில், மீன்பிடிக்க உரிமைப் பெற்றிருந்தனர். இவர்கள் பிடித்ததுபோக மீதமுள்ளவற்றை இறுதியாக தலித மக்கள் பிடிக்கமுடியும். இந்த முறைக்கு எதிராக அப்போது புரட்சிகர இயக்கத்தின் தலைமையில் அனைத்துத் தரப்பு மக்களும் பொதுவில் ஏரி, குளத்தில் இறங்கி மீன்பிடிப்பது, அனைவருக்கும் பகிர்ந்தளிப்பது என்ற சமத்துவ நிலையை நிலைநாட்டியது. மேலும் மீன்பிடிக்க முடியாத முதியவர்களுக்கு கொடுத்து உதவுவது  என்ற பண்பாட்டை உருவாக்கியது.

அறுவடை இயக்கம்

அதேபோல் நெல் அறுவடையின்போது தரமான நெல்லை நிலவுடமையாளர்கள் எடுத்துக்கொள்வதும், தரம் குறைந்த கருக்கா நெல்லையே தலித் மக்களுக்கு கூலியாக வழங்கும் முறை இருந்தது. இதற்கு எதிராக “அறுவடை இயக்கம்“ என்ற பெயரில் தோழர் கலியபெருமாள் தலைமையில் கூலி, ஏழை விவசாயிகளை அணிதிரட்டி அவர்களுக்கான நெல்லை அவர்கள் அறுவடை செய்து கொள்வது, அதன்பிறகு நிலவுடமையாளர்களுக்கு அறுவடை செய்துகொடுப்பது என்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “அறுவடை இயக்கம்“ இது போன்ற பல போராட்டங்களை முன்னின்று நடத்தியதில் தலித் அல்லாத இதர சமூகத்தை சார்ந்தவர்களே அதிகம் இருந்திருக்கிறார்கள், உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களின் தலைமையை தலித் மக்களும் அரசியல் ரீதியான வர்க்க கண்ணோட்டத்ததில் ஏற்றுக்கொண்டனர். அப்பொழுதெல்லாம் எங்கும் சாதி கலவரங்கள், சாதிய மோதல்கள் நடந்ததில்லை. மாறாக, உழைக்கும் மக்களுக்கான ஒற்றுமையைப், புரட்சிகர அரசியல் உயர்த்திப் பிடித்தது.

பொன்பரப்பி கிராமம்

அரியலூர்  மாவட்டம் செந்துறை அருகே அமைந்திருக்கிறது பொன்பரப்பி கிராமம். பொன்பரப்பி கிராமத்தில் வன்னியர் சமூக மக்கள் 3000 குடும்பத்தினர், முதலியார்  சமூக மக்கள் 2000 குடும்பத்தினர். பறையர் சமூக மக்கள் 500 குடும்பத்தினர் என மேற்படி சமூகத்தினர் கணிசமானத் தொகையில் வசித்துவருகிறார்கள். பொன்பரப்பி கிராமம் என்பது, பொன்பரப்பி குடிகாடு, பொன்பரப்பி சிறுகளத்தூர், பொன்பரப்பி என மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது. பொன்பரப்பி கிராமத்திற்கு வெளியே மிகப்பெரிய அளவிலான தீச்சட்டி நினைவுச்சின்னம் வைத்துள்ளனர். ஆனால் மூன்று பகுதியிலுமே கட்சிக் கொடிகம்பங்கள் கிடையாது. ஊர் பஞ்சாயத்து கட்டுப்பாட்டின்படி வன்னியர் சங்கக் கொடி தவிர, வேறு கட்சிக்கொடிகள் நடுவதற்கு அங்கு அனுமதி கிடையாதாம். அன்றாட வாழ்க்கைத் தேவைக்கு பொன்பரப்பி மையப்பகுதிக்குத்தான் பறையர் சமூக மக்கள் வரவேண்டும். சிதம்பரம் தொகுதியில் பறையர், முதலியார் சமூக மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே அங்கு வெற்றி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பறையர் சமூக மக்கள் நகரவாழ்க்கையோடு பிணைந்துள்ளனர்.

அரியலூர் முழுவதுமே சிமெண்ட் தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு நீர், நில வளம் பாதிக்கப்பட்டுள்ளது; அந்த மாவட்டமே மாசுபட்டு வானம் பார்த்த வறண்ட பூமியாகக் காட்சியளிக்கிறது. கிட்டதட்ட 13 சிமெண்ட் ஆலைகள் அங்கு இயங்கிவருகின்றன. அவற்றில் 8 தனியார் சிமெண்ட் ஆலைகளும், 150 சுண்ணாம்புக் கல் சுரங்கங்களும் இருக்கின்றன. கால்சியம் அளவு பி.பி.எம் 650 அளவிற்கு நீரில் கலந்திருப்பதால் அப்பகுதியிலுள்ள நீர் குடிப்பதற்கு தகுதியற்றிருக்கிறதென ஆய்வுகள் சொல்கின்றன. இப்படி சுற்றுச்சூழல் மாசுபட்டுக் கிடப்பதால் அப்பகுதியில் வாழும் மக்களில் கணிசமானோர் நீரிழிவுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுவருகிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் சிமெண்ட் ஆலைகளின் சரக்கு லாரிகளால் ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே 5,382 பேர் எனக் கூறுகிறார்கள். நாங்கள் கள ஆய்வுக்கு சென்ற 26.4.2019 அன்றுகூட, இரவு 10 மணியளவில் கடையகுடிகாடு என்கிற கிராமத்தில் மாட்டுவண்டிமீது சிமெண்ட் ஆலையில் இருந்துவந்த சரக்கு லாரி மோதியதால் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இரு விவசாயிகள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்கள். இரு மாடுகளும் அதே இடத்தில் இறந்துவிட்டன. இதனால் கொந்தளித்துப் போயிருந்த மக்கள் சரக்கு லாரியை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள். காவல்துறை அங்கு குவிக்கப்பட்டிருந்தது என அறிந்தோம்.  அண்மைக்காலமாக ஆலைக்கு எதிரானப் போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. சிமெண்ட் ஆலை நிர்வாகம் உருவாக்கி வைத்துள்ள அடியாட்கள் படை அங்கு செல்வாக்கு செலுத்துகிறது. ஆலைகளுக்கு எதிராக மக்கள் போராடிவிடக்கூடாது என்பதற்காகவே ஆலை நிர்வாகம் கூலிப்படைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறது என அரசியல் வட்டாரத்தில் கூறினார்கள். இந்தப் பின்புலத்தில் சுகாதாரமான, தரமான வாழ்க்கைக்கே அப்பகுதி மக்கள் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். வளர்ச்சி, வல்லரசு என பீற்றிக்கொள்ளும் ஆட்சியாளர்களின் இலட்சணத்தை அப்பகுதிக்கு சென்றதுமே பார்க்க முடிகிறது.

அரியலுர் பொன்பரப்பி முழுக்க முந்திரிக்காடுகள் அடர்ந்து காணப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரமும் இதனை மையமிட்டே இருக்கிறது. பறையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள். படித்த அரசு  ஊழியர்கள் மிகவும் குறைவு. அந்த ஊர் இளைஞர்கள் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைசெய்துவருகிறார்கள். வன்னியர் சமூக மக்களில் ஒருபகுதியினரும் கோயம்பேட்டில் பணிபுரிகிறார்கள். பறையர் மக்களுக்கு சொந்த நிலம் இல்லை. ஆண்கள், பெண்களில் சிறு பகுதியினர் வன்னியர் மக்களிடம் கூலி வேலை செய்துவருகிறார்கள். நிலமுள்ள மக்களைத்தவிர மற்றவர்கள் வேறு தொழிலை செய்கிறார்கள். வன்னியர் சமூக மக்கள் உள்ள ஊர்ப்பகுதியில்தான் பள்ளி, ரேசன் கடை, பேருந்துநிறுத்தம், தண்ணீர் தொட்டி, மின்சாரப் பெட்டி என அனைத்தும் இருப்பதால் பறையர் மக்கள் அந்தப்பகுதிக்குள் அன்றாடம் சென்று வருகின்ற கட்டாய வாழ்க்கை நிலைமை இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதியினர் வாழும் ஊர்ப்பகுதியில் அரசு நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இருப்பதும். அதைப் பயன்படுத்துவதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் அங்கு செல்வதும் சாதிய சமூகத்தில் இயல்பான ஒன்றாக இருக்கிறது.  பொன்பரப்பி கிராமத்தின் நிலையும் இதுதான். பறையர் சமூக மக்கள் வாழும் பகுதிக்குள்ளே 8 ஆம் வகுப்பு வரை படிப்பதற்கான பள்ளி ஒன்று இருக்கிறது. ஊரில் உள்ள பள்ளிக்கு செல்வதைவிட கீழத் தெரு மக்களுக்கு இந்த பள்ளிதான் அருகாமையில் இருப்பதாகும். ஆயினும் இப்பள்ளி பறையர் சமூக மக்கள் வாழும் பகுதிக்குள் இருப்பதால் அதில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமே படிக்கின்றன. 12 ஆம் வகுப்புவரை உள்ள மேல்நிலைப்பள்ளி ஊர்ப்பகுதியில்தான் இருக்கின்றது. இதற்கு முன்பு வன்னியர், பறையர் மக்களிடையே பெரிய அளவில் மோதலோ சண்டையோ வந்ததில்லை. அப்பகுதியில் ஆண்ட பண்ணை என்கிற பண்ணையடிமை முறையின் கடைசி சுவடுகள் இருந்துவருகின்றன.

”வன்னியர் சமூகத்தில் உள்ள இருநூறு குடும்பங்கள் என்ற விதத்தில் அவர்களின் நல்லது கெட்டதுக்கு சென்று மேளம் அடிப்பது, சடங்கு சம்பிரதாயங்களில் ஒரு பகுதியாக இருப்பதற்கென்று பறையர் சமூகத்தில் சுமார் 5 குடும்பங்கள் (ஒரு கொத்து) என்ற அளவில் இந்த ஆண்டை முறை நீடிக்கிறது. காலனியில் வாழும் பறையர்களில் ஐம்பது வயதைக் கடந்தோர் இன்னும் இந்த உறவுகளில் தொடர்ந்து வருகின்றனர்.  இதுவரை எந்த சண்டை வந்தாலும் அல்லது இன்னும் குறிப்பாக பறையர் சமூகத்தை சேர்ந்த எவரும் தாக்கப்பட்டாலும் இந்த ஆண்டை முறைக்கு உள்ளால் அவரை அழைத்துப்பேசி ’சமாதானம்’ செய்து கொள்ளப்படும் என சொல்லப்படுகிறது. பொன்பரப்பி தாக்குதல், போராட்டம், வழக்குகள் போன்றவையாவும் இதுவே முதன்முறை என்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாகத்தான் ’இந்துமுன்னணி’ அங்கு செயல்படத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். இந்துமுன்னணி, பாமக பெரியளவில் வலுவாக இல்லை. அதற்கான அடித்தளத்தை உருவாக்கிடவே இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கிறது. பொன்பரப்பி கீழத் தெருவில் பிறந்து வளர்ந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ராஜசேகரன் தலைமையில் இவ்வமைப்பு அங்கு அடையாளமாகிறது. அமைப்பு என்பதைவிட ஓர் உதிரிக்கும்பல் சிறிய அளவில் செயல்பட தொடங்கியிருக்கிறது. இவ்வமைப்பு தேர்தலில் போட்டியிடாத ஒன்று என்பதாலும் கோயில் திருவிழா போன்றவற்றில் ஈடுபடும் ஒன்று என்பதாக தன்னைக் காட்டிக் கொள்வதாலும் தேர்தல் கட்சிகள் இவ்வமைப்பின் செயல்பாடுகளைக் கண்டுகொள்ளாமல் இருத்துள்ளன என்றும் இவற்றை நுட்பமாக கவனிக்கக் கூடிய முற்போக்கு அரசியல் ஆற்றல்கள் சொன்னார்கள்.

தேர்தலுக்கு முன்பு

கடந்த 18.4.2019 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பே ஒரு வாரமாக அப்பகுதியில் கட்சிகளுக்கிடையே சச்சரவுகள் இருந்து வந்திருக்கின்றன. குறிப்பாக கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பி.ஆர்.பாண்டியன். வன்னியர், பறையர் ஆகிய இரு சமூக மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவராக அறியப்படுகிறார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிதம்பரம் தொகுதி வேட்பாளராகப்  போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பானை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வன்னியர் மக்களிடம் பிரச்சாரம் செய்துள்ளார். பிரச்சார நேரத்தில், திமுக பிரமுகர் பி.ஆர்.பாண்டியன் ஊர்ப் பகுதிக்குள் பானை சின்னத்தை வரைந்துகொண்டிருந்தபோது பாமக வைச் சேர்ந்த சங்கர் என்பவர், “இந்த ஊருக்குள்ள எப்படி பானையை வரையலாம், வரையக்கூடாது, நீ வன்னியனுக்குப் பொறந்தியா, பறையனுக்குப் பொறந்தியா“ என பாண்டியனிடம் சண்டையிட்டிருக்கிறார். அதற்கு அவர், சங்கரைக் கடுமையாகத் திட்டியிருக்கிறார். கைகலப்பு ஆகிவிடுவோ என்று இதை பார்த்துக் கொண்டிருந்தோர் கருதும் அளவுக்கு கடுமையான வாய்ச்சண்டை முற்றியுள்ளது. அதேபோல் இலங்கைச் சேரி என்ற கிராமத்திற்குள் திமுக வை சேர்ந்த வன்னியர் ஒருவர் பானை சின்னத்தை வரைந்திருக்கிறார். அவரை அதே கிராமத்திலுள்ள பாமகவைச் சேர்ந்த இருவர்  இரவு 1 மணியளவில் எழுப்பி வெளியே வரவைத்து அடித்திருக்கிறார்கள். பானை சின்னத்தையும் அழித்திருக்கிறார்கள். அதனைத் தட்டிக்கேட்க வந்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மண்டலப்பொறுப்பாளர் தோழர் மணிவண்ணனையும் அடித்துள்ளனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள அமமுக நிர்வாகி செந்தில் (வன்னியர்) என்பவர் சுவரில் வரையப்பட்டிருந்த இரட்டை இலையை அழித்து அங்கே பரிசு பெட்டகம் சின்னத்தை வரைந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அதிமுக நிர்வாகி அறிவுக்கும்  (வன்னியர்) அமமுக செந்திலுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை கைகலப்பு வரை சென்றிருக்கிறது. இன்னும் பல கிராமங்களில் பானை சின்னத்தை வரையவிடாமல் செய்திருக்கிறார்கள் என்பதை அங்குள்ள அரசியல் ஆற்றல்களிடம் பேசும்போது அறிய நேர்ந்தது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாசும் இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணியும் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் தொல்.திருமாவளவனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் கூடுதல் முனைப்புக் காட்டியதும் விசிக வெற்றிப் பெற்றுவிட்டால் வன்னியர் சமூகப் பெண்களுக்கு பாதுகாப்பின்றி போய்விடும் என்றும் வன்னிய சமூக மக்களிடையே பரப்புரை மேற்கொண்டது நாடறிந்த உண்மை. இந்தப் பின்புலத்தில், கட்சி வேறுபாடுகளைக் கடந்து வன்னியர் சமூக மக்கள் சாதியாக இணைந்து தொல்.திருமாவளவனைத் தோற்கடிப்பதற்கு வாக்களிக்குமாறு பரப்புரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க. பிரமுகர் பி.ஆர். பாண்டியன் கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட்டது பா.ம.க., அ.தி.மு.க.வில் நிர்வாகிகளாக உள்ள வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு எரிச்சலூட்டியிருக்கிறது. இந்த எரிச்சல் தேர்தல் நாளுக்கு முன்பே புகையத் தொடங்கிவிட்டது. தேர்தல் நாளன்று ஏதாவது வன்முறை வெடிக்க வாய்ப்புண்டு என்று தேர்தல் நாளுக்கு முந்தைய நாள் மாலையே திமுகப் பிரமுகர் பி.ஆர். பாண்டியன் சொல்லியுள்ளதாக அறிகிறோம். எனவே அவர் பறையர் சமூக மக்களிடம் காலையிலேயே வந்து வாக்களித்துவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் நாள்

18.4.2019 அன்று காலையிலேயே பறையர் சமூகத்தினரும் வன்னியர் சமூக மக்களும் கணிசமாக வாக்களித்துள்ளனர். தலித் பகுதியில் உள்ள மொத்த வாக்குகளான 600 இல் சுமார் 450 வாக்குகள் மதியம் ஒரு மணிக்குள்ளேயே போடப்பட்டுவிட்டதாக அம்மக்கள் கூறினார்கள். பறையர் சமூக மக்களில் உள்ள அதிமுகவினர் உள்ளிட்ட மாறுபட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும்கூட பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்ததாக சொல்லப்படுகிறது.

பூத் அருகே நடந்த சம்பவம்:

சுமார் 12 மணி – .வாக்குச்சாவடி உள்ள பகுதிக்கும் தலித் மக்கள் உள்ள பகுதிக்கும் கிட்டதட்ட 1 கி. மீட்டர் தூரம். வாக்குசாவடி அமைந்துள்ள பகுதி முழுவதும் வன்னியர், முதலியார் சமூக மக்கள் படர்ந்து வாழும் பகுதி. பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வளவு எளிதில் ஊர்ப் பகுதிக்குள் வம்பிழுத்துவிட்டு தங்கள் பகுதிக்கு திரும்பி வந்துவிடமுடியாது. ’நாங்கள் உயிரோடு திரும்பி வர முடியாது’ என்று மிக யதார்த்தமாக ஒன்றுக்கும் மேற்பட்டோர் சொல்லக் கேட்டோம். வாக்குசாவடி பகுதிக்குள் கைகலப்பு எதுவும் நடக்கவில்லை என்பதை அந்தப்பகுதி வன்னியர் தரப்பு மக்களும் கூறினார்கள். வாக்குசாவடிக்கு மிக அருகில் குடியிருக்கும் பாட்டி ஒருவரும் அதனை உறுதிப்படுத்தினார். வாக்குசாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து சிறிது தூரத்தில் ’நான்கு முக்கு ரோட்டில்’ திமுகப் பிரமுகர் பி.ஆர். பாண்டியன் அமர்ந்திருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் தெரு முதலியார் சமூகம் உள்ள தெரு. பாமகவை சேர்ந்த சங்கர் மற்றும் இந்துமுன்னணியினர் சிலரும், அதிமுகவினர் சிலரும் வீட்டிலிருந்து எடுத்துவந்த ஒரு பானையை அவர் முன்பு கீழேபோட்டு உடைத்துள்ளனர், வம்பிழுத்துள்ளனர். காவல்துறையினரும் இன்னும் சிலரும் இதை தடுத்து அவர்களை துரத்திவிடுகிறார்கள். பிரச்சனை செய்யும் நோக்கத்தில் இவர்கள் செயல்படுவதை  உணர்ந்த திமுக நிர்வாகி பி.ஆர்.பாண்டியன் அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

அடுத்து சற்றுதூரத்தில் மீண்டும் ஒரு பானையைப் போட்டு உடைக்கிறது அந்த கும்பல். அங்கேயும் யாரும் தலையிடவில்லை. சண்டை எதுவும் நடக்கவில்லை.

தலித் மக்கள் பகுதியில் நடந்த சம்பவங்கள்:

இதைத் தொடர்ந்து அந்த கும்பல் பொன்பரப்பி தலித் மக்கள் வாழும் பகுதிக்கு வருகிறது. அப்பொழுது பகல் 2 மணி.  இந்துமுன்னணியைச் சேர்ந்த கனி, பாமகவைச சேர்ந்த சங்கர் தலைமையில் 6 பேர் கொண்ட கும்பல் தலித் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு நேராக இரண்டு பானைகளை சாலையில் போட்டு உடைத்துள்ளனர். உடைத்துவிட்டு காலனியின் நுழைவுவாயிலில் கட்டப்பட்டுள்ள விசிக பேனரை கிழித்து, கொடிக்கம்பத்தை அடித்து உடைக்கின்றனர். அருகில் இருந்த வீட்டையும் அடிக்கிறார்கள். அனைவருமே குடிபோதையில் இருக்கிறார்கள். சாதியை சொல்லி அசிங்கமாக திட்டுகிறார்கள். அந்த நேரத்தில்தான், ”எங்கள் பகுதிக்கே வந்து எங்கள் பேனரை, பானையை, கொடியை  உடைக்கிறீர்களா?’ என்று குணசீலன் என்பவர் கேட்டிருக்கிறார். இவர் விசிக வைச் சேர்ந்தவர். உடனே அவரை அடித்திருக்கிறது அந்த கும்பல். ஆத்திரமடைந்த அவரும் இன்னும் சில இளைஞர்களும் சேர்ந்து ஊருக்குள் நுழைந்து அடித்தவர்களை திருப்பி அடித்திருக்கிறார்கள். தலையில் அடிபட்டுக் காட்டப்படும் பெரியவர் இந்த கும்பலில் வந்தவர்தான். அந்தப் பெரியவரும் அதிகளவு போதையில் இருந்திருக்கிறார். அவர் ஓர் இளைஞனைக் கட்டையால் அடித்துக் கீழே தள்ளிவிட்டுள்ளார். அப்போது போதையில் தடுமாறி அவரும் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த அந்த இளைஞன் பெரியவரின் கையில் இருந்த கட்டையைப் பிடுங்கி அந்தப் பெரியவரை அடித்திருக்கிறார். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்துள்ள அந்த பெரியவரின் தலையில் இருந்து இரத்தம் கொட்டியுள்ளது.

காவல்துறையைக் கண்டவுடன் குடிபோதையில் கண்முன் தெரியாமல் ஓடி இடறிவிழுந்ததில் ஒரு இளைஞருக்கு கம்பி நெஞ்சுப்பகுதிக்கு கீழே குத்தியுள்ளது. இதனால் அவருக்கு இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. வேடிக்கைப் பார்த்த காவல்துறையினர்தான் அந்தக் கம்பியை எடுத்துவிட்டிருக்கிறார்கள். அடிபட்ட இருவரையும் இருசக்கர வாகனங்களில் உட்கார வைத்து ஊர்ப் பிரதான சாலையில் அழைத்துச் சென்றபடி, ‘’காலனியில் பறையனுங்க அடிச்சுட்டாங்க, வாங்க‘ என்று ஆட்களைத் திரட்ட ஆரம்பிக்கிறார்கள். 20 பேர்கொண்ட இன்னொரு கும்பல் காலனிக்கு எதிரே உள்ள வன்னியர் மக்கள் பகுதி அருகே நின்றுகொண்டு லுங்கி, கோணிப்பைக்குள் வைத்துள்ள கல்லை எடுத்து தலித் மக்கள் பகுதிக்குள் எறிந்திருக்கிறார்கள். அதே கற்களை எடுத்து தலித் மக்களில் சிலர் திருப்பி எறிந்திருக்கிறார்கள். மக்களோ இரு தரப்பிலும் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். மாறிமாறி சிறிது நேரம் நடக்கிறது. இந்நேரத்திற்கெல்லாம் பொன்பரப்பி, குடிகாடு, அயனாகுளம் போன்ற கிராமங்களிலிருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு கம்பு உருட்டுக் கட்டைகளுடனும் இரும்புக் கம்பிகளுடனும் பெட்ரோல் கேன்களுடனும் சாக்குப் பையில் கற்களுடனும் கத்திக்கொண்டே தலித் பகுதிக்குள் நுழைந்திருக்கிறார்கள். சிறுவர்கள்கூட இதில் திரட்டப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களில் சாதிய வன்முறைகளுக்கு பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தும் உத்தியைப் பாமக கையாண்டுவருகிறது என்பதற்கு பொன்பரப்பியும் ஓர் உதாரணம். உண்மையில் இந்த தாக்குதல் நடக்கும் வீடியோவை எடுத்ததே தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் இருந்தவர்கள்தான். இந்த வீடியோவைப் பொய்யென்றோ, புனைவென்றோ பா.ம.க. உள்ளிட்ட எந்த சாராரும் மறுக்கவில்லை.   அந்த இடத்தில் மஞ்சள் சட்டையணிந்து வீடியோ எடுத்த நியூஸ் 18 பத்திரிகையாளர் ஒருவர் தலித் பகுதியைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார். அதில் அவருக்கு கண்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. தலித் பகுதியில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட வன்முறைக் கும்பல் இளைஞர்கள் சிலரைத் திட்டமிட்டு தேடி தாக்கியிருக்கிறது. இதற்கு காரணம் கலவரம் செய்யப்போகிறார்கள் என்பதற்கான அறிகுறி தெரியதெரிய வேகவேகமாக ஊர் பெரியவர்களை இருசக்கரவாகனத்தில் அழைத்துக்கொண்டுபோய் அந்த இளைஞர்கள் வாக்களிக்கச் செய்துள்ளனர். பறையர் சமூக மக்கள் வசிக்கும் நுழைவுப் பகுதியில் இருந்து கடைசிப் பகுதிவரை சென்று இக்கும்பல் வீடுகளைத் தாக்கியுள்ளது. இந்த தாக்குதல் நடக்கும் போது இளைஞர்கள் பலரும் முந்திரிக் காட்டுக்குள் சென்று ஓடி ஒளிந்துள்ளனர். பெரியவர்கள் மட்டுமே அங்கே இருந்துள்ளனர். ’நாங்கள் எந்த எதிர்வினை ஆற்றியிருந்தாலும் எங்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்’ என்று கவலையோடு ஒருவர் பகிர்ந்துகொண்டார். ’உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டோம், வீட்டைப் பூட்டி ஒளிந்து கொண்டோம்’ என்பதைத் தான் நாம் பேசியவர்களில் பலரும் சொன்னார்கள். காவல்துறையினர் வாகனத்தில் வந்து சேரும் வரை இத்தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதலைக் கேள்விப்பட்ட உடனேயே திமுக முன்னாள் எம்எல்ஏ சிவசங்கர் (வன்னியர்) பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். அவரை மிகவும் தரக்குறைவாக அவமானப்படுத்தும் வேலையை உள்ளூர் பாமகவினர் செய்துள்ளனர்.

பாதிப்பும் சேதாரமும்

பறையர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் மொத்தம் 11 இருசக்கரவாகனங்கள்  சேதப்படுத்தப்பட்டுள்ளன. சில வண்டிகளைப் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள். 63 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. பலரும் காயம்பட்டுள்ளனர். அரியலூர், தஞ்சை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்கள் மட்டுமில்லாமல், வழக்குகளுக்கு பயந்து கிராமத்திற்குள் வராமலேயே தனியே சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களும், சென்னையில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களும் உள்ளனர். காயம்பட்ட மக்களுக்கு இதுவரை இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. உடைந்த வீடுகள், சேதாரமான பொருட்கள், வண்டிகள் அனைத்தையும் அரசு அப்புறப்படுத்திவிட்டது. வன்முறை நடந்ததற்கான தடயங்களை அழிப்பதில் அரசு முழுவேகத்துடன் செயல்படுவது போல் தெரிகிறது. வீடுகளை சீர்செய்துகொடுத்தது மட்டும் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குள்ளேயே இருப்பதால் பொருளாதாரத்திற்கு வழியின்றி இருப்பதாக கூறினார்கள்.

தேர்தல் நாளன்று நடந்த இந்த வன்முறையைத் தடுக்கத் தவறிய காவல்துறை, பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப் பதிவுசெய்திருக்கிறது. காரணம் சம்பவத்திற்கு அடுத்த நாள் விமலாமூர்த்தி என்கிற பெண் தலைமையில் இந்து முன்னணிப் பொறுப்பாளர் ராஜசேகரன் வன்னியர் சமூக மக்களிடையே ஒரு போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார். ’எங்கள் தரப்பில் மட்டும் வழக்கு போடுவீர்களா? அவர்கள் தரப்பிலும் வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்கிற கோரிக்கையை முன்வைத்துப் போராடினார்கள். அதற்காக தலித் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ’பானையை உடைக்கத் தொடங்கியபோதே அவர்களைத்  தடுத்து கைதுசெய்யாத காவல்துறைதான் தற்காப்புக்காக திருப்பியடித்த தலித் மக்கள் தரப்பில் 24 பேர் மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறது. அவற்றில் 4 பேர் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள். வன்முறைக் கும்பலை எதிர்த்துக் கேட்டதற்காக குணசீலன் என்பவர் தாக்கப்பட்டார். அவரையும் கைதுசெய்திருக்கிறது காவல்துறை. ஆனால் தலித் பகுதிக்குள்  திரண்டுவந்து அடித்தவர்களில் உள்ள முக்கியக் குற்றவாளிகள், வன்முறையைத் தூண்டிய இந்துமுன்னணி ராஜசேகரன், வன்முறையில் முக்கியப் பங்கு வகித்த இந்து முன்னணி கனி, பாமக பகுதிப்பொறுப்பாளர் சங்கர் உள்ளிட்ட முக்கிய நபர்கள், வீடியோவில் பதிவாகியுள்ள நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. வன்னியர்களில் 12 பேர்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வன்முறைக்கு தொடர்பில்லாத வன்னியர் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரு தரப்பு மக்களும் சொல்கின்றனர். எனவே, உண்மையாக குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யாமல் தொடர்பற்ற வன்னியர்களைக் கைது செய்வதன் மூலம் யாரைக் காப்பாற்ற முயல்கிறது தமிழக அரசு?

இந்து முன்னணி, பாமக பின்புலம்:

பா.ம.க. மாவட்டச் செயலாளர் வைத்தீ வந்துபோன சிறிது நேரத்திற்குப் பின்புதான் நூற்றுக்கும் மேற்பட்டோர் நுழைந்து தாக்குதல் நடத்தும் சம்பவம் நடந்துள்ளது. பா.ம.க. சங்கர், வைத்தீ மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த கனி ஆகியோர் சம்பவ இடத்தில் அதாவது தலித் பகுதிக்குள் இருந்துள்ளனர் என்று அறிகிறோம். இந்து முன்னணிப் பொறுப்பாளர் இராஜசேகரனைப் பொறுத்தவரை அவர் மூளையாக செயல்படக் கூடியவர். எனவே, இந்த வன்முறை தாக்குதலுக்குப் பின்னால் பா.ம.க.வும் இந்து முன்னணியும் இருப்பது தெரிய வருகிறது.

இப்பகுதியில் இந்து முன்னணிக்கான முக்கிய களமாக பொன்பரப்பி மாறிவருவதை அறியமுடிகிறது. பொன்பரப்பி கீழத்தெருவைச் சேர்ந்த ராஜசேகரன் இப்பகுதியில் இந்து முன்னணியைத் 1தொடங்கியவர். இவர்தான் அப்பகுதியில் இந்து முன்னணியின் வன்முறை செயல்களுக்கான மூளையாக செயல்பட்டு வருபவர் என்று சொல்லப்படுகிறது. இவருக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் நடந்த இந்துமுன்னணி மாநாட்டிற்கு பொன்பரப்பி பகுதியிலிருந்து ஆட்கள் திரட்டப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அம்மாநாட்டின் போது இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் பொன்பரப்பி பகுதியில்தான் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்பரப்பி கிராமத்தில் இந்து முன்னணி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதி இளைஞர்கள் பலரை சாகா பயிற்சிக்கு வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கெல்லாம் ஒருங்கிணைப்பாக இருப்பது ராஜசேகரன்தான் என்கிற விவரங்களை அப்பகுதி அரசியல் ஆற்றல்கள் கூறுகிறார்கள்.

மக்களின் உரிமைகளுக்கானப் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய அமைப்புகளுக்கிடையே மோதலை உண்டாக்கி இயக்கங்களை அழித்ததில் ஆலை நிர்வாகம், வன்னியர் சங்கம் போன்றவை காவல்துறை நடவடிக்கைக்கு துணையாக  நின்றிருந்ததைத் தமிழ்த்தேசிய அமைப்புத் தோழர்கள் சொல்கின்றனர். இந்து முன்னணியில் உறுப்பினர்களாய் இருப்பவர்களும் பா.ம.க. வில் இருப்பவர்களும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் சகோதரர்கள், நெருக்கமான உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பா.ச.க.வுடனான தேர்தல் கூட்டணி, சாதிய அணிசேர்க்கை என்ற கருத்தியல் கூட்டணி என்ற வகையில் பொன்பரப்பியில் பா.ம.க.வின் இயல்பான கூட்டாளியாக இந்து முன்னணி அமைந்துள்ளது. இந்து முன்னணி தலித் மக்கள் பகுதியில் இருக்கும் கிறித்தவர்களை எதிராக சித்திரிப்பதன் மூலம் பறையர் சமூக எதிர்ப்பை வன்னியர் சமூக இளைஞர்களிடம் வளர்த்துள்ளதாக தெரிய வருகிறது.

அரியலூர் தலித் பெண் நந்தினி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த மணிகண்டன் முக்கிய குற்றவாளி. இதில் ராஜசேகரனும் இந்தக்கொலையுடன் தொடர்புடையவர் என்பதும் இவர்மீது இதுவரை கைதோ வழக்கோ பதிவுசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் அவர் வன்னியர் சமூக மக்களை சாதி, மதரீதியாக திரட்டும் வேலையை செய்து கொண்டிருக்கிறார். சென்னையில் வசித்துவரும் ராஜசேகரன் எப்பொழுதெல்லாம் ஊருக்கு வருகிறாரோ அப்போது அப்பகுதியில் ஏதாவதொரு சண்டை சச்சரவுகள் நடப்பது வாடிக்கையாக இருக்கிறது என்று இரு தரப்பாரும் கூறுகிறார்கள். ஊரிலுள்ள உதிரி கும்பலுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பணம் தந்து இராஜசேகரன் திட்டம் தீட்டி கொடுப்பார், அடுத்தநாள் அவர்கள் அக்காரியத்தை செய்வார்கள்.

தேவாலயம் தாக்குதல்

டந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு பொன்பரப்பி குடிகாடு தாண்டி உஞ்சினிக்கானப் பாதைப் பிரியும் இடத்தில் தேவாலயம் ஒன்றை கட்டியிருக்கிறார்கள். அதனை திறந்துவைப்பதற்கான ஆயத்தபணியை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அருட்சகோதரி ஒருவர் செய்திருக்கிறார். அங்கும் இரவோடு இரவாக இந்து முன்னணிப் பொறுப்பாளர் ராஜசேகரனின் வழிகாட்டலில் ஒரு கும்பல் தேவாலயத்தை தாக்கியுள்ளது.. மேலும் அருட்சகோதரியையும் தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். அவர் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால்

ஊர்க்கூட்டம்

தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு கடந்த 29.4.2019 அன்று இரவு பொன்பரப்பியின் மூன்று பகுதிகளும் இணைந்த ஊர்க்கூட்டம் கூடியிருக்கிறது. கூட்டத்தை வழிநடத்திப் பேசியது இந்துமுன்னணி ராஜசேகரன்தான். கூட்டத்தில் இந்த வழக்குகளை சாதிரீதியான சண்டையாக பதிவுசெய்யக்கூடாது. தேர்தல், கட்சி சண்டையாக பதிவு செய்ய வேண்டும். அதாவது எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்யக் கூடாது, வழக்கைத் திரும்பப்பெற வேண்டும். பிணை வழங்க வேண்டும் என்கிற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்பகுதியில் இந்து முன்னணி வேர்விட தொடங்கியதில் இருந்து வன்முறை, குற்றச் சம்பவங்கள், சமூக அமைதியின்மை அதிகரித்து வருகிறது என்பதற்கு இவையெல்லாம் சிற்சில எடுத்துக்காட்டுகளாகும். மதம், சாதி சார்ந்து இயங்குவதால் மக்களிடம் இன்னும் இந்த கும்பல் தனிமைப்படவில்லை.

எமது கோரிக்கை

 1. பானை உடைத்ததுத் தொடங்கி தலித் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தியதுவரையான இந்தத் தொடர் நிகழ்வுகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இவற்றையெல்லாம் வழிநடத்திய பா.ம.க.வினரும், இந்து முன்னணியினருமே. அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் இதற்கு பதில்சொல்ல வேண்டிய இராமதாசு அவர்கள் திட்டமிட்டு தாக்குதலையும், வன்முறை கும்பலையும் பாதுகாப்பது கண்டனத்துக்குரியது. வன்னிய சமூகத்திற்கு ஏகபோக பிரதிநிதியாக தனது குடும்பத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துவதை அச்சமூகத்திலுள்ள சனாநயகச் சக்திகளும் மக்கள் மீது அக்கறைகொண்டவர்களும் இவர்களின் சுயநல அரசியலை புறக்கணிக்க வேண்டும்.
 2. பொன்பரப்பி பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை, சாதி, மத வன்முறைகளை செய்துவரும் இந்துமுன்னணியைச் சேர்ந்த ராஜசேகரன், கனி, பாமகவைச் சேர்ந்த முக்கியக் குற்றக் கும்பலை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரின்மீதும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும்.
 3. பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஏற்பட்ட உரிய இழப்பீட்டை மதிப்பீடு செய்துஎஸ்சி.எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழ் இழப்பீட்டை வழங்கவேண்டும். அமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
 4. பாதிக்கப்பட்டு தலித் குடியிருப்புகளில் இருக்கின்ற ஓட்டுவீடு, குடிசை வீடுகளை அகற்றி மாற்றாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுக்கவேண்டும்.
 5. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உரிய விசாரணையை மேற்கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு அச்சத்திலிருந்து மீண்டுவர உளவியல் நிபுணர்களை கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும்.
 6. சாதி, மத மோதலுக்கு காரணமாக இருந்து வன்முறையைத் தூண்டும் ஆதிக்க சக்திகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும்.
 7. விவசாயத்தை அழித்து நிலத்தடி நீரை, சுற்றுசூழலை நாசமாக்கும் சிமெண்ட் ஆலை உள்ளிட்ட பேரழிவுத்திட்டங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்நிறுவனங்கள் மூலமாக மக்களை சாதி மத, வர்க்க ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட முந்திரி போன்ற தொழில்கள் மேம்படுத்தப்பட்டு அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். கல்வி சமூக நலன் சார்ந்த துறைகளை பின்தங்கிய பகுதியுள்ள அரியலூர் மாவட்டத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி அதன் வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
 8. பாதிக்கப்பட்ட தலித் மக்களின் மீதே வழக்குத் தொடுப்பது ஏற்க முடியாதது. வன்மையான கண்டனத்துக்குரியது. இக்குற்றச் சம்பவங்களில் தொடர்பில்லாத அப்பாவி வன்னியர்கள் மீதும் காவல்துறை வழக்கு தொடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. காவல்துறையின் இந்த நடைமுறையானது, இரண்டு சமூகங்களுக்கு இடையில் மேலும் பதற்றத்தையும், சண்டையையும் உருவாக்குவதற்குமே உதவி செய்யும். இது மக்களை மோதவிடும் காவல்துறையின் மோசமான நடவடிக்கையாகும். இவ்வழக்குகளிலிருந்துமீட்க வேண்டும்.உண்மையானக் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும்.
 9. தலித் மக்கள் பகுதியில் வன்முறை தாக்குதலைப் படம்பிடித்து செய்தி சேகரித்த நியூஸ் 18 நிருபர்  தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது.
 10. நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் அங்குள்ள தலித் மக்களுக்கு குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு உடனடியாக வழங்கவேண்டும்.
 11. தலித், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கிடையில் ஐக்கியத்தை உருவாக்குவதற்கான சமூக நல்லிணக்கக் குழுவை அமைக்க வேண்டும்.

  கண்டறியப்பட்ட உண்மைகள்

 1. முதலில் யார் கைகலப்பில் இறங்கியது என்பதைப் பொறுத்தவரை பாமக தரப்பில் வி.சி.க. வைப் பொறுப்பாக்குகின்றனர். நிகழ்ச்சிகளின் தொடர் வரிசையைப் பார்த்தால், பறையர் மக்கள் பகுதியில் சென்று வம்பிழுத்து, பிரச்சனை செய்தவர்களை,தாக்கியவர்களை, சுயமரியாதை உணர்ச்சியுடன் தற்காப்பு உணர்வுடன் தட்டிக் கேட்டு சண்டைப் போட்டவர்களை குற்றவாளிகளாக்கி தலித் பகுதி மீதான கும்பல் வன்முறையை நியாயப்படுத்தும் முயற்சி கண்டிக்கத்தக்கது. பெரும்பான்மையினராக வன்னியர் மக்கள் வாழ்கிற அப்பகுதியில் எந்தவகையிலும் தலித்மக்கள் சண்டையைத் தொடங்கவோ வம்பிழுக்கவோ முடியாது. ஏனென்றால், அரசிசயல் ரீதியாகவும், பொருளாதார சமூக ரீதியாகவும் பின்தங்கி ஏழ்மை நிலையில் உள்ள அம்மக்களால்  தங்களைவிட மேம்பட்ட சமூகத்தினரோடு வம்புசண்டை செய்து தாக்குதல் நடத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
 2. வாக்குப்பதிவின்போது, கலவரம் நடந்ததாக சொல்லப்படுவது என்பது, ஏதோ திடீரென்று நடந்ததல்ல. அரசு, உளவுத்துறை, சாதி ஆதிக்க அரசியல் நடத்தும் உள்ளூர் மட்டத்திலான குண்டர்கள், ஆர்.எஸ்.எஸ் இந்துமுன்னணி போன்ற மதவெறி அமைப்புகள் பாமக வின் சில பொறுப்பாளர்களோடு இணைந்து மக்களை சாதி, மதரீதியாகப் பிளவுபடுத்தும் வேலையை திட்டமிட்டு வெளிப்படையாகவும் ரகசியமாகவும் அரசின் ஆதரவோடும் வளர்த்தெடுத்து வந்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த பின்புலத்திலிருந்தே பொன்பரப்பி சிக்கலை நாம் வரலாற்று ரீதியாக பார்க்கவேண்டியுள்ளது. சமூக அரசியலில் அக்கறை உள்ளவர்கள் இதுகுறித்த இன்னும் ஆழமான ஆய்வுகளை வரும் காலங்களில் மேற்கொள்ளவேண்டும்.
 3. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவரை தலித் இளைஞர்கள் தாக்கிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. நாங்கள் விசாரித்தவகையில் இரு தரப்பாருமே அப்படியொன்று நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். அவர் பொன்பரப்பியைச் சேர்ந்தவர் இல்லை. அவர் அப்பகுதியில் சட்டவிரோமாக மதுவிற்பவர் என்று சொல்லப்படுகிறது. அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருக்கும் அவரிடம் சரக்கு வாங்கி குடிக்கும் பறையர் மற்றும் வன்னியர் சமூகத்தினருக்கும் சாதியுணர்வு இருப்பதைவிட கொடுக்கல் வாங்கல் உறவுதான் மேலோங்கி இருக்க முடியும். எனவே, மாற்று திறனாளியைத் தாக்கிவிட்டார்கள் என்ற ஒரு பொய்யைப் பரப்பி, சாதி ஆதிக்க வன்முறையை நியாயப்படுத்த விரும்புகின்றனர். இதுபோன்ற வதந்திகள் மூலம்  உண்மையை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்.
 4. நமக்குத் தகவல் கிடைத்தவகையில் பொன்பரப்பி பகுதியில் திமுக பொறுப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், சிவசங்கர் ஆகிய சனநாயக ஆற்றல்கள் இன்றுவரை அம்மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி வருபவர்கள் எனத் தெரிகிறது. அப்பகுதியில் செல்வாக்குள்ளவர்கள். திமுகவிலுள்ள இவர்களைப் போன்றோரை நோக்கியே முரண்பாடு தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு எதிராக சொந்த சமூக மக்களைப் பிரித்துவிடுவதும் இவர்களை துரோகிகள் போல் சித்தரிப்பதும் அரசியல் நேர்மையற்ற செயல்.
 5. பா.ம.க.வின் தேர்தல் வியூகத்தைப் பொருத்தவரை வன்னியர்கள் முழுக்க தமது கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே இலக்கு. தலித் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்கமுடியாது. எனவே, பொன்பரப்பியைப் பொருத்தவரை வன்னியர்களின் வாக்கு பா.ம.க. – .அ.தி.மு.க. கூட்டணிக்கு அப்படியே செல்லாமல் அவ்வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு போவதும் அதுவும் பானை சின்னத்திற்கு வாக்களிக்கப்படுவதும் பா.ம.க., இந்து முன்னணியினரின் எரிச்சலுக்கான தொடக்கமாய் அமைந்துள்ளது. வன்னியர்களைத் தங்கள் பக்கம் அணி திரட்டுவதற்கே தலித் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுப்பதை நோக்கி நகர்ந்துள்ளது. எனவே, தாக்குதலுக்கு காரணம் இந்து முன்னணி, பாமக வினரே தவிர, பொன்பரப்பியில் வாழும் ஒட்டுமொத்த வன்னியர் சமூக மக்களும் அல்ல. உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது வன்னியர் சமூகத்தினரை ஆதிக்க சாதி என்றும் சாதிவெறியர்கள் என்றும் முத்திரையிட்டு அணுகுவது தவறு.
 6. இதற்கு முன்பு தமிழகத்தில் பாமக நடத்திய பல வன்முறை தாக்குதல் குறித்த காணொளி எதுவும் வெளிவரவில்லை. பொன்பரப்பியில் தாக்குதல் நடத்தியவர்கள் தரப்பிலிருந்தே எடுக்கப்பட்ட காணொளி தலித் மக்களை பயமுறுத்தவும் அச்சுறுத்தவும் வெளியிடப்பட்டதாகவே தெரிகிறது. அதேவேளை சாதி ஆதிக்க அரசியலின் பக்கம் தலித் அல்லாத பிற சமூக இளைஞர்களை ஈர்ப்பதற்கான நோக்கமும் அதில் அடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
 7. நடந்த தாக்குதல் சம்பவம் தேர்தல் மற்றும் அதிகார சண்டைக்காக மட்டும் நடத்தப்பட்டதாக இருந்தால் விசிக, பாமக ஆகிய இரண்டு அரசியல் சக்திகளுக்கு இடையில்தான் சண்டை நடந்திருக்க வேண்டும். ஆனால், நடந்தவிதம் வேறாக இருக்கிறது. அதாவது சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி தலித் மக்களின் அரசியல் வெளிப்பாட்டை அடக்கிவைப்பது இனி வரும் காலங்களில் தங்களுக்குப் போட்டியாக தொல்.திருமாவளவன் போன்ற அரசியல் சக்திகளின் நடமாட்டத்தை முடக்குவது என்ற உள்ளர்த்தம் இதில் அடங்கியிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. நாடாளுமன்ற அரசியலில் உள்ள சனநாயக பண்புகளைக்கூட பொன்பரப்பி தாக்குதல் சம்பவம் குழிதோண்டி புதைத்திருக்கிறது.
 8. நாடாளுமன்றத் தேர்தல் சனநாயகம் சாதி அமைப்பை இறுக்கம் அடைய செய்யும் போக்கையும் அதே தேர்தல் அரசியல், வன்னியர் சாதியைச் சேர்ந்த பல்வேறு கட்சியினரையும் பானை சின்னத்திற்கு வாக்களிக்க வைத்திருக்கும் போக்கையும் காண்கிறோம். இந்த தாக்குதலை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கண்டித்திருப்பது ஆரோக்கியமானதாகும். பாமக தலைமையும் அம்பலப் பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பா.ம.க. முன்னெடுத்துவரும் அப்பட்டமான தலித் எதிர்ப்பு அரசியல் முற்றிலும் தனிமைப்பட்டு நிற்க காண்கிறோம்
 9. பாமக மட்டுமல்லாது, இந்த தாக்குதல் குறித்து ஆய்வுசெய்த சில உண்மை அறியும் குழுக்களும்கூட வாக்குப்பதிவு அன்று காலையில் தலித் பகுதியிலிருந்து ஓட்டுப்போட இளைஞர்களாலும் விசிகவினராலும் சண்டை தூண்டிவிடப்பட்டது என்கின்றனர். அதன் எதிர்விளைவாகவே பாமக பொறுப்பாளர்களால் தலைமை தாங்கப்பட்ட வன்முறைத்தாக்குதல் தலித் மக்கள்மீதும் குடியிருப்புகள் மீதும் நடத்தப்பட்டது என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இந்தக்கருத்தை தலித் அல்லாத மற்ற பிரிவினரே சரியான ஆய்வின்றி நியாயப்படுத்துகின்றனர்.

கேள்விகள்

 1. ‘விசிகவினர்தான் முதலில் வன்முறையைத் தூண்டினார்கள்‘. குறிப்பாக சென்னையில் வேலை செய்தவர்கள் வாக்களிக்க வந்த இளைஞர்கள்தான் முதலில் வன்முறையைத் தூண்டினார்கள். அதற்கு எதிர்வினையாகவே பாமக வினர் உணர்ச்சிவசப்பட்டு தலித் மக்கள் குடியிருப்புகள், சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது‘ எனவும் ‘இது சாதி சண்டை இல்லை, இரு கட்சிக்குமான தேர்தல் சண்டை‘ என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் முதலில் சண்டைக்குக் காரணமான விசிகவினரின் மீது காவல்துறையில் புகார் தந்திருக்க வேண்டுமே தவிர பிரச்சனைக்கு எந்தவகையிலும் பொறுப்பாகாத தலித் மக்கள் மீதும் முதியவர், குழந்தைகள், வீடுகள் மீதும் தாக்குதல் நடத்துவதும் வாகனங்களைக் கொளுத்துவதும் எந்த வகையிலான அரசியல் நேர்மை?
 2. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து பதட்டமான வாக்குச் சாவடிகளின் பட்டியலில் பொன்பரப்பியும் இருக்கிறது. அப்படியிருக்க, அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த  அரசு எந்த சமாதான முயற்சியையும் ஏன் எடுக்கவில்லை?
 3. கட்சி சின்னங்கள் வரைவதில் பாமக தரப்பு முதலிலிருந்தே கடும்மோதல் போக்கைக் கையாண்டு வந்திருக்கிறது. அமமுக, திமுக உள்ளிட்ட பொறுப்பாளர்களை சண்டைக்கு இழுத்து அடிக்க முற்பட்டுள்ளனர். தேர்தலின்போது மோதல் நடத்த பாமக தரப்பு பல முயற்சிகளை எடுத்ததாக அப்பகுதியில் கூறுகின்றனர். நீண்டகாலமாகவே உளவுத்துறையின் கண்காணிப்பில் இருக்கும்  பகுதி பொன்பரப்பி.  இங்கு நடக்கும் சிறுசிறு அரசியல் நிகழ்வுகள்கூட அரசின் கவனத்திற்கு வந்துவிடும். அப்படியிருக்க ஏன் காவல்துறை இதனை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை?.
 4. பா.ம.க.வும் வி.சி.க.வும் இரு சமூகங்களின் அடித்தளம் கொண்ட கட்சிகள். அந்த இரு சமூகங்களும் வரலாற்றுரீதியான பகைக் கொண்ட இனக்குழுக்கள் அல்ல. சாதிய முரண்பாடும் அதன் அந்திமக்காலப் பதற்றங்களும் சமூக இயக்கத்தின் பாற்பட்டு புரிந்துகொள்ளப்பட வேண்டியதே தவிர இவை இருபா.ம.க. தலைவர் இராமதாசு மற்றும் விசிக தலைவர் திருமாவளவனின் வீட்டுத் தகராறு அல்ல, இவ்விரு சாதிகளுக்கு இடையே இனப்போரும் நடந்து கொண்டிருக்கவில்லை. தனி நபர்களை மையமிட்டு இந்த வளர்ச்சிப் போக்கை விளக்குவதும் தீர்த்துக்கொள்ள முனைவதும் சமூக அறிவியல் அல்ல, சமூக வளர்ச்சிக்கு உதவப் போவதுமல்ல.
 5. இந்நேரத்தில், பொன்பரப்பி சம்பவத்தை முன்வைத்து சாதி ஆதிக்க அரசியலை நியாயப்படுத்தும் பா.ம.க.வையும் அதற்கு எதிர்நிலையில் இருக்கும் விசிக போன்ற தலித் அமைப்புகளையும் சமமாக பாவிப்பது சரியான அணுகுமுறை இல்லை. இது தமிழக மக்களின் ஒற்றுமைக்கோ வர்க்க அணிசேர்க்கைக்கோ உதவாது. விசிக கட்சியின் அரசியல், அதன் பாதை குறித்து நமக்கு முரண்பாடு இருப்பினும் அதை விமர்சிப்பதற்கு உரிய நேரம் இதுவல்ல. இந்நேரத்தில் இந்துமுன்னணி, பா.ம.க. வின் மதவெறி, சாதி ஆதிக்க அரசியலை தனிமைப்படுத்துவதே முதன்மையானதாக இருக்க வேண்டும். இதன் தர்க்கப்பூர்வ வளர்ச்சிப் போக்கில் வன்னியர், பறையர் மட்டுமல்ல அனைத்து மக்களும் சாதி மதம் கடந்து வர்க்க ஒற்றுமையிலும் தமிழர் என்ற அடையாளத்தின் கீழும் அணி திரள்வர்.

 

ரமணி

பொதுச்செயலாளர், சாதி ஒழிப்பு முன்னணி,

aruvi1967@gmail.com, 8508726919

26.4.2019

 

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW