பத்திரிக்கை செய்தி – சென்னைக்குள்ளே அத்திப்பட்டு ?

03 May 2019

– சைதாப்பேட்டை தாடண்டர் நகர் காவாங்கரையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் குடிசை வாழ் மக்களை ‘குடிசை வரைபடத்தில் இல்லை’ என்று தமிழக அரசு தெரிவிக்கிறது.

‘சிங்கார சென்னை’ என்ற பெயரில் சென்னையில் இருந்து குடிசைகளை அப்புறப்படுத்தி நகரத்திற்கு வெளியே துரத்தும் திட்டத்தை எதிர்த்து இம்மக்கள் தமிழ்நாடு இளைஞர் இயக்கத்துடன் இணைந்து 2014 இல் போராட்டம் நடத்தினர். மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 100 வீடுகளை இடித்துவிட்டு, குடுசைப்பகுதி முழுவதும் அப்புறப்படுத்திவிட்டதாக பொய்யாக ஆவணப்படுத்தியுள்ளது குடிசை மாற்று வாரியம் வாரியம்.

தற்போது 350 குடும்பங்கள் வாழ்ந்து வரும் சூழலில் அருகில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இடிக்கப்படும் நிலையில் இங்கு தண்ணீர், மின்சாரம் அனைத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் அவல நிலைக்கு தள்ளியுள்ளது தமிழக அரசு.

 

மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரியத்தை பொறுத்தவரை இந்த பகுதி ஆவணத்தில் இல்லை. அதனால் குடிநீர், மின்சாரம் வழங்க வேண்டியது இல்லை. மாற்று வீடுகளும் வழங்கவேண்டியது இல்லையாம்!

சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இந்தியக் குடியரசின் மரியாதைக்குரிய வாக்காளர் பெருமக்கள்! ஆனால், 40 ஆண்டுகளாக முறையான மின்சாரமும் குடிநீரும்கூட இந்த அரசு வழங்கவில்லை. வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சார்ந்து காலந்தள்ளி வந்தவர்களுக்கு இன்று எதுவும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் கவுன்சிலரிடம் முறையிட முடியாது. எம்.எல்.ஏ வோ தனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்துவிட்டார். தலைவரின் கல்லறைக்கு இடம் கேட்டு நீதிமன்றப் படியேறிய கட்சி ஆயிரம் பேர் வாழ்விடமில்லாமல் இருப்பது பற்றி அக்கறை கொள்ளவில்லை. இவர்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட எம்.பி. எங்கென்று தெரியவில்லை. இவர்களைப் பார்த்து கும்பிட்டப் படி வாக்கு கேட்டு வந்த வேட்பாளர்கள் எங்கே என்று தெரியவில்லை. அவர்கள் பங்களாக்களில் வாழ்ந்தபடி தேர்தல் முடிவுகளுக்கு காத்திருக்கிறார்கள். காவாங்கரையில் வாழும் இந்தக் குடியரசின் மன்னர்களோ தண்ணீருக்கும் வெளிச்சத்திற்கும் ஏங்கி நிற்கிறார்கள். 13 நாள் குழந்தை முதல் தள்ளாடும் கிழம் வரை தத்தளித்து நிற்கிறார்கள். யார் பொறுப்புக்கூறப் போகிறார்கள்?

’வாழ ஒரு வீடு, இப்போதிருக்கும் இடத்திற்கு அருகில்’ என்று இந்த மக்கள் 2014 இல் போராடியது குற்றமா? காவாங்கரை என்றொரு பகுதியே இல்லை என்று குடிசை மாற்று வாரியம் சொல்வது இவர்களைப் பழிவாங்கவா? அல்லது இவர்களில் வீடுகள் கொடுப்பதில் ஏதேனும் ஊழல் செய்துவிட்டதா வாரியம் ?

தமிழ்த்தேச மக்கள் முன்னணி
சென்னை மாவட்டம்
9940963131/9941931499

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW