காவி பயங்கரமும் தண்டனையில்லாப் பண்பாடும்…

16 Apr 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 12

பா.ச.க. வின் இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் காவி பயங்கரவாத வழக்குகள் முடிவுக்கு வந்தவிதம் எச்சரிக்கையொலி எழுப்புகிறது. குண்டு வெடிப்புகள், இஸ்லாமியர் படுகொலைகள், பகுத்தறிவாளர் படுகொலை, வன்கும்பல் அடித்துக்கொலைகள், மதச்சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்டவை காவிப் பயங்கரவாதமாகும். இவற்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், எளிதில் பிணையிலோ அல்லது வழக்கிலிருந்தே முழுமையாகவோ விடுவிக்கப்படுகிறார்கள். இவ்வழக்குகளின் புலனாய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஒன்று கொல்லப்படுகிறார்கள், இடமாற்றலுக்கு உள்ளாகிறார்கள் அல்லது ஆளும் பா.ச.க.வுக்கு உண்மையாக இருந்தால் பரிசுகளால் கைமாறு செய்யப்படுகிறார்கள். சாட்சிகள் கையாளப்படுவதிலும் இருவழிகள் கடைபிடிக்கப்படுகின்றன – கொல்லப்படுகிறார்கள் அல்லது பிறழ் சான்றுகள் ஆகின்றன. புலனாய்வு நிறுவனங்கள் ஏதோவொரு வகையில் சங் பரிவார அமைப்புகளுடன் தொடர்புடைய அதன் உயரதிகாரிகளால் பா.ச.க.வின் காலடியில் கிடத்தப்படுகின்றன.

 

அப்பட்டமான பயங்கரவாத நடவடிக்கைகளில் இந்துத்துவ அமைப்புகளின் பங்கு 2004 இல் இருந்து 2008 வரை நடந்த குண்டுவெடிப்புகளின் மூலம்  வெளிச்சத்திற்கு வந்தது. ஜால்னாவில் 2004 இலும், மாலேகானில் 2006, 2008 இலும், சம்ஜூதா எஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா, மெக்கா மஸ்ஜித்தில், 2007 இலும் மொடாசாவில் 2008 இலும் என மொத்தம் ஏழு குண்டுவெடிப்புகள் இந்த நான்கு ஆண்டுகளில் நடந்தன. மசூதிகளின் மீதான தாக்குதல் வெள்ளிக்கிழமை தொழுகைகளின் போது நடத்தப்பட்டன, கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களே. இவ்வெல்லாக் குண்டுவெடிப்பிலும் இஸ்லாமியர்களே தொடக்கத்தில் கைதுசெய்யப்பட்டனர், சில இஸ்லாமிய அமைப்புகள் தாக்குதலுக்கு காரணமென குற்றஞ்சாட்டப்பட்டன. ஆனால், எல்லாவற்றிலும் காவிப் பயங்கரம் இழையோடிக் கொண்டிருந்தது பின்னாட்களில்தான் தெரியவந்தது. இந்த குண்டு வெடிப்புகளில் ’அபினவ் பாரத்’ என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்தன. நாடெங்கும் தமது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்காக திட்டமிடும் பொருட்டு இவ்வமைப்பின் உறுப்பினர்கள் கூட்டங்கள் நடத்தியிருந்தனர். இவ்வமைப்பின் உறுப்பினர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவ்வமைப்பின் உறுப்பினர்களும் அத்தலைவர்களும் ஒன்றாகக் காணப்பட்டனர். அசீமானந்தா, பிராக்யா சிங், கேணல் புரோகித் போன்ற அபினவ் பாரத்தின் உறுப்பினர்களும் வேறுபல இந்துத்துவ அமைப்புகளின் உறுப்பினர்களும் இக்குண்டு வெடிப்பு வழக்குகளில் தண்டனைத் தீர்ப்பு பெற்றிருந்தனர். ஆனால், 2014 இல் பா.ச.க. ஆட்சிக்கு வந்த பின் இவ்வழக்குகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டன.

 

மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, ஐதராபாத் 2007

2007 இல் ஐதராபாத்தில் உள்ள மெக்கா மஸ்ஜித்தில் மொபைல் மூலம் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்தவுடன் இதில் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ப்பு படுத்தப்பட்டன. பின்னர் 2009 இல் நடுவண் புலனாய்வுக் கழகம்(CBI), இத்தாக்குதல் இந்துத்துவத் தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கண்டுபிடித்தது. சுவாமி அசீமானந்தா, லோகேஷ் சர்மா( 2008 மாலேகான் குண்டுவெடிப்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர்), பரத் மோகன்லால் ரத்தேஸ்வரர், ரஜிந்தர் சவுத்ரி, தேவேந்திர குப்தா, சந்தீப் டாங்கே, இராமசந்திரா கலசங்ரா, சுனில் ஜோஷி, தேஜ்ராம் பர்மர், அமித் சவுகான் என பத்து இந்துத்துவப் பயங்கராதிகள் குற்றஞ்சாட்டப்பட்டனர். இதில் இருவர் கொல்லப்பட்டனர், ஆர்.எஸ்.எஸ். ஐ சேர்ந்த இருவர் பிடிபடவே இல்லை, இருவர் தலைமறைவாயினர். அசீமானந்தா சிறையில் அடைக்கப்பட்டார். சுனில் ஜோஷி விளங்காப் புதிர்நிலையில் கொல்லப்பட்டார். முதலில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அசீமானந்தா, பின்னர் தம்மைக் கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர் என்று பின்வாங்கினார். ஆனால், அவரே கேரவன் இதழுக்கு அளித்த பேட்டியின் மூலம், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பின் அடிப்படையில் வலதுசாரி பயங்கரவாத நிகழ்ச்சி நிரலின் பகுதி இது எனத் தெளிவானது

2011 இல் இவ்வழக்கு தேசியப் புலனாய்வு அமைப்புக்கு(NIA)  மாற்றப்பட்டது. சிறையில் இருந்த அசீமானந்தாவிடம் கேரவன் எடுத்த தொடர் பேட்டிகளில், 2007 இல் நடந்த சம்ஜூதா எஸ்பிரஸ், ஐதராபாத்தில் உள்ள மெக்கா மஸ்ஜித், இராஜஸ்தானில் உள்ள அஜ்மர் தர்கா குண்டுவெடிப்புகளுக்கும் 2006, 2008 இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். அதியுயர் மட்டத்தில் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்டது, அதாவது இன்றைக்கு தலைவராக இருக்கும் மோகன் பகவத் வரை இவற்றில் தொடர்புடையவர் என்று வெளிப்படுத்தினார்.

தொடக்கத்தில் தேசியப் புலனாய்வு அமைப்பு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை இத்தாக்குதல்களுக்குப் பொறுப்பாக்கியது. ஆனால், 2014 க்குப் பிறகு ஆளுங்கட்சியான பா.ச.க. விடம் அடிபணிந்தது. அசீமானந்தாவுக்குப் பிணை கொடுக்கப்பட்டபோது அவ்வமைப்பு அதை எதிர்க்கவில்லை. இவ்வழக்கைக் கையாண்ட தேசியப் புலனாய்வு அமைப்பின் துணைத் தலைவர் சரத் குமாருக்கு இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவர் ஓய்வுப் பெற்றபின் நடுவண் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின்(Central Vigilance Commission) தலைவராகப் பணியமர்த்தப்பட்டார். மெக்கா மஸ்ஜித் வழக்கின் சாட்சிகள் பிறழ்சான்றுகள் ஆயின. ஏப்ரல் 2018 இல் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் போதிய சான்றுகள் இல்லை என்று சொல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளை விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி மறுநாளே பணியிலிருந்து விலகினார்!

 

நரோடா பாட்டியா வழக்கு – குஜராத் வன்முறைகள் 2002:

2002 குஜராத் கலவரத்தின்போது சுமார் நூறு இஸ்லாமியர்களின் சாவுக்கு காரணமான நரோடா பாட்டியா வன்முறையைத் தூண்டிவிட்டக் குற்றத்திற்காக 2012 இல் பா.ச.க. உறுப்பினரும் குஜராத்தின் முன்னாள் அமைச்சருமான மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். ’கலவரத்தின் தலைமகள்’ என்று நீதிமன்றம் இவரைச் சுட்டியது. மாயா கோட்னானி கலவரக்காரர்களுக்கு வாள் கொடுத்து இஸ்லாமியர்களைத் தாக்குமாறு அறிவுறுத்திக் கொண்டிருந்ததைக் கண்ணால் கண்டதாக பதினொரு பேர் சான்றளித்திருந்தனர். கலவரத்தின்போது அவர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதையும் கண்டுள்ளனர். ஆனால், சான்றுப் பதிவுருக்கள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறதென குஜராத் உயர்நீதிமன்றம் சொன்னது. குஜராத் கலவரங்களின்போது பல இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட நரோடா கிராம் வழக்கில், கலவரங்கள் நடந்த நேரத்தில் தாம் மாயா கோட்னானியை சட்டசபையிலும் மருத்துவமனையிலும் கண்டதாக பா.ச.க. தலைவர் அமித் ஷா வாக்குமூலம் தந்தார். சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்கை விசாரிக்கத் தொடங்கிய பின்தான் மாயா கோட்னானியின் பெயர் சேர்க்கப்பட்டது, ’தொடக்கத்தில் அவர் பெயர் ஏன் இல்லை’ என்ற கேள்வியை எழுப்பி ஐயத்தின் பலனை மாயா கோட்னானிக்கு கொடுத்து அவரை இவ்வழக்கில் விடுவித்தது நீதிமன்றம்.  இவ்வழக்கு தொடர்பில் அண்மைய முன்னேற்றமாக, நரோடா பாட்டியாவில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களைக் கொன்றதையும் இஸ்லாமியப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதையும் பெருமையென மிக வெளிப்படையாக அறிவித்த  பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கிக்கு பிணை கொடுத்தது உச்சநீதிமன்றம்.

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தில், மோடி தலைமையிலான குஜராத் அரசு பொடா சட்டத்தைப் பயன்படுத்தி 131 இஸ்லாமிர்களுக்கு தண்டனை கொடுத்தது, சிறப்பு நீதிமன்றத்தில் மேலும் 31 பேர் தண்டிக்கப்பட்டனர். ஆனால், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த குஜராத் படுகொலை தொடர்பான வழக்குகளில் போதிய சான்றுகள் இல்லை என்று சொல்லப்பட்டு நூற்றுக்கணக்கான இந்துக்கள் விடுவிக்கப்பட்டனர்.

 

அஜ்மர் தர்கா வழக்கு 2007:

2007 அக்டோபரில் அஜ்மர் தர்காவில் ஒரு குண்டு வெடித்து மூவர் கொல்லபட்டனர், 20 க்கும் மேலானோர் காயமடைந்தனர். ஓர் இஸ்லாமியக் குழுதான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இந்த குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் என்பது பின்னாட்களில் கண்டுபிடிக்கப்பட்டது. 2010 இல் பயங்கரவாத தடுப்புப் படையால் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 4 பேர் ஆர்.எஸ்.எஸ் ஐ சேர்ந்தவர்கள். இந்த வழக்கிலும் திருப்பங்களை நிகழ்த்தியது மோடி அரசு. 2017 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் உள்ள தேசியப் புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் இரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழும் இன்னபிற இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழும் வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. ஆனால், 2018 ஆகஸ்டில் இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் போதிய சான்றுகள் இல்லை என்று சொல்லி இந்த வாழ்நாள் சிறைத் தண்டனையை ரத்து செய்தது. அதில் ஒருவரான பவனேஷ் படேலுக்கு செப்டம்பர் மாதம் அதே நீதிமன்றம் பிணை கொடுத்தது. அவருக்கு குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிசத், பா.ச.க. உறுப்பினர்களால் மாபெரும் வரவேற்பு நல்கப்பட்டது.

சம்ஜூதா குண்டுவெடிப்பு 2007:

2007 இல் தில்லியில் இருந்து லாகூர் செல்லும் சம்ஜூதா எக்ஸ்பிரசில் இரு குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதில் 68 பேர் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ச.க., பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகப் பாகிஸ்தான் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வைக்குமாறு ஆளுங் கட்சியான காங்கிரசின் மீதும் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்துத்துவ சக்திகளுக்கு இக்குண்டுவெடிப்பில் தொடர்பில்லை என்று பா.ச.க. அடித்துச்சொன்னது. பாகிஸ்தானோ இந்தியாவில் பயங்கரவாதம் பொதுத்தன்மை பெறுவதை இக்குண்டுவெடிப்பு காட்டுகிறது என்றது. இவ்வழக்கு பல்வேறு திருப்பங்களை அடைந்தது. இஸ்லாமியக் குழுக்களுக்கு பங்கு இருக்கிறது, இந்துத்துவக் குழுக்களுக்கு பங்கு இருக்கிறது என முன்னுக்குப்பின் முரணான சான்றுகள் தரப்பட்டன. புலனாய்வில் இஸ்லாமியக் குழுக்களுக்கு தொடர்பிருப்பதாக சான்றுகள் எதுவும் கிட்டவில்லை என்று புலனாய்வு அதிகாரி பின்னர் தெரிவித்தார்.  இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று எட்டுப் பேர் மீது வழக்குப் பதிவு செய்தது தேசியப் புலனாய்வு அமைப்பு. சுவாமி அசீமானந்தா, லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ரஜிந்தர் சவுத்ரி ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதலின் மூளை என்று அறியப்பட்ட சுனில் ஜோஷி 2007 திசம்பரில் மத்தியப் பிரதேசத்தில் தேவாஸ் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் எஞ்சிய மூவரைக் கைது செய்ய முடியாததால் அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் அபினவ் பாரத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இன் உறுப்பினர்கள் ஆவர். ஆனால், இவை இந்து அமைப்புகளைக் களங்கப்படுத்துவதற்காகத் திட்டமிட்டு எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் என புலனாய்வு அமைப்பைக் குற்றஞ்சாட்டியது ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். இன் முன்னாள் செய்திதொடர்பாளரும் பா.ச.க. வின் இப்போதைய தேசிய பொதுச்செயலாளருமான ராம் மாதவ் அசீமானந்தாவுக்கு ஆதரவாக குரலெழுப்பி இருந்தார். ஏற்கெனவே இரு குண்டுவெடிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அசீமானந்தா, இவ்வழக்கின் பொருட்டு 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் நீதிமன்றத்தில் பிணை பெற்றார். தேசியப் புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் 2019 மார்ச் 20 அன்று போதிய சான்றுகள் இல்லை என விசாரணைக்கு உட்பட்டிருந்த நான்கு பேரையும் விடுதலை செய்தது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இதை கடுமையாக விமர்சித்து அறிக்கை விட்டுள்ளார்.

 

சொராபுதீன், கெளசர் பீ, பிரஜாபதி போலி மோதல் கொலைகள் 2005 :

குஜராத மற்றும் இராஜஸ்தான் காவல்துறை இருவேறு நிகழ்வுகளில் சொராபுதீன், கெளசர் பீ, பிரஜாபதி ஆகியோரைப் போலி மோதல் கொலை செய்தது. நடுவண் புலனாய்வுக் கழகம் இவ்வழக்கில் 38 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் குஜராத்தின் அப்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இராஜஸ்தானின் அப்போதைய உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா மற்றும் சில மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்குவர். ஜூலை 2010 இல் அமித் ஷா இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 2010 இல் நடுவண் புலனாய்வுக் கழக நீதிமன்றத்தில் அமித் ஷா வுக்கு பிணை மறுக்கப்பட்டது. ஆனால், பின்னர் குஜராத் உயர்நீதிமன்றம் அமித் ஷாவுக்கு பிணை கொடுத்தது. நபுக வழக்கை குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றக் கோரியது. உச்சநீதிமன்றம் வழக்கை மும்பைக்கு மாற்ற ஆணையிட்டது. இவ்வழக்கை நடத்த நீதிபதி லோயா அமர்த்தப்பட்டார். நீதிபதி லோயா வழக்கு விசாரணையின் போது அமித் ஷா நேரில் முன்னிலையாக வேண்டும் என்று வலியுறுத்தினார். 2014 திசம்பர் 1 அன்று ஐயத்திற்கிடமான வகையில் நீதிபதி லோயா மரணமடைந்தார். திசம்பர் 30 அன்று நபுக சிறப்பு நீதிமன்றம் அமித் ஷா, கட்காரியா, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேரைப் போதிய சான்றுகள் இல்லை என்று சொல்லி வழக்கில் இருந்து விடுவித்தது. 92 சாட்சிகள் பிறழ்சான்றுகள் ஆயின. ஏப்ரல் 2018 இல் லோயா மரணத்தைப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

பீமா கோரேகான் வன்முறை 2018:

சனவரி 2018 அன்று பீமா கோரேகானில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் வன்முறையைத் துண்டியதற்கும் பின்னால் இருந்தவர் சம்பாஜி பிடே. இவர் ஆர்.எஸ்.எஸ். இன் முன்னாள் உறுப்பினர். மராட்டியத்தில் இயங்கும் சிவ் பிரஸ்தன் இந்துஸ்தான் என்ற அமைப்பின் தலைவர். 2008, 2009 இல் மராட்டியத்தில் நடந்த இருவேறு கலவரங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர். ஆனால், அக்குற்றச்சாட்டுகளில் இருந்து அக்டோபர் 2018 இல் விடுவிக்கப்பட்டார். அவருக்கு எதிரான ஆறு வழக்குகள் பட்னாவிஸ் தலைமையிலான பா.ச.க. அரசால் கைவிடப்பட்டது. நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ச.க. தலைவர்கள், சிவசேனாவின் தலைவர்கள் மிகுந்த மரியாதையுடன் பிடேவை ’குருஜி’ என்று அழைக்கின்றனர். பீமா கோரேகான்  வன்முறைக்காக பிடேவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யப்படவில்லை. மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் ஒருபடி மேலே சென்று மராட்டிய சட்டசபையிலேயே பிடே மீதான குற்றச்சாட்டுக்கு சான்றுகள் எதுவும் இல்லை என பிடேவுக்கு ஆதரவாகப் பேசினார்.

2018 புலந்த்சஹர் வன்முறை:

புலந்தசஹரில் நடந்த கும்பல் வன்முறையில் இருவர் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் காவலர். ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 33 பேர் மீது தேச துரோகச் சட்டதின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. ஆனால் உத்தரபிரதேச உயர்நீதிமன்றம் இவர்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது.

’காவி பயங்கர’ வழக்குகளில் புலனாய்வு அமைப்புகள் முதலில் இலகுவாக இஸ்லாமியக் குழுக்களைப் பொறுப்பாக்குகின்றன. பின்னர் அதில் இந்துத்துவப் பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பது தெரிய வருகின்றது. ஆனால், இந்த உண்மையை வெளிக்கொணரும் புலனாய்வு அதிகாரிகள் ஒன்று கொல்லப்படுகின்றனர் அல்லது மெளனிக்கப்படுகின்றனர். மாலேகான் குண்டுவெடிப்பில் பிராக்யா சிங்கின் பங்கை வெளிக்கொண்டுவந்த புலனாய்வு அதிகாரி ஹேமந்த் கர்கரே மும்பை தாஜ் வன்முறையின்போது கொல்லப்பட்டார். அமித் ஷா மீதான குற்றவழக்கை விசாரித்த  நீதிபதி லோயா ஐயத்திற்கிடமான வகையில் மரணமடைந்தார். குஜராத் கலவரத்தில் மோடிக்கு பங்கிருக்கிறது என்று சொன்ன ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சய் பட் 22 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கொன்றில் கைது செய்யப்பட்டார்.

குற்றவழக்கில் தொடர்புடைய இஸ்லாமியக் குழுக்கள் தண்டிக்கப்படுவதற்கும் இந்துத்துவக் குழுக்கள் தண்டிக்கப்படுவதற்கும் இடையிலான தகவு அதலபாதாளத்தில் இருக்கிறது. அதிகார வர்க்கம், நீதித்துறை, காவல்துறை, புலனாய்வு அமைப்புகள் என யாவும் நீதியைப் புதைத்துவிட்டு பா.ச.க. அரசின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு பக்கபலமாக நிற்கின்றன.

 

ஆளுங் கட்சி அனைத்து சனநாயக நிறுவனங்களையும் தன் கட்டுப்பாட்டில் எடுப்பதன் மூலம் காவி  பயங்கரவாதிகளைக் குற்றவழக்குகளில் இருந்து தப்ப வைக்கிறது. அதுமட்டுமின்றி அவர்களைக் கதாநாயகர்களாகவும் சித்திரிக்கிறது. காவி பயங்கரவாத சக்திகள் இப்படி விடுதலையாகி வருவதை எதிர்க்கட்சிகள் கேள்விக்கு உள்ளாக்கும் போது அவற்றை இந்துக்களுக்கு எதிரிகளென்று பா.ச.க. தலைவர்கள் வசைபாடி திசை திருப்புகின்றனர். இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று தொடங்கி இந்தியாவுக்கு எதிரானவர்கள் என எதிர்க்கட்சிகளை முன்னிறுத்துவதை பா.ச.க. தொடர்ச்சியாக செய்துவருகின்றது. எனவே தற்காப்பு நிலை எடுத்து தாராளவாத முகாமைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் இந்துத்துவ அமைப்புகளையும் காவி பயங்கரக் குழுக்களையும் எதிர்த்துப் பேசுவதில் இருந்து பின்வாங்கிக் கொள்கின்றனர். உண்மையில், காங்கிரசு உறுப்பினர்களில் சிலர் ’காவிப் பயங்கரம்’ என்ற ஒன்றே இல்லை என்றுகூட சொல்கின்றனர். காவி பயங்கரத்தை அரசியல் செயலுத்தியாக வெற்றிகரமாக வளர்த்தெடுத்துக் கொண்டே, பயங்கரவாத முத்திரையை இஸ்லாமியர்கள் மீது அழுத்தமாகப் பதித்து வைத்திருப்பதில் வெற்றியடைந்துள்ளது பா.ச.க. தாராளவாத முகாமோ காவி பயங்கர எதிர்ப்பில் உறுதியற்ற நிலையில் அடிமேல் அடிவைத்துப் பின்னுக்கு சென்றுவிட்டது.

 

ஆர்.எஸ்.எஸ். இன் காவி பயங்கரமும் தண்டனையின்றி குற்றமிழைத்தவர்கள் தப்புவதும்(impunity) இந்திய அரசியலில் ஒரு பண்பாடாய் நிலைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. சிங்களப் பெளத்தப் பேரினவாதத்தின் வளர்ச்சிப் பாதையில் இத்தகைய ’குற்றமுண்டு, தண்டனையில்லை’ என்பது ஒரு பண்பாடாய் வளர்ச்சிப் பெற்று தமிழ் மக்களை இன அழிப்பு செய்யும் வரை அது நீண்டதைக் கண்டோம். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் என்பது எதுவொன்றின் முடிவாகவோ அல்லது தொடக்கமாகவோ அமையப் போவதில்லை. தாராளவாதிகளின் வெற்றுக் கூச்சலுக்கும் பகட்டுப் பேச்சுகளும் பொய்யான ஆரவாரங்களுக்கும் இடையே சிரித்தபடி அசீமானந்தாக்களும் பிராக்யா சிங்குகளும் தண்டனைகளில் இருந்து தப்பிவருவது குருதிப் பெருக்கெடுத்து ஓடப்போகும் பேரிருள் காலமொன்று வரவிருப்பதை எச்சரிக்கையொலி எழுப்புகிறது. இஸ்லாமியர்களின் குருதியில் கால் பதித்து வழுக்கிக் கொண்டு அரியணையேறத் துடிப்பவர்களின் தேர்தல் வாக்குறுதிகளும் நடத்தையும் அந்தக் குருதிக்கு நியாயம் செய்வதாய் இல்லை என்பதைவிட வேறென்ன சொல்வது?

– யாமினி

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW