சமூகப் பொறியமைவு (social engineering) எனும் சாதியரசியல்… 

14 Apr 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 10

தேர்தல் உத்தியாக சாதிகளைக் கையாளும் சமூகப் பொறியமைவு (social engineering)  முறையைக் கைக்கொண்டு வருகிறது பா.ச.க. அமித்ஷா அதன் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருது அக்கட்சி குவித்துவரும் வெற்றியில் சமூகப் பொறியமைவுக்கு திட்டவட்டமான பங்குண்டு. பார்ப்பனர்களால் தொடங்கப்பட்ட உயர்சாதி சமூக அடித்தளம் கொண்ட கட்சி, பார்ப்பன, பனியா, தாக்கூர்களின் கட்சி என்றே பா.ச.க. அறியப்பட்டது. இந்த அடித்தளத்தை நுட்பமாக தக்கவைத்துக் கொண்டே இன்னொருபுறம் அரசியல் ஆதிக்க நிலையில் இல்லாத சாதிகளை தம் பக்கம் சேர்த்துக் கொள்கிறது. இதன் மூலம் பெரும்பாலானோரை விலக்கி வைக்கும் இந்துக் கட்சி என்ற நிலையிலிருந்து மாறி அதிகமானோரை உள்வாங்கும் இந்துக் கட்சி என்ற இடத்திற்கு நகர்கிறது.

 

அமித்ஷாவின் சமூகப் பொறியமைவு சூத்திரம் இதுதான்: அரசியல் தளத்தில் செல்வாக்குள்ள சாதியை அடையாளம் காண்பது. இச்சாதி சமூகத் தளத்தில் ஆதிக்க சாதியாக இருக்க வேண்டும் என்றில்லை. இந்த சாதியைத் தவிர்த்த இன்னப் பிற சாதியினரின் அதாவது அரசியல் தளத்தில் செல்வாக்கில் இல்லாத சாதிகளைத் தமது வாக்கு வங்கியாகத் திரட்டுவது.

அரசியல் செல்வாக்குப் பெற்ற சாதிகளுக்கு எதிராக அரசியல் அணி திரட்சியை மேற்கொள்ளும் உத்தி. இதில் செல்வாக்கு என்பது சமூக ஆதிக்க நிலை என்பதல்ல, அரசியலில் பெற்றிருக்கும் ஆதிக்க நிலை என்று வேறுபடுத்திக் காண்பது. ஏனெனில் சமூக ஆதிக்க நிலையில் இருப்பவர்களை அடித்தளமாக கொண்ட கட்சி பா.ச.க. எனவே, மேற்சொன்ன இந்த வேறுபாட்டைக் காண்பது இங்கே முக்கியமானதாகும்.

 

இந்த உத்தி என்பது மாநில அளவில் ஆய்ந்து செய்ய வேண்டியதாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சாதிகளின் அரசியல், சமூக பொருளாதார நிலை, சாதிகளுக்கிடையே வரலாற்று வழியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் பற்றிய ஆழமான அறிவிலிருந்து வகுக்க வேண்டியதாகும். பொதுவான திசை வழி என்பது 1980 க்குப் பிறகு நாடெங்கிலும் பிற்படுத்த சாதிகளின் அரசியல் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அச்சாதிகள் தம்மை அரசியல் வகையில் அணிதிரட்டிக் கொண்டும் உள்ளன. இவற்றில் எண்ணிக்கையிலும் சமூக அளவிலும் ஆதிக்கத்தில் உள்ள சாதிகள் அரசியலில் ஆதிக்க நிலையை அடைந்துள்ளன. அத்தகைய அரசியல் செல்வாக்குப் பெறாத இன்ன பிற பிற்படுத்த சாதிகளின் எண்ணிக்கையும் கணிசமானது. இச்சாதிகள் தாம் அரசியல் அதிகாரத்தில் இருந்து ஒப்பீட்டளவில் விலக்கி வைக்கப்பட்டிருப்பதாக கருதுகின்றன. இந்த சாதிகளை அடையாளம் கண்டு அவற்றை அரசியல் ஆதிக்கம் பெற்றுள்ள சாதிக்கு எதிராக அரசியல் தளத்தில் அணிதிரட்டுவதே பொதுவிதி. ஒன்றுக்கு ஒன்று கடுமையான  முரண்பாடுகள் கொண்ட இச்சாதிகளை அவற்றின் கோரிக்கைகளை ஏற்பது, கட்சி அதிகாரத்தில் பங்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, முதல்வர் பொறுப்பு எனப் பல்வேறு வகையில் தமது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டுவருகிறது பா.ச.க. மேலும் அச்சாதிகளை அடித்தளமாக கொண்ட கட்சிகளைத் தனது கூட்டணி வளையத்திற்குள் கொண்டுவருகிறது. இந்த உத்தி வெற்றிக் கனிகளைப் பா.ச.க.வுக்கு குவித்து வந்துள்ளது.

 

மராட்டியம்:

1990 களில் இருந்து பிற்படுத்தப்பட்டோரை உள்வாங்கத் தொடங்கியது பா.ச.க. 1995 இல் இருந்து சிவசேனாவோடு கூட்டணி வைத்து எதிர்க்கட்சி என்ற தகுதியைப் பெற்றது. மோடி அலையின் பின்புலத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 32 இடங்களில் வெற்றிப் பெற்றது. அதை தொடர்ந்துவந்த சட்டமன்றத் தேர்தலில் சமூகப் பொறியவைவு உத்தியின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் மராத்தா சாதியினர் 30%. அரசியல் ஆதிக்க நிலையில் இருப்பது இச்சாதியே. மராத்தா சாதியினரின் அரசியல் ஆதிக்க நிலைக்கு எதிராக மராத்தா அல்லாத சற்றொப்ப இருநூறு பிற்படுத்தப்பட்ட சாதிகளை வளைப்பதை இலக்காக்கியது. இதில் அதிகபட்ச மக்கள்தொகை கொண்ட சாதியே வெறும் 5% தான் இருக்கும். எனவே, மிகவும் துல்லியமான கவனத்துடன் வேர்க்கால்மட்ட அணிசேர்க்கைக்கான வேலையை செய்ய வேண்டும். பா.ச.க. வின் சாதி அணி சேர்க்கை என்பது உயர் சாதியினர், மராத்தா சாதியில் ஒரு பகுதியினர், மராத்தா அல்லாத இதர பிற்படுத்த சாதியினர், சிறிதளவு பட்டியல் சாதியினர் ஆகும். ஆயினும், முதன்மை வாக்கு வங்கி இலக்கு என்பது மராத்தா அல்லாத இதர பிற்படுத்த சாதியினரே. மிக முக்கியமாக மராத்தா அல்லாத முதல்வர் வேட்பாளர் – தேவேந்திர பட்னாவிஸ். இவர் ஒரு பார்ப்பனர். சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது பா.ச.க.

 

அரியானா:

இங்கு அரசியல் ஆதிக்க நிலையில் இருந்தது ஜாட் சாதியினர். எனவே, ஜாட் அல்லாதோரை அணி திரட்டுவதை இலக்காக்கி கொண்டது பா.ச.க. அதாவது, உயர்சாதியினர், இதர பிற்படுத்தப்பட்டோரில் யாதவ், குஜ்ஜார், சைனிஸ் மற்றும் தலித் மக்கள் என்பதே பா.ச.க.வின் சாதிய அணி சேர்க்கை. அதே நேரத்தில், தமக்கிருக்கும் ஜாட் வாக்கு வங்கியை இழந்துவிடாதபடி ஜாட் சாதியைச் சேர்ந்த மூத்த தலைவர் செளத்ரி பீரேந்திர சிங்கை மத்திய அமைச்சராக்கியது. தேர்தலில் வடக்கு, கிழக்கு, தென் அரியானாவில் வெற்றியையும் ஜாட் சாதியினர் அதிகம் உள்ள மேற்கு அரியானாவில் மட்டும் பின்னடைவையும் எதிர்கொண்டது. மொத்தம் உள்ள 90 இடங்களில் 47 ஐ பெற்று ஆட்சி அமைத்தது, முதல்வர் வேட்பாளர் ஜாட் அல்லாத சாதியைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார்.

 

ஆந்திர பிரதேசம்:

 

ஆந்திராவைப் பொறுத்தவரை முதலமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடு அரசியல் ஆதிக்கமிக்க கம்மா சாதியைச் சேர்ந்தவர். எதிர்க்கட்சித் தலைவர் ஓய்.எஸ். ஜெகன்மோகன் அரசியல் ஆதிக்கமிக்க ரெட்டி சாதியைச் சேர்ந்தவர். அரசியல் அதிகாரத்தில் தமக்கு உரிய பங்கில்லை என்று கருதும் கப்பு சாதியினர் கடலோர  மற்றும் ராயல்சீமா மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையோடு இருப்பவர்கள். இந்த சாதியைத் தமது அடித்தளமாக ஆக்கிக் கொள்வது என்ற சமூகப் பொறியமைவு உத்தியாக கப்பு சாதியைச் சேர்ந்த கண்ணா லட்சுமிநாராயணாவைக் கடந்த ஆண்டு மாநிலத் தலைவர் பொறுப்புக்கு கொண்டு வந்துள்ளது. எனவே, ஆந்திராவைப் பொறுத்தவரை கம்மா, ரெட்டி அல்லாத பிற சாதியினரைத் திரட்டிக் கொள்வது என்று இலக்கு வைத்து முன்னேறுகிறது.

 

தமிழ்நாடு:

பார்ப்பனரல்லாதோர் அரசியலுக்கு பேர் போன தமிழகத்தில் பார்ப்பனக் கட்சி என்று அடையாளம் வராதபடி மாநிலத் தலைவராக பார்ப்பனரல்லாதோரை அமர்த்தும் உத்தியை வெகுகாலமாக பா.ச.க. செய்துவருகிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க ( வன்னியர்), ஐ.ஜே.கே ( உடையார்), புதிய நீதிக் கட்சி( முதலியார்), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி( கவுண்டர்) என வெளிப்படையான சாதிக் கட்சிகளோடு கூட்டணி அமைத்து களம் கண்டது. 2016 தேர்தலில் இதே கூட்டணி தொடர்ந்தது. 2019 தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புரட்சிப் பாரதம் ஆகியவற்றுடன் பா.ச.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ச.க. அதனளவில் நாடார், கவுண்டர் சாதியினரிடையே நேரடி செல்வாக்குப் பெற்றிருக்கிறது. அ.தி.மு.க. தமிழகம் தழுவிய கட்சி என்றாலும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. என்பது முக்குலத்தோர் மற்றும் கவுண்டர் சாதி வாக்குகளைப் பெற்றுத்தரத்தக்கது. குடும்பர், பள்ளர் என ஏழு சாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிப்பது, பட்டியல் சாதி வெளியேற்றம் என்ற இரு கோரிக்கைகளை ஏற்பதன் மூலம் தேவேந்திர குல வேளாளர் சாதியினரைக் குறிவைக்கிறது. மொத்தத்தில் பா.ச.க. கூட்டணி என்பது நாடார், கவுண்டர், வன்னியர், மறவர், கள்ளர் அகமுடையார் ஆகிய இதர பிற்படுத்தப்பட்ட சாதியனரையும் தேவேந்திர குல வேளாளர் சாதியினரையும்  குறிவைத்து அமைக்கப்பட்டதாகும். வெகுநீண்ட காலமாகவே இத்திசையில் பா.ச.க. வேலை பார்த்து வருகிறது. ஏற்கெனவே பார்ப்பன உயர் சாதி ஆதிக்கம் கொண்ட பா.ச.க, தலித் அல்லாத இடைநிலை சாதிகளை தமது சமூக அடித்தளமாக மாற்றிக் கொள்வதற்கு முயன்று  வருகிறது. தலித் அல்லாத சாதிகளோடான அணி சேர்க்கைக்கு ஓர் ஒட்டுப் பசையாக அமையும் வண்ணம் விடுதலைச் சிறுத்தைகளுடனான மோதலை பா.ச.க. மேற்கொள்கிறது எனவும் கருதப்படுகிறது.

 

ஒருபுறம் தேசியம் பேசிக் கொண்டே மறுபுறம் சாதியடிப்படையிலான சமூகப் பொறியமைவு உத்தியைத் தேர்தலில் கையாண்டுவரும் கட்சி தான் பா.ச.க. நுட்பமான சாதிய முரண்பாடுகளைக் கையாண்டு மக்களைக் குறுக்கும் நெடுக்குமாக வசதிக்கேற்ப துண்டுதுண்டாகப் பிளந்து தேர்தல் வெற்றி மாலைக்கு ஏற்றாற்போல் கோர்க்கும் அரசியலை செய்து வருகிறது பா.ச.க. இந்த சாதியடிப்படையிலான சமூகப் பொறியமைவு அரசியல் நீண்டகால அர்த்தத்தில் மக்களுக்கு இடையிலான பிளவுகளைக் கூர்மைப்படுத்தி சாதியமைப்பை வலுப்படுத்துவதற்கே துணைசெய்யும்

  • செந்தில், இளந்தமிழகம்

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW