தலித் மக்களுக்கு எதிரான காவி அரசியல்…

10 Apr 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 6

’அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நல்லாட்சி’ என்று 2014 தேர்தலின் போதும் அதற்குப் பின்பும் பா.ச.க. முழங்கியது. கல்வி, தொழில்முனைதல், திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் தலித் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் எனப் பா.ச.க. உறுதியளித்தது. ஆனால், ஐந்தாண்டு ஆட்சியோ தலைகீழான காட்சியாக இருக்கிறது.

தலித் மக்களிடையே நான்கு பேருக்கு ஒருவரின் வாக்குகளை 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றிருந்த பா.ச.க.,  தலித் மக்களிடம் மேலும் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்று விரும்பியது. அம்பேத்கரைத் தனதாக்குவதற்காகப் பெரிதும் முயன்றது. 2015 ஆம் ஆண்டில் மத்திய அரசு, 1920 ஆம் ஆண்டு இலண்டனில் படித்த போது அம்பேத்கர் தங்கியிருந்த வீட்டை வாங்கி, அதை அருங்காட்சியமாக மாற்றியது. அம்பேத்கரின் 125 வத பிறந்த ஆண்டு கொண்டாட்டத்தைக் கையில் எடுத்தது ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரைப் பற்றிய தொடர் கட்டுரைகளை தனது ‘ஆர்கனைசர்’ ஏட்டில் எழுதி அவரை இந்துத்துவ சார்பாளராக காட்ட முயன்றது. ஆண்டுதோறும் அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடுவதற்கான ஒரு திட்டத்தை வெளியிட்டது. ரொக்கமில்லாப் பரிமாற்றத்துக்காக இந்திய தேசியப் பணக் கொடுப்புக் குழுமத்தால் உருவாக்கப்பட்டு அம்பேத்கர் பெயரிடப்பட்ட அலைப்பேசிச் செயலி பாரத் பணப் பரிமுகம் (Bharath Interface for Money – BHIM) தொடங்கப்பெற்றது. இந்தச் செயலியை 2016 திசம்பரில் பிரதமர் தொடங்கி வைத்தார். ஆனால், அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பது போல் தோற்றம் செய்தாலும் தலித் மக்களைக் கைவிட்டதுதான் நடைமுறை உண்மையாக இருக்கிறது.

அரசமைப்புச் சட்டம் தீண்டாமையை குற்றச் செயலாக்கியுள்ளது, பாதுகாப்பு, கண்ணியத்துடனான வாழ்வுரிமை, சமூக நீதி ஆகியவற்றை அரசமைப்புச் சட்ட உறுப்புகள் அடிப்படை உரிமைகளாகக் கொண்டுள்ளன. ஆனால், கொலை, பாலியல் வல்லுறுவு, வன்தாக்கு, வைதல், அம்மணமாக்கி ஊர்வலம் போகச் செய்தல் என தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளின் பட்டியல் மிக நீளமானது. தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை என்பதைவிட கடந்த பத்தாண்டுகளின் புள்ளிவிளக்கங்களைப் பார்க்கும்போது பா.ச.க. ஆட்சியில் அவை அதிகரித்திருக்கின்றன. தேசியக் குற்றப் பதிவுருக் கழகத்தின் தரவுகள் கீழே

  2008-09 2009-10 2010-11 2011-12 2012-13 2013-14 2014-15 2015-16 2016-17
எஸ்.சி. 33615 33594 32712 33716 39408 47064 45003 45001 40801
எஸ்.டி. 5582 5425 5885 5756 5922 6793 11451 10914 6568

 

2014 இல் மோடி ஆட்சிக்கு வந்த பின் பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கும் பட்டியலிடப்பட்ட பழங்குடிக்களுக்கும் எதிரான வன்முறை பெருகியிருப்பதை மேற்படி அட்டவணை எடுத்தியம்புகிறது. 2014 ஆம் ஆண்டு கணக்கின்படி உத்தர பிரதேசம், இராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலித் மக்கள் மீதான வன்முறைகள் அதிகமாக நடந்தன என்று புள்ளி விளக்கங்கள் சொல்கின்றன. தலித் பெண்களுக்கு எதிரான வன்முறை அச்சமூட்டுகின்றன. தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் முதல் இரண்டு இடத்தைப் பிடிப்பவை – 1. பாலியல், உடலியல் தாக்குதல், பாலியல் தொல்லை, பின்தொடர்தல், துயிலுரித்தல், பார்வை மோகம் உள்ளிட்ட  பெண்களை அடக்கியாளும் நோக்கத்திலான தாக்குதல் 2. பாலியல் வல்லுறவு. தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் இத்தகையவை 14% ஆகும். தலித் மக்களுக்கு எதிரானப் பெரும்பாலான குற்றங்கள் தலித் பெண்களுக்கு எதிரானவை. 2016 இல் மட்டும் தலித் பெண்களுக்கு எதிரானப் பாலியல் வல்லுறவுகள் 2541, பெண்களை இழிவுபடுத்தும் நோக்கிலான குற்றங்கள் 3372 எனப் பதிவாகியுள்ளது. எப்போதும் இத்தகைய சாதியக் குற்றங்கள் பதிவானதைவிட பதிவாகாமல் போனவையே ஏராளமாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. தேசியம் என்பதன் பெயரால் பா.ச.க. அரசு ஊக்குவிக்கும் இந்துத்துவ மேலாதிக்கம் என்பது விளிம்புநிலை மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழிவகுக்கிறது. மாட்டிறைச்சி உண்ணத் தடை, பசுவதை தடைச் சட்டங்கள், சாதிக்கலப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்பு ஆகியவற்றால் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளும் கொலைகளும் பெருகியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் 2018 நவமபரில் ஓசூரைச் சேர்ந்த காதல் இணையர்கள் நந்தீஸ்-சுவாதி கொல்லப்பட்டத்தற்குப் பின்னால் ’அனுமன் சேனா’ போன்ற சங் பரிவார அமைப்புகளின் கை இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆனால், அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணைப் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதும் பாதுகாப்பை உறுதிசெய்வதும் எங்கள் தலையாய கடமை என்று பா.ச.க. 2014 தேர்தலில் வாக்குறுதி தந்திருந்தது.

தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளை ஒட்டிப் பதிவாகியுள்ள வழக்குகளைப் பொருத்தவரை அவை சொற்பமாகவே சாதிய வன்முறையாக கணக்கில் எடுக்கப்படுகின்றன. நாடே அறிந்த கயர்லாஞ்ச் படுகொலை வழக்கில் அதை சாதியக் கொலையாக கருத்தில் கொள்ளாமல் ’பழிவாங்குவதற்காக செய்யப்பட்ட கொலை’ என்று முடிவுசெய்து நீதிகோரி போராடும் தலித் மக்களை நக்சல்கள் என்றும் தேச விரோதிகள் என்றும் முத்திரையிடுகிறது பா.ச.க. தலைமையிலான மராட்டிய அரசு.

சனவரி 2018 இல் பீமா கோரேகோனில் நடந்த தலித் மக்களின் எழுச்சிமிக்கப் பேரணிக்கு எதிராக வெடித்த வன்முறை என்பது உயர் சாதியடித்தளம் கொண்ட இந்துத்துவ ஆற்றல்களால் நடத்தப்பட்டவை. அரசு குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது; பாதிக்கப்பட்டவர்களைக் குறிப்பாக ’எல்கர் பரிஷத்’ அமைப்பை நக்சல் இயக்கமென்று முத்திரையிட்டு மாந்த உரிமை செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகளைக் கைது செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாடறிந்த அறிவுஜீவியும் மாந்த உரிமை செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே வரை இவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர். தலித் மக்களின் எழுச்சி காவி அரசியலுக்கு எரிச்சலூட்டுகிறது என்பதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு.

உயர்கல்வி நிறுவனங்களிலும் தலித் மாணவர்களுக்கு எதிரான சாதியப் பாகுபாடுகளும் கட்டமைப்பு வகையிலான வன்முறைகளும் குறைந்தபாடில்லை. நடுவண் பல்கலைக் கழகங்கள், உயர் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள், நடுவண் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் என நாட்டின் உயர்கல்வி நிலையங்களில் நுழைவதற்கும் அங்கு கல்வி கற்பதற்கும் ஏற்ற சூழல் இல்லை என்பதோடு அங்கே இடம்பெறும் சாதியப் பாகுபாடுகள் அதிகம் வெளிவராமலே போய்விடுகின்றன.  தலித் மாணவர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை சமூகப் பிரிவினர் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். 2016 ஆம் ஆண்டில் ஐதராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை செய்வதற்கு முன்னால் எழுதிய கடைசி கடிதம் நாட்டின் உண்மை நிலையைப் படம்பிடித்துக் காட்டியது. பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத், துணை வேந்தர் அப்பாராவ், நடுவண் அமைச்சர் பண்டாரு தாத்ரேயா, மாந்த வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியோர் அவரது மரணத்திற்குப் பின்னால் இருப்பது அம்பலமானது. ஓர் ஆராய்ச்சி மாணவர் பல்கலைக் கழகத்திற்குள்ளே தற்கொலை செய்து கொள்ள நேரிட்டதற்காக வெட்கப்பட்டிருக்க வேண்டும் அரசு. மாறாக, அவர் தலித்தா? தலித் இல்லையா? என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கி, நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி ’ரோஹித் தலித் இல்லை’ என்று நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால், இன்றைக்குவரை ரோஹித் வெமுலா சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவை மட்டுமின்றி, மாற்றுக்கருத்துக்கும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கும் உள்ள சனநாயக வெளி சுருங்கிக் கொண்டே போகிறது. அயல்நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (FCRA) வழியாக அரசு சாரா நிறுவனங்களை முடக்கிக் கொண்டிருக்கிறது பா.ச.க. அரசு,  தலித் மக்கள் தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான கதவுகள் ஒவ்வொன்றாய் மூடப்படுவதைக் காட்டுகிறது. பா.ச.க.  நாடெங்கும் உள்ள சமூக விலக்கலுக்கும் பாகுபாடுகளுக்குமான மையங்களை மூடியுள்ளது. சாதிய வேறுபாடுகள் குறித்து ஆய்வு நடைபெறும் தளம் அது. பெரும்பாலும் அதில் தலித் கல்வியாளர்களே உள்ளனர். விளிம்புநிலை மக்கள் கல்வி பெறுவதற்கான வெளிகள் சுருக்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக ஒடிசாவில் ராகாயாதா மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதில் கல்விப் பெற்றுவந்த அனைவரும் தலித் மற்றும் பழங்குடியினரே.

எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தின் மீதான தாக்குதல்:

இப்படி வன்முறைகள் பெருகியிருக்கும் ஒரு காலச்சூழலில் மார்ச் 20,2018 அன்று எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்தது. இச்சட்டத்தை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பது வெகுகாலமாக சாதி ஆதிக்க ஆற்றல்கள் எழுப்பிவரும் கோரிக்கையாகும். இச்சட்டத்தின்படி வழக்குப் பதிவதையே சாத்தியமற்றதாக்கும் திருத்தத்தைச் செய்தது தீர்ப்பு. ஒரு வழக்கை விசாரிக்க தலைப்பட்ட நீதிமன்றம் அந்தச் சட்டத்தையே திருத்தும் தீர்ப்பை வழங்கியது இச்சட்டம் எத்தகைய வரலாற்றுப் பின்னணியில் இயற்றப்பட்டு 2015 இல் வலுவாக்கப்பட்டது என்பதை அறிந்தோருக்கும் நாடெங்கும் வாழ்வின் ஒரு பகுதியாகவே வன்முறைக்கு ஆளாகிவரும் கோடிக்கணக்கான தலித் மக்களுக்கும் இந்த தீர்ப்பு அதிர்ச்சியளித்தது. தீர்ப்பை எதிர்த்து வெடித்தப் போராட்டங்களும் அரசின் வன்முறையால் நசுக்கப்பட்டது. 2018 ஏப்ரல் 2 அன்று நடந்த போராட்டத்தில் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், இராஜஸ்தான் என பா.ச.க ஆளும் மாநிலங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 10 பேர் கொல்லப்பட்டனர். பின்னர், நடுவண் அரசு இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதாக அறிவித்து அதை செய்தது. இந்த திருத்தம் பா.ச.க. வின் சமூக அடித்தளமாக இருக்கும் உயர் சாதியினர் இடையே அதிருப்தி ஏற்படுத்திவிட்டதால்தான் 2018 இறுதியில் நடந்த மத்திய பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ச.க. தோல்வியடைந்தது என ஆர்.எஸ்.எஸ். கருதியது. எனவே, உயர் சாதியினரைத் திருப்திபடுத்தும் வகையில் பொதுப்பிரிவில் இருந்து 10% இடங்களை எடுத்து உயர்சாதி ஏழைகளுக்கென்று ஒதுக்கும் சட்டத் திருத்தத்தை செய்துள்ளது பா.ச.க அரசு. சாதி ஏற்றத்தாழ்வையும் சாதிய வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டுவரத் தேவையானவற்றைச் செய்யாமல் சாதி ஆதிக்க சார்பையும் தலித் விரோதப் போக்கையும் வெளிப்படுத்தி வந்துள்ளது இவ்வரசு.

கையால் மலம் அள்ளுவோர் நிலை

’தூய்மை இந்தியா திட்டத்தை மிகுந்த ஆரவாரத்துடன் இவ்வரசு அறிவித்தது. நாடெங்கும் 2 கோடி கழிவறைகள் கட்டப் போவதாக இலக்கு வைத்தது. ஆனால், 26 இலட்சம் பேர் கையால் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையைத் தடுப்பதற்கென்று 2013 இல் இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. 2014 இல் தேர்தல் பரப்புரையின் போது, ’கையால் மலம் அள்ளுவதை முற்றாக ஒழிப்போம்’ என வாக்குறுதி தந்தது பா.ச.க. கடந்த இரண்டு ஆண்டுகளில் மலக் குழியில் இறங்கியதால் நச்சுக் காற்றுத் தாக்கி இறந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல நேரங்களில் இத்தொழிலில் ஈடுபட்டிருப்போர் தலித் மக்கள் என்பதைக்கூட அங்கீகரிக்க மறுக்கிறது அரசு. உண்மையில் இச்சட்டத்தைக் கடைபிடிக்கத் தவறியிருப்பதில் முதலாவது இடத்தில் இருப்பது அரசுதான். இரயில்வே துறையில் இன்னமும் கையால் மலம் அள்ளும் நிலை நீடிக்கிறது.  கையால் மலம் அள்ளுவோரின் மறுவாழ்வை உறுதி செய்யுமாறு இச்சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால், அரசோ அவர்களின் மறுவாழ்வுக்கென்று 2018-2019 நிதியாண்டில் ஒதுக்கிய நிதி வெறும் 20 கோடி ரூபாய்தான். அதுமட்டுமின்றி தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி வளர்ச்சிக் கழகத்திற்கென்று ஒதுக்கப்படும் நிதி ரூ 45 கோடியிலிருந்து ரூ 30 கோடியாக இவ்வாண்டு குறைக்கப்பட்டுள்ளது. தலித் மக்களிலேயே ஆக அதிகமாக ஓடுக்கப்பட்டும் அவல நிலையிலும் இருக்கும் ஒரு பிரிவினர் குறித்து அரசு கொண்டிருக்கும் அக்கறை இதுதான்!

குறைந்த நிதி ஒதுக்கீடு

இந்தியாவில் தலித் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த அட்டவணை சாதி உள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் உள் திட்டத்தின் கீழ் ஒதுக்கும் நிதி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தலித் மக்களின் தகவுக்கு ஏற்றால் போல் மொத்த நிதியில் பிரித்தளிக்கப்பட வேண்டும். இவ்வாட்சிக் காலத்தில் திட்டச் செலவும் திட்டமில்லாத செலவும் இணைக்கப்பட்டது. அதற்கேற்றாற் போல் அட்டவணை சாதி உள் திட்டம் மறுவடிவமைப்பு செய்யப்படவில்லை.  மத்திய அரசின் 2014-15 இல் இருந்து 2017-2018 ஆம் ஆண்டுகளின் நிதி அறிக்கையில் அட்டவணைச் சாதி உள் திட்டத்திற்கான கொள்கை மாற்றங்கள் கருத்தில் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பொதுவான நலத்திட்ட அணுகுமுறையை அரசு கடைப்பிடிக்கிறதே ஒழிய அட்டவணைச் சாதியினருக்கான குறிப்பான அணுகுமுறைக் கைவிடப்பட்டுள்ளது. இந்த ஐந்தாண்டுகளில் ஒருமுறைகூட அட்டவணைச் சாதியினரின் மக்கள் தொகை தகவிற்கு ஏற்றாற் போல் நிதி ஒதுக்கப்படவில்லை. மொத்த ஒதுக்கீட்டில் 2014-2015 இல் 8.79% மும் 2015-2016 இல் 6.63% மும் 2016-2017 இல் 7.06% மும் 2017-2018 இல் 8.91% மும் 2018-2019 இல் 6.55% மும் அட்டவணை சாதியினருக்கான உள் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. முதல் மூன்றாண்டுகள் திட்ட செலவும் திட்டமல்லாத செலவும் இணைக்கப்படுவதற்கு முன்பானது. முதல் மூன்றாண்டுகளைப் பொருத்தவரை நிரலளவாக(சராசரி) மொத்த திட்ட நிதி ரூ.15,90,287 கோடி. இதில் நிரலளவாக 7.49% தான் அட்டவணை சாதி உள் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. மொத்தமாக ஒதுக்கியிருக்க வேண்டிய ரூ 2,63,988 கோடி ஒதுக்கப்படவில்லை. பிந்தைய இரண்டாண்டுகளைப் பொருத்தவரை நிரலளவாக 7.73% தான் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது. அதாவது ஜாதவ் ஆணையப் பரிந்துரையின்படி ஒதுக்கியிருக்க வேண்டிய ரூ 1,32,016 கோடி  ரூபாயை ஒதுக்கவில்லை. தலித் மக்களில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு மிகமிக குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான மொத்த ஒதுக்கீடான ரூ 1,21,963.32 கோடியில் 0.53% மட்டுமே தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதென பாலின நிதி அறிக்கை(Gender Budget Statement) சொல்கிறது.

போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பதோடு அப்படி ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் தலித் மக்களின் வளர்ச்சிக்கு நேரடியாகப் பங்களிக்கக் கூடிய இலக்கு நோக்கிய திட்டங்களுக்கு அன்றி பொத்தாம் பொதுவான ஒதுக்கீடாக உள்ளன. சான்றாக 2018-2019 இல் நிதி ஒதுக்கப்பட்டுள்ள தன்மை என்பது,  வெறும் 50.69% (ரூ.28,697 கோடி ரூபாய்) தான் நேரடியாக தலித் மக்களின் வளர்ச்சிக்கு துணை செய்யக் கூடிய இலக்குத் திட்டங்களுக்கு ஆகும். மீதி 49.31% (ரூ 27,920.76 கோடி) நேரடி வளர்ச்சியை இலக்கு வைக்காத திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு ரூ 857.92 கோடி, சூரிய மின் சக்தி உற்பத்திக்கு ரூ 244.50 கோடி என தலித் மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிதி வெவ்வேறு பொதுத் திட்டங்களுக்கு மடைமாற்றப் படுகிறது. இவை தலித் மக்களுக்கென்று ஒதுக்கப்படும் நிதியை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டு நெறிகளை மீறுவதாகும். இப்படியெல்லாம் செலவு செய்வதன் மூலம் தலித் மக்களுக்கும் பொதுசமூகத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்ய முடியாது.

அட்டவணை சாதி மாணவர்களுக்கான கல்வியுதவித் தொகையைப் பொருத்தவரை மத்திய அரசு  2016-2017 ஆண்டுவரை மாநிலங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ரூ 8000 கோடி என சமூகநீதி, அதிகாரவுரிமை அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொன்னார். அதுமட்டுமின்றி, இதை சரிசெய்யும் பொருட்டு நிலுவைகள் கொடுப்புக்காகவும் சேர்த்து 2016-17 இல் ஒதுக்க வேண்டிய 11,407 கோடி ரூபாயில் 2,791 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. 2017-18 இல் துறைசார் நிலைக்குழு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி பரிந்துரைத்த போதிலும் 556 கோடி ரூபாய் மட்டும் அதிகரிக்கப்பட்டு 3,347.99 கோடியாக உயர்த்தப்பட்டது.

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அட்டவணை சாதித் தொழிலாளர்கள் 23%, அட்டவணைப் பழங்குடித் தொழிலாளர்கள் 18% என அரசுப் பதிவுருக்கள் சொல்கின்றன. 15 நாட்களுக்குள் கூலி கொடுக்கப்பட்டாக வேண்டும். காலந் தாழ்த்தினால் இழப்பீடு கொடுக்க வேண்டும். ”காலந்தாழ்ந்த இழப்பீடு” என்ற வகையில் 2017-18இல் தொழிலாளர்களுக்கு நடுவணரசு தர வேண்டிய தொகை 2,21,22,145 ரூபாய் என்று அதன் வலைதளம் சொல்கிறது.

கடந்த 35 ஆண்டுகளில் அட்டவணை சாதிகள்/அட்டவணைப் பழங்குடிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ2.8 இலட்சம் கோடி செலவு செய்யப்படவில்லை என்ற விவரத்தை 2016 இல் ‘indiaspend’ வெளியிட்டது. உண்மையில் இந்த தொகை என்பது இந்தியாவின் விவசாய பட்ஜெட்டை விட 8 மடங்கு அதிகம். இந்தியாவில் உள்ள தலித் மக்கள், பழங்குடிகளுக்கு இதைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்றால் தலைக்கு ரூ11,289 கொடுக்க வேண்டும். மோடி ஆட்சியில் இப்படி செலவு செய்யப்படாத போக்கில் எவ்வித மாற்றமுமில்லை.

’அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற மோடியின் வாக்குறுதியின்படி தலித் மக்கள் உள்ளடக்கப் பட்டார்களா? என்றால் இல்லை என்றே தரவுகள் சொல்கின்றன, அவரது வாக்குறுதி வெறும் வாய்வீச்சு எனப் புலனாகிறது.

செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW