பெண்களை இழிவுபடுத்தும் பா.ச.க’வின் சித்தாந்தமும் நடைமுறையும்

06 Apr 2019

(பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 2)

கடந்த நான்கு ஆண்டுகளில் பா.ச.க அரசின் ஆட்சியில் பெண்களைப் பாதுகாக்கிற திட்டங்கள் என்ற பெயரில் செய்யப்பட்ட விளம்பரங்கள், மோடியை எதிர்த்ததால் கொல்லப்பட்ட / கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள், கல்லூரி மாணவிகள், பெண் அரசியல்வாதிகள், பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள் என ஏராளமானவை பா.ச.க வின் பெண் விரோத வரலாற்றுப் பக்கங்களை நிரப்பி உள்ளன.

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் – ஓர் வெற்று விளம்பரமா?

கடந்த சனவரி 22, 2015 அன்று ‘beti bachao, beti padhao’ (பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், படிக்க வைப்போம்) என்ற திட்டத்தை தொடங்கினார் மோடி. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் குறையும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பது மற்றும் பெண்களை பாரபட்சமாக பார்க்கிற/ நடத்துகிற சமூகத்தின் சிந்தனை போக்கை மாற்றுவது என்பதாகும். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றனர். மகளோடு செல்பி (selfie with daughter) என்ற பரப்புரையும் மிக வேகமாக பரவியது. ஆனால், கள நிலவரம் சொல்லும் உண்மை என்ன?

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற திட்டத்திற்கு மைய அரசு கடந்த நான்கு நிதி ஆண்டுகளில் ஒதுக்கிய தொகை ரூ. 648 கோடி. ஆனால், 50% மேலான தொகை இத்திட்டத்தைப் பற்றி விளம்பரம் செய்யவே பயன்பட்டுள்ளது! பன்னாட்டு கல்வி நாளை ஒட்டி சனவரி 24, 2019 அன்று டெல்லியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பெண் குழந்தைகளின் கல்வி, பிறப்பு விகிதம் பற்றிய பேசப்பட்டதின் சாரம்சம் இது.

“பெண் ஆசிரியர் இல்லாமை, கழிப்பிட வசதி இல்லாமை, பாதுகாப்பு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல லட்சக்கணக்கான பெண்கள் இன்னும் பள்ளிகளுக்கு வெளியிலேயே இருக்கிறார்கள். போதிய மாணவர் சேர்க்கையின்மை என பல்வேறு காரணங்களைக் காட்டி ஏறக்குறைய 2 லட்சம் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.

1901 இல் 1000 ஆண்களுக்கு 970 பெண்கள் என இருந்த பிறப்பு விகிதம், 2011 கணக்கின் படி 1000 ஆண்களுக்கு 940 பெண்களாக குறைந்து இருக்கிறது. 1000 க்கு 30 பெண் குழந்தைகள் எங்கே போனார்கள்?

27% பெண்கள் 18 வயது முடியும் முன்னரே திருமண வாழ்விற்குள் தள்ளப்படுகின்றனர்

மூன்றில் ஒரு பங்கு பதின்ம வயது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள்

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் திட்டம் கருவிலேயே பாலினத்தை கண்டறிந்து பெண் குழுந்தைகளை கருக்கொலை செய்யும் பெண்களுக்கு எதிரான சமூக நிலைமையை மாற்றி பெண் குழந்தைகளின் பிறப்பை, உயிர் வாழ்தலை பாதுகாக்கும் நோக்கதோடு தொடங்கப்பட்டது. எனவே கருவில் பாலினம் கண்டறியும் சோதனைக்கு தடை விதிக்கும் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை கடமையாக அறிவித்தது.

ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி ’பாலினம் கண்டறிதலை சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் ஒவ்வொரு குழந்தை பிறப்பையும் கண்காணிக்க முடியும். எனவே பெற்றோர்கள் கருக்கொலை செய்ய அச்சப்படுவார்கள்’ என்றார். அதோடு, இந்திய அளவில் மருத்துவ துறையைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு வழிகாட்டு குழுவை ஏற்படுத்தி, இச்சட்டத்தை ஆய்வு செய்ய முயற்சி செய்கிறது. இந்த குழுவில் பெண்கள் அமைப்புகள் யாரும் சேர்க்கப்பட வில்லை. இந்த முயற்சி, லாப நோக்கத்தில் பாலினத்தை கண்டறியும் சோதனையை ஒரு வியாபாரமாக செய்ய முனையும் மருத்துவ துறையைச் சார்ந்தவர்களை பாதுகாத்து, குழந்தை பிறப்பு குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஏதும் அற்ற பெண்களை குற்றவாளிகளாக மாற்றும் செயலாகும். ஆரம்ப சுகாதார வசதிகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சேராத நிலையில், நாட்டில் நிகழும் ஒவ்வொரு பிரசவத்தையும் கண்காணிப்போம் எனக் கூறும் மேனகா காந்தியின் கூற்று வெறும் நகைப்புக்குரிய ஒன்றாகும். (https://thewire.in/gender/why-maneka-gandhis-proposal-on-sex-determination-will-make-a-bad-situation-worse)

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்

முசாபர் நகர் மத வன்முறையும், முஸ்லிம் பெண்கள் மீதான பாலியல் வன்முறையும்

2013 ஆம் ஆண்டு மேற்கு உத்திர பிரதேசத்தில் உள்ள முசாபர் நகரில் ஒரு மத வன்முறையை தூண்டி, நாடாளுமன்ற தேர்தலில் இந்து வாக்குகளை ஒன்று திரட்டியது, பா.ச.க. அப்போதும், மகள்களைப் பாதுகாப்போம் என முழக்கம் வைத்தது பா.ச.க. ஆனால், அப்போது, முஸ்லிம் ஆண்கள் நமது மகள்களை பாலியல் வன்முறை செய்வதில் இருந்து, காதலித்து திருமணம் செய்வதில் இருந்து பாதுகாப்போம் என்று முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரையை செய்தது.

சாம்லி பகுதியின் ஜாட்டுகளின் கூட்டம் ஒன்றில் அமித் சா பேசும் போது, ‘கலவரம் செய்ய வேண்டும் என யாரும் விரும்புவதில்லை. ஆனால், ஒரு சமூகம் நமது மகள்களின், தங்கைகளின் மரியாதைக்கு எதிராக நடக்கும் போது, அரசு நிர்வாகம் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கும் போது, நமது மக்கள் கலவரத்தில் தள்ளப்படுகின்றனர்’ என்றார்.

ஆனால், உண்மையில் நடந்தது என்ன? முசாபர் நகர் மத வன்முறையில் முஸ்லிம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். வழக்குகள் பதியப்பட்டன, ஆனால், இதுவரை அந்த வழக்குகள் விசாரிக்கப்பட வில்லை. அது மட்டுமின்றி, 2013 இல் மோடியின் அமைச்சரவையில் உள்ள சஞ்சீவ் பால்யன், பாலியல் குற்றவாளிகளை நேரில் சந்தித்து, பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காதீர்கள் என்று கூறி முஸ்லிம் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளுக்கு ஒரு மத அடையாளத்தை கொடுத்தார்.

டெல்லி நிர்பயா பாலியல் வன்முறைப் படுகொலை – வாக்கு சேகரிக்க மட்டுமே

2012 இல் டெல்லியில்  கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். நாடே கொதித்து எழுந்தது. பல்வேறு சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

’இந்தியாவை பாலியல் வன்முறையற்ற நாடாக மாற்றுவோம்’ என மோடியும் முழங்கினார். ஆனால், 2014 இல் அவர்கள் ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் என்ன நடந்தது?

2014, ஆகஸ்டு மாதத்தில், நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி, ‘டெல்லியில் நடந்த ஒரு சிறிய பாலியல் வன்முறை உலகமுழுவதும் விளம்பரப் படுத்தப்பட்டு சுற்றுலாத் துறைக்கு பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தி விட்டது’ என்றார். இதற்கு பதிலளித்த நிர்பயா’வின்  அம்மா, ‘இந்த வார்த்தைகள் எனக்கு துன்பத்தையும் வலியையும் கொடுக்கின்றன. என்னுடைய மகளின் பெயரை மத்திய  அரசை விமர்சிக்கவும், வாக்குகளை சேகரிக்கவும் பயன்படுத்திக்கொண்டனர். அதிகாரத்திற்கு வந்த பிறகு, உருப்படியாக எதுவும் செய்யாமல், என் மகளின் துயரத்தை ‘சிறியது’ என்று கூறியதன் மூலம் அவர்களின் குறுகிய சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்தி விட்டனர்’ என்றார். (‘https://www.theguardian.com/world/2014/aug/22/gang-rape-bus-victim-father-indian-minister-small-incident’ The Guardian, Aug, 22, 2014)

தலித் பெண்கள் மீதான வன்முறைகள்

2017, சனவரி மாதத்தில், அரியலூர் மாவட்டத்தில், நந்தினி என்ற தலித் சிறுமி, வன்னியர் சாதியை சேர்ந்த இந்து முன்னணி, வட்ட பொறுப்பாளர், மணிகண்டன் என்பவரால் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி, கொடூரமாகக் கொல்லப்பட்டார். குடும்ப வறுமையைப் போக்க படித்துக் கொண்டே பகுதி நேர வேலைக்கு செல்ல முடிவெடுத்த நந்தினி, தன் வீட்டுக்கு அருகில் சாலை போடும் பணியில் சேர்ந்தார். அங்கே, மணிகண்டனை சந்தித்த அந்த சிறுமி, அவன் காதலிப்பதாகச் சொன்னதை நம்பி இருக்கிறார். அந்த சிறுமியை தனது பாலியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டார் மணிகண்டன், தான் கருத்தரித்து இருப்பதை சொல்லி நந்தினி திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். கருவைக் கலைக்க முயற்சி எடுத்த மணிகன்டன், அது முடியாமல் போக, தன் நண்பர்களோடு சேர்ந்து அந்த சிறுமியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்முறை செய்து கொடூரமாகக் கொலைச் செய்து உடலை கிணற்றில் வீசி விட்டனர்.

மகள் மணிகன்டனால் கடத்தப்பட்டு இருக்கிறாள் என்று தெரிந்து அரியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற நந்தினியின் அம்மாவை காவல் துறையினர் மிக மோசமாக நடத்தி, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமல் இழுத்தடித்தனர். பிறகு இரண்டு வாரம் கழித்து நந்தினியின் உடல் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டது. காவல் துறை நந்தினியை கண்டு பிடிப்பதில் மிகவும் மெத்தனமாக இருந்தது. ‘பெண்ணை ஒழுங்காக வளர்க்க வில்லை’ என திரும்ப திரும்பச் சொல்லி உடலை வாங்கி உடனடியாக இறுதி சடங்குகள் செய்யச் சொல்லி குடும்பத்தை மிரட்டியது. இது அனைத்தும் பா.ச.க வின் அங்கமாக மாறிப்போன அ.தி.மு.க அரசின் ஆதரவில் இந்து முன்னணி அமைப்பு கொடுத்த அழுத்தத்தில் நடந்தது.

தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை 2016 படி, மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலித்துகள் மீதான வன்முறை  அதிகரித்து இருக்கிறது. தலித்துகள் மீதான வன்முறையில் தலித் பெண்கள் மீதான வன்முறை என்பது அதிகமானதாக இருக்கிறது. பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், பின் தொடர்தல், ஆடையை கலைந்து பொதுவில் நடக்க விடுதல், பாலியல் வல்லுறவு போன்றவையே தலித் பெண்கள் பெரும்பாலும் எதிர் கொள்ளும் பிரச்சினைகளாக இருக்கின்றன. (https://indianexpress.com/article/explained/ncrb-data-2016-most-atrocities-against-dalits-involve-crimes-against-women-most-cases-in-bengaluru-4962457/)

இந்த நிலையில் தான், மார்ச்சு 20, 2018 அன்று உச்ச நீதிமன்றம், முதல் கட்ட விசாரணையின்றி, பழங்குடிகள் மற்றும் பட்டியலின மக்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டப் பிரிவுகளின் கீழ் யார் மீதும் வழக்கு பதிவு செய்யக்கூடாது என்றும் இச்சட்டம் தவறான வழியில் பயன்படுத்தப் படுவதால், அதற்கு உரிய திருத்தங்களை சட்டத்தில் கொண்டு வர வேண்டும் என தீர்ப்பளித்தது. இது பழங்குடிகள், தலித்துகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் வேலை நிறுத்தம் அறிவித்து தலித் அமைப்புகள் போராட்டம் செய்த அன்று காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், உண்மை கள நிலவரம் என்னவென்றால், 2006-2016 வரையில் தலித், பழங்குடிகள் மக்கள் பதிவு செய்து விசாரிக்கப்படாமலேயே நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 99% அதிகரித்து இருக்கிறது. தண்டனை பெற்ற குற்றவாளிகளின் எண்ணிக்கை 26%, வழக்கு விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74% உள்ளது. (https://www.indiaspend.com/over-a-decade-crime-rate-against-dalits-rose-by-746-746/)

பெண்களை பாலியல் வன்முறை செய்த சாமியார்களுக்கு ஆதரவாக

ஆகஸ்டு மாதம், 2017 இல் அரியானா நீதிமன்றம், சாமியார் ராம் ரஹிம் 2 பெண் சீடர்களை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்திற்காக தண்டனை வழங்கியது. 2002 இல் நடந்த இந்த பாலியல் வன்முறைகள் பற்றிய ஒரு பெண் பெயரில்லாமல் எழுதிய கடிதத்தை வெளியிட்ட காரணத்தினால், ராமசந்திர சத்திரபதி என்ற பத்திரிக்கையாளரும் ராம் ரஹிம் சாமியாரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கிலும் சமீபத்தில் சாமியாருக்கு நீதி மன்றம் தண்டனை வழங்கியது.2017 அரியானா நீதி மன்றம், ராம் ரஹிம் க்கு தண்டனை வழங்கியபோது, பன்ஞ்சகுலா என்ற இடத்தில் சாமியாரின் சீடர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரம் பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லிக்கும் பரவியது. ஆனால், மத்தியில் இருந்த மோடி அரசோ, அரியானாவில் இருந்த பா.ச.க அரசோ இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி எடுக்க வில்லை. பஞ்சாப் மற்றும் அரியானா நீதி மன்றங்கள் இது பற்றி கூறுகையில், ‘அரியானா அரசு நிர்வாகம் ராம் ரஹிம் சீடர்களுக்கு மறைமுக ஆதரவாக இருந்தது’ என்று குறிப்பிட்டது.

மத்திய அரசுக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லை என்று நீதி மன்றத்தில் மோடி அரசு கூறிய போது, ‘பஞ்சகுலாவும் அரியானாவும் இந்தியாவின் பகுதிகள். இந்தியாவின் பகுதிகள் அல்ல என்று சொல்லிவிடுங்கள். எனவே, மாநில அரசுக்கு தான் பொறுப்பு என்று சொல்லுங்கள். என்ன பொறுப்பற்றதனமானது இது? இது ஒரு அசாதாரணமான சூழல். மத்திய அரசு தலையிட்டு அப்பகுதி மக்களை காப்பாற்ற வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது’ என அரியானா நீதி மன்றம் கண்டித்தது.

உன்னாவோ பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகராஜ், சாமியாருக்கு ஆதரவாக, ‘கோடிக்கணக்கான மக்கள் ராம் ரஹிமை ஆதரிக்கிறார்கள். ஒரே ஒருவர் தான் அவரை பற்றி புகார் அளித்து இருக்கிறார். அந்த ஒரு நபர் சொல்வது உண்மையா அல்லது கோடிக்கணக்கான மக்கள் சொல்வது சரியா?”  என அறிவு பூர்வமான கேள்வியை எழுப்பினார்!

இதே போல், 2013 இல் ஆசாராம் என்ற 77 வயது சாமியாருக்கு, 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் ஜோத்பூர் நீதி மன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்து யுவக் சபா என்ற இந்துத்துவ அமைப்பு அசாராமுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது. இது காங்கிரசின் சதி என்று குற்றம் சாட்டியது. ‘இந்த சதிக்கும் பின் அசாராம் சாமியாரின் ஆசிரமத்தை சேர்ந்தவர்களும், கிறித்துவ நிறுவனங்களும் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சாமி கூறினார்.

உன்னாவோ பாலியல் குற்றவாளி பா.ச.க சட்டமன்ற உறுப்பினருக்கு ஆதரவாக

பா.ச.க ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தில், 2017 இல் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கரிடம் வேலை கேட்டு சென்ற போது குல்தீப் தன்னை கூட்டு பாலியல் வன்முறை செய்ததாகவும், குல்தீப்புடன் தொடர்புள்ள மேலும் சிலரால் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகியதாகவும் புகார் கொடுத்தார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர். ஒரு வருடம் ஆகியும் குற்றவாளியான குல்தீப் கைது செய்யப்பட வில்லை. இறுதியில் அலகாபாத் நீதி மன்ற தலையிட்ட பிறகு தான் கைது செய்தனர். மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பாவை பொய் வழக்கில் கைது செய்து சிறையில் கொடும் காயங்களை ஏற்படுத்தி கொன்று விட்டனர். பாதிக்கப்பட்ட பெண் முதல்வர் யோகி ஆதித்திய நாத் வீட்டின் முன் தற்கொலை செய்ய முயன்ற போது, யோகி குற்றவாளி குல்தீப்புக்கு ஆதரவாக செயல்பட்டார். குல்தீப்பை கைது செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்திரவிட்டபோது, யோகி அரசு, மேலதிக விசாரணை செய்த பிறகு தான், குல்தீப்பை கைது செய்ய முடியும் எனச் சொன்னது. அதை கண்டித்து நீதி மன்றம், ‘சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கைபடி, மருத்துவ துறையச் சேர்ந்தவர்கள், காவல் அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாலியல் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் எனும் போது மட்டும், மேலும் விசாரணை செய்த பிறகே செய்ய முடியும் என்கிறீர்கள். காவல் துறை பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை வைத்து முதல் தகவல் அறிக்கை தயார் செய்யவும் தயங்குகிறது. இப்படித்தான் காவல் துறை நடந்து கொள்ளும் என்றால், பாதிக்கப்பட்டவர்கள் எங்கே போய் புகார் எழுப்புவார்கள்? இது தொடருமானால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகத்தான் நாங்கள் கூற வேண்டி இருக்கும்’ என்றது.

பழங்குடி பெண்களை கடத்தி இந்து அடிப்படைவாதிகளாக்க முயற்சி

சேவா பாரதி, வித்யா பாரதி, ராஸ்டிர சேவிகா சமிதி என்ற ராஸ்ட்ரிய சுயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) இன் துணை அமைப்புகள். 2015 ஜூன் மாதம், இந்த அமைப்புகள் ‘இந்து மதத்திற்குள் கொண்டு வருதல்’ மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஊழியராக மாற்றுதல் என்ற நோக்கத்துடன் அஸ்ஸாம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து 31 பழங்குடி பெண்களை கடத்தி சென்றனர். இது டெல்லி ஆட்கடத்தலுக்கு எதிரான பிரிவு, அஸ்ஸாம் குழந்தைகள் உரிமை ஆணையம் போன்றவை உறுதி செய்தன. 2018, ஆகஸ்டு மாதம் 19 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. குழந்தைகளை கடத்திச் செல்வது, அவர்களை அடிப்படைவாதிகளாக மாற்றுவது பற்றி ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட்டுருக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றங்களும் இது குறித்து பெரிய அக்கறை காட்டவில்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல்

கத்துவா சிறுமி மீதான பாலியல் வன்முறை, படுகொலை, பா.ச.க ஆதரவு

கத்துவாவில் 8 வயதான பக்கர்வால் பழங்குடி முஸ்லிம் சிறுமி 2018 ஆண்டு, காவல் துறை அதிகாரி, முன்னாள் வருமான வரி துறை அதிகாரி உள்ளிட்ட சிலரால் கடத்தப்பட்டு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டாள். காவல்துறை சாட்சியங்களை அழித்து விட்டது. பிறகு வழக்கு குற்றவியல் துறைக்கு மாற்றப்பட்டது. இந்த பாலியல் வன்முறையும், கொடூரக் கொலையும் பக்கர்வால் முஸ்லிம் பழங்குடி மக்களிடையே ஒரு அச்சத்தை உண்டாக்குவதற்காக செய்யப்பட்டது என காவல் துறை தனது விசாரணையில் கூறியது.

இந்த கொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கை நடத்த விடாமல் செய்ய பா.ச.க கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு பார் அசோசியேசன் பல்வேறு முயற்சிகளை செய்தது. வழக்கை நடத்திய தீபிகா சிங் ரஜாவத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்து ஏக்தா மன்ஞ் என்ற பெயரில் கொலைகாரர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பா.ச.க சட்ட மன்ற உறுப்பினர்களே கலந்து கொண்டனர். இரண்டு பா.ச.க அமைச்சர்கள் பதவி விலகினர். ஆனால், ஆதரவு பேரணியில் கலந்து கொண்ட கத்துவா தொகுதியை சேர்ந்த பா.ச.க சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ஜாஸ்ரோட்டியா, பின்னர் அமைச்சர் ஆக்கப்பட்டார்.

1947 இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது, ஜம்மு பகுதியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு பிறகு ஜம்முவில் இருந்த முஸ்லிம்கள் பெரும்பாலும் இடம்பெயர்ந்து விட்டனர். இப்போது ஜம்மு இந்து பெரும்பான்மை பகுதியாக உள்ளது. கத்துவா சம்பவம் என்பது மிச்சம் இருக்கிற முஸ்லிம்களையும் ஜம்முவை விட்டு விரட்டுவதற்காக, இந்து பெரும்பான்மை ஜம்முவாக மாற்றுவதற்காக நடத்தப்பட்ட ஒன்று.

லவ் ஜிகாத்

கேரளாவில் அகிலா என்ற இந்து மதத்தை சேர்ந்த 24 வயது பெண் தன் விருப்பமாக இஸ்லாம் மதத்தை தேர்வு செய்தார். ஹாதியா என்று பெயரையும் மாற்றிக்கொண்டார். இதை அறிந்த அவரின் தந்தை அசோகன் கேரள உயர் நீதி மன்றத்தில் தன்னுடைய மகள் அகிலா சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி ஆட்கொணர்வு மனு அளித்தார். ஆனால், நீதி மன்றம் ‘சத்திய சரனானி கல்வி குழுமம்’ நடத்தும் விடுதியில் தன்னுடைய விருப்பத்தின் பேரில் தங்கி இருப்பதாக தெரிவித்தது. அதே ஆண்டு மீண்டும் அசோகன் கேரள நீதி மன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். சில இஸ்லாமிய அமைப்புகள் அவருடைய மகள் அகிலாவை ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்பில் சேர்க்க இருப்பதாகவும் சபீன் ஜகான் என்பவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி மனு செய்தார். இந்த மனு விசாரணையில் இருக்கும்போதே ஹாதியா சபீன் ஜகானை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கேரள நீதி மன்றம் ’24 வயதே ஆன ஹாதியா பலகீனமானவர், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர். அவரை பாதுகாப்பனவர்களின் கைகளில் ஒப்படைப்பது நீதி மன்றத்தின் கடமை’ எனக் கூறி ஹாதியாவை அவரின் பெற்றோர்களின் பாதுகாப்பில் ஒப்படைத்தது. மேலும், அவரின் திருமணம் செல்லாது என்றும் கேரள உயர் நீதி மன்றம் அறிவித்தது. 24 நான்கு வயதான ஒரு பெண் தான் விரும்புகிற மதத்தை பின்பற்றவும், தான் விரும்பிய ஆணை திருமணம் செய்யவும் இந்த நாட்டின் அரசியல் சட்டம் முழு அங்கீகாரம் வழங்குகிறது. அதில் எந்த நீதி மன்றமும் சமூக அமைப்புகளோ தலையிட முடியாது. இருந்தாலும் கேரள நீதி மன்றம் 24 வயது ஆனாலும் பெண் சுயமாக சிந்திக்கும் திறன் அற்றவள் என்ற ஆணாதிக்க பிற்போக்கு சிந்தனையை வெளிப்படுத்தி அரசியல் சட்டத்தையே மீறுகிற ஒரு தீர்ப்பை கொடுத்தது! (https://www.thehindu.com/opinion/lead/the-hadiya-caution/article23606517.ece)

இந்த தீர்ப்பை எதிர்த்து சபீன் ஜகான் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி கெஹர் கேரள நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை கேள்விக்குட்படுத்துவதற்கு மாறாக இந்த வழக்கில் கூறப்பட்ட லவ் ஜிகாத், சபீன் ஜகானுக்கு உள்ள தீவிரவாத தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட்டார்’. ’என்னுடைய தந்தை ஒரு கடவுள் மறுப்பாளர். நான் வேறு ஒரு மதத்திற்கு மாறுவதோ வேற்று மதத்தவரை திருமணம் செய்வதையோ தடுக்க கூடியவர் அல்ல. அவரை யாரோ சிலர் தூண்டி விடுகிறார்கள்’ என்று ஹாதியா தன்னுடைய தந்தையின் நடவடிக்கை பற்றி கூறினார். இந்து பெண்களை காதல் என்ற பெயரில் மதம் மாற்றி திருமணம் செய்து இந்து மதத்தை அழிக்க ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இஸ்லாமிய அமைப்புகள் சதி செய்கின்றன என்பது குறிப்பாக பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி நடக்கின்ற திருமணங்களை குறி வைத்து இந்துத்துவ அமைப்புகள் செய்கின்ற தொடர் பிரச்சாரம் ஆகும். (https://scroll.in/latest/869409/kerala-conversion-case-hadiya-asks-supreme-court-to-allow-her-to-live-with-her-husband). ஆனால், இந்த வழக்கின் தொடர்ச்சியாக கேரளாவில் நடைபெற்ற இஸ்லாத்திற்கு மதம் மாறி நடைப்பெற்ற 11 திருமணங்களை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு ’லவ் ஜிகாத்’ என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி விட்டது. (’ https://www.thenewsminute.com/article/no-evidence-love-jihad-nia-probe-interfaith-marriages-kerala-ends-90153’)

பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்த போது வழங்கிய தீர்ப்பில் ‘ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது கேரள உயர் நீதிமன்றம் ஹாதியா, சபீன் ஜாகன் திருமணத்தை செல்லாது என்று கூறியிருக்கக் கூடாது’ என்று கூறி கேரள உயர் நீதி மன்ற தீர்ப்பை செல்லாது என்றது. மேலும், உச்ச நீதி மன்ற தீர்ப்பானது, தான் விரும்புகிற மதத்தை பின்பற்றவும், தான் விரும்புகிற நபரை திருமணம் செய்து கொள்ளவும் அரசமைப்பு சட்டம் பிரிவு 21 படி ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிமை உள்ளது என்பதை வலியிறுத்தி, ஹாதியா, சபீன் ஜகான் திருமணத்தை உறுதி செய்தது.

இஸ்லாமிய பெண்களைக் கொண்டே இஸ்லாமிய சமூகத்தை ஒடுக்குதல்

பாரதிய முஸ்லிம் மகிளா ஆந்தோலன், பிபாக் குழு போன்ற இஸ்லாமிய பெண்கள் அமைப்புகள் உடனடி முத்தலாக் என்ற நடைமுறைக்கு எதிராக போராடி வந்தன. அவர்கள் உச்ச நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் உடனடி முத்தலாக் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பளித்தது. உடனே பா.ச.க அனைத்து முஸ்லிம் ஆண்களும் கெட்டவர்கள், பெண்களுக்கு எதிரானவர்கள் என்றும் தங்களை முஸ்லிம் பெண்களின் உரிமைக்காக போராடுபவர்கள் போலவும் பிரச்சாரம் செய்தது.

திருமணம், விவாகரத்து, பராமரிப்பு, குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்களில் அனைத்து மதங்களை சேர்ந்த தனி நபர் சட்டங்களும் ஆணாதிக்க சிந்தனையை உள்வாங்கியதாகவும் பாரபட்சமானதாகவும் இருக்கின்றன. அனைத்து சட்டங்களிலும் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் இருக்கின்றன. சிறப்பு திருமணச் சட்டத்தில் உள்ள ஒரு மாத அறிவிப்பு என்ற நிபந்தனை சாதி/மதம் கடந்து திருமணம் செய்பவர்களுக்கு எதிராக சாதி, மத வெறி கும்பல்கள் வன்முறை நிகழ்த்துவதற்கு வாய்ப்பாக உள்ளது. இஸ்லாமிய தனி நபர் சட்டம் பலதார மணத்திற்கு ஆதரவாக இருப்பது போல குஜராத்தில் உள்ள ’மைத்திரி கரார்’ என்ற நடைமுறை இரு தார மணத்திற்கு சட்டம் அங்கீகாரம் வழங்குகிறது.

பெண்களுக்கு எதிரான இது போன்ற விசயங்களை பாலின சமத்துவம் என்ற கோணத்தில் அணுகாமல், இஸ்லாமியர் வெறுப்பு என்ற கோணத்தில் அணுகிறது பா.ச.க. 2015 இல் பாலின நீதிக்கான தனி நபர் சட்ட சீர் திருத்தங்கள் பற்றி பெண்கள் நிலை பற்றிய உயர் மட்ட குழு மோடி அரசுக்கு அளித்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டது என்பதை இங்கே நினைவு கூற வேண்டி இருக்கிறது!

‘கோப்ராபோஸ்ட்’ வெளிக்கொண்டு வந்த ஆர்.எஸ்.எஸ் இன் இஸ்லாமிய வெறுப்பு அரசியல்

2015 இல் கோப்ராபோஸ்ட் ஊடகம் ஆர்.எஸ்.எஸ், பா.ச.க ஆட்களை ஜூலியட் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு எப்படி இஸ்லாமிய வெறுப்பு அரசியல் செய்யப்படுகிறது என்பதை வெளிக்கொண்டு வந்தது. ஒரே ஒரு உண்மையான லவ் ஜிகாத் நிகழ்வும் நடைபெறவில்லை என்பதை அவர்களே ஒத்துக்கொண்டார்கள். (https://www.cobrapost.com/blog/operation-juliet-busting-the-bogey-of-love-jihad-2/900)

ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒம்கார் சிங் முஸ்லிம் ஆண்களின் பிடியில் இருந்து 125 பெண்களை காப்பாற்றியதாகக் கூறினார். பொய்யான பாலியல் வல்லுறவு வழக்குகளை முஸ்லிம் ஆண்கள் மீது பதிவு செய்ததன் மூலம் இதனை செய்ததாக அவரே ஒப்புக்கொண்டார். ‘பெண்களிடம் பேசிப் பார்ப்போம். அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்தால், பொய் வழக்குகளை பதிவு செய்வோம்’

பா.ச.க சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ரானா முஸ்லிம் ஆண்கள் மீது பெண்களை வைத்தே பொய் வழக்குகள் பதிவு செய்ததை பற்றி இப்படி கூறுகிறார்.’ அவர்கள் பெண்கள் தானே. பெண்கள் சூழலுக்கு ஏற்ப 5 நிமிடங்களில் மனதை மாற்றிக் கொள்வார்கள் என்று எப்போதுமே சொல்லப்பட்டு வருகிறது.  என்ன ஆனாலும் சரி, நான் அவருடன் தான் வாழுவேன். அவர் இல்லாமல் செல்ல மாட்டேன்’ என்று அவர்கள் கூறுவார்கள். ’தனியே அழைத்து சென்று கன்னத்தில் இரண்டு அடி கொடுத்தால், அவர்களே சென்று ‘அவர்கள் என்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள்’ என்று புகார் கொடுப்பார்கள். நாம் பெண்களை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்’

வழக்கறிஞர்கள், காவல் துறையில் ஊடுறுவல்

பா.ச.க தலைவர் சஞ்சய் அகர்வால் என்பவர் வலது சாரி வழக்கறிஞர்கள் தங்களுக்கு தகவல் அளிப்பவர்களாக இருப்பதாக சொல்கிறார். ‘நிறைய வழக்கறிஞர்கள் சுயம் சேவக்காக இருக்கிறார்கள். எந்த இந்துப் பெண்ணாவது திருமணத்திற்கு பதிவு செய்கிறாரா என்று கண்காணிப்பார்கள். அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் யார் என்பதைக் கணடறிந்து கூறுவார்கள். நாங்கள் 50-70 பேர் அங்கு செல்வோம்’.

முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகள் போடுவது என்பது தங்களது மூல உத்தி என்பதை வழக்கறிஞரும், மங்களூர் வி.எச்.பி நிர்வாகியுமான ஜகதீஷ் ஷினவா நேரிடையாகவே ஒத்துக் கொள்கிறார். ‘நாங்கள் எங்களுடைய பையன்களை காவல்துறை பணிக்கு அனுப்பி இருக்கிறோம். எனவே, எங்களுக்கு உதவி தேவைப்படும் போது நிறைய ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் காவல் துறையில் இருக்கிறார்கள். 60% இளம் காவலர்கள் எங்கள் மாணவர்கள்’.

போதை மருந்து செலுத்தி பெண்களை கட்டுப்பாட்டில் வைக்கும் கேரள இந்து உதவி மையம்

இந்து உதவி மையம் ‘பெண்களை காப்பாற்றுகிறோம்’ என்ற பெயரில் அவர்களுக்கு மருந்தை செலுத்தி அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறது. ‘மிகவும் பிடிவாதமாக இருக்கும் பெண்களுக்கு போதை மருந்தை செலுத்தி நினைவிழக்கச் செய்து எங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவோம்’ என்கிறார், சிஜித், இந்து உதவி மையம், எர்ணாக்குளம்,கேரளம். ‘எப்படி சொல்வது என்று எனத் தெரியவில்லை. அச்சத்தை உண்டாக்குவதில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். முஸ்லிம்கள் பற்றி நாம் ஒரு உண்மையான அச்சத்தை சமூகத்தில் உருவாக்க வேண்டும்’, உறுதிபட தெரிவிக்கிறார் சிஜித்.

ஹிட்லரை ஈர்த்த அமெரிக்க இன வெறுப்பு அரசியலும், இந்துத்துவத்தை ஈர்த்த ஹிட்லரும்

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் இனப்பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட பல சட்டங்கள் ஓர் இனவாத அரசை கட்டமைப்பதற்கான முன் மாதிரியாக உலகில் பார்க்கப்பட்டது. அமெரிக்காவின் குடியேற்ற சட்டங்கள் ‘சில விரும்பத்தகாத இனங்களை’ ஒதுக்குவதாக இருந்தது. ஆப்ரிக்க அமெரிக்கர்கள், ஆசியர்கள், அமெரிக்க பூர்வகுடிகள் போன்றோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிற சட்டங்கள், வேறுபட்ட இனத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்களை குற்றச்செயலாக தடைச் செய்யும் சட்டங்கள் என பல சட்டங்கள் ஹிட்லருக்கு ஜெர்மானிய இனவாத அரசை கட்டமைக்க முன் மாதிரியாகத் தோன்றியது. இனங்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்களைத் தடைச் செய்யும் சட்டங்கள் வெள்ளை இனப் பெண்களுடன் பாலியல் உறவோ, திருமண உறவோ கொள்கிற கருப்பின ஆண்களை கும்பல் கொலைச் செய்வதற்கு துணை போனது.

1924 இல் அமெரிக்காவின் குடியேற்றச் சட்டத்தை ஹிட்லரின் புத்தகமான ‘மெய்ன் கேம்ப்’ இல் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. 1934 இல் புகழ் பெற்ற நாஜி வழக்கறிஞர்கள் யூதர்களுக்கு எதிரான ’நியூரம்பெர்க்’ சட்டத்தை கொண்டு வருவது பற்றி பேசக் கூடினார்கள். அவர்களுக்கு அமெரிக்காவின் ‘ஜிம் கிரோ’ என்ற இனவாத சட்டங்கள் முன் மாதிரியாக இருந்ததை பற்றி விவாதித்தார்கள். நாஜிக்கள் குருதிச் சட்டம் (blood act) என்ற ஒன்றை 1935 இல் கொண்டு வந்தார்கள். இந்தச் சட்டம் இனங்களுக்கு இடையேயான திருமணத்தை குற்றச் செயலாக அறிவித்து தடைச் செய்தது என்பது வரலாறு. (https://truthout.org/articles/how-the-nazis-used-jim-crow-laws-as-the-model-for-their-race-laws/)

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் செய்கின்ற கற்பனையான ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம், இந்துப் பெண்களை திருமணம் செய்கிற/காதலிக்கிற முஸ்லிம் ஆண்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளுவது, முஸ்லிம்களைப் பற்றி ஓர் அச்ச உணர்வை சமூகத்தில் உருவாக்குவது என்பது அமெரிக்க இன வெறுப்பு அரசியலையும், அதை முன் மாதிரியாக கொண்டு யூத இன வெறுப்பு அரசியலை கட்டமைத்து யூத இனப்படுகொலையை செய்த ஹிட்லரையுமே நமக்கு நினைவு படுத்துகிறது.  ஹிட்லரை முன் மாதிரியாகக் கொள்கின்ற இந்து ராஸ்டிரத்தை அமைப்பதை திட்டமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் க்கு வேறுபட்ட மத நம்பிக்கையை கொண்டவர்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்களை அங்கீகரிக்கிற இந்தியாவின் அரசமைப்பு சட்டம் எரிச்சல் ஊட்டுகிறது. எனவே, சட்ட விரோதமாக இந்து முஸ்லிம் திருமணங்களுக்கு எதிராக வன்முறை வழியிலான அத்தனை வேலைகளையும் செய்கிறது. ரவீஷ் தந்திரி, கேரளாவின் இந்து ஒற்றுமை பேரவையின் தலைவர் மதம் மாறி திருமணம் செய்கிறவர்களை கொலை செய்வோம் என்று வெளிப்படையாகவே எச்சரிக்கை செய்கிறார்.

ஆர்,எஸ்.எஸ் இன் பெண் வெறுப்பு பேச்சுக்கள்

கடந்த 4 ஆண்டுகளில் பெண் செயல்பாட்டாளர்கள், பெண் நிருபர்கள், மாணவிகள் என ஆர்.எஸ்.எஸ்/பா.ச.க அரசியலாக விமர்சித்த பெண்கள் மீது கல்லூரி வளாகங்களில், பொது வெளியில், இணைய தளத்தில் என நடத்தப்பட்ட பாலியல் அடிப்படையிலான தாக்குதல்கள் சமீப காலத்தில் கண்டிராதது.

நரேந்திர மோடி, இந்திய பிரதமர்

மோடியின் பெண் அரசியல் தலைவர் மீதான பாலின அடிப்படையிலான தாக்குதல்கள் நிறைய உள்ளன. இருந்தாலும், உலகம் முழுக்க தலைப்புச் செய்தியான பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசினா பற்றியது. தாக்கா பல்கலைக்கழகத்தில் சேக் ஹசினா அவர்களைப் புகழ்ந்து பேசும் போது, ‘பெண்ணாக இருந்தாலும், தீவிரவாதத்தை ஒரு போதும் சகித்துக்கொள்ள மாட்டேன் என்கிற பிரதமரை பார்க்கும் போது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.’ என்றார்.

 

யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் காரர், உத்திர பிரதேச முதல்வர்

மோடியின் வாரிசாகப் பார்க்கப்படக் கூடிய உத்திர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்ய நாத் 2014 இல் எழுதிய ‘மாத்ரசக்தி-பாரதிய சக்தி கே சந்தர்ப் மெய்ன்’ என்ற தன்னுடைய வலைப்பதிவில்,’பெண்கள் சுதந்திரமாகவோ, தனியாகவோ வாழ்வதற்கு உரிய திறன் அற்றவர்கள். பிறப்பில் இருந்து இறப்பு வரை பெண்களுக்கு ஆணின் பாதுகாப்பு அவசியம். பெண் குழந்தையாக இருக்கும் போது தந்தையாலும், இளம் வயதில் கணவனாலும், வயதான நிலையில் மகனாலும் பாதுகாக்கப்படுகிறாள்’ என்று எழுதினார். ஒரு பெண் தன்னுடைய வாழ் நாள் முழுவதும் ஒரு ஆணின் பாதுகாப்பில் தான் இருக்க வேண்டும் என்பது – மனு நீதியின் கோட்பாடு ஆகும். அதைத் தான் யோகியும் கூறி இருக்கிறார்!

யோகி ஆதித்திய நாத், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார். காரணம், நாடாளுமன்றத்தில் பெண்கள் செல்வது என்பது தாயாக, மகளாக, உடன் பிறந்தவளாக ஆற்ற வேண்டிய கடமைக்கு தடையாக இருக்கும் என்பது தான். ‘பெண்களுக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு இருக்கிறது. அவர்கள் கிராம சபைகளில், பஞ்சாயத்துகளில் பங்கெடுத்து இருக்கிறார்கள். அவர்களின் இந்த அரசியல், பொது வாழ்க்கை தாயாக, மகளாக, உடன் பிறந்தவளாக இருக்கிற முக்கியத்துவத்தையும், கடமையையும் இழக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்’ என்கிறார் யோகி.

எஸ்.வி. சேகர், நடிகர், பா.ச.க வின் முக்கிய உறுப்பினர்

தமிழ் நாடு அரசின் முதன்மை செயலர், கிரிஜா வைத்திய நாதனின் நெருங்கிய உறவினர். கல்லூரி மாணவிகளை பாலியல் தேவைக்காக அழைப்பு விடுத்த கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி விசாரணையில் தமிழ் நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார். அது குறித்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஒரு பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், ஆளுனர் அந்த நிருபரின் கன்னத்தை தட்டி விட்டு சென்றது ஒரு விவாதப் பொருளானது. அதற்காக உடனடியாக கவர்னர் மன்னிப்பு கேட்டார். இதை தாங்க முடியாத பா.ச.க வைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், திருமலை என்பவரின் பதிவு என்பதாக ஒன்றைப் தன்னுடைய முக நூலில் பதிவு செய்து இருந்தார். அதன் உள்ளடக்கம் இது தான், ‘மதுரை பல்கலைக் கழகம், ஆளுனர் மற்றும் கன்னிப் பெண்ணின் கன்னம், அந்தப் பெண் நிருபரை பார்த்து பரிதாபப் படுகிறேன். ஆளுனர் தன்னுடைய கன்னத்தை தொட்டு விட்டதால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். ஆனால், அவர் மோடியையும் ஆளுனரையும் குறி வைப்பது என்பது அவருடைய டிவிட்டர் பதிவுகளைப் பார்த்தால் தெரியும். உண்மையில் பார்த்தால் அந்த நிருபரை தொட்டதற்காக ஆளுனர் தான் பினாயில் போட்டு கையை கழுவ வேண்டும். தமிழ் நாட்டு ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மிகவும் கீழ்தரமானவர்கள், அருவெறுக்கத்தக்க உயிரினங்கள். தமிழ் நாடு ஊடகத்தில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலானவர்கள் படிக்காதவர்கள், பொது அறிவு இல்லாத கீழ்த் தரமானவர்கள். இந்தப் பெண் நிருபரும் விதி விலக்கானவர் அல்ல.

சமீபத்தில் ஒரு புகார் வழியாக அருவெறுக்கத்தக்க ஒரு உண்மை தெரிய வந்தது. ஊடகத் துறையில் உள்ள பெண்கள் செய்தியாளராகவோ, தொகுப்பாளராகவோ ஆக வேண்டும் என்றால் உயர் பதவியில் உள்ளவர்களோடு படுக்கையை பகிர்ந்து கொள்ளாமல் முடியாது என்பது தான் அது. இந்த முகத்தை வைத்துக் கொண்டு தான் இவர்கள் ஆளுனரை கேள்வி கேட்க வந்து விடுகிறார்கள்’ என்பதாக முடியும் அந்த நிலைத்தகவலை எஸ்.வி.சேகர் பகிர்ந்து இருந்தார். இது பலராலும் வன்மையாகக் கண்டிக்கப் பட்டது. ஊடகவியலாளர்கள் எஸ்.வி.சேகர் வீட்டின் மீது கல்லெறிந்து வீரமான ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். ஊடகத்துறை பெண்கள் அனைவரையும் கொச்சைப்படுத்தி பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கைது செய்து சிறையில் அடைக்கப் பார்த்தது பா.ச.க வின் அங்கமாகிப் போன ஆளும் அ.தி.மு.க அரசு. எஸ்.வி.சேகர் அவரின் உறவினர் தமிழ் நாடு முதன்மை செயலர் கிரிஜா வைத்திய நாதனின் அதிகார பலத்தால் கைது செய்வதில் இருந்து பாதுகாக்கப்பட்டார்.

எச்.ராஜா, பா.ச.க வின் தேசிய செயலர்களில் ஒருவர்.

இவரைப்போன்ற ஒரு மனிதப் பிறவியை சந்திப்பது அபூர்வம்! பெண் நிருபர்களை கொச்சைப்படுத்தி பேசிய எஸ்.வி.சேகருக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்த மாநிலங்கள் அவை உறுப்பினர் கனிமொழியை ‘முறைகேடான வழியில் பிறந்த சட்டவிரோத குழந்தையான கனிமொழியை மாநிலங்கள் அவை உறுப்பினராக்கிய கருணாநிதியை பார்த்து ஆளுனரைக் கேள்வி கேட்டது போல கேட்க நிருபர்களுக்கு தைரியம் உண்டா?’ என எழுதினார்.

கியான் தேவ் அஹுஜா, பா.ச.க சட்டமன்ற உறுப்பினர், ராஜஸ்தான்

பாலின அடிப்படையிலான கட்டுப்பாடுகளை ஏற்காமல் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற பெண்களை ஒழுக்கக்கேடானவர்கள், வரைமுறையற்ற பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என பேசினார். ’3000 பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், 500 கருகலைப்பு ஊசிகள் மற்றும் சில பொருட்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டன. இங்கே நடைபெறுகிற கலை நிகழ்வுகளில் ஆண்களும், பெண்களும் ஆடையின்றி நடனமாடுகிறார்கள்’ என்று தன்னுடைய பெண் வெறுப்பை வெளிப்படுத்தினார்.

ஜவகர் யாதவ், அரியானா முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி

ஜெ.என்.யூ பல்கலைக்கழகத்தில் இடது சாரி, பெண்ணுரிமை செயல்பாட்டாளர்களாக மாணவிகள் இருப்பதை கண்டு எரிச்சல் கொண்டு அவர்கள் மீது பல்வேறு விதமான அடக்குமுறைகளை தொடுத்தவர்கள் பா.ச.க தலைவர்கள். அப்படி எரிச்சலுற்ற ஒருவரான ஜவஹர் யாதவ், ‘ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் தேச விரோத முழக்கங்களை எழுப்புகிற பெண்களை விட பாலியல் தொழில் செய்கிற பெண்கள் மேலானவர்கள் என்றார்.

பாலியல் துன்புறுத்தல் செய்த ஜெ.என்.யூ பேராசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நிர்வாகம்

ஜெ.என்.யூ சமூக அறிவியல் துறை மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர், பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நெருக்கமானவரான பேரா. அடுல் ஜொஹ்ரி யின் பாலியல் நகர்வுகள், பெண்களின் மார்பகங்கள், பிறப்புறுப்புக்கள் உள்ளிட்ட பாலியல் சார்ந்த நகைச்சுவைகள் போன்றவை குறித்து புகார் எழுப்பினார்கள். ஆனால், உள்ளக புகார் குழு அந்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதை எதிர்த்து ஜெ.என்.யூ மாணவர்கள் பேரணி சென்ற போது காவல்துறை தடியடி நடத்தி கடுமையாகத் தாக்கியது. மேலும் பெண்களின் ஆடைகளை கிழித்து பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஒரு பெண் நிருபர் தான் தாக்கப்பட்டது, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது குறித்து காவல் துறையிடம் புகார் செய்த போது, ‘ஜெ.என்.யூ மாணவி என தவறாக நினைத்து இருப்பார்கள்’ என காவல் துறை அதிகாரி பதில் அளித்தார். பிறகு, டெல்லி உயர் நீதி மன்ற தலையிட்டு, ‘துணை வேந்தருக்கு பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லையா? என்ன நடக்கிறது? விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட பேராசிரியர் பல்கலைக்கழக வளாகத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்துங்கள்’ எனக் கூறியது.

பெண் என்பவள் ஆணின் உடைமை என்ற அர்த்ததில் நடைபெறும் பெண் உரிமை பரப்புரைகள்

‘உங்களுக்கு வாக்கு வேண்டுமென்றால் எங்களுக்கு மணமகள்களைக் கொண்டு வாருங்கள்’, ‘மகளோடு தன் படம் (selfie with daughter)’, ‘மகள்களை பாதுகாக்கவில்லை என்றால், எப்படி மருமகள் கிடைப்பாள்?’ பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற பரப்புரையின் முழக்கமாக இவை இருந்தன. பெண்களுக்கான குரல் என்பதே ஆண்களுக்கான பெண்களின் தேவை, பெண்கள் மீதான உரிமை என்ற அர்த்தத்தில் எழுப்பபட்டது. பெண்ணுக்கு ஆணைப்போல சம உரிமைகளோடு வாழும் உரிமை உண்டு என்ற பெண்ணுரிமை அர்த்தத்தில் அல்ல.

தூய்மை இந்தியா பரப்புரையில், பெண்கள் திறந்த வெளியில் கழிப்பதால் தான் பாலியல் வன்முறைகள் நடைபெறுகின்றன. எனவே திறந்த வெளியில் கழிப்பதை நிறுத்துங்கள் என்று பரப்பப்பட்டது. பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பது நின்று விட்டால், பாலியல் வன்முறைகள் நின்றுவிடுமா? என்ற கேள்விக்கு பதிலே இல்லை. இந்த பரப்புரையில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பெண்களை காணொளி எடுப்பது போன்ற பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் அரசு துறை ஊழியர்களால் நடந்தது. இதைத் தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் கட்சி தோழர் ஜபார் கான், அரசு ஊழியர்களாலேயே கொல்லப்பட்டார். தோழர் ஜபார் கானும் அந்தப் பகுதி பெண்களும், அந்த பகுதியில் கழிப்பிடங்கள் கட்ட வேண்டி பல முறை கோரிக்கை விடுத்தும் அரசு நிர்வாகம் செவி சாய்க்க வில்லை என்பதாலேயே அந்தப் பகுதி பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டி இருந்தது என்பது தான் உண்மை.

பெண்களுக்காக மோடி கொண்டு வந்த திட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள்

2010 இல் காங்கிரசு அரசு மகப்பேறு திட்டம் ஒன்றை கொண்டு வந்தது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 அனைவருக்குமான மகப்பேறு கால உரிமைகளை உறுதி செய்து இருந்தது. 2014 இல் மோடி பிரதம மந்திரி மாற்று வந்தனா யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்தார். அதன் படி மகப்பேறு உரிமைகள் முதல் பிரசவத்திற்கு என்ற அளவில் சுருக்கப்பட்டன. ஆண்டுக்கு 2.6 கோடி பிரசவங்கள் நடைபெறுகிற நாட்டில் 96,000 பெண்கள் மட்டுமே 2017 ஆண்டு மோடியின் திட்டத்தின் கீழ் மகப்பேறு உதவி பெற்றனர். 2018 நிதி ஒதுக்கீட்டில், மேலும் ரூ.300 கோடி நிதி குறைக்கப்பட்டது.

குழந்தைகளின் உணவு, கல்வி, பெண்களின் மகப்பேறு உரிமைகள் என பலவற்றை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கான நிதியையும் மோடி அரசு குறைத்தது. 2014-15 ஆண்டுக்கான ரூ. 18,108 கோடியில் இருந்து 2015-16 ஆண்டுக்கான நிதியை ரூ.8,400 ஆன குறைத்து விட்டது. பிறகு அங்கன்வாடி தொழிலாளர்களின் போராட்டத்தால் இத்திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. 2018 இல் ரூ.16,334 கோடியாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மேலும் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட வேண்டும் என பெண்கள் குழந்தைகளுக்கான மேம்பாட்டு துறை கூறிக்கொண்டு இருக்கும்போதே மோடி அரசு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியையும் குறைத்து விட்டது.

ஆசா (ASHA), அங்கன்வாடி, மதிய உணவுத் திட்டம், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்ற பல்வேறு அரசு திட்டங்களில் பணி புரியும் லட்சக்கணக்கான ஊழியர்களில் பெரும்பாலும் பெண்களே. ஆனாலும், மோடி அரசு அவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை கூட உறுதி செய்ய வில்லை.  அவர்களின் பணிக்காக குறைந்த அளவே ஊக்கத் தொகையாக வழங்கியது.

ஆய்வுத் துறை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவித் தொகையை குறைத்தது, ஆய்வு துறை மாணவர்கள் எண்ணிக்கையை குறைத்தது போன்றவை ஆய்வுத் துறைக்கு வரும் பெண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், உதவித் தொகையை குறைத்தது, உதவித் தொகையை நம்பி ஆராய்ச்சி செய்ய வந்த மாணவிகள் ஆராய்ச்சி படிப்பை விட்டு விலக வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.

 

பரிமளா

தமிழ்நாடு பெண்கள் இயக்கம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW