2019 மார்ச் 40/L.1 தீர்மானம் – முன்னேற்றமில்லை, பழைய நிலைமையும் இல்லை, தமிழர்க்கு சறுக்கல்.
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொளத்தூர் தா.செ.மணியின் அறிக்கை
ஐ.நா. மனித உரிமை அமைப்பின் கூட்டத் தொடர் பிப்ரவரி 25 இல் தொடங்கியது. மார்ச் 25 வரை நடக்கவிருக்கிறது. மார்ச் 20 அன்று இலங்கை மீதான விவாதம் நடந்தது. முன்னரே பிரித்தானியா தலைமையிலான கனடா, ஜெர்மனி, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ நாடுகளடங்கிய சிறிலங்கா தொடர்பான முதன்மைக் குழு சிறிலங்காவுக்கு மீண்டுமொருமுறை காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பிப்ரவரி 13ஆம் நாள் நிலையெடுத்து, மார்ச் 1 அன்று மேலும் ஈராண்டு காலம் நீட்டிப்புக் கொடுக்கும் பிரித்தானியாவின் தீர்மான வரைவு வெளிவந்தது. அத்தீர்மானத்தை முன்மொழிவதில் இலங்கையும் கூட்டாக இணைந்து கொண்டது. அத்தீர்மானம் கடந்த மார்ச் 21 வியாழன் அன்று ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இந்தியா உள்ளிட்ட 32 நாடுகளின் முன்னிலையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியமான செய்திகள் பின்வருமாறு:
சி’றிலங்கா அரசு காணாமற்போனோருக்கான அலுவலகம்(OMP) அமைத்திருப்பதை வரவேற்று, ஐ.நா. அலுவலர்களுக்கு சிறிலங்கா அளித்துவரும் ஒத்துழைப்பை வரவேற்று, 75% நிலங்கள் தமிழர்களுக்கு மீண்டும் திரும்பக் கொடுக்கப்பட்டிருக்கிறதென்பதை பாராட்டுதலுடன் குறிப்பிட்டு, 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகம் அமைப்பதில் உள்ள முன்னேற்றத்தையும், உண்மை மற்றும் மீளிணக்கத்திற்கான ஆணையம் அமைப்பதற்கான கோட்பாட்டு அறிக்கை முன்வைத்திருப்பதையும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான முன்மொழிவையும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான முன்வைப்பையும் குறிப்பிட்டு காலவரையறைக்கு உட்பட்டு இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் செயல்திட்டத்தைக் கைகொள்ளுமாறு ஊக்குவித்து இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை ஐ.நா. அலுவலர்கள் சிறிலங்காவுடன் கலந்துகொண்டும் அதன் உடன்பாட்டுடனும் வழங்க வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் சிறிலங்காவில் மீளிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றங்களை எடைபோட்டு இவ்வமைப்பின் 43 ஆவது அமர்வில் எழுத்தில் ஓர் முன்னேற்ற அறிக்கையை முன்வைக்குமாறும், 46 ஆவது அமர்வில் முழுமையான அறிக்கை முன்வைக்கப்பட்டு அதன் மீது விவாதிக்குமாறும் வேண்டுகோள்விடுத்து தீர்மானம் நிறைவடைகிறது.
சாறத்தில் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்புப் பொறிமுறையின் மூலம் இறுதிப் போரில் நடந்த சர்வதேச சட்ட விதிமீறல்களை சிறிலங்கா அரசு புலனாய்வு செய்வதற்கு இரண்டாண்டு காலநீட்டிப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 2021 இல் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இதுகுறித்த முன்னேற்றங்கள் மீது விவாதம் நடத்தப்படும்.
காலவரையறைக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தும் செயல்திட்டம் ஒன்று வேண்டும் என்று இத்தீர்மானம் சொல்கிறது. இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் அரசியல் மனத்திட்பம் சிறிலங்காவுக்கு இல்லை. ஆனால், இலங்கைத் தீவில் தேசிய தகுநிலையுடனான தமிழினத்தின் இருப்பை இல்லாது செய்வதற்கானக் கட்டமைப்பு ரீதியான இன அழிப்புக்கு காலவரையறைக்கு உட்பட்ட செயல்திட்டம் இலங்கைக்கு இருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்கான கால அவகாசமாக இது அமையப்போகிறதே அன்றி கலப்புப் பொறிமுறையின்வழி பொறுப்புக்கூறலுக்கான காலஅவகாசமாகவோ, கால வரையறையாகவோ இது இருக்கப்போவதில்லை.
ஐ.நா. மனித உரிமை ஆணையர் பேசிய உரைக்கும் முன்னதாக ஆணையர் அலுவலகம் முன்வைத்த அறிக்கைக்கும் மார்ச் 20 அன்று சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் திலக் மரப்பனா பதிலளித்துப் பேசுகையில், கலப்புப் பொறிமுறைக்கு வாய்ப்பில்லை என்பதைப் பின்வருமாறு உறுதிபட சொல்லிவிட்டார்.
”நான் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிறிலங்கா அரசாங்கத்தின் அதியுயர் அரசியல் மட்டங்களால், பொதுவெளியிலும் இந்நாள் மற்றும் முன்னாளைய ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையர்கள், தொடர்புதூதர்களுடனான கலந்துரையாடல்களிலும் சிறிலங்காவின் குடிமக்கள் அல்லாதவர்களை நீதிச் செயல்வழிகளில் உட்படுத்துவதற்கு உள்ள அரசமைப்பு மற்றும் சட்ட இடர்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
அத்தகைய செயல்வழியில் சிறிலங்காவின் குடிமக்கள் அல்லாதவர்கள் உட்படுத்தப்பட வேண்டும் என்பது சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடனும் வெகுமக்கள் வாக்கெடுப்புடனுமான அரசமைப்புச் சட்டத் திருத்தமின்றி வாய்ப்பில்லை என்று விளக்கப்பட்டுள்ளது”
ஆகவே, ஐ.நா. மனித உரிமை அமைப்புக் கூட்டத் தொடரிலேயே தீர்மானத்தின் சாறத்தை நிறைவேற்ற முடியாது. ஏனெனில் அதற்கு இலங்கையில் மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை வேண்டும் என்று சொல்லியுள்ளார் அவர். கடந்த ஆண்டு சிங்களப் பேரினவாத ஆளும் வகுப்புகளுக்கிடையே நடந்த அதிகாரப் போட்டியின் முடிவில் இரணிலுக்கு இருந்த மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் குலைத்துவிட்டதே அம்முயற்சியின் பெறுபேறு என்று சனவரி 2019 இல் பெங்களூரில் தி இந்து நிர்வாக இயக்குனர் என்.ராமிடம் மகிந்த இராசபக்சே மார்தட்டிக் கொண்டதை இங்கு நினைவுப்படுத்துகிறோம்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அமைச்சர் திலக் மரப்பனா, ’ இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசமைப்பு, தேசிய நலன் மற்றும் அனைவரது நல்வாழ்வு ஆகியவை வழிகாட்டியாய் அமையும்’ என்று அடித்துச் சொல்லிவிட்டார்.
அதுமட்டுமின்றி, சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் மரப்பனா ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் மிசேல் பச்செலேவின் அறிக்கையையும் அவரது உரையையும் நேருக்கு நேராய் கேள்விக்கு உட்படுத்தி இறுமாப்புடன் உரையாற்றினார். பறிக்கபட்ட நிலங்களைத் திருப்பிக் கொடுத்தது தொடர்பான விவரங்கள், திட்டமிட்ட சிங்களக் காலனியமயம், கண்டெடுக்கப்படும் புதைக்குழிகள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுகளுடைய சிறிலங்காப் படை அதிகாரிகள் தொடர்பான ஆணையரின் கருத்துகளை மறுத்து மேற்குலக முகாம், இந்தியா, சீன முகாம் என யாவற்றின் பக்கத்துணையுடன் ஓர் இனக்கொலை அரசு தமது ‘புனிதத்தை’ பறைசாற்றிக் கொண்டது.
மேலும், thehindubusinessline க்கு இலங்கையின் பிரதமர் இரணில் விக்ரமசிங்கே அளித்த பேட்டியில், இத்தீர்மானத்தின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கென்று இலங்கையில் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற தமிழர்களின் முன்மொழிவை முறியடித்து இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாத்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.
இந்தியாவைப் பொறுத்தவரை சிறிலங்காவுக்கு கீறல் ஏதும் விழுந்துவிடாதபடி பார்த்துக் கொண்டது. ”இரண்டு ஆண்டு காலநீட்டிப்புப் பெறத் துணைநின்றது மட்டுமின்றி நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நார்டிக் நாடுகள் தீர்மானத்தில் கடுமையான வரிகளைக் கொண்டுவர முனைந்தபோது அதை தடுத்துள்ளது. மேலும் தீர்மானம் உருப்பெற்று மாற்றமடைந்த ஒவ்வொரு கட்டத்திலும் பிரித்தானியாவால் இந்தியாவுக்கு தகவல் தரப்பட்டு இந்தியாவின் இசைவு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இம்முறை தாம் அதிகம் தலையீடு செய்ய வேண்டிய தேவையில்லாமல் இருந்ததென இந்திய அதிகாரிகள் சொன்னார்களாம். தீர்மானத்தை முன்மொழிவதில் சிறிலாங்காவும் இணைந்து கொள்வதற்கு அதன் அதிபர் சிறிசேனா மறுப்புத் தெரிவித்து முரண்டு பிடித்துக்கொண்டு தனித் தூதுக்குழு அனுப்பப் போவதாக மார்ச் 6 அன்று அறிவித்திருந்த நிலையில், சிறிசேனாவுக்கு இரகசியமாக அறிவுரை தந்துள்ளது இந்தியா. ’இலங்கையும் இணைந்துகொண்டு கூட்டாக மொழியவில்லை என்றால் பின்னர் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படக் கூடும். பின்னர், எல்லா முயற்சிகளும் தோற்றுப்போய்விடும்” என்று சிறிசேனாவுக்கு சொல்லப்பட்டதாக இந்தியாவின் உயரதிகார மட்டங்கள் சொல்கின்றன என்று thewire இணையதளம் சொல்கிறது. சிங்கள ஆளும்வகுப்புக்கு இடையேயான முரண்பாடுகூட ஐ.நா. மனித உரிமை அமைப்பில் சிறிலங்காவுக்கு பாதகமாகிவிடக் கூடாதென்பதில் இந்தியாவுக்கு இருக்கும் அக்கறையின் வெளிப்பாடு இது. ஐ.நா. மனித உரிமை அமைப்பிற்கான இந்தியாவின் பிரதிநிதி ராஜீவ் சந்தர் தமது மார்ச் 20 தேதியிட்ட அறிக்கையில், இப்பிராந்தியத்தில் சிறிலங்காவுக்கான நாட்டாமை தாம் என்பதை அறிவித்துக் கொள்ளும் வகையில் கருத்து தெரிவித்ததோடு அவ்வறிக்கையில் இரண்டு இடத்தில் பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தைக் குறிப்பிட்டு அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
மொத்தத்தில், தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின்படி பன்னாடுப் புலனாய்வையும் அரசியல் தீர்வுக்கானப் பொதுவாக்கெடுப்பையும் வலியுறுத்த வேண்டிய கடமையை இந்தியா இம்முறையும் செய்யத் தவறிவிட்டது மட்டுமின்றி இலங்கைக்கு கால நீட்டிப்பு பெற்றுத் தந்து தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு செய்துக் கொண்டிருக்கும் இரண்டகப் பட்டியலில் ஒன்றைக் கூட்டிக் கொண்டுள்ளது.
புவிசார் அரசியல், வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டி, உலக ஒழுங்கு என்ற பெயரில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நாடகங்களாகவே உலக வரலாற்றை நகர்த்திக் கொண்டு செல்லமுடியும் என்று ஆதிக்க அரசுகள் விரும்பினாலும் இம்மாயத்திரைகளைக் கிழித்துக் கொண்டு வரலாறு பயணித்துக் கொண்டே இருக்கிறது. 2015 இல் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது நிலவிய இலங்கையின் அரசியல் சூழலில் இருந்து இந்நான்கு ஆண்டுப் பயணத்தில் இரு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று தேசிய அரசாங்கம், நல்லாட்சி, மீளிணக்கம் என்ற புளுகுகள் எல்லாம் கானல் நீராய் அம்பலப்பட்டு சிறிசேனா – இராசபக்சே முகாமுக்கும் இரணில் முகாமுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி நிர்வாணமாக நடனமாடக் காண்கிறோம். இரண்டு சம்பந்தன், சுமந்திரன் போன்ற சந்தர்ப்பவாத தமிழ் அரசியல் தலைமைகளின் இரண்டகங்கள் வடக்குகிழக்கின் வீதிகளில் மக்களால் அம்பலப்படுத்தப்பட்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இந்த மாற்றங்களை இதே திசையில் வளர்ச்சிப் பெறவைப்பதில், வல்லரசுகளின் கணக்குகள் பொய்த்துப் போகச் செய்வதில், பரமபதத்தில் பாம்பிடம் கொத்துப்பட்டு கீழிறங்குவது போல் சிங்கள முகாம் சறுக்குவதும் ஏணியில் ஏறி முன்னேறுவது போல் தமிழர் முகாம் முன்னேறுவதும் தங்கியிருப்பது வரலாற்று வழியில் கட்டமைக்கப்பட்டு இன வழிப்புக் கலாச்சாரமாக வளர்ந்துவிட்டுள்ள சிங்களப் பேரினவாதத்தின் பிடியில் சிக்குண்டுட்டிருக்கும் சிங்கள மக்களிடமும் நீதி மற்றும் விடுதலைக்கான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களிடமுமே. எனவே, உலக நாடாளுமன்றங்கள், ஐ.நா. மன்றங்களில் ஆட்ட நகர்வுகளை மாற்றியமைக்கப் போவது ஈழத்திலும், தமிழ்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்மக்கள் பெருந்திரளாய் வீதிமன்றங்களில் வீறுகொண்டெழுவதே. வரலாறு நம் பக்கமே!
தோழமையுடன்
கொளத்தூர் தா.செ.மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
ஒருங்கிணைப்பாளர், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு