காவி-கார்ப்பரேட் சர்வாதிகார பா.ச.க. – அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்! இடதுசாரி சனநாயக சக்திகள் வெற்றிக்கு துணை நிற்போம்!

20 Mar 2019

 

 

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்ற திசையில் ஆட்சி நடத்திய பா.ச.க. எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில் செய்வோர், தேசிய இனங்கள், இஸ்லாமியர் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்கள் என அனைத்துப் பிரிவினர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தியது. 2019 தேர்தலிலும் வெற்றிப் பெற்று மீண்டும் நாடாளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறது. அப்படி மீண்டும் நாடாளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் அது கைப்பற்றினால் அரச வடிவத்தைக் காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தில் இருந்து பாசிசத்திற்கு கொண்டு சென்றுவிடும். அரசியல் தளத்தில் மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து தளங்களிலும் தாக்குதல் நடத்தப்படும். அதனால், உடனடிக் கடமையாக இந்த சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

பா.ச.க. தமிழகத்தில் அமைத்துள்ள கூட்டணி தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் காவு கொடுக்கும் கூட்டணியாகும். தமிழ்நாடு போராடிப் பெற்ற மாநில உரிமைகள், சமூக நீதி உரிமைகள் ஆகியவற்றை அடகு வைக்கத் தயாராக இருக்கும் சக்திகள் அவை. தமிழகத்தின் தனித்தன்மைகள், பண்பாடு, உரிமைகள் ஆகியவற்றை அழிக்கக்கூடிய பா.ச.க. உடனான கூட்டணி என்பது வெறும் தேர்தல் அரசியல் கூட்டணி என்பதோடு முடிந்துவிடப் போவதில்லை, பா.ச.க.வுக்கு சமூக அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடியது. 1998, 1999, 2014 என நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிகளின் வாயிலாகவே பா.ச.க. தமிழகத்தில் தனது சமூக அடித்தளத்தை விரிவாக்கி வந்துள்ளது. சாதியவாதிகள், பச்சைப் பிழைப்புவாதிகள், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் எல்லோரையும் ஒன்றாக இணைத்து பா.ச.க. தனது கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் மத்திய பா.ச.க. அரசால் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றியெல்லாம் துளிகூட கவலையின்றி அச்சக்திகள் கூட்டணி வைத்துள்ளனர்.  பா.ச.க. கூட்டணி வெற்றிப் பெற்று அது  மீண்டும் ஆட்சியமைத்தால் வரலாற்று ரீதியாக மிகப் பெரிய பின்னடைவுக்கு தமிழகம் தள்ளப்படும். எனவே, பா.ச.க. வை மட்டுமின்றி பா.ச.க.வுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

 

10 தொகுதிகளில் போட்டியிடும் சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), சி.பி.ஐ.(எம்.எல்), விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இடதுசாரி- சனநாயக சக்திகள் பா.ச.க. கூட்டணியை வீழ்த்தி தேர்தலில் வெற்றிப் பெறும் பொருட்டு அக்கட்சிகளுக்கு நேரடியான ஆதரவு தருகிறோம். ஐந்து ஆண்டுகால பா.ச.க. ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராட்டக் களத்தில் நின்ற சக்திகள் இவை. நாடாளுமன்ற அமைப்பு முறையில்  உள்ள சிக்கல்களாலும் இச்சக்திகள் ஆளும்வர்க்கக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. மேலும் இக்கட்சிகள் எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகளில் நமக்கு விமர்சனங்கள் இருப்பினும் பாசிசக் கூறுகளைக் கொண்ட பா.ச.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற உடனடி இலக்கின் பொருட்டு இக்கட்சிகளை நேரடியாக ஆதரிக்கிறோம்.

பா.ச.க. கூட்டணிக்கு எதிராகப் போட்டியிடுகின்ற எதிர்க்கட்சிகள் மைய அரசியல் அதிகாரத்தில் பங்குபெற்றவை. மதசார்பின்மைக்கு மாறாக மென்மையான இந்துத்துவப் போக்கை கடைபிடிப்பதன் மூலம் தமது வாக்கு வங்கியைப் பாதுகாக்க நினைப்பவை. கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை எவ்வித தயக்கமும் இன்றி கடைபிடிப்பவை. உண்மையில் பாசிச பிற்போக்கு சக்திகளின் வளர்ச்சிக்கு தேவையான  நிலைமைகளை உருவாக்கக் கூடிய சக்திகள் இவையே. பொருளாதார நெருக்கடி, நாடாளுமன்ற சந்தர்ப்பவாதம், சூறையாடும் முதலாளித்துவம் என இக்கட்சிகளால் உருவாக்கப்பட்ட நிலைமைகள்தான் பிற்போக்கு பாசிச சக்திகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தன. இன்றும் இக்கட்சிகள் தேர்தலின் பொருட்டு கார்ப்பரேட் எதிர்ப்பு பேசுகின்றனவே ஒழிய இக்கட்சிகளால் கார்ப்பரேட் பொருளியல் கொள்கையை எதிர்க்கும் நிலைப்பாடு எதுவும் எடுக்கவில்லை. இத்தகைய சக்திகளை நேரடியாக ஆதரிக்க முடியாது.

சந்தர்ப்பவாத சக்திகள் காவி எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டு பா.ச.க. வின் கார்ப்பரேட் முகத்தைப் பற்றி பேசாது தவிர்த்தும் அடையாளமாக பேசியும் வரும்நிலையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், சேல் கேஸ், கெயில் குழாய்ப் பதிப்பு, எட்டு – பத்துவழி சாலைத் திட்டங்கள் என விளைநிலங்களை நாசமாக்கும் போக்கை முன்னரங்குக்கு கொண்டு வந்து காவிரிப் படுகையைப் பேரழிவுத் திட்டங்களில் இருந்து பாதுகாப்பதை தேர்தலில் தவிர்க்க முடியாத நிகழ்ச்சி நிரலாக்கும் நோக்கில் மயிலாடுதுறை தொகுதியில் நூறு விவசாயிகளை  வேட்பாளர்களாக நிறுத்த முயன்று வருகிறது நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு அன்றாடம் நாசகார திட்டங்களை அமல்படுத்தி வரும் பா.ச.க. – அ.தி.மு.க. கூட்டணியை எதிர்த்தும், இத்திட்டங்களை மக்களோடு நின்று எதிர்த்து தடுத்து நிறுத்துவதில் உறுதியற்று இருக்கும் பிற ஆளும்வர்க்க, சந்தர்ப்பவாத முகாம்களை நிர்பந்தித்தும் மேற்கொள்ளப்படும் இம்முயற்சியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பங்கேற்கிறது.

காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தின் கொடுங்கோல் முகத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கண்டோம். நூறு நாட்கள் அமைதி வழியில் போராடிய மக்களைக் காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொன்றனர். ஒட்டுமொத்த வளத்தை அழிப்பது மட்டுமின்றி காற்று, நீர், நிலத்தடி நீர் என எல்லாவற்றையும் நஞ்சாக்கும் ஆலைக்கு எதிரானப் போராட்டம் நசுக்கப்பட்டும் இன்றுவரை ஆலை நிரந்தரமாக மூடப்படாத நிலையில் இது மதசார்பின்மைக்கான தேர்தல் மட்டுமல்ல, இது காவி-கார்ப்பரேட் கூட்டணிக்கு எதிரான தேர்தல் என்று சுட்டிக்காட்ட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். மேலும் மக்களின் எதிர்ப்பையும் மீறி ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டி, அதை நிறுவி, சுற்றுச்சூழல் விதிகளையெல்லாம் மீறி பத்தாண்டுக் கணக்கில் ஆலை இயங்கியதற்கும் நோய் நொடிகளுக்கும் மூச்சுத் திணறலுக்கும் மக்கள் ஆளானதற்கு ஆளும் கட்சிகள் மட்டுமல்ல, முன்பு ஆட்சியில் இருந்த கட்சிகளும்  பொறுப்பு என்பதை அம்பலப்படுத்தியாக வேண்டும். இதன் பொருட்டு  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்து தேசியத்தின் வழி இந்துராஷ்டிரத்தை நிறுவுவதை தனது அரசியல் இலட்சியமாகக் கொண்டு, பாசிச அரசியலை எடுத்துச் செல்வதற்கான மையமான சக்தி பா.ச.க. வாகும். காவி-கார்ப்பரேட் கூட்டணியின் அரசியல் அமைப்பு உருவாக இருப்பது பா.ச.க. சமூகப் பொறியமைவு என்ற நோக்கில் சாதிக் கட்சிகளோடு கூட்டணி போடுவது எல்லாவித சந்தர்ப்பவாதக் கட்சிகளையும் தன்னோடு இணைத்துக் கொள்வதில் தயக்கம் சிறிதுமில்லாதது பா.ச.க. இன்றைய நிலையில் பிற கட்சிகளோடு ஒப்பிடும் போது தமிழகத்தில் பலவீனமாக இருந்தாலும், தனக்கான சமூக அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதில் வெற்றிப் பெற்று வருகின்றது. மத்திய அரசதிஅதிகாரத்துடன் நிற்கும் பா.ச.க. தமிழகத்தின் அரசியல் சூழலைப் பின்னுக்கு இழுப்பதில் முதன்மையான சக்தி என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் அக்கட்சிப் போட்டியிடும் தொகுதிகளில் அதை எதிர்த்துப் பரப்புரை செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பாசிச அரசா? அல்லது பாசிச சக்திகள் பங்கேற்கும் அரசாங்கமா? என்ற கேள்வி முக்கியமானது. இன்றைக்கு இந்திய அரசு பாசிச அரசு என்ற வடிவத்தை எடுக்கவில்லை.  இது முதலாளியத்தின் கோர வடிவமான பாசிச அரசா? என்றால் இல்லை. பாசிச கூறுகளைக் கொண்ட பா.ச.க. அரசாங்கத்தைக் கைப்பற்றி ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி நடத்தியது. உலக நாடுகள் எங்கும் அரசு பாசிச வடிவமெடுத்த நிகழ்ச்சிப் போக்கை உற்றுநோக்கின், மக்களிடம் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின்வழி அரசாங்கத்தைக் கைப்பற்றி அதுனூடாகவே நிதி மூலதன எதேச்சதிகார சக்திகளிடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்து நாடாளுமன்றத்தைச் செயலிழக்கச் செய்து அரசு  பாசிச வடிவமெடுக்கிறது. நிதி மூலதனத்தை ஒன்றுகுவிக்கக் கூடிய சிறு கார்ப்பரேட் கும்பலிடம் ஆட்சி கைமாறுகிறது.  நீதித்துறை, நிதித்துறை, சி.பி.ஐ., கல்வித் துறை என எல்லாவற்றின் தற்சார்பையும் தவிடுபொடியாக்கிக் அவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக பா.ச.க. செய்த வெட்கமற்ற, அருவறுக்கத்தக்க முயற்சிகளின் காட்சித் தொகுப்பாகவே இந்த ஆட்சி இருந்தது. விரல்விட்டு எண்ணக்கூடிய சில கார்ப்பரேட் நிறுவனக் கும்பலின் கைக்கு அரசியல் அதிகாரத்தை மாற்றுவதில் விடாப்பிடியாக நின்றது பா.ச.க. மீண்டுமொருமுறை பா.ச.க. வை ஆட்சிக்கு வரவிடுவது என்பது பாசிசத்தை நோக்கிய அதன் பயணத்திற்கு பட்டுக்கம்பளம் விரிப்பதாகவே அமைந்துவிடும். ஆளும்வர்க்க முகாமில் ஒன்றை மாற்றி ஒன்றை ஆதரிப்பதா? என்ற வழக்கமான கேள்வியைவிட இலக்கு பாசிச அரசு என்று வெளிப்படையாக சொல்லிலும் செயலிலும் அறிவித்து அதை நோக்கி அடிமேல் அடிவைத்து முன்னேறிய சக்திகளை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறவிடுவதா? என்ற கேள்வியாக 2019 நாடாளுமன்ற தேர்தல் களம் விரிகிறது. இந்த சக்திகளை எதிர்த்து நிற்கும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியான தாராளவாத முதலாளிய சக்திகளும் அதனுடன் கூட்டணிப் போட்டுள்ள நாடாளுமன்ற சந்தர்ப்பவாத சக்திகளும்தான் உண்மையில் பா.ச.க. வேர்விட்டு கிளைப்பரப்பி வளர்வதற்கான நிலைமகளை உருவாக்கியவை. இந்த சக்திகளின் உலகமய, தனியார்மய, தாராளமயக் கார்ப்பரேட் பொருளியல் கொள்ககைகளும் மென்மையான இந்துத்துவமும்தான் பா.ச.க.வின் தீவிர இந்துதேசியவாதத்திற்கும் ஒற்றை சந்தை ஒற்றையாட்சிக்குமான நிலைமைகளைப் பாதுகாத்து வருகிறது.

இன்னொருபுறம், போராடக் கூடிய மக்கள் முகாம் நிற்கிறது. இந்த மக்கள் முகாம் மீது தாராளிய முதலாளித்துவ சக்திகளும், சந்தர்ப்பவாத சக்திகளும் உருவாக்கிய நெருக்கடிகளைவிட பாசிச சக்திகள் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன.  நாடாளுமன்ற அதிகாரத்தின் மூலம் நிதிமூலதனக் கும்பலாட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைத்து அரச வடிவத்தை மாற்றும் முழுமையான அபாயத்தை நோக்கி நாட்டின் அரசியல் போகும் போது, ஆளும்வர்க்கத்தின் ஒரு பகுதியான தாராளவாத, முதலாளித்துவ சக்திகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தாலும், நாட்டின் முதன்மையான அபாயமாக அரச வடிவத்தை முழுமையாக மாற்றி எதேச்சதிகார கும்பல் ஆட்சி சூழலை உருவாக்கக்கூடிய சக்திகளைத் தோற்கடித்தாக வேண்டும்.

நாடு தழுவிய அரசியல் சூழலும் புரட்சிகர நிலையும் பாசிச சக்திகளையும், சந்தர்ப்பவாத சக்திகளையும் நேர்க்கோட்டில் நிறுத்தி எதிர்க்கக்கூடிய  வலுநிலையில் இல்லை. அத்தகைய புரட்சிகர வலுநிலையில் மக்கள் முகாம் இல்லாத நிலையில் பாசிச சக்திகளையும், தாராளவாத சக்திகளையும் நேர்ப்படுத்திக் கொண்டிருந்தால் அது தயாரிப்பற்ற நிலையில், பாசிச சக்திகளின் கையில் தெரிந்தே அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு ஒரு முழுமையான போரைத் தெரிவு செய்து கொள்வதற்கு ஒப்பானதாகும். மக்கள் முகாம் தம்மை வலுப்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தைப் பெறுவதற்கும் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் காலை ஊன்றி நிலைநிறுத்திக் கொள்வதற்கு பாசிச சக்திகள் அரசாங்கத்தைக் கைப்பற்றும் முயற்சியைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

1990 களில் தலித் அரசியல், மதச்சிறுபான்மை அரசியல் எழுந்து வந்து தமக்கான அரசியல் அதிகாரத்தை கோரி நின்ற போதிலும் கால ஓட்டத்தில் ஆளும்வர்க்க சக்திகளோடு சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த்தேசிய அரசியல், சூழலியல் அரசியல், ஊழல் எதிர்ப்பு மக்கள் நல அரசியல் ஆகியவை முன்னரங்குக்கு வந்துள்ளன. கடந்தகால புதிய வரவுகள் பழையனவற்றில் கரைந்து போனது போலன்றி மாற்று அரசியல் களத்தை வளர்த்தெடுக்கும் வகையில் புதிய ஆற்றல்களுக்கிடையிலான விரிவானக் கூட்டணி , கொள்கை அடிப்படையிலான கூட்டணி இன்றியமையாததாகும். வெறுமனே காவி எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு என்று பேசுவது மட்டும் பா.ச.க. வைத் தோற்கடிப்பதற்கு போதுமானது அல்ல, பா.ச.க வின் அரசியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் நிதிமூலதன எதேச்சதிகாரம், கார்ப்பரேட் மயம் ஆகியவற்றையும் ஒருசேர எதிர்த்தாக வேண்டும். மேலும் அரசு பற்றிய புரிதலுடன் பாசிசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதற்கான நீண்டகாலப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான மக்கள் முன்னணியைக் கட்டுவது பற்றிய அக்கறை தேவை. இந்த புரிதலோடுதான் உடனடி அபாயத்தைத் தவிர்ப்பதற்கு மேற்கண்ட முழகக்த்தைத் தேர்தல் நிலைப்பாடாக முன்னெடுத்திருக்கிறோம்.

உடனடி அபாயத்தைத் தவிர்த்து, நீண்ட காலக் கண்ணோட்டத்துடன் தேர்தலுக்கும் தேர்தலுக்குப் பின்னுமான சூழலை உற்றுக் கவனித்து உண்மையான இடதுசாரி சனநாயக அரசியல் சக்திகளின் பலத்தை விரிவுபடுத்துவதற்கு அறைகூவல் விடுக்கிறோம்.

 

தோழமையுடன்,

 

பாலன்,  பொதுச்செயலாளர்

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) –   தமிழ்த்தேச மக்கள் முன்னணி

20-3-2019

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW