உயர் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்க்கு மறுக்கப்படும் சமூகநீதி!
தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டுப் பல்கலைக்கழக நிர்வாகமே! உடனடியாக மாணவர் டி. அப்புவுக்கான சேர்க்கையை உறுதிசெய்து நெறியாளரையும் கல்லூரிக்குள்ளேயே நியமித்திடு!
செய்தி அறிக்கை
சென்னை வண்டலூர் கண்டிகை அருகே தமிழ்நாடு உயர்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இப்பல்கலைக்கழகம் உயர்கல்வித்துறையின் கீழ் வராமல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பல்கலைக் கழகத்தில்தான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டி.அப்பு என்ற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் (M.Phil) படிப்பை முடித்திருக்கிறார். தேர்விலும் தேர்ச்சிப்பெற்றுள்ளார். அதற்கடுத்து முனைவர்பட்ட ஆராய்ச்சி படிப்பை (Ph.D) படிப்பதற்காக அதே பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதியிருக்கிறார். அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 2018 சூலை மாதம் பல்கலைக்கழகம் வெளியிட்டது. அவற்றில் டி. அப்பு என்கிற மாணவரும் தேர்ச்சிபெற்றார்.
நிர்வாகம் ஒதுக்கியதோ 15 இடம். அவற்றில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றினால் கட்டாயம் பட்டியலினத்தை சேர்ந்த மாணவரும் உள் இடஒதுக்கீடு அடிப்படையில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மாணவரும் தேர்வு செய்யப்பட வேண்டும். இதனை தேர்வுசெய்து முடிவுகளை வெளியிடாமல், அருந்ததியர் மாணவரை சேர்ப்பதா? வேண்டாமா? என்கிற குளறுபடியிலேயே முடிவெடுக்காமல் கடந்த 8 மாதங்களாக மிகவும் அலட்சியத்துடன் காலம் தாழ்த்திவந்திருப்பது சனநாயக விரோதமட்டுமின்றி, சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் வேலையைத்தான் செய்திருக்கிறது. குறிப்பாக, பல்கலைக்கழக நிர்வாகத்தில் உடற்கல்வியியல் துறைக்கு மட்டும் மாணவர் சேர்க்கை முடிவை, நெறியாளர் ஒதுக்கீடு முறையை வெளியிடாமல் நிறுத்தி வைத்தன்மூலம் தேர்வான மொத்த மாணவர்களின் எதிர்காலம் வீணடிக்கப்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பிற்கு சுழற்சிமுறை மூலம் மாணவர்களை தேர்வு செய்யும் முறையை கடைபிடித்திருக்கிறது. இதற்கு UGC கல்விமுறையை பின்பற்றியிருக்கிறது. அந்த வகையில் 15 இடங்களை இடஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்கும் பொழுது உள் இட ஒதுக்கீடு அடிப்படையில் கட்டாயம் ஒரு அருந்ததியர் மாணவரை தேர்வுசெய்தே ஆகவேண்டும். ஆனால், பல்கலைக்கழகமோ அருந்ததியர் மாணவனுக்குக இடம் இல்லை என்று கூறி 8 மாதத்திற்கும் மேலாக முடிவுகளை அறிவிக்காமல் மாணவர்களின் எதிர்காலத்தை பல்கலைக்கழகமே சிதைத்திருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட மாணவர் டி. அப்பு நம்மை அணுகினார். நாம் உடனடியாக தோழர்கள் பேரா. சிவக்குமார், பேரா. அ. மார்க்ஸ் அவர்களின் ஆலோசனையுடன் தமிழ்த்தேச மக்கள் முன்னணி, சாதி ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு மாணவர் இயக்கத் தோழர்கள் சேர்ந்து கடந்த 8.2.2019 அன்று ‘உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்’தின் துணைவேந்தரையும் பதிவாளரையும் நேரில் சந்தித்தோம். பல்கலைக்கழகத்திற்குள் இடஒதுக்கீட்டை குறிப்பாக உள் இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அருந்ததியர் மாணவராக டி. அப்புவை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மனு ஒன்றை கொடுத்துவிட்டு வந்தோம்.
பின் மீண்டும் அவர்களுக்கு அரசாணை GO (MS) NO. 50 ஐ மேற்கோள்காட்டினோம். அதாவது உயர்கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலின, அருந்ததியர் மாணவர்க்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அரசாணை இவை. பத்திரிகையாளர்கள் மூலமும் அழுத்தம் கொடுத்தோம். அதன்பின்னர்தான் நிர்வாகம் இறுதி முடிவெடுத்து மாணவர் அப்புவை சேர்க்கைப் பட்டியலில் இணைத்து பிப்ரவரி இறுதியில் முடிவை வெளியிட்டது. நாம் மற்றும் பேரா.சிவக்குமார் தோழர் பேரா. அ. மார்க்ஸ் ஆகிய இரு தோழர்களின் அழுத்தத்தின்மூலமும் மாணவர் சேர்க்கை உறுதிசெய்யப்பட்டது.
ஆனால், தற்பொழுது நிர்வாகம் மீண்டும் மாணவர் அப்புவின் கல்வி எதிர்கால வாழ்வை நசுக்கும் வேலையை செய்யத் தொடங்கியுள்ளது. அதாவது பல்கலைக் கழகத்திற்குள் படித்த மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக்குள்ளேயே நெறியாளரை ஒதுக்கியிருக்கிறது. டி.அப்பு என்கிற மாணவர்க்கு மட்டும் திருச்செந்தூர் செல்வம் கல்லூரியிலுள்ள நெறியாளரை ஒதுக்கியிருக்கிறது என்பது திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட மாணவரின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவருவதையே இது காட்டுகிறது. வன்மையான கண்டனத்துக் குரியது. கல்லூரிக்குள் படிக்காத வெளி மாவட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதே கல்லூரியில் படித்துவந்த அருந்ததியர் சமூக மாணவன் அப்புவை மட்டும் வெளி மாவட்டத்திற்கு அனுப்பவுதன் நோக்கம் என்ன? பொருளாதார ரீதியாகவும், சமூக படிநிலையிலும் பின்தங்கிய மாணவன் எப்படி முனைவர் பட்ட ஆய்வை முடித்து வேலைவாய்ப்பில் முன்னேறி வரமுடியும்? இதற்கு யார் பொறுப்பு? ஒவ்வொரு மாணவனின் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்வியை உறுதிசெய்வது அரசின் கடமையல்லவா? முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பிற்கு இதுவரை இடஒதுக்கீட்டு முறையை கடைப்பிடிக்கப்படுவதில்லை. அப்படியொரு அரசாணை இதுவரை இல்லை என்பதை கவனிக்கும் போது எத்தனை மாணவர்கள் நெறியாளரை சார்ந்து படிக்க முடியாமல் படிப்பை தொடரமுடியாமல் காயடிக்கப்பட்டுள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வராத செய்தி.
இந்த பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் பிஎச்டி (Ph.D) ஆய்வுப்படிப்பிற்கு இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றியிருக்கிறது. மற்ற கல்லூரிகளுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது. ஆனால் இடஒதுக்கீட்டை அமலாக்குவதில் பாகுபாட்டை கடைப்பிடிக்கிறது. கல்லூரி நிர்வாகம் உள்நோக்கத்துடன் அணுகும் முறையைக் கைவிட்டு சமூக நீதியை உறுதிசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று 12.3.2019 தலைமைச் செயலகத்தில் முதன்மைச் செயலர் திரு. தீரஜ்குமார், ஐ.ஏ.எஸ் அவர்களை நேரில் பார்த்து மனு அளித்தோம். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் அப்புவிற்கு கல்லூரிக்குள்ளேயே வாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும், நெறியாளரை ஒதுக்க வேண்டும் என்கிற முறையிட்டோம்.
‘இடஒதுக்கீட்டால் தலித்கள் பலனடைந்துவிட்டார்கள், இடஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும்’ என்று கூறிவரும் உள்நோக்கம் கொண்டவர்கள் இச்சிக்கலுக்கு என்ன பதிலைக் கூறப் போகிறார்கள்?
சாதிய சமூகத்தில் சமத்துவம் மலரும் வரை ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு இருக்கும் என்பதை நடைமுறையாக்கிட கரம் கோர்ப்போம், போராடுவோம்!
தோழர்களே!
அரச நிர்வாகத்தின் அலட்சியத்தை அம்பலப்படுத்துவோம்!
உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை நிலைநாட்டுவோம். சமூகநீதியை உறுதிசெய்வோம்!
ரமணி,
பொதுச்செயலாளர், சாதி ஒழிப்பு முன்னணி
8508726919, aruvi1967@gmail.com