ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு…..ஒரு ஆசிரியரின் பார்வையில்

10 Mar 2019

உலகப் புகழ் பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் “The idea of Justice” என்னும் நூலில் நீதிக்கான விளக்கத்தை அழகாக கொடுத்திருப்பார்.

“நீதி”, “நியாய” என இரு  சொற்களும் ஒரே பொருளை தந்தாலும் இரண்டுமே பயன்படுத்துவதன் காரணம் என்ன?

“நீதி” என்பதன் பொருள் பொதுநலனுக்காக உருவாக்கப்படும் விதிமுறைகள். “நியாய” என்பதன் பொருள் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகையில் வரும் சிக்கல்களை தீர்த்தல் என விளக்கமளிக்கிறார்.‌

பெரும்பான்மையோர் நலனுக்காக விதிமுறைகள்  மற்றும் சட்டங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் நீதி நிலைநாட்டப்படுகிறது. அவ்வாறு நீதி நிலைநாட்டுகையில் வரும் பாதிப்புகளை ஆராய்தல் நியாயத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

நிற்க, மத்திய அரசு சமீபத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.  மாநில அரசும் எவ்வித விவாதமும் இல்லாமல் பொதுத் தேர்வு நடத்த எத்தனித்து உள்ளது.

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் நோக்கம் மாணவர்களின் திறனை கண்டறிவதற்காக என கூறப்படுகிறது. மாணவர்கள் தங்கள் வயதிற்குரிய கற்றல் அடைவு திறன் பெற்றிருக்க வேண்டும் என்பது சென் கூறியது போல் நீதியாகும்.  ஆனால் இப் பொதுத் தேர்வை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொள்வது நியாய கருதுகோளில் வரும். பொதுத்தேர்வு முறையால் அரசு, கிராமப்புற மற்றும் முதல் தலைமுறை குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் தேர்ச்சி பெற தவறினால், மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும். அதிலும் தோல்வியடைந்தால் மீண்டும் ‌அதே வகுப்பை படிக்க வேண்டும் என அரசு தகவல் வெளியிட்டது‌. அப்படி தேர்ச்சி பெறாத மாணவர் பள்ளியில் விட்டு வைப்பார்களா? இடை நிற்றலின்‌‌ எண்ணிக்கை  அதிகமாகதா?  இது கல்வி உரிமைச்சட்டத்திற்கு எதிரானதல்ல வா!!?

திறமையான மாணவர்களை உருவாக்குகிறோம் என்ற பெயரில் தேர்ச்சி பெறாதவர்களை திறனற்ற (அரசு  மொழியில் ) மாணாக்கர்கள் என்று முத்திரை குத்துவதும் பள்ளியை விட்டு வெளியேற்றுவதும் எப்படி தீர்வாகும்?

ஒரு மாணவர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் அவர் மட்டுமா காரணம்? ஆனால் அதற்குரிய விளைவை அந்த மாணவர் மட்டுமே சுமக்கிறார்.  மாணவர் கற்றல் திறனை அடையவில்லை எனில் அதற்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வு கண்டறிவதே ஒரு சனநாயக அரசின் கடமையாகும்.

1993இல் யாஷ்பால் குழு அறிக்கையில், ” கற்றலானது குழந்தைகள் மற்றும் பெற்றோர் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது” எனவும், அதற்கு மாற்றாக “சுமையில்லா கற்றல் முறையை” முன்மொழிந்தார்.

அதனடிப்படையில் 12 வருடங்களுக்கு பிறகு 2005 ஆம் ஆண்டு தேசிய கலைத் திட்டம் உருவாக்கப்பட்டது. இக்கலைத்திட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் பின்வருமாறு:

  • பள்ளிக்கு வெளியே உள்ள அறிவோடு இணைத்தல்
  • மனனம் முறையிலிருந்து மாற்றம்
  •  குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உகந்த கலைத்திறம்
  • நெகிழ்வான தேர்வு முறை
  • சனநாயக கூறுகளான சமத்துவம், நீதி, மதசார்பற்ற மற்றும் சுதந்திர மதிப்புகளை மாணாக்கர்களிடம்  கட்டமைத்தல்.

மேலும், மொழி, கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் மட்டுமின்றி கலை,அறிவு,இசை, நடனம், நாடகம் ,விளையாட்டு,அமைதிக்கான கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றையும் இணைத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இத்தகைய கல்வியியல் மற்றும் இணை கல்வியியல் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் இருத்தல் வேண்டும்.

தேசிய கலைத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை அரசானது முழுமையாக நிறைவேற்றி உள்ளதா? அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கான பணியிடம் உருவாக்கப் பட்டு விட்டதா?

என் பள்ளியில் 3 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர் இல்லை. ஓவியம், இசை, நாடகம், தையல் என எவ்வித இணை கல்வியியல் துறைகளும் இல்லை.

ஒரு மாணவரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஏற்ற கல்வியை கொடுக்காமல் அரசு பொதுத்தேர்வு வைக்கலாமா?

தேசிய கலைத்திட்டத்தில் தேர்வு பற்றிய சீர்திருத்தத்தில் முக்கியமாக வலியுறுத்தப்படும் கருத்துக்கள் பின்வருமாறு:

  • பாட கருத்துக்கள் சார்ந்த வினாக்களுக்கு மாற்றாக சிக்கல் தீர்க்கும் வினாக்கள் உள்ளடக்கிய தேர்வு
  • குறைந்த தேர்வு நேரம்
  • எட்டாம் வகுப்பு வரை பொதுத் தேர்வு கிடையாது

பல ஆய்வுகளுக்குப்  பின்னர் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு நடத்தக்கூடாது எனக் கூறியுள்ளனர். இக்கலை திட்டத்தை முன்னிறுத்தியே கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.  தேசிய கலைத்திட்ட அறிக்கையின்படி அனைத்தும் முழுமையாக செயல்படுத்த பட்டுள்ளதா?

போதுமான அளவு ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதா?ஒவ்வொரு பள்ளியிலும் கற்றல் திறனை மேம்படுத்த நூலகம், கணிப்பொறி ஆய்வகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் உள்ளதா? தேசிய வருமானத்தில் குறைந்தபட்சம் கல்விக்காக 6 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என்று 1960களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இன்றுவரை 3.75 சதவீதத்திற்கும் மிகவில்லை.

பிரதம் (Pratham)  என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம்,17,230 கிராமங்களை உள்ளடக்கிய 32 மாவட்டங்களின் கல்வி  நிலையினை  ஆய்வு செய்து, மாவட்டங்கள் வாரியாக அடிப்படை மொழி மற்றும் கணித திறன் குறித்து வெளியிட்டு வருகிறது.‌

ஆனால் மாணவர்கள் கற்றல்திறன் அடையாமல் இருப்பதற்கான காரணங்கள் பற்றி ஆராயப்படவில்லை.  காரணங்களை அறியாமல் எவ்வாறு தீர்வை நோக்கி செல்ல முடியும்?

அரசு சார்பாக கல்வி முறைகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதா?  கற்றல் திறன் அடையாததற்கான காரணங்கள் குறித்து ஆய்வுகள் மற்றும் தரவுகள் கண்டறியப்பட்டுள்ளதா? அதற்கான தீர்வுகள் என்ன?  அரசுப் பள்ளியில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்களின் பெற்றோர் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். கல்வியாளர் ச. மாடசாமி  அவர்கள் புதிய பாட நூல் எழுதுகையில் ஒரு முக்கிய கேள்வியை முன் வைத்தார், “மலை, கடல், சமவெளி என  புவியியல் ரீதியாக பேசும்  மொழியானது வேறுபடுகையில் அவர்களின் மொழியையும் உள்ளடக்கிய பாடநூல்கள்  உருவாக்கப்படுகிறதா? மேல்தட்டு வர்க்க மொழி மாணவர்களால்  உள்வாங்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.  அப்படியிருக்கையில் மாணாக்கர்கள் எவ்வாறு பாடக்கருத்துகளை உள்வாங்கிக் கொள்வார்கள்?

 

மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பேராசிரியர் வஸந்திதேவி அவர்கள் கல்விமுறையின் முரண்பாடுகள் பற்றி கூறுகையில் “வகுப்பறையின் நாகரீகச் சூழலில் இருந்து உழைக்கும் மக்களின் மொழியும் கலாச்சாரமும் விரட்டப்பட்டுள்ளது. மேலும் உழைப்பே கல்வியிலிருந்து விரட்டப்பட்டு விட்டது. கல்வி என்பது வெறும் மூளை வளர்ச்சியாகிவிட்டது.  மற்ற திறமைகளுக்கு நம் கல்வி முறையில் இடம் இல்லை”. கோத்தாரிக் கல்விக் குழு,” தலையும் கையும் இதயமும் இணைந்து இயங்கும் முழுமைத்துவ கல்வி” என கல்வியை வரையறுக்கிறது.

தகவல்களை மனனம் செய்வதும் அதை வரி மாறாமல் எழுதுவதுமே அறிவு என கல்வியானது குறுகிவிட்டது. இதைதான் பாவ்லோ பிரெய்ரே ” வங்கி முறை” எனக் குறிப்பிடுகிறார். எந்த ஆசிரியர் அதிகளவு தகவல்களை திணிக்கிறாரோ அவரே சிறந்த ஆசிரியர் என்றும், அதிகளவு தகவல்களை உள்வாங்கும் மாணாக்கர்  திறன் பெற்றோர் என்றும்‌ மதிப்பீடுகிறோம் என தகவல் சார்ந்த கல்வியை சாடுகிறார்.‌

 

உதாரணமாக எட்டாம் வகுப்பில் படிக்கும் என்னுடைய மாணவர் நவீன். வாசிக்கவும் எழுதவும் தெரியாது. வகுப்பில் அமைதியற்று இருப்பார். வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு வகுப்பறை நூலகம் ஒன்றினை அமைத்து நூல்கள் குறித்து அறிமுகம் செய்ய கூறினேன். வாசிக்கவே தெரியாத நவீன் நூல் குறித்து பேச முன் வந்தார் நான் உட்பட அனைவரும் நவீன கண்ணிமைக்காமல் பார்த்தோம். ஆனால் அவரோ தைரியமாக எவ்விதமான பதட்டமும் இல்லாமல், “The milkman’s cow” கதையை அனைவரும் புரியும் வகையில் விளக்கினார். நான் வியப்புற்று  எப்படி இது சாத்தியம்? அதுவும் ஆங்கிலத்தில் உள்ள கதையை எப்படி கூறினாய்? என கேட்கையில், நாணப்பட்டு “படம் பார்த்து கதை சொன்னேன் டீச்சர்” என்றார்.

அப்படியெனில் நவீனுக்கு மேல்வர்க்க மொழி தான் பிரச்சனை. படம் மூலம் பாடகருத்துகளை  கொண்டுச் சென்றால் அவர் புரிந்து கொள்கிறார். அவர் ஏன் எட்டாம் வகுப்பிற்குரிய கற்றல் திறனை அடையவில்லை என கவனிக்கையில் சிறுவயதில் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பும் இன்றி இருந்துள்ளார். பின் தாத்தாவிடம் வளருகிறார். தாத்தா நோய்வாய்ப்படும் ஒவ்வொரு சமயமும் பட்டியில் உள்ள ஐம்பது ஆடுகளை மேய்க்க சென்று விடுவார்.

இப்போது நம் கல்வி அமைப்பின்படி நவீன்‌ கற்க தகுதியில்லாதவர்‌. ஆடுகளை மேய்த்து,அதன்‌வளர்ப்பு முறை அறிந்தாலும் அதில் கவனத்தில் கொள்ளப்படாது!!

இதுவே ஆடு மேய்ப்பது கற்றல் திறன்‌ எனில் நான்கு பட்டப்படிப்பு படித்த நான் தேர்ச்சியடையப்போவதில்லை.

முழுமையான கல்வியை அளிக்காமல், மாணாக்கர்கள் கற்றல் சூழலை பற்றிய புரிதல் இன்றி, தரம் என்னும் பெயரில் பொது தேர்வு நடத்துவது எவ்வகையில் நியாயம்?

கல்வி ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை அதை தரம் என்னும் பெயரில் மறுக்கப்படுவது மனித உரிமை மீறல் அன்றோ ‌.

  • முத்துகுமாரி, பள்ளி ஆசிரியர்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW