தொழிலாளர் வர்கத்தின் இன்றையநிலை என்ன ? – மார்ச் 3 ‘தொழிலாளர் உரிமைக்கான எழுச்சி பேரணி’ தில்லி

23 Feb 2019

நாம் மிகவும் நெருக்கடியான சூழலில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக முதலாளித்துவ அமைப்பின் பொருளாதார நெருக்கடியை நாம் கண்கூடாக பார்க்கிறோம். நெடுநாளாகவே, அதிலும் குறிப்பாக 2008 பொருளாதார நெருக்கடிக்கு பின்னர், முதலாளிகளின் இலாப விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதைத் தான்  எல்லா குறிகாட்டிகளும் நமக்கு காட்டுகின்றன. வேலையின்மை உலகெங்கிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2007 ஆம் ஆண்டு வரை இருந்ததை விட, அதற்கு பின்னான நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு 2015 ஆம் ஆண்டு குறித்து வெளியிட்ட உலக வேலைவாய்பு மற்றும் சமூக கண்ணோட்ட போக்குகள் அறிக்கையின்படி ( World Employment and Social Outlook – Trends 2016) உலக அளவில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 197.1 மில்லியனாக (19.7 கோடி), அதாவது 2007 இல் இருந்ததை விட 27 மில்லியன் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இது 2016 ல் மேலும் 2.3 மில்லியன் அதிகரித்து மொத்த வேலையில்லாதோரின் எண்ணிக்கை 199.4 மில்லியனாக (19.94 கோடி) உயர்ந்தது.  இதிலும் கூட  முறைசாரா தொழில்முறை காரணமாக மிகப் பெரிய அளவில் வளர்ந்து வரும் “நிலையற்ற வேலைவாய்ப்புகள்” கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. வளர்ந்து வரும் நாடுகளை மட்டுமே எடுத்துக்கொண்டால், விவசாயம் அல்லா துறைகளில் 50 % க்கும்  அதிகமான தொழிலாளர்கள் முறைசாரா வேலைகளில் பணி புரிகின்றனர். அதிலும் 33 % வளரும் நாடுகளில், 65 % க்கும்  மேலான தொழிலாளர்கள் முறைசாரா தொழில்களில் பணி புரிகின்றனர். 2010 ஆம் ஆண்டுக்கான இந்திய தேசிய மாதிரி ஆய்வின் படி, விவசாயம் அல்லா வேலைகளில் 94 % தொழிலாளர்கள் முறைசாரா துறைகளில் பணி புரிகின்றனர்.

 

இப்படியான நெருக்கடியான காலக்கட்டத்தில், உலக முதலாளித்துவ அமைப்பு நெருக்கடியை சமாளிப்பதற்கு கையாளும் ஒரே யுக்தி தனது சுமையை உழைக்கும் வர்க்கத்தின் மீது இறக்கி வைப்பது தான்.இதை பல்வேறு வழிகளில் செய்கின்றனர். தொழிலாளர்களின் உண்மையான ஊதியத்தை குறைக்கவும் அவர்களின் வரிச்சுமையை அதிகமானதாக மாற்றியமைக்கவும் செய்கின்றனர். உண்மையான ஊதியம் என்பது பணவீக்கம் போக தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊதியம் ஆகும். தொழிலாளர்களது  உண்மையான ஊதியத்தின் மற்றொரு அளவுகோல், தொழிலாளர்கள் சமூகத்தின் மொத்த உற்பத்தியில் ஈட்டும் பங்காகும். ஆக தொழிலாளர்கள் தங்களது உண்மையான ஊதியத்தை பெறாமல் இருக்க, முதலாளிகள் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர் – விலைவாசி உயரும் அதே விகிதத்தில் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வருமானங்கள் உயராமல் பார்த்துக்கொள்வது, முறைப்படுத்தப்பட்ட வேலைகளை குறைத்து ஊதியங்கள் மிகக் குறைவாகக் கிடைக்கக்கூடிய முறைசாரா துறைக்கு தொழிலாளர்களை மாற்றுவது, குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டுமே தொழிலாளர் நலச்சட்டங்களின் பாதுகாப்புக்கு கீழ் வரும் வகையில் திருத்தம் செய்வது என பல வழிமுறைகளை முதலாளிகள் பயன்படுத்துகின்றனர். எனினும், ஆளும் வர்க்கம் எவ்வளவு தந்திரமாக செயல்பட்டாலும் GST மற்றும்செல்லாகாசு அறிவிப்பு போன்ற நடவடிக்கைகளின் போது தொழிலாளர்கள் அதிகரிக்கும் நெருக்கடியை உணர்ந்து, தங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் காப்பதற்காக வெகுண்டெழுந்து போராட துணிகின்றனர். இது பொருளாதாரத்தின் விதி. இது போன்ற போராட்டங்களை தடுப்பதற்காக, இந்துத்துவம், பார்ப்பனீயம், ஆணாதிக்கம், இனவாதம் என்கின்ற மக்களை பிரிக்கக் கூடிய தத்துவங்களை ஆளும் வர்க்கம்  வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தும். தொழிலாளர்களை பல்வேறு மட்டங்களில் பிரித்தாள்வதற்காக, இந்த பிளவுபடுத்தும் தத்துவங்களை சமூகத்தின் அதிமுக்கியமான பேசுபொருளாக மாற்றி, நாம் என்ன சாப்பிட வேண்டும்,என்ன பேச வேண்டும், என்ன உடையனிய வேண்டும், எதற்கு ஆரவாரம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும். ஊடகங்களும் இத்தகைய விவாதங்களை ஊக்குவித்து மக்களிடையே பகையுணர்வை வளர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன. சமூகத்தில் உள்ள தீவிரமான பொருளாதார பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்புவதற்கான முயற்சிகள் தான் இவை.

 

உலகளாவிய நெருக்கடி நிலை இந்தியாவிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது. பல ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியால் வெறுப்புற்றிருந்த மக்கள் வேறு வழியின்றி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தனர். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியும் மோசமான கபடதாரிகளால் ஆன கூட்டணி என்பது தெளிவாகியுள்ளது. 2002 குஜராத் கலவரத்தை காரணம் காட்டி வாஜ்பாய் அரசிலிருந்து விலகிய ராம் விலாஸ் பஸ்வான் இன்று மிகையாக மோடியை புகழ்கிறார். முன்பு மோடியை கடுமையாக விமர்சித்த நிதிஷ் குமாரோ இன்று நட்பு பாராட்டுகிறார். அ.இ.அ.தி.மு.க இரண்டு பக்கமும் பந்தாடுகிறது. தேசிய ஜனநாயாக கூட்டணியின் தலைமையோ சங்க பரிவாரங்களின் அதிகார பிடியில் உள்ளது. காலனிய ஆட்சிக்கெதிரான இந்திய சுதந்திர போராட்டத்தின் போது துரோகமிழைத்தவர்கள் இன்று இந்துத்துவா கொள்கையை பரப்பி “ராம ராஜ்ஜியம்” அமைக்க துடிக்கிறார்கள். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அண்டைய தேசியங்களின் விருப்பத்துக்கு மாறாக “அகண்ட பாரதம்” அமைக்கப் பார்க்கிறார்கள். மறுபுறம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் சரி தேசிய ஜனநாயக கூட்டணியும் சரி “நவதாராளவாதம்” என்ற ஒரே பொருளாதார கொள்கையை தான் கடைபிடிக்கிறார்கள். ஒரே வேறுபாடு என்னவென்றால், காங்கிரஸ் தடுமாற்றத்துடன் மென்மையான நவதாராளவாத கொள்கைகளை அமல்படுத்திய இடத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியோ வேக வேகமாக நவதாராளவாத கொள்கை மாற்றங்களை அமல்படுத்தி ஏகாதிபத்திய சக்திகளிடம் விசுவாசத்தை நிருபித்து வருகிறது. செல்லாக்காசு நடவடிக்கை, GST, தொழிலாளர் சட்ட திருத்தங்கள் போன்றவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டவை என்றாலும், அவற்றை அமலாக்குவதற்கு முன்னரே காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

 

இந்த பொருளாதாரக் கொள்கைகள் ஏகாதிபத்திய மூலதனத்தையும் இங்குள்ள உள்நாட்டு மூலதனத்தையும் பெருக்கி, இந்திய இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் தங்குதடையின்றி  சுரண்ட வழிவகை செய்கின்றன. பன்னாட்டு மூலதனம் தங்குதடையின்றி உள்ளே நுழைவதற்கு தடையாக உள்ள அனைத்து சட்டங்களையும் நீக்க வேண்டும், அந்நியநாட்டு நேரடி முதலீட்டை ஆடாமோபைல், பாதுகாப்புத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை, விமான நிலையங்களின் மேலாண்மை, வங்கிகள், நிதித் துறை, ரயில்வே துறை, கட்டுமானத் துறை, சில்லறை வர்த்தகம், மருந்துத்துறை, பெட்ரோலிய ஆராய்ச்சி மற்றும் சுத்திகரிப்பு, விவசாயம், சுரங்கத் துறை, கல்வி ஆகிய துறைகளில் அனுமதிப்பதற்காக சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இரண்டாவதாக, முதலாளிகளின் நலனுக்கேற்ப இங்கு ஈட்டிய இலாபத்தை மீண்டும் முதலாம் உலக நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கான தடைகளை நீக்க வேண்டும். இதற்காகவே  ‘வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம்’ ( Limited Liability Partnership) போன்ற புதிய கொள்கைகள் முதலில் 2008 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தேசிய  ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வளர்த்தெடுக்கப்பட்டது. ஆக மூலதனம் தற்போது தங்குதடையின்றி இந்தியாவிற்குள் வந்து செல்ல வழிவகை செய்யப்பட, இயற்கை மற்றும் மனித வளங்களை தடையின்றி சுரண்டவும் அனுமதிக்க வேண்டும் அல்லவா. மிக அதிகளவிலான இயற்கை வளச்சுரண்டலை அனுமதிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் தாராளமயமாக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டின் புதிய சுற்றுச்சூழல் சட்ட திருத்த மசோதா, இயற்கை வளங்களை மேலும் கொள்ளையடிக்க அனுமதித்தது, அதோடு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரங்களையும் குறைத்தது.

 

இவை எல்லாவற்றையும் விட நவதாராளவாத கொள்கைகள் முக்கியமாக கோருவது மனித வளமான உழைப்பை முற்றிலும் சுரண்டுவதற்கான சுதந்திரத்தையே. இதற்காக இந்தியாவில் தொடர்ச்சியாக பல சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை இன்னும் வெகுவாக சுரண்டலாம். தொழிலாளர் சட்ட திருத்தங்களின் நோக்கமே தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளை அகற்றுவது தான். அடிப்படை தொழிலாளர் உரிமைச்சட்டங்களான தொழிற்சாலைகள் சட்டம், தொழில் தகராறுகள் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் (ஒழிப்பு மற்றும் கட்டுபடுத்துதல்) சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் என அனைத்தும் திருத்தப்பட உள்ளன. பெரும்பாலான திருத்தங்கள் தொழிலாளர் நலனுக்கு எதிரானவையாகவே உள்ளன. நிலவும் சட்டத்தின்படி, 100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் எந்தவொரு நிறுவனமும் அரசு அனுமதியின்றி ஆட்குறைப்போ செய்யவோ மூடவோ கூடாது என்ற விதி உள்ளது. இது தற்போது 300 தொழிலாளர்களுக்கு மேல் கொண்ட தொழிற்சாலைகளுக்குத் தான் பொருந்தும் என்பதாக நீர்த்துப்போகும் அபாயத்தில் உள்ளது. ஏற்கனவே பா.ஜ.க ஆளும் பல மாநிலங்களில் இந்த சட்டதிருத்தம் அமலாக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் இந்த தொழிலாளர் சட்ட திருத்தங்கள் மிகவும் இரகசியமான முறையில் இயற்றப்படுகின்றன. உதாரணமாக, இரவுப் பணியில் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இது ஆண்-பெண் சம உரிமையை நிலை நாட்டுவதற்காக கொண்டு வரப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையென்னவெனில், அத்தியாவசிய சேவைகளை தவிர மற்ற அனைத்து சேவைகளிலும் இரவுப் பணியை தடை செய்வதன் மூலமாகவும் சமத்துவத்தை நிறுவலாம்.

 

தொழிலாளர்களை சுரண்டுவதற்கு பயன்படுத்தப்படும் இன்னொரு முறை தொழிலாளர் ஊதியத்தை மென்மேலும் குறைப்பது. கடந்த 30 வருடங்களாக உண்மையான ஊதியம் (real wages) உயராமல் தேங்கி உள்ள நிலையில், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் மட்டும் ஆண்டுக்காண்டு சராசரியாக  7% அதிகரித்துள்ளது. இத்தகையதொரு சூழ்நிலையில், தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக மேலெழுந்துள்ளது. இந்தியாவில் தொழிலாளர்களின் ஊதியம் அவர்களுது பணிப்பாதுகாப்புடன் மிக நெருக்கமாக பின்னிப்பினைந்துள்ளது. நிரந்தர பணியாளர்கள் தற்காலிக பணியாளர்களை விட அதிக ஊதியம் பெறுகின்றனர், தற்காலிக பணியாளர்களோ நாட்கூலித் தொழிலாளர்களை விட அதிக ஊதியம் பெறுகின்றனர். நாட்கூலித் தொழிலாளர்களோ ஒப்பந்த தொழிலாளர்களை விட அதிக ஊதியம் பெறுகின்றனர். இப்படி ஒரு ஊதிய பாரபட்சத்துக்கு சட்டப்படி அனுமதியில்லை என்றாலும் நடைமுறையிலோ இந்த பாரபட்சமான படிநிலை இன்னும் நிலவுகிறது. தொழிலாளர்களது ஊதியத்தை மென்மேலும் குறைக்க முதலாளி வர்க்கம் கடைபிடிக்கும் மற்றொரு வழிமுறை நிரந்தரத் தொழிலாளர்களை குறைத்து அந்த வேலைகளை முறைசாரா வேலை முறைக்கு மாற்றுவதாகும். இது வழக்கமாக ஒப்பந்த தொழிலாளர்களிடம் வேலைகளை வழங்குவதன் மூலம் அடையப்படுகிறது. ஆனால் உண்மையில் இது நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையாக முறைசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தையும் பலன்களையும் தடுப்பதற்கான வெற்று முகமூடியாகும்.

தொழிலாளர்களை சுரண்டுவதற்கு வேறு பல வழிமுறைகளையும் கையாளுகிறார்கள். சமூக பாதுகாப்பு திட்டங்களான வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன. தொழிலாளர் அரசு காப்பீடு  போன்ற திட்டங்களின் கீழான பாதுகாப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சுருங்கக் கூறினால், இந்தியத் தொழிலாளர்களின் பாடு நாளுக்கு நாள் மோசமாகி சகிக்கமுடியாத ஒன்றாகிக் கொண்டிருக்கிறது .

 

இன்றைய பிரதான பிரச்சனை தொழிற்சங்கங்கள் பலவீனமாக  இருப்பதாகும். ஒரு காலத்தில் தொழிற்சங்கங்கள் மிகப்பெரும் தீர்மானகரமான சக்தியாக விளங்கியது. ஆனால் இன்றோ அவ்வாறு இல்லை. அவ்வப்போது ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை அனுசரிக்க மட்டுமே செய்கிறார்கள். இந்திய தொழிலாளர்களின் ஜனத்தொகையை கணக்கில் கொள்ளும்போது, இயல்பாகவே “ உலக அளவில் மிகப்பெரிய வேலை நிறுத்த போராட்டமாக”  அவை அறியப்படுவதில் ஆச்சரியமில்லை. அதே நேரத்தில், தொழிற்சங்க இயக்கங்கள் எந்தப் பாதையில் பயணிப்பது என்று தெளிவற்று போனதை நாம் பார்க்கிறோம். எந்த குறிப்பிட்ட திசையிலும் அவை தொடர்ந்து இயங்குவது இல்லை. பல ஆண்டுகளாக எந்த ஒரு கோரிக்கைக்காகவும் தொடர்ந்து ஒரு இயக்கத்தை கட்டமைத்தது இல்லை. உதாரணமாக, ஓய்வூதிய உரிமைக்கான வேலை நிறுத்தம் போன்ற போராட்ட வடிவங்கள் குறைந்து கொண்டே வருகிறது. மனிதாபிமானமிக்க சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்ற முந்தைய சங்கங்களின் முனைப்பு இன்றைய சங்கங்களில் இல்லை. இந்திய நாட்டில் தொழிற்சங்க இயக்கம் ஒரு தீர்மானகரமான சக்தியாகவே தற்போது இல்லை.

 

தொழிற்சங்க இயக்கங்களை பற்றி பேசும் போது ஒன்றை தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது – தொழிற்சங்கங்கள் பலவீனமானதன் அர்த்தம் தொழிலாளர்களிடம் போராட்ட உணர்வு மங்கிவிட்டது என்றோ அவர்களிடம் முன்பிருந்ததை போன்ற தியாக உணர்வு குறைந்துவிட்டது என்றோ அர்த்தம் இல்லை, மாறாக நாடெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் போராடுவதற்கு தயாராக உள்ளனர். நாடெங்கிலும் உள்ள சுயாதீன தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த எண்ணற்ற பெரும் போராட்டங்களின் மூலம் இதை காணலாம். உதாரணமாக, மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தையோ மூணார்  தேயிலை தொட்ட தொழிலார்களின் போராட்டத்தையோ அல்லது மும்பை துப்புரவு தொழிலாளர்களின் போராட்டத்தையோ நாம் எடுத்துக் கொள்ளலாம். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தது நிறுவனமயமாக்கப்பட்ட பெரிய மைய தொழிற்சங்கங்கள் அல்ல, மாறாக சுயாதீனமாக செயல்படும் சிறிய தொழிற்சங்கங்கள் தான் அத்தைகைய மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கின்றன. அதே நேரத்தில், அத்தகைய சுயாதீன சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களோ பெரும்பாலும் ஒரு ஆலைக்குள் அல்லது அருகருகில் உள்ள ஆலைகளுக்குள் மட்டுமே நடக்கின்றன. அத்தகைய தொழிற்சங்கங்கள் அரசுக் கொள்கைகளை எதிர்த்து போராட்டத்தை தனியாக முன்னெடுக்க முடியாது.

 

இத்தகைய ஒரு பின்புலத்தில் தான் தொழிலாளர் வர்க்கத்திடையே ஒரு புதிய ஒற்றுமை தேவை என்பதை கண்டறிந்துள்ளோம். அரசின் நவ தாராளவாத கொள்கைக்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டை எடுத்துள்ள எல்லா போராடும் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே அத்தகைய ஒரு ஒற்றுமையை உருவாக்க தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தோம். இன்று தொழிலாளர் வர்க்கம் சந்திக்கும் தலையாய பிரச்சனைகளை கண்டறிந்தோம். எங்கள் விவாதத்தின் இறுதியில், ஒப்பந்த வேலைமுறை ஒழிப்பு, தொழிலாளர்களுக்கான ஊதிய நிர்ணயம் மற்றும் தொழிலாளர் விரோத சட்டதிருத்தங்களை தடுப்பது ஆகியவற்றை பிரதான பிரச்சனைகளாக கண்டறிந்தோம். இந்துத்துவா சக்திகளும் சாதிய சக்திகளும் வளர்ந்து வரும் கால சூழலில் இவையனைத்தையும் சரியாக அணுகவேண்டிய  புரிதலுக்கு வந்துள்ளோம். முதன் முதலாக தொழிலாளர் வர்க்கம் அரசதிகாரத்தை கைப்பற்ற நடத்திய மாபெரும் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டை  கடந்து வந்துள்ளோம். ஆகஸ்டு 2016 ஆம் ஆண்டு தில்லியில் மாநாடு ஒன்றை நடத்தி, அதன் பிறகு நாடெங்கிலும் மாநாடுகள் நடத்தத் திட்டமிட்டோம். இதையொட்டி, மேற்கண்ட மூன்று கோரிக்கைகளிலும் எங்கள் நிலைபாட்டை விளக்க மூன்று ஆவணங்களை தயாரித்துள்ளோம்.

 

பரந்துபட்ட தொழிலாளர் வர்க்கத்தை சென்றடையும் வண்ணம் எங்களின் கோரிக்கைகளை தெளிவாக முன்வைக்க முயற்சி எடுத்துள்ளோம். அதே நேரம், எந்த ஒரு விஷயத்தையும் அதன் பொருள் திரிபடும் அளவுக்கு அபத்தமாக எளிமைபடுத்தாதவாறு பார்த்துக் கொண்டுள்ளோம். தொழிலாளர்கள் தங்கள் முன்னுள்ள பிரச்சனைகளை தாமாகவே உணர்ந்து ஒரு தீர்வை வந்தடைவார்கள். இதை மனதில் கொண்டு தான் இந்த குறுநூலை தயாரித்துள்ளோம். தொழிலாளர் வர்க்கத்துக்கு இந்த குறுநூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். தொழிலாளர் வர்க்கம் ஒன்று மட்டும் தான் ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து அல்லல்படும் அனைத்து வர்க்கங்களின் துயர் நீக்க முடியும்.

 

 சோசலிச தொழிலாளர் மையம் – M.A.S.A

தமிழில்; லீனஸ்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW