ஆக்கிரமிப்பாளர்களே! காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்!……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்!

19 Feb 2019

இந்தியாவின் தோல்வியடைந்த அரசியல் கொள்கையும் இராணுவத் தீர்வுமே படுகொலைகளை உருவாக்குகின்றன.

புல்வாமா தாக்குதல் – 2019, பிப்ரவரி 14 அன்று 78 வாகனங்களில் 2500 க்கும் மேலான மத்திய ரிசர்வ பாதுகாப்புப் படையினர் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது புல்வாமா மாவட்டத்தில் அவண்டிபோராவில் உள்ள லேடிமூடு என்ற இடத்தில் சுமார் 350 கிலோ வெடிமருந்து தாங்கிய வாகனத்தைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ தாண்டிவிட்டது.  ஜெய்ஷ் – இ – முகமது என்ற இயக்கம் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட முகமது ஆதில் தார் என்ற 19 வயது இளைஞர் பேசும் காணொளி ஒன்று  வெளியாகியுள்ளது.  முகமது ஆதில் தாரின் சொந்த கிராமமான குந்திபாக், தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 6 மைல் தொலைவில் உள்ளது. மத்தியப் பாதுகாப்பு படை என்பது நேரடி இராணுவம் என்ற வகைப்பாட்டில் வருவதல்ல, துணை இராணுவம் என்ற வகைப்பாட்டில் வருவது. விடுமுறைக்குப் பின் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அவர்கள் இடம்பெயர்வது நன்கு கவனிக்கப்பட்டு இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதற்கு முன் 2 பெரிய தாக்குதல்கள் நடந்துள்ளன. அவை உரி மற்றும் பதான்கோட் தாக்குதலாகும். இப்போது நடந்துள்ள புல்வாமா தாக்குதல் இந்த ஆட்சிக் காலத்தில் நடந்த மிகப் பெரிய தாக்குதல் மட்டுமல்ல, காஷ்மீர் போராட்டத்தின் இராணுவ தாக்குதல் வரலாற்றிலேயே நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் ஆகும்.  உண்மையில், ’சர்ஜிகல் ஸ்டிரைக்’ மூலம் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு முகாம்கள் அழிக்கப்பட்டன என்று நடுவண் அரசு சொன்னதற்கு சவால்விடக் கூடிய வகையிலான தாக்குதலாக இது அமைந்துள்ளது. கடந்த காலங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்டது உண்டு. ஆனால், அண்மைக் காலத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்கள்தான். முகமது ஆதில் தாரின் கடைசிக் காணொளியில் கூட, தெற்கு காஷ்மீர் இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்பதைப் போல் வடக்கு காஷ்மீர் இளைஞர்களும் பங்கேற்க வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்திருப்பது கவனத்திற்குரியது. ”350 கிலோ வெடி மருந்து காஷ்மீரிலேயே சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஜம்மு நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கென்று பயன்படுத்திய வெடி மருந்துகளின் மிச்சசொச்சத்தில் இருந்து எடுத்திருக்க வேண்டும்” என்று பிப்ரவரி 16, 2019 அன்று நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவின் முன்னாள் இராணுவ ஜெனரல் ஹூடா தெரிவித்துள்ளார். வெடிகுண்டு தாக்குதல் நடக்கப் போகிறதென முன்கூட்டியே உளவுத்துறை தகவல் கொடுத்ததாக சொல்கின்றனர். ஆனால், ”குறிப்பான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. பொதுவான தவகல்களைக் கொண்டு தற்கொலைத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது” என்று ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசராக இருக்கும் கே.விஜயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், யார் இதன் மூளையாக செயல்பட்டார்? ஜம்முவில் இருந்து வாகனங்கள் வருவது பின் தொடரப்பட்டதா? வெடி மருந்தின் தன்மை போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இந்த தாக்குதல் முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ள ஜெய்ஷ்-இ-முகமது  பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஆயுதக் குழுவாகும். இதன் தலைவர் மசூத் அசார் ஆவார். பாகிஸ்தானில் 2002 ஆம் ஆண்டில் இருந்து சட்டவிரோத அமைப்புகளுக்கானப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 1998 க்கு முன்பு அர்கத்-உல்-முஜாகிதீன் என்ற பெயரில் இவ்வமைப்பு செயல்பட்டு வந்துள்ளது. 1998 க்கு முன்பு மசூத் அசார் இந்தியாவில் சிறையில் இருந்தவர். 1998 ஆம் ஆண்டு  வாஜ்பாய்  ஆட்சிக் காலத்தில் காந்தகார் விமானக் கடத்தலின் பேரப் பொருளாய் இவர் விடுவிக்கப்பட்டார். இப்போதைய அரசின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல்தான் அப்போது உளவுத்துறை இயக்குநராக இருந்தவர்; விமானக் கடத்தலின் போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர். 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு மசூத் அசார் பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டார். பின்னர் போதிய சான்றுகள் இல்லை என்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஸ்ரப் மீதொரு தாக்குதல் முயற்சி செய்துள்ளது ஜெய்ஷ்-இ-முகமது. 2016 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் மசூத் அசார் ஒருமுறை கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டான் இதழ் தெரிவிக்கிறது.

இப்போது காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 56 ஆயுதம் தாங்கியப் போராளிகள் இருப்பதாக இந்திய இராணுவ அதிகாரி சொல்கிறார். இவர்கள் தெற்கு காஷ்மீரில் இருந்து அண்மைக் காலத்தில் போராளிக் குழுவில் சேர்ந்தவர்கள். 2000 ஆம் ஆண்டு வாக்கில் போராளிக் குழுக்கள் மிகவும் சுருங்கிப் போயிருந்தன. இந்த ஐந்து ஆண்டுகளில் அந்த நிலைமை மாறியுள்ளது. காஷ்மீரில் உள்ள ஆளும் வர்க்க கட்சிகளைச் சேர்ந்த முப்தி, அப்துல்லா குடும்பத்தின் மீது மக்களிடையே அதிருப்தி வளர்ந்துள்ளது. ஆதில் முகமது தாரின் தந்தை கூட இந்த தலைவர்களைத் தான் கடுமையாக விமர்சிக்கிறார். 2010 ஆம் ஆண்டில் இருந்து காஷ்மீரில் ’இண்டிபிடா’(கல்லெறி)  வகையிலான தெருக்களில் நடத்தும் கல்லெறிப் போராட்டங்கள் அலைஅலையாய் எழுந்தன. பெருந்திரளான இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், படித்தவர்கள் எனவொரு புதிய தலைமுறை இந்தியப் படையை நோக்கி கல்லெறியும் போராட்டங்கள் நடந்தன. ’ஆசாதி’ என்ற முழக்கம் விண்ணை முட்டின.

அப்போராட்டக்காரர்கள் நாளொன்றுக்கு 500 ரூ பணம் வாங்கிக் கொண்டு கல்லெறிகின்றனர் என்றளவிலேயே இந்திய ஆளும் வர்க்க கட்சி தலைவர்கள் இதை அணுகினர். இப்போராட்டங்கள் இந்திய அரசால் அரசியல் வகையில் அணுகப்படாமல் இராணுவத்தைக் கொண்டு எதிர்கொள்ளப்பட்டன.   போராட்டக்காரர்கள், சிறுவர்கள் என பெல்லட் குண்டுத் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் பார்வையிழந்தனர். கடந்த 2018 செப்டம்பரில் நடந்த ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரில், காஷ்மீரில் இந்தியப் படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்த கடுமையான விமர்சனங்களைத் தாங்கிய அறிக்கை ஒன்றை அதன் ஆணையர் முன்வைத்தார். இந்திய அரசு அதை மிக துச்சமாக மதித்தது; காஷ்மீருக்குள் ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் குழு பார்வையிடுவதை அனுமதிக்க மறுத்தது.

பா.ச.க. வின் ஆட்சிக் காலத்தில், 2016 இல்  நடந்த புர்ஹான் வானி என்ற போராளி இளைஞரின் மோதல் சாவு மீண்டும் போராட்ட அலைக்கு காரணமானது. புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட முகமது ஆதில் தார்கூட புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலத்தில் பங்குபெற்றபோது இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி மூன்று மாதங்கள் படுக்கையில் இருந்துள்ளார். இராணுவ வாகனத்தில் ஒரு காஷ்மீர் இளைஞரைக் கட்டி வைத்து ஓட்டிச் சென்றதும்கூட இக்காலகட்டத்தில் நடந்தது. அதைகூட இந்திய ஆட்சியாளர்கள் கண்டிக்கவில்லை! முகமது ஆதில் தாரும்கூட இராணுவத்தினரால் அவமதிப்புக்குள்ளாகியுள்ளதை அவர் தந்தை சொல்லியுள்ளார். தனது மூக்கால்  இராணுவ வாகனத்தைச் சுற்றிலும் ஒரு வட்டத்தைப் போடுமாறு நிர்பந்திக்கப்பட்டுள்ளார் முகமது ஆதில் தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி பலமுறை சொல்லி வருந்தியுள்ளார் அவர். புர்ஹான் வானியின் வீரமரணத்திற்குப் பிறகுதான் போராளி இயக்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது. கல்லெறிப் போராட்டங்களில் ’விடுதலை(ஆசாதி)’, ’இந்தியப் படையே வெளியேறு’ ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சுதந்திர காஷ்மீரை வலியுறுத்தக் கூடியவர்கள், பாகிஸ்தானுடனான இணைப்பைக் கோரக் கூடியவர்கள், இந்திய அமைப்புகுள் கூடுதல் அதிகாரத்திற்குப் போராடக் கூடியவர்கள் என்று மூன்று பிரதான தரப்பினர் அங்கு உண்டு. காங்கிரசு அரசாவது பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டிக் கொண்டு இருக்கும். ஆனால், பா.ச.க. அரசோ பேச்சுவார்த்தையின் கதவுகளை முற்றாக மூடியது. இந்திய அரசமைப்புக்கு வெளியிலான தீர்வைக் கோரக் கூடியவர்களோடு எவ்விதப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று அறிவித்தது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்ற நிலையெடுத்தது. முற்றுமுழுதான இராணுவத் தீர்வே பா.ச.க. அரசின் வழிமுறையாக இருந்தது.

கையில் கற்களோடு ஆயிரக்கணக்கில் தெருவில் இறங்கி நடத்தப்பட்ட போராட்டங்கள் கண்டுகொள்ளப்படாதது மட்டுமின்றி அவை பெல்லட் குண்டுகளாலும் சட்ட விரோத கைதுகளாலும் பார்வைபறிப்புகளாலும் முடமாக்கலாலும்  பாலியல் அச்சுறுத்தல்களாலும் எதிர்கொள்ளப்பட்ட இடத்தில்தான் தீவிரமானப் போராட்ட வடிவங்களை நோக்கி காஷ்மீர் இளைஞர்கள் தள்ளப்பட்டது நடந்துள்ளது. 2000 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆயுதக் குழுக்கள் எழுச்சிப் பெற்றிருந்த நிலையைப் போன்று ஆயுதக் குழுக்கள் வளருகின்ற சூழலை இந்திய அரசின் கடந்த ஐந்து ஆண்டு கால அணுகுமுறை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கானப்  போராட்டம் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது. இந்திய அரசின் அணுகுமுறைக்கு ஏற்றாற் போல் அது பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது. தெருப் போராட்டங்களை இந்திய அரசு கையாண்ட முறை முகமது ஆதில் தார்களின் தீவிரப் போராட்ட வடிவங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்திய அரசு புல்வாமா தாக்குதலுக்குப் பாகிஸ்தானைப் பொறுப்பாக்கியுள்ளது. இந்த ஐந்து நாட்களில், ”பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருக்கிறது, இத்தாக்குதலுக்கு வலுவான எதிர்வினை பாகிஸ்தானுக்கு தரப்படும், சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவோம், பதிலடி கொடுப்பதற்கு இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்குகிறோம்” என்று வெளிப்படையான அறிவிப்புகள் பறந்துள்ளன. ’மிக விரும்பத்தகுந்த நாடு’ என்று பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியிருந்த அந்தஸ்த்தை  திரும்பப் பெற்று வர்த்தக நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 200% வரிவிதிப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள போராளி இயக்கத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு திரும்பிப் பெறப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் தூதருடன் இந்திய அரசு பேசியுள்ளது. இன்னொருபுறம் இந்திய ஆளும்வர்க்க கட்சிகள், உள்நாட்டு மக்களிடம் தற்கொலைப் படை தாக்குதலைக் காட்டி இந்திய தேசிய வெறியைத் தூண்ட முயன்றுவருகின்றன.

புல்வாமா தாக்குதல் குறித்து மிகுந்த கவலை கொள்வதாகவும் கண்டிப்பதாகவும் அதே நேரத்தில் இந்தியாவின் எதிர்வினை என்பது சிந்தனை அற்ற முன்முடிவுடன் கூடிய(Knee jerk reaction) ஒன்றாக இருக்கிறது. என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த குல்புசன் ஜாதவ் வழக்கில் அவரது வாக்குமூலத்தை ஒரு சான்றாக ஏற்க முடியாதென இந்தியா சொல்லும் போது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பால் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியைக் கொண்டே அந்த அமைப்பு செய்ததாகவும் பாகிஸ்தானின் பங்கு இதில் இருப்பதாகவும் முடிவுக்கு வந்துவிட முடியுமா? என்று பாகிஸ்தான் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தன்னுடைய உளவுத்துறை, பாதுகாப்புக் குறைபாடுகள் பற்றியெல்லாம் ஆய்வு செய்யாமல் தங்களைக் குற்றம் சொல்வதையே முதல் வேலையாக இந்தியா கொண்டிருக்கிறது என்று பாகிஸ்தான் சொல்லியுள்ளது.

தாக்குதல் குறித்து உரிய சான்றுகள் இருப்பின் அவற்றை கொடுக்குமாறும் அதை விசாரிப்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் வெளிவரும் பிரபலமான தாராளிய சனநாயக பத்திரிகையான டான் ( dawn, விடியல்), பாகிஸ்தானில் செயல்படும் அமைப்புக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் இருப்பின் இந்திய அரசு அதை கொடுக்க வேண்டும் என்றும் அத்தகைய அமைப்புகளைப் பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சொல்லியுள்ளது.

முன்னதாக பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான், ”இந்தியா அமைதியை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் தாம் இரண்டு அடி எடுத்துவைப்போம்” என்று சொல்லி இருந்தார்.  கர்தாப்பூர் சீக்கிய வழிபாட்டுக்கு சாலை அமைக்க ஒப்புக்கொண்டு அதற்கு கடந்த ஆண்டு நவம்பரில் அவர் அடிக்கல் நாட்டினார். ஆனால், அப்போதும்  இந்தியா பாகிஸ்தானுடனானப் பேச்சுவார்த்தைக்கு முனையவில்லை.

இந்த தாக்குதல் நடப்பதற்கு ஒரு நாள் முன்பு புதன்கிழமை அன்று ஈரான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சிஷ்டன் – பலுசிஸ்தான் என்ற இடத்தில் இரானியப் புரட்சிப் படைக்கு எதிராக நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-அல்-அடில் என்ற அமைப்பை ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரான் சொல்லியுள்ளது. கொல்லப்பட்ட 27 பேரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் அமெரிக்க எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர், பாகிஸ்தான் எதிர்ப்பை அல்ல!

இந்தியா தன்னைத்  தற்காத்துக் கொள்வதற்கு உரிமை உண்டென்றும்( Right to Self defence)  பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது என்றும் அதை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் புல்வாமா தாக்குதலை ஒட்டி அமெரிக்கா சொல்லியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இரண்டு முறை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரைத் தொடர்பு கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு அமெரிக்கா இந்தியாவுக்கு துணைநிற்கும் என்று சொல்லியுள்ளார். தங்களிடம் ’ஆளில்லா இராணுவ வானூர்தி’, கண்காணிப்புக் கருவிகள் வாங்கிப் பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்ளுமாறும் அமெரிக்கா சொல்லியுள்ளது. அமெரிக்கா இப்படி சொல்லியிருந்தாலும் இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறுக்கும்நெடுக்குமாக சிக்கலான வரைபடமாக உள்ளது.   அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கிய உறவு கொண்டிருப்பினும் ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா தொடர்ந்து வருகிறது; இரசியாவுடனான  மிக் 400 ரக விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. இது  இந்தியாவினுடைய அரசியல் பொருளாதார வெளிவிவகார யதார்த்தமாகவுள்ளது.  புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் பெயரை அமெரிக்கா வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தாலும் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் அரசின் அனுசரணையுடன்தான் தாலிபானுடன்  பேச்சுவார்த்தை நடத்திவருகிறது அமெரிக்கா என்பதும் அதுதான் அமெரிக்காவுக்கு முதன்மையானது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியதாகும்.

சீனாவைப் பொருத்தவரை இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது. அதே நேரத்தில் மசூத் அசாரைப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு ஒத்துழைக்க முடியாது எனக் கோடிட்டுக் காட்டியுள்ளது.  மசூத் அசாரைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கடந்த காலத்தில் ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட 1267 எண்ணிட்ட தீர்மானத்தை சீனா தனது வெட்டு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தோற்கடித்துள்ளது. இத்தாக்குதலுக்குப் பின்னும் சீனாவின் இந்நிலைப்பாட்டில் மாறுதல் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இப்பிராந்தியத்தில் காஷ்மீர் பிரச்சனை என்பது வெறும் இந்தியா – பாகிஸ்தானுடைய நேரடி தலையீட்டோடு நின்றுவிடுவதில்லை. அமெரிக்கா, சீனா போன்ற பல்வேறு நாடுகளுக்கிடையிலான சிக்கலான உறவுகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. காஷ்மீரின் ஹுரியத் தலைவர்களோடு பேச மறுக்கும் இந்திய அரசு தாலிபான்களோடு இரகசியப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பிரதிநிதியை அனுப்பியுள்ளது. அதே நேரத்தில் தாலிபான் பாகிஸ்தானோடு நெருக்கமாக இருக்கிறது. ஆப்கனில் இருந்து தன்னுடையப் படைகளை விலக்கிவிட்டு அதில் இந்தியாவை இறக்கிவிட முடியுமா? என்று அமெரிக்கா முயன்று பார்க்கிறது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இருவேறு இயக்கங்கள், அடுத்தடுத்த நாட்களில் இந்தியாவிலும் ஈரானிலும் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியிருக்கும் சூழலில், பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த வேண்டும் என்று இந்தியாவில் குரல்கள் எழும் சூழலில் சவுதி அரேபிய மன்னர் முகமது பின் சல்மான பாகிஸ்தானுக்கு வந்திருக்கிறார்! 2015 இல் சீன அதிபரின் பாகிஸ்தான் வருகைக்குப் பின்னான முக்கியமான வெளிநாட்டுத் தலைவர் ஒருவரின் வருகை இதுவாகும். பாகிஸ்தானில் 12 பில்லியன் டாலருக்கு முதலீடு செய்யவிருக்கிறது சவுதி.  தெற்காசியப் பிராந்திய அரசியலில் நாடுகளுக்கு இடையிலான உறவில் உள்ள யதார்த்தம் இதுவே ஆகும். எனவே, அமெரிக்காவைப் பொருத்தவரை,  காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றிய ’சலசலப்புகள்’ ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எழும்போது இந்தியாவின் பக்கம் நின்று ஐ.நா.வில் இந்தியாவுக்கு எதிராக எதுவும் நகர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும். இது போன்ற தாக்குதலை ஒட்டி இந்தியாவுடனான ஆயுத விற்பனையைப் பெருக்கிக் கொள்ள முடியுமா? என்று பார்க்கும். இவற்றைத் தாண்டி, பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய எந்தவொரு நகர்வையும் அமெரிக்கா செய்துவிடப் போவதில்லை என்பதோடு இந்தியா அப்படி ஏதேனும் செய்தால்கூட அதற்கு அமெரிக்கா துணை நிற்காது.  .

’பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவோம்’ என்று முழங்குவதற்குப் மாறாக ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு பாகிஸ்தானிடம் கோருவது இந்தியாவிற்கு இருக்கும் சாத்தியமுள்ள தெரிவாகும் என்று வெளிவிவகார நிபுணர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.  இருதரப்பு தூதர்கள், இருதரப்பு வெளியுறவுச் செயலர்கள், இருதரப்பு படைத்துறை உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதை நோக்கி இந்தியா செல்ல வேண்டும். மாறாக இராணுவ ரீதியாகப் பதிலடி கொடுப்போம் என்பதெல்லாம் வெறும்  வாய்ச்சவடால் என்ற எல்லையைத் தாண்ட முடியாது. முன்பு நடத்திய ’சர்ஜிகல் ஸ்டிரைக்’ போன்றதொரு தாக்குதலை நடத்திவிட்டு இந்திய மக்களை ஏமாற்றுவதை வேண்டுமானால் செய்யலாம். இந்திய மக்களிடம் போர் வெறியைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காயலாம். ஆனால், அவையெல்லாம் காஷ்மீர் மக்களை மென்மேலும் தனிமைப்படுத்தவதையும் காஷ்மீர் இளைஞர்களைத் தீவிரமானப் போராட்ட வடிவங்களை நோக்கி மென்மேலும் தள்ளுவதிலும்தான் போய் முடியும். எனவே, ’இந்தியாவின் இராணுவத் தீர்வு’ என்று பேசுவதெல்லாம் நடைமுறையில் சாத்தியமற்றதும் நிலைமையைத் தணிப்பதற்கு மாறாக மென்மேலும் தீவிரப்படுத்துவதற்குமே உதவும்.

ஹுரியத் கூட்டமைப்பின் தலைவர் சையது அலி கிலானி, மிர்வைஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் ஆகியோர் அடங்கிய காஷ்மீர் கூட்டுப் போராட்டத் தலைமை புல்வாமா தாக்குதலை ஒட்டி அறிக்கை தந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் எங்களுடைய இளைஞர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்களைத் தூக்கிச் செல்லும்போது ஏற்படும் துயரத்தையும் வலியையும் நாங்கள் கண்டிருப்பதால் இப்போது கொல்லப்பட்டுள்ளவர்களின் நண்பர்களும் குடும்பங்களும் அடையும் துயரை எங்களால் உணரவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது……

மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை நசுக்குவதில் இராணுவமயமாக்கலும், தேடுதல் வேட்டைகளும்(Cordon and Search Operations), குண்டுகள் – பெல்லட்கள் பயன்படுத்தலும், வீடுகளை வெடிவைத்து தகர்த்தலும், பார்வையைப் பறித்தலும் முடமாக்கலும், பொதுப்பாதுகாப்புச் சட்டங்களும், சித்திரவதைகளும் தோல்வி அடைந்திருப்பது மட்டுமின்றி அவை நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது…

இந்த கொலை நடனம் முடிவுக்கு வர வேண்டுமானால்,  வெறுப்பும் பழிவாங்கலும் முடிவுக்கு வர வேண்டுமானால், கொலைகளும் பதில் கொலைகளும் முடிவுக்கு வர வேண்டுமானால், இப்பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டுமானால், பகையுணர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இதை செய்வதற்கு ஆகச் சிறப்பான வழியும் நாகரிகமான முறையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மூன்று தரப்பினரின் கவலைகளைக் காது கொடுத்து கேட்பதும் மனிதநேயம், நீதி உணர்வை உயர்த்திப்பிடித்து அவற்றைத்  தீர்ப்பதாகும். காஷ்மீர் சிக்கலுக்கு நிரந்தரமாக தீர்வுகாணுங்கள்

என்று அந்த அறிக்கை சொல்கிறது. இந்திய அரசோ காஷ்மீரிகளை ஒருதரப்பாக ஏற்க மறுக்கிறது. முதலில் இதை ஓர் அரசியல் பிரச்சனையாக அணுகி பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என்பதுதான் அவர்களின் முன்வைப்பு.  காஷ்மீர் சிக்கலில் நேர்மையானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதுதான்  இந்திய மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அறிவுத்துறையினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மனித உரிமையாளர்கள், உண்மை நிலவரம் தெரிந்த வெளிவிவகாரத் துறை நிபுணர்கள் ஆகியோரின்   கருத்தாக இருக்கிறது. காஷ்மீர் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்களின் அரசியல் விருப்பத்தைக் கருத்தறிய வேண்டும் என்று முரணற்ற சனநாயகத்தில் பற்றுகொண்டோர் கோரி வருகின்றனர்.

பா.ச.க. தரப்பைப் பொருத்தவரை ஓர் இரட்டை அணுகுமுறையைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. காஷ்மீர், பாகிஸ்தான்  விசயத்தில் கடும் போக்காளர்களாக காட்டிக் கொண்டு மக்களிடம் உறுதியான தரப்பு என்று காட்டிக்கொள்ள முயல்கிறார் மோடி. திடீர் என்று பல்டி அடிப்பது போல் பாகிஸ்தான் சென்று நவாஸ் செரிஃபை சந்தித்து ஒருவருக்கொருவர் சேலைகளைப் பரிசளித்துக் கொள்கின்றனர். ’சர்ஜிகல் ஸ்டிரைக் செய்து தக்கப் பதிலடி கொடுத்துவிட்டோம்’ என்று சொல்வார். ஆனால், வர்த்தக, இராஜ்ஜிய உறவுகளில் தேவையான நகர்வுகளைச் செய்வார். மீண்டும் ஒரு நெருக்கடி வந்தால் தீவிரமாகப் பேசுவார். முன்பு வாஜ்பாய் ஆட்சியின் போதும் இது போன்ற காட்சிகளைக் காண முடிந்தது. வாஜ்பாய் – முசாரஃப் சந்திப்பு நடந்து லாகூர் பிரகடனம் வெளியிடப்பட்ட போது கடும்போக்கு நிலைப்பாட்டை அத்வானி எடுத்தார். பிறகு அவரே பாகிஸ்தான் சென்று ஜின்னா ஒரு மதசார்ப்பற்றவர் என்று சொல்லிவந்தார். இப்படி கடும்போக்காளர்களாக காட்டிக் கொள்வதும் தீடீர் சனநாயகவாதிகளாக செயல்படுவதும் மாறிமாறி நடக்கக் காண்கிறோம். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் முசாரஃப் தொடங்கி இம்ரான் கான் வரை இந்தியா – பாகிஸ்தான் முரண்பாட்டின் மையப் பிரச்சனை காஷ்மீர்தான் என்று வெளிப்படுத்தியுள்ளனர். மேசையில் அமர்ந்து காஷ்மீர் பிரச்சனை மீதான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு மட்டும் பா.ச.க. முகாம் என்றுமே திடசித்தம் கொண்டதில்லை. எனவே, பிரச்சனையை எப்படி தீர்க்கப் போகிறோம் என்பதற்கான கொள்கையோ அதில் தொடர்ச்சியோ இவர்களிடம் இல்லை. பாகிஸ்தான் எதிர்ப்பைப் பயன்படுத்தி சொந்த மக்களிடம் இந்திய தேசிய வெறி ஊட்டுவதுதான்  பா.ச.க. இதன் பொருட்டு கொண்டிருக்கும் தொடர்ச்சியான கொள்கையாக இருந்துவருகிறது.

இந்திய தேசிய வெறிக் கொப்பளிக்க பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும் என்று கொந்தளிப்பவர்கள் இந்தியா, பாகிஸ்தான் இவ்விரண்டும் அக்கம்பக்கத்தில் உள்ள அணு ஆயுத நாடுகள் என்பதை மறந்துவிடுகின்றனர். இந்த ஐந்தாண்டுகளில்கூட உரித் தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் என மூன்று பெரிய தாக்குதல்களும் சிறுசிறு தாக்குதல்கள் பலவும் நடந்துள்ளன. சிறு தாக்குதல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கார்கில் போரிலும்கூட அமெரிக்கா தலையிட்டுத்தான் அதை முடிவுக்கு கொண்டுவந்தது. எனவே, இராணுவ வகையில் பதிலடி தருவதற்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் இந்தியாவிற்கு இல்லை. அப்படியான கூப்பாடுகளுக்கு எவ்வித அரசியல் பொருளும் கிடையாது.

புல்வாமா தாக்குதலுக்குப் பாகிஸ்தான் மீது பழிபோட்டு காஷ்மீர் பிரச்சனையைப் பின்னுக்கு தள்ளும் வேலையைத்தான் இந்திய அரசு செய்துவருகிறது. இந்திய அரசின் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பிடியில் இருக்கும் காஷ்மீர் மக்கள் தாம் எதிர்கொண்டுவரும் அடக்குமுறைகளால் போராளிக் குழுக்களை நோக்கிச் செல்கின்றனர். முகமது அதில் தாரின் குடும்ப வட்டத்தில் அவருக்கு முன்பே பலரும் போராட்டத்தில் உயிர் ஈகம் செய்துள்ளனர். காஷ்மீர் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறது! இன்னொருபுறம் இந்திய ஆளும் வர்க்கத்தின் விரிவாதிக்க வெறிக்காக இராணுவத்தைக் காஷ்மீரில் நிறுத்துவதும் ஆளும் வர்க்கக் கட்சிகள் போர் வெறியை ஊட்டி அரசியல் நலன்களைப் பெற்றுக் கொள்வதும் நடக்கிறது. இதனால், இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமும் இரத்தம் சிந்த வேண்டி வருகிறது.

 

எதிர்க்கட்சிகளைப் பொருத்தவரை இந்திய அரசோடு நேர்க்கோடில் நின்று முழு ஆதரவு தருவதாக சொல்லியுள்ளன. மோடி ஆட்சியில் உளவுத்துறை குறைபாடு, பாதுகாப்புக் குறைப்பாடு என்று ஒரு சாரார் விமர்சனம் செய்கின்றனர். இந்திய தேசிய வெறிக்கு துணைப் போவது போல் பாகிஸ்தான் வெறுப்புப் பேச்சுகளால் எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டுக் கொண்டுள்ளனர். கடந்த காங்கிரசு அரசும் இப்போதைய பா.ச.க. அரசும் மக்கள் திரள் போராட்டங்களை இராணுவ வழியில் எதிர்கொண்ட விதம் சிக்கலைத் தீவிரப்படுத்தியுள்ளது என்று எந்தக் கட்சியும் பேசுவதில்லை. சி.பி.ஐ., சி..பி.ஐ.(எம்) உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் என்றும் தமிழ்த்தேசியம் பேசுவோர் என்றும் காட்டிக் கொண்டு மேடைப்பேச்சுகளில் வாள்வீசி வருவோரும் அஞ்சலிக் கூட்டங்களில் கரைந்து போய்விட்டனர். பா.ச.க.வுடையப் பாசிசத்தை இந்துத்துவத்தில் பார்க்கிறார்களே ஒழிய அதனுடைய இந்துராஷ்டிர வெறி காஷ்மீர் தேசத்தை எப்படி நசுக்குகிறது என்பதை அம்பலப்படுத்தி அதை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த ஆற்றல்கள் தயாரில்லை. உண்மையில் இந்த அனைத்துவகை ஆற்றல்களின் இந்திய தேசிய வெறிதான் இந்தியப் படையினர் காஷ்மீரில் இரத்தம் சிந்துவதற்கு காரணமாகும்.

இன்னொருபுறம் இது பயங்கரவாத தாக்குதலா? விடுதலைப் போராட்டமா? என்றும் விவாதித்து வருகின்றனர். இந்திய இராணுவம் ஓர் ஆக்கிரமிப்பு இராணுவம் என்ற வகையில் ஆக்கிரமிக்கு உட்பட்ட தேசத்தில் உள்ளவர்கள் அந்த இராணுவத்திற்கு எதிரானத் தாக்குதலை நடத்தினால் அது எப்படி பயங்கரவாதம் என்ற வகைப்படும்? இன்னொருபுறம் பா.ச.க. வே திட்டமிட்டு நடத்திய சதி என்றும் சிலர் பேசுகின்றனர்.  இந்தியா நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்தமையால், உடனடி அரசியல் பொருளில் இது இந்திய தேசிய வெறிப் பிடித்த பா.ச.க.வுக்கு துணை செய்யும் என்பது உண்மைதான். இந்திய மைய அரசியலில் இந்த தாக்குதல் என்ன விளைவை ஏற்படுத்தும் என்று பேசுவதற்குப் பல்லாயிரக்கணக்கானோர் இருக்க, காஷ்மீர் விடுதலைப் போராட்ட அரசியலில் இந்த தாக்குதல் என்ன விளைவை ஏற்படுத்தும் என்று பேசுவதற்கான ஆற்றல்கள் சொற்பமாகவே உள்ளன.

ஆனால், இந்திய மைய அரசியலில் ஏற்படும் உடனடி விளைவை மட்டுமே கருதிப்பார்த்து இந்த தாக்குதலை மதிப்பிட்டுவிட முடியாது. தாக்குதலை நடத்திய ஆற்றல்கள் இதன் உடனடி அரசியல் விளைவைக் கருதிப் பார்க்காமல் இருந்திருக்கக் கூடும். நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் உடனடி எதிர்மறை அரசியல் விளைவுகளைப் பற்றி கருதிப் பார்க்காமல் நடத்தப்படும் இராணுவத் தாக்குதல்கள் அரசியல் பொருளில் தவறென்றாலும் அத்தகயவை நடக்கத்தான் செய்கின்றன. இதை ஈழப் போராட்டத்திலும் இன்னப் பிற உலக விடுதலைப் போராட்டங்களிலும் கண்டுள்ளோம். இராணுவத் தாக்குதல் ஒவ்வொன்றும அதன் அரசியல் விளைவை முற்றுமுழுதாக கருதிப் பார்த்து நடப்பதில்லை. இராணுவ ஒடுக்குமுறைத் தீவிரமாகும் பொழுது அதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக இராணுவத் தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. அது கடும் இராணுவ அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பதை மட்டுமே இலக்காக கொண்டு நடத்தப்படுவதாகும். காஷ்மீர் விடுதலைப் போராட்டம் என்ற கண்ணோட்டத்தில் இருந்து புல்வாமா தாக்குதலைப் பார்த்தால், தற்கொலைப் படை தாக்குதல் வடிவங்களில் நமக்கு உடன்பாடில்லை என்றாலுங்கூட அதை பயங்கரவாதம் என்று சொல்ல முடியாது. இது  மக்களைப் பயங்கரத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்தில் நடந்த தாக்குதல் அல்ல. விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் வகையில் தீவிரமடைந்துவரும்  இராணுவ  ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு இடையில் ஒரு பலம்பொருந்திய இராணுவத்தை எதிர்கொள்வதற்கான வடிவமாகதான்  இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மேலும் இது பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி நடந்த தாக்குதல் என்று சொல்ல முடியாது. முகமது ஆதில் தாரின் கிராமம் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 6 மைல் தொலைவில்தான் இருக்கிறது. அந்தப் பகுதியில் போராளிக் குழுக்களில் இணைந்து உயிர்விட்ட தியாகிகள் பலர் உள்ளனர். இந்தக் குழுக்களைப் பாகிஸ்தான் ஆதரிக்கிறதா? இல்லையா? என்பது முதன்மை விசயம் அல்ல. அந்த இளைஞர்களிடம் இருக்கும் விடுதலை உணர்வு அவர்களை இயக்குகிறது; போராளிக் குழுக்களை நோக்கி உந்தித் தள்ளுகிறது. இந்த தாக்குதல் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை வைத்து மட்டும் மதிப்பிடாமல், காஷ்மீரிகளின் மக்கள் திரள் போராட்டங்களை மயிராய்க் கூட மதிக்காத இந்திய அரசின் இராணுவ ஆக்கிரமிப்புக்கும் அதன் அட்டூழியங்களுக்கும் எதிரான தாக்குதலாகப் புரிந்துகொள்ள வேண்டிய கடமை நமக்கு உள்ளது. .

உடனே இந்திய தேசிய வெறியூட்டிப் பிழைப்பு நடத்தக் கூடிய ஆற்றல்கள் இந்திய இராணுவத்தின் உயிரிழப்பைக் காட்டி முதலைக் கண்ணீர் வடிப்பர். அதே காஷ்மீர் இராணுவ முகாம்களில் இருந்து தமக்கு உணவுத் தரப்படவில்லை என்ற புகார்கள் வந்ததைக் கண்டோம். பென்சன் பணத்திற்காக இராணுவத்தினர் போராட்டம் நடத்தக் கண்டோம். இந்திய இராணுவத்தில் பணியாற்றக் கூடியவர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்து சென்றவர்கள்; இந்திய தேச பக்திக்கு முழு குத்தகை எடுத்தவர்களாக காட்டிக் கொள்ளும் உயர்சாதி, உயர் வர்க்கத்தினர் எல்லைக்கு சென்று நாட்டைக் காப்பதில்லை. அவர்கள் மேடைகளில் தேசப் பற்றுக்கு உரிமைக் கொண்டாடுவதோடு சரி. மேலும் போபர்ஸ் ஊழல், சவப்பெட்டி ஊழல், ரஃபேல் ஊழல் என ஆயுதக் கொள்முதல்களில் எல்லாம் ஊழல் செய்து இராணுவத்தினரின் பாதுகாப்பை இரண்டாம் பட்சம் ஆக்கிய ஆளும்வர்க்க கட்சிகளின் தலைவர்கள்தான், புல்வாமா தாக்குதலால் கொதித்துப் போய்க் கிடப்பதாக இன்றைக்கு நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய தேசிய வெறி, உணர்வு, பாகிஸ்தான் எதிர்ப்பு என்று வெவ்வேறு மட்டத்தில் இந்திய தேசியவாதம் கட்டமைக்கப்படுகிறது. இப்படி கட்டமைக்கப்பட்டு இதனால் பலனடையக் கூடியவர்களின் அரசியல் நலனுக்காகத்தான் இராணுவ வீரர்கள் பலியிடப்படுகிறார்கள். நாடகத்தனமான வெற்று முழக்கங்கள் எல்லாவற்றின் திட்டவட்டமான இலக்கும் காஷ்மீர் பிரச்சனையை மூடிமறைப்பதுதான். இந்த மோசடித்தனத்தை எதிர்த்துப் பேசித்தான் ஆக வேண்டும்.

காஷ்மீர் விடுதலை, சுயநிர்ணய உரிமை, கூடுதல் அதிகாரத்துடன் சுயாட்சி எனப் பல்வேறு மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகள் ஒருபுறம் இருக்கட்டும். குறைந்தபட்சம் இதை ஓர் அரசியல் பிரச்சனையாக அங்கீகரித்து இராணுவத்தை வெளியேற்றிவிட்டு, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற புள்ளியில் இருந்தாவது நாம் தொடங்கியாக வேண்டும். அந்த இடத்திலிருந்து ஒன்றுபட்டு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாக வேண்டும். குறைந்தபட்சக் கோரிக்கையாக இதை முன்வைக்க வேண்டிய கடமை சனநாயக ஆற்றல்களுக்கு உண்டு. இது காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சனை மட்டுமல்ல. ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே மொழி, ,ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே வரி, ஒரே தேர்வு, ஒற்றையாட்சி என நகர்ந்து கொண்டிருக்கும் இந்திய அரசியல் சக்கரத்தில் சிக்கிக் கொண்டுள்ள தேசிய இனங்கள் அனைத்தினது உரிமைப் பற்றிய பிரச்சனையுமாகும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

இந்திய தேசிய வெறியையும் போர் வெறியையும் ஊட்டி உள்நாட்டுப் பிரச்சனைகளைத் திசைதிருப்ப முயல்வதற்கு மாறாக இச்சிக்கலை நேர்மையுடன் அணுக இந்திய அரசை வலியுறுத்துவோம். காஷ்மீர், பாகிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று தரப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைத் தொடங்கப்பட வேண்டும். காஷ்மீர் இணைப்புக்குப் பின்னான காலத்தில், பொதுவாக்கெடுப்பின் மூலம் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிவோம் என்று ஐ.நா.வில் இந்தியா உறுதியளித்துள்ளது. பொதுவாக்கெடுப்ப்பின் மூலம் காஷ்மீர் தனித்துப் போய்விடும். பின்னர் காஷ்மீரை சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கையாண்டுவிடும் என்பது நொண்டி சாக்கே ஆகும். இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளையும் சீனா, பாகிஸ்தான் கையாண்டு கொண்டுதான் இருக்கின்றன. அதற்காக அந்நாடுகளை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளவா முடியும்? ஒரு தேசம் இந்தியாவோடு இருக்கிறதா? இல்லையா? என்பது அந்த மக்கள் இந்தியாவோடு இருக்கிறார்களா? இல்லையா? என்பதில்தான் இருக்கிறது. வெறுமனே நிலப்பரப்பு அளவில் இணைத்து வைத்துக் கொள்வதாலோ இராணுவத்தின் மூலமாகவோ எதையும் சாதித்துவிட முடியாது.

இந்த தாக்குதலுக்குப்பின் ஜம்மு, அரியானா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் காஷ்மீரிகளுக்கு எதிரானத் தாக்குதலை இந்திய தேசிய வெறிப் பிடித்தோர் நடத்திவருகின்றனர். இதுபோல் கடந்த காலங்களில் நடந்ததில்லை. தீவிர தேசியவாதக் கட்சியான பா.ச.க. ஆட்சிப் பொறுப்பில் இருப்பதாலும் தேசிய வெறி தங்குதடையின்றி ஊட்டப்பட்டு வருவதாலும் பெரும் அச்சுறுத்தலில் காஷ்மீரிகள் உள்ளனர். இந்தியாவில் உள்ள கட்சிகள் இந்த தாக்குதல்கள் பொருட்டு கவலை கொள்ளாமல் இருப்பதை ஓமர் அப்துல்லா, மெஹ்முபா முப்தி உள்ளிட்ட காஷ்மீரின் அனைத்து முக்கியத் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருவழியாக மத்திய உள்துறை அமைச்சகம் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்திய தேசிய வெறி ஊட்டலைக் கண்டும் காணாமல் அதற்கு ஒத்தோதிக் கொண்டிருந்தால் அதன் கோரத் தாண்டவம் காஷ்மீரோடு நிற்கப் போவதில்லை. ஒரு வார  கால தேசப் பற்று நாடகத்தின் விளைவு  இந்தியாவெங்கும் உள்ள காஷ்மீரிகள் மீது வன்முறையின் நிழல் கவிழ்ந்துகிடப்பதுதான்!

காஷ்மீர் ஓர் அரசியல் பிரச்சனை. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தை காஷ்மீரில் இருந்து வெளியேற்றக் கோருவோம். உடனடியாக காஷ்மீர், பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்துவோம். காஷ்மீர் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வலியுறுத்துவோம். அது ஒன்றே இரத்தம் சிந்தலுக்கு முடிவு கட்டும், நீதியான அமைதிக்கு வழிவகுக்கும்!

 

பாலன்,

பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

vasan08@rediffmail.com;

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW