தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை! ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு!

கடந்த டிசம்பர் 15 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து, மீண்டும் திறக்க உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவிற்குத் தடை விதித்தது. தடைக்கு எதிராக வேதாந்தாவின் மேல்முறையீடு மற்றும் மீண்டும் திறக்க உத்தரவிட்ட தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு ஆகியவற்றைப் பரிசீலித்த டெல்லி உச்சநீதிமன்றம் இன்று 18-02-2019 தேசியப் பசுமைத்தீர்ப்பாய உத்தரவுகள் அனைத்தையும் இரத்து செய்துள்ளது.
இது சம்பந்தமான முறையீடுகளுக்கு தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகம், தமிழ்நாடு அரசு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் கிடையாது என்பது நிரூபணமாகியுள்ளது. ஆலையை மூட கொள்கை முடிவெடுக்குமாறு மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சி உட்பட அரசியல் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றோம். இன்று வரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடவடிக்கைககளை தமிழக அரசின் காவல்துறை ஒடுக்கி வருகிறது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி, மாறி சட்டப் பயணம் தொடரும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு தூத்துக்குடி மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தில் படுகொலையான 15 உயிர்களின் ஈகத்தை நெஞ்சிலேந்திப் போராடும் தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு தற்காலிகமாக உத்வேகமளிக்கும்.
தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்குத் துணை நிற்பது தமிழக புரட்சிகர, சனநாயக சக்திகளான நமது கடமையாகும். ஆலையை மீண்டும் திறக்கவிடாமல் கொள்கைத் தீர்மானம் நிறைவேற்ற போராட்டங்களை முன்னெடுப்போம்! மக்கள் போராட்டங்களே நிரந்தரமாக மூட வழிவகுக்கும்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன்,
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 9443184051