கோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்!

கோவை மாநகரில் கடைநிலை கூலி தொழிலாளியாக பெரும்பாலும் அருந்ததிய மக்களே உள்ளனர். மாநகரின் துப்புரவுப் பணியாளராக இம் மக்களே வேலை செய்கின்றனர். துப்புரவுப் பணியாளராக உள்ள மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் தரும் 3000 குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். உக்கடம்.சி.எம்.சி. காலனி,. சித்கர் புதூர் பகுதி குடியிருப்புகள் . மாநகரின் மையப் பகுதியாக அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புகளை அகற்றி அங்கு பெருநிறுவனங்களையும் வணிக மையங்களையும் கொண்டுவர அரசு தொடர்ந்து 15 ஆண்டுகளாக முயன்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தற்போது ஓராண்டு காலமாக இம் மக்களை நகரத்தின் வெளிப் பகுதிக்கு தூக்கியெறியும் நடவடிக்கைகளை எதிர்த்து மக்களும் அரசியல் இயக்கங்களும் கடுமையாகப் போராடி வருகின்ளனர்.
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்ட இடம் தேவையென்று தமிழக அரசு உக்கடம் சி.எம்.சி. காலனி பகுதியில் வீடுகள் கணக்கெடுப்பதற்கு கடந்த பதினைந்து தினங்களுக்கு முன்பு முனைந்தது. அந்தப் பகுதி மக்கள் இதை ஏற்க மறுத்து, ’எங்களுக்கு நாங்கள் குடியிருக்கும் இடத்திலேயே வீடு கட்டிக் (400 சதுர அடி) கொடுப்பதை உத்தரவாதப் படுத்துங்கள், பிறகு கணக்கீடு செய்யலாம்’ எனக் கூறினர். அதை அரசு அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை அதனால் அரசு, காவல்துறை மற்றும் பகுதி மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட்து. அப்பொழுது பகுதி மக்கள் தங்கள் வாழ்விட்த்தை காப்பாற்ற வேண்டும் என்ற இஸ்லாமிய பகுதி மக்களின் (கோட்டைமேடு) ஆதரவு தேடி “எங்களை காப்பாற்றுங்கள்” என்ற முழக்கத்துடன் கோட்டை மேட்டிற்கு சென்றனர். அப்பொழுது இஸ்லாமிய சகோதரர்களும், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அரசு அதிகாரிகள் கணக்கீடு செய்யாமல் திரும்பிவிட்டனர். இஸ்லாமிய மக்களிடம் ஆதரவு கேட்ட உக்கடம் பகுதி மக்களின் செயல் வரலாற்றில் பதிய வேண்டிய செய்தியாகும்.
உக்கடம் பகுதி மக்களுக்கு அப்பகுதியிலியே வீடு கட்டி கொடுப்பதாகவும், அந்த வீடுகள் 400 சதுர அடியில் இருக்கும் என்றும் அரசு வாய்வழியாகத் தான் திரும்பவும் சொல்லிக் கொண்டிசுக்கிறது. அரசிடம் உக்கடம் பகுதி மக்கள் கேட்பது என்னவென்றால், அரசு அனைவருக்கும் வீடு என்பதை சொல்லும்போது ஏன் அரசாணையாகவோ அல்லது அதிகாரபூர்வமாகவோ அறிவிக்க தயங்குகிறது? என்பதுதான். இது மக்களின் 15 வருட கோரிக்கை ஆகும்.
ஏன் உத்திரவாதம் கேட்கிறார்கள் என்றால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உக்கடம் CMC காலனியில் (பேரூர் பைபாஸ் சாலையில்) 250 குடும்பங்களை அப்புறப்படுத்தி கோவை மலுச்சம்பட்டி அரசு குடியிருப்புக்கு மறுபக்கம் குடியமர்த்தப்பட்டனர். அந்த 250 குடும்பங்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபதிற்குரியதாக ஆகிவிட்டது. மேற்கண்ட உக்கடம் சி.எம்.சி. காலனியில் 250 குடும்பங்களை அகற்றும் போது அரசு எந்தவித உத்திரவாதமும் வழங்கவில்லை. அந்த படிப்பினைதான் இப்பொழுது அரசிடம் அதிகாரப்பூர்வமான உத்தரவாதம் கேட்க வைத்துள்ளது.
அந்த 250 குடும்பங்களை வெளியேற்றுவதற்கு அரசு தரப்பில் பல விதமான உளவியல் நெருக்கடிகள் தரப்பட்டது. சில கருங்காலிகளை வைத்து அரசு அதை சாமர்த்தியமாக சாதித்து விட்டது.
மேலும் 2005 –ஆம் ஆண்டு துப்புரவுத் தொழில் தனியார்மயப் எதிர்ப்பு போராட்ட்த்தை சீர்குலைக்க முயன்ற கருங்காலிகள், இன்று உக்கடம் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க “முத்துவீரன் திட்டத்தை” முன் வைக்கின்றனர்.
முத்துவீரன் திட்டம் என்பது என்ன?
2005-07 ம் ஆண்டுகளில் கோவை மாநகரின் ஆணையாளராக இருந்தவர் முத்துவீரன். அப்போது நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் குடிசை மாற்று குடியிருப்புகளை இடித்து, குடியிருக்கும் மக்களை நகரத்தின் வெளிப் பகுதிக்கு அனுப்பும் முயற்சிகளை அரசு மேற்கொண்டது. இதற்கு எதிராக மக்கள் கடுமையாகப் போராடினார்கள். அப்போது ’முத்து விரன் திட்டத்திற்கு’ எதிராக மாற்றுத் திட்டம் முன், வைக்கப்பட்டது. ’மாநகராட்சியின் நிலம்’ எனப் பொய்ப் பிரச்சாரம் செய்து கோவையில் 250 ஆண்டுகளாக குடியிருக்கும் பூர்வகுடிகளின் பகுதிகளை அவர்களின் வாழ்விடத்திலிருந்து வெளியேற்றுவதே ஆகும்.
முத்துவீரன் திட்டம் மிக சாதுர்யமாக துப்புரவுத் தொழிலாளிகளையும், பிற மக்களையும் பிரிக்கிறது. எப்படி என்றால் துப்புரவு தொழிலாளிக்கு குவார்ட்டர்ஸ். வீடு (பணி ஓய்வு பெற்ற உடன் வீட்டைக் காலி செய்யவேண்டும்), துப்புரவுப் பணி அல்லாதாருக்கு பகுதிக்கு வெளியே வீடு என்பதே ஆகும்.
துப்புரவுத் தொழிலாளிகள் பணியில் இருக்கும்வரை வீடு என்றும் பணி ஓய்வு பெற்றவுடன் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்?
உக்கடம் பகுதி மக்கள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் அன்று முத்துவீரன் திட்டத்தை எதிர்க்க காரணம் இதுதான்.
- 250 ஆண்டு காலமாக மக்கள் குடியிருக்கும் இடத்தை எப்படி மாநகராட்சி நிலம் என்று சொல்லலாம்?
- அனைவருக்கும் வீடு என்பதை ஏன் ஏற்க மறுக்கிறது முத்துவீரன் திட்டம்?
- எமது பூர்வகுடி மக்கள் வாழும் காந்திபுரம், V.H. ரோடு, உக்கடம் பகுதிகள் பாலம் கட்டுவதற்கும், மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுவதற்கும் வேறு இடங்கள் மாநகராட்சியிடம் இல்லையா?
மக்கள் 15 ஆண்டுகாலப் போராட்டத்தை ஒற்றுமையாக நடத்தி வருகின்றனர் அவர்களுக்கு உறுதுணையாக நிற்பது அனைவரின் வரலாற்றுக் கடமையாகும்.
-விநாயகம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
vinayagam73@gmail.com, 9994094700