‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை
திருபுவனம் இராமலிங்கம் கொலை இன்றைக்கு தமிழக அரசியலில் பிரதானப் பேசு பொருளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. பாரதிய சனதா கட்சி இதனூடாக ஒரு கலவர அரசியலை நடத்தி, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளைப் பெறலாம் அல்லது ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்றலாம் என்பதற்கான முயற்சியில் இருக்கிறது.
இராமலிங்கம் பின்னணி:
இராமலிங்கம் திருபுவனம் பகுதியில் தாந்தோன்றித்தனமாக அனைவரிடமும் சண்டை போடக்கூடிய ஆள் என அறியப்படக்கூடிய ஒருவர். கடந்த காலங்களில் பல்வேறு அமைப்புகளில் மாறிமாறி இருந்து வந்திருக்கின்ற பின்புலம் அவருக்கு இருக்கிறது. பாமகவில் நிர்வாகியாக இருந்திருக்கிறார். ஜெகத்ரட்சகனுடைய வீரவன்னியர் சங்கத்தில் இருந்திருக்கிறார். பிறகு தமிழீழப் படுகொலை தீவிரமடைந்த போது ஈழ ஆதரவு என்ற பெயரில் இனவாத அரசியலைப் பேசி இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். சாகாவிற்குப் போயிருக்கிறார். இப்படி மாறி மாறி அரசியல் பேசியிருக்கிறார். இவை மட்டுமல்ல, அவருடைய முகநூல் பதிவுகளைப் பார்த்தால் அவரது கடையைத் திறப்பதற்கு ஜமாத்துடைய தலைவரை அழைத்துள்ளார் என்பது தெரிய வருகிறது. அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளுடைய பின்னணியைப் பார்த்தால், உள்ளூரில் யாரோடும் வம்பு சண்டை செய்து அவர்களுடன் அடிதடியில் ஈடுபடுபவராக இருந்துள்ளது தெரிய வருகிறது. பாமகவில் இருந்து நீக்கப்பட்டதற்குகூட காரணம் அவருடைய தான்தோன்றித்தனமான செயல்பாடுகள் காரணமாக இருந்திருக்கின்றன. தன்னை மையப்படுத்தி ஆர்வக்கோளாறாக விவாதிக்க கூடிய, சண்டையிடக்கூடிய ஆளாக இராமலிங்கம் இருந்திருக்கிறார்
அதேபோலத்தான் அந்தப் பகுதியில் மதப்பிரச்சாரத்திற்கு வந்த இஸ்லாமியர்களுடன் வம்புசண்டை செய்திருக்கிறார். அவருக்கு ஒரு நிலையான அரசியல் பின்னணி அல்லது தத்துவ அரசியல் பின்புலம் என்றெல்லாம் இல்லை என்று சொல்லலாம். ஆனால், எல்லாவகையான வெறுப்புப் பிரச்சார அரசியலையும் ஏற்றுக் கொண்டு அதற்காக வாயளக்கக் கூடிய ஆளாக இருந்திருக்கிறார். அப்படித்தான், மதப் பிரச்சாரம் செய்த இஸ்லாமியர்களிடம் மிக மோசமாக நடந்துள்ளார். இஸ்லாமியர் ஒருவருடைய தொப்பியைக் கழற்றி விடுவது, அவர் நெற்றியில் திருநீறு பூசுவது போன்றவற்றைச் செய்துள்ளார். அவர்களிடம் கோட்சேவைப் புகழ்ந்து காந்தியை அயோக்கியன் என்று பேசியிருக்கிறார். இப்படி நிலைபாடுகளை மாற்றிக் கொள்கிற நிதானமில்லாத மனிதரைத் தான் எச்.ராஜா போன்ற இந்துத்துவ சக்திகள் ‘இந்து தியாகி’ போல் அடையாளப்படுத்தி வெறுப்பு அரசியலுக்கு பகடைக்காயாக பயன்படுத்தி இது போன்ற கொலையை மையப்படுத்தி அரசியல் செய்யப் பார்க்கின்றனர்.
இராமலிங்கம் கொலையைக் கண்டித்து பா.ச.க. தில்லியிலும், உத்தரபிரதேசத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறது. அந்த குடும்பத்திற்கு நிதி திரட்டுவது என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது மட்டுமல்ல, மயிலாடுதுறையிலும் கும்பகோணத்திலும் கடையடைப்பு நடத்தி தமிழக அளவில் ஒரு கவனத்தைத் தேடுகின்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து கட்டமைக்கப் பார்க்கிறது.
சாதி அரசியல்:
இராமலிங்கம் கொலை அவர் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் என்ற அடிப்படையில் அணுகப்படுகிறது அதற்காக மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இந்த படுகொலைக்கு மதப் படுகொலை என கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இஸ்லாமியர்கள் வன்னியர்களுக்கு விரோதிகள் என்பது போல காட்டுவதற்கு பா.ம.க. வின் அறிக்கை இன்றைக்கு இந்துத்துவ சக்திகளால் பயன்படுத்தப்படுகிறது . இராமலிங்கத்தின் பின்புலத்தை அறிந்த, திருபுவனம் அளவில் இருக்கின்ற பாமக வின் மாவட்ட நிர்வாகிகள் யாரும் இந்த கொலைப் பற்றி பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை அவர்கள் பெயரளவில் தலைமைக்கு கட்டுப்பட்டு இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வது, சுவரொட்டி போடுவது போன்றவற்றைச் செய்துள்ளனர்.
சாதிய அடிப்படையில் சாதிய சமூகக் கூட்டணிக் கணக்குகளைப் போடும் பா.ச.க. இக்கொலையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக, மாநில அளவில் பா.ம.க. வால் அத்தகைய அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இராமலிங்கத்தைப் பொருத்தவரை அவர் பா.ம.க.விலோ அல்லது வன்னியர் சங்கத்திலோ தொடர்ந்து இருந்தவர் இல்லை. பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளை எடுத்து தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். ஆனால், இந்த இடத்தில் மதத்தையும் சாதியையும் வைத்து அரசியல் செய்யக்கூடிய சக்திகள் அந்தக் கொலையைப் பயன்படுத்துவதற்கு முயல்வது வாக்கு வங்கி நலனே தவிர வேறொன்றும் இல்லை
இதற்கு எல்லாம் ஒருபடி மேலே போய் சாதிய முரண்பாடுகளைத் தூண்டி அரசியல் கூட்டணிக்குப் பயன்படுத்தும் நோக்கத்தில், எச்.ராஜா திருச்சியில் நடந்த விடுதலைச் சிறுத்தைகளின் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதன் செயல்வடிவம்தான் இந்தக் கொலை என்று சொல்லி சாதிய முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்த பார்க்கின்றார்.
இன்றைக்கு பா.ச.க. அகில இந்திய அளவில் சமூக பொறியமைவு என்ற உத்தியைக் கையாண்டு வருகிறது அது மாநிலங்களில் உள்ள சாதிகளுக்கிடையிலான சமூக கூட்டணியை உருவாக்கி தன் தலைமையில் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதில் வெற்றியடைந்து வருகிறது அந்த வகையில் தமிழ்நாட்டிலும் சாதி சமன்பாடு மதவாத அரசியலை பா.ச.க. முன்னெடுத்து வருகிறது
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள சாதிய தலைமைகளை, கோரிக்கைகளைக் கையாள்வதன் மூலம் தமிழக அரசியலில் தனக்கான தளத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பா.ச.க. இராமலிங்கம் கொலையை அதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப் பார்க்கிறது. இத்தனைக்கும் திருபுவனம் பகுதியானது இதுவரை இதுபோன்ற மதரீதியான வன்முறை சம்பவங்கள் நடந்த பகுதி கிடையாது. சௌராஷ்டிர சாதியினர், வன்னிய சாதியினர், தலித் மக்கள், இஸ்லாமிய சமூகத்தினர் ஆகியோர் பெருமளவு வாழக்கூடிய பகுதி.
இதற்கு முன்பு அங்கு மதரீதியான கொலைகள் எதுவும் நடந்ததில்லை. இப்பொழுதும்கூட இராமலிங்கம் கொலைக்குப் பிறகு அந்த பகுதியில் மக்கள் மத்தியில் பதட்டமோ வன்முறையோ நிலவவில்லை. எனவே, அங்கே எதையும் செய்ய முடியாத இந்துத்துவ சக்திகள், சுற்றி இருக்கின்ற மயிலாடுதுறையிலும் கும்பகோணத்திலும் வன்முறையைத் தூண்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கே கடையடைப்பு நடத்தக் கோரி வணிகர்களுக்கு நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
தமிழக அரசியலில் சாதி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்த கொலையைப் பயன்படுத்த வேண்டும் என்கின்ற அரசியலைத் தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள முனைகிறார்கள்.
திருபுவனமும் இஸ்லாமியப் பிரச்சாரமும்:
திருபுவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிஎம் மணி(உமர்பாரூக்) என்கின்ற தலித் இஸ்லாமியத் தலைவர் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர். அவர் இந்து மதத்தின் சாதியக் கொடுமைகளை எதிர்க்க இஸ்லாமியராக மாற வேண்டும் என தீவிரமானப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அது மட்டுமின்றி தானே இஸ்லாமியராக மாறினார். அவர் உட்பட பலரும் சேர்ந்து உருவாக்கிய ’அறிவகம் இஸ்லாமிய டிரஸ்ட்டில்’ இருந்துதான் தற்போது இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கின்றனர். அவர்கள் கடந்த 25 ஆண்டுகாலமாக இந்தப் பகுதியில் மார்க்கப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்ல திருபுவனம் நகரப்பகுதியில் இருக்கிற இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் நாமறிந்த வகையில் வன்னியர் சமூகத்தைப் பின்புலமாக கொண்டு மதம் மாறியவர்கள். ஜிகாத் கமிட்டியினுடைய தலைவர் பழனிபாபா அவர்கள் பாமகவுடன் அரசியல்ரீதியாக நெருங்கி இருந்த காலகட்டத்தில், திருபுவனத்தில் பாமக உருவாக்கப்பட்ட பொழுது திருபுவனம் நகர கிளையின் பொறுப்பாளர்களாக இஸ்லாமியர்கள்தான் முதலில் இருந்திருக்கிறார்கள்.
ஆக அந்தப் பகுதிக்கு இஸ்லாமிய மார்க்கப் பரப்புரை என்பது புதிதல்ல, இஸ்லாமிய அரசியலும் இஸ்லாமியர்களுடன் மற்ற சமூகத்தினருடைய உறவும் நல்லிணக்கமாகத் தான் இருந்து வந்திருக்கிறது. இராமலிங்கம் கொலை என்பது ஒரு தற்செயலான சம்பவம். இதில் குளிர்காய நினைப்பவர்களை நாம் அனுமதிக்க முடியாது.
கொலை குறித்து இருவிதக் கருத்துகள்:
இராமலிங்கம் கொலை என்பது யாரால் நடத்தப்பட்டது என்பதில் இரண்டுவிதமான கருத்துகள் நிலவுகின்றன. இராமலிங்கத்தினுடைய மார்க்க நடவடிக்கைகளால் வெறுப்புற்ற இஸ்லாமிய இளைஞர்கள் தன்னெழுச்சியாக செய்திருக்க வாய்ப்பு உண்டு. இன்னொன்று இராமலிங்கம் பலரோடு செய்துள்ள தகராறு காரணமாக வேறு யாராவது இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரை வெட்டி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. எந்தக் காரணத்திற்காக கொலை நடந்திருந்தாலும் அது வன்மையாக கண்டிக்கக் கூடியது, உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படவேண்டும்
மத நிந்தனையால் பாதிக்கப்பட்டதால் இந்த கொலைநடந்திருந்தால்கூட சகிப்புத்தன்மையற்ற இந்த நடவடிக்கை கண்டிக்கப்படக் கூடியதுதான் ஆனால், பாசிச பாசக போன்ற சக்திகள் இதை பயன்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க முடியாது. உள்ளூர் ஜமாத் மற்றும் இஸ்லாமியர்களிடம் விசாரித்ததில் இந்தக் கொலையை ஒரு விரும்பத்தகாத நிகழ்வாகவே கருதுகிறார்கள். அதுமட்டுமின்றி காவல்துறையோடும் பா.ம.க. மற்றும் பிற சமூக முக்கியஸ்தர்களோடு இந்த சிக்கலைக் கையாள்வதற்கு ஒரு நல்லிணக்கமான அணுகுமுறையைக் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.
அப்பாவிகள் கைதும் உபா (UAPA) சட்டமும்
இக்கொலை வழக்கில் முதலில் ஐவர், பின்னர் மூவர் என அடுத்தடுத்து இதுவரை பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் இஸ்லாமியர்கள். காவல்துறை எடுத்த எடுப்பில் இது மதத்தின் காரணமான கொலை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. இவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் ( UAPA – உபா) கீழ் வழக்கு பதிந்துள்ளது காவல்துறை. எனவே, இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட இருப்பதாக தெரிகிறது. களத்தில் சென்று நாம் கண்டறிந்த வகையில் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அப்பாவிகள் என்றே அறியப் பெறுகிறோம். அவர்கள் கைது செய்யப்பட்ட உடனேயே அவர்கள் மீது உபா வில் வழக்கு பதிந்திருப்பது மிகுந்த ஐயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதில் ஒருவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இன்னொருவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்தவர் என அறிகிறோம். இதை வைத்துக் கொண்டே இந்தக் கொலையில் இவ்விரு அமைப்புகளையும் குறிவைத்துப் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இவ்வமைப்புகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு சனநாயகப் போராட்டங்களில் பங்குபெற்றதோடு பேரிடர் காலங்களில் ஊக்கத்துடன் களமிறங்கி மக்களுக்கு தொண்டாற்றியதால் இஸ்லாமியர்களைக் கடந்து வெகுமக்களிடம் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவை. இவ்வமைப்புகள் இக்கொலையைக் கண்டிப்பதோடு குற்றமற்றவர்களைக் கைது செய்திருப்பதையும் கண்டிப்பதோடு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
கருப்பு முருகானந்தமும் அகோரமும் அமித் ஷாவும்:
மயிலாடுதுறையைச் சேர்ந்த அகோரம் பா.ம.க. வின் முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்து பா.ச.க.வுக்கு தாவியவர். அவருக்கு பா.ம.க. நிர்வாகி ஒருவரின் கொலையில் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரிலேயெ பா.ம.க. வில் இருந்து நீக்கப்பட்டவர். ஆயினும் பா.ச.க. வால் மகிழ்ச்சியுடன் உள்வாங்கப்பட்டவர். மயிலாடுதுறைப் பகுதியில் குற்றப் பின்னணியுடைய அகோரத்தின் மூலம் வன்முறையை ஏற்படுத்த தயாராகிவருகிறது பா.ச.க. முத்துப்பேட்டையில் கருப்பு முருகானந்தம்! கருப்பு முருகானந்தத்தின் மீதுள்ள கொலை, ஆள் கடத்தல், அடிதடி போன்ற குற்ற வழக்குகள் எல்லோரும் அறிந்ததே, அவர் ‘நாடறிந்த நல்லவர்’. அகோரம், கருப்பு முருகானந்தம் போன்றவர்களைக் கொண்டு பா.ச.க.. எப்படியாவது மதக் கலவரத்தைத் தூண்டிவிடப் பார்க்கிறது.
பிப்ரவரி 22 ஆம் நாள் அன்று இராமலிங்கம் கொலையைக் கண்டித்து நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ச.க. வின் தலைவர் அமித் ஷா உரையாற்றவிருக்கிறார். அதன் பொருட்டு அவர் கும்பகோணம் வருகிறார்.
‘லவ் ஜிகாத், பசுப் பாதுகாப்புப் பல்லவிகள் தமிழகத்தில் எடுபடாத நிலையில் மதமாற்றம் என்ற தலைப்பின் கீழ் மக்களை மோதவிட முடியுமா? என்பதற்கு பா.ச.க. பெரும்முயற்சி எடுப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
பொதுப்பிரச்சனையின் போது எங்கே இருந்தார்கள்?
காவிரி உரிமை மறுப்புக்கு எதிராகவும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், சேல் கேஸ் எனப் பல்வேறுப் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராகவும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். வாழ்வை நாசமாக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. போன்ற இந்துத்துவ சக்திகள் பொதுக்கூட்டம் நடத்தியது உண்டா? கடையடைப்புக்க்கு அழைப்பு கொடுத்ததுண்டா? அமித் ஷா தான் வருகை தந்ததுண்டா? இந்தப் பிரச்சனையில் மக்களை மத ரீதியாக மோதவிட முடியும் என்பதால் இவ்வளவு வேகமாக செயல்படுகின்றனர் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிவைக்கப்படும் பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா:
இராமலிங்கம் கொலையைப் பயன்படுத்திப் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. ஆகிய அமைப்புகள் குறிவைக்கப்படுகின்றன. பி.எப்.ஐ யை ஜார்கண்டில் ஆட்சி செய்யும் பா.ச.க. அரசு தடை செய்தது. நீதிமன்றம் சென்று அத்தடையை உடைத்தது அவ்வமைப்பு. இப்போது ஒரிரு நாட்களுக்கு முன்பு மீண்டும் ஜார்கண்டில் அவ்வமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தக் கொலையைப் பயன்படுத்தி பி.எப்.ஐ. யை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவது என்ற நோக்கில் இந்துத்துவ சக்திகள் செயல்படுகின்றனர்.
மூல வேர்:
இராமலிங்கம் ’உணர்ச்சிவசப்பட்டு’ இஸ்லாமியர்களின் தொப்பியைக் கழற்றிவிட்டு, திருநீறு பூசிவிட்டார் என்றும் அதற்கு எதிர்வினையாக கொலை செய்வதா? என்றும் இந்துத்துவ சக்திகள் கேள்வி எழுப்பிக் கொண்டு, தாமே பதிலளித்தும் வருகின்றனர். கொலை எதற்காக நடந்தது,? யாரால் செய்யப்பட்டது? உண்மையிலேயே மதம்தான் காரணமா? என்பதெல்லாம் புலனாய்வில் தான் தெரியவரும். ஆனால், இராமலிங்கம் தொப்பியைக் கழற்றியதும் வலுக்கட்டாயமாக திருநீறு பூசியதும் துண்டான நிகழ்வு அல்ல. உணர்ச்சி வசப்பட்டு செய்யப்பட்டதும் அல்ல. பா.ச.க. வின் இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இப்படியான அடாவடித்தனங்கள் பற்பல நடந்துள்ளன.
குறிப்பாக கிறித்துவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் அதிகம் கவனம் பெறாதவையாக இருக்கின்றன. வழிபாடு நடக்கும் பொழுது வீட்டிற்குள் அல்லது தேவாலயத்திற்குள் சென்று அடிப்பது, கல் வீசுவது, புகார் கொடுத்து வழக்குப் பதியச் செய்து கைது செய்யப்படுவது, பாதிரியார்களை அடித்து திருநீறு, குங்குமம் பூசி இந்துக் கடவுள்களை வழிபடச் செய்வது, அருட் சகோதரிகளைப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்குவது என இவை யாவும் கிறித்துவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும்.
2017 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே கிறித்தவர்கள் மீது அதிக தாக்குதல் நடந்த மாநிலம் தமிழகம் என்றொரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தப் பின்னணியில் பார்த்தால் கிறித்தவர், இஸ்லாமியரின் நெற்றியில் திருநீறு, குங்குமம் பூசுவது என்ற தவறைச் செய்ததில் இராமலிங்கம் முதலாவது நபர் அல்ல. வெறுப்பு அரசியல் விசிறிவிடப்பட்டுக் கொண்டிருப்பதால் இந்துத்துவ நெருப்புக்கு இரையாகிப் போன எத்தனையோ விட்டில் பூச்சிகளில் இராமலிங்கமும் ஒருவர்.
இதற்கு முன்னர் நடந்த இது போன்ற மத நிந்தனைத் தாக்குதலின் போதெல்லாம் உரிய அழுத்ததுடன் இத்தவறைக் கண்டித்து வெகுமக்களிடம் இணக்கமான வாழ்வுக்கான தேவையை உணர்த்தி அரசியல் கல்வியைக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அப்போதெல்லாம் தூங்கிக் கொண்டிருந்த பிரதான கட்சிகள் இராமலிங்கம் கொலையைத் தொடர்ந்து மத நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும் என்று பொத்தாம் பொதுவான அறிக்கை கொடுத்து வருகின்றன. இந்துக்களின் வாக்குகளைப் பா.ச.க. குறிவைக்கிறது என்ற காரணத்திற்காகவே பா.ச.க. வால் வளர்த்துவிடப்படும் மத மோதல்களின் போது நடுநிலைமை என்ற பேரில் பாதிக்கப்பட்டோருக்கும் பாதிப்புக்கு காரணமானவர்களுக்கும் இடையில் நின்று கொண்டு புத்திமதி சொல்வதற்கு மாறாக பா.ச.க.வின் சனநாயக விரோத பரப்புரையைத் தோலுரிக்க வேண்டிய தருணம் இது.
தமிழக அரசிடம் நாம் முன்வைக்கும் கோரிக்கைகள்:
- கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமியர்களை உடனடியாக விடுதலை செய்! அவர்கள் மீது போடப்பட்டுள்ள உபா சட்டத்தை திரும்பப் பெறு!
- உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடி!
- கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் மத வெறுப்பு, துவேஷ நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடு!
காவிரி டெல்டாவை கலவர பூமியாக்க முயற்சிக்கும் காவி-பாசிச சக்திகளை ஜனநாயக சக்திகள் ஒன்றுதிரண்டு முறியடிப்போம் !
பாலன்,
பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
vasan08@rediffmail.com
அருமையான அறிக்கை தோழ