ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் கற்றுத்தரும் பாடம் என்ன ?

05 Feb 2019

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தத்தில் நாள்தோறும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.  ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாக தலைமைச் செயலக பணியாளர்கள் சங்கம் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. அரசுக்கல்லூரி மாணவர்களும் ஆதரவு தெரிவித்துப் போராட்டக் களத்தில் குதித்தனர். தமிழக அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் நடைபெற்ற வேலை நிறுத்தம் ஒன்பதாவது நாளாக முடிவுக்கு வந்தது. தமிழக அரசு முதுகில் குத்திவிட்டதாக குற்றம்சாட்டிய ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள், வேலை நிறுத்தத்தை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளன.

 

தொழிலாளர்களின் வீரம்செறிந்த போராட்டங்களால் வென்றெடுக்கப்பட்ட நிரந்தரப் பணி, ஓய்வூதியம், எட்டுமணி நேர வேலை, மருத்துவ விடுப்பு போன்ற உரிமைகளை பறிகொடுத்திருக்கும் இன்றைய சூழலில்,  அரசு ஊழியர் – ஆசிரியர்களின் எழுச்சி சமூகத்தில் பெரும் விவாதத்தை எழுப்பி விட்டுள்ளது. அவை குறித்து பார்க்கலாம்.

 

தமிழக அரசின் 71 விழுக்காடு வருமானம் அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட வேண்டுகோள் விளம்பரம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு எதிராக மக்களைத் திசைதிருப்பி விடும் பெரும்பணியை இந்த விளம்பரம் செய்தது. அதில் குறிப்பிடும் புள்ளிவிவரங்கள் உண்மைதானா? அரசு ஊழியர் – ஆசிரியர் சங்கங்கள் என்ன சொல்கின்றன? என்பதைப் பார்க்கலாம்.

 

முதலில், அமைச்சர் ஜெயக்குமாரின் வேண்டுகோள் விளம்பரத்தில், அரசின் மொத்த வரி வருவாய் மற்றும் திட்ட நிதியில், செலவிடப்படும் தொகை குறித்த விவரங்களைக் கொடுத்துள்ளார். அதில், 1) சம்பள செலவு 31.63 சதவீதம், 2) ஓய்வூதிய செலவு 15.37 சதவீதம், 3) நிர்வாகச் செலவு 10 சதவீதம், 4) ஆண்டுக்கு அரசு செலுத்தி வரும் வட்டித்தொகை 17.42 சதவீதம். இவற்றைக் கூட்டினால் 71 சதவீதம் வருகிறது. மொத்த நிதியில் இந்த 71 சதவீதத் தொகையை அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு ஊதியமாக கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு மேலும் சம்பள உயர்வு எப்படி கொடுக்க முடியும்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்புகிறார். அரசு நிதி நெருக்கடியில் இருந்துவரும் நிலையில் இதற்கு மேல் சம்பள உயர்வு கொடுக்க இயலாது என்றும் அவர் கைவிரித்தார்.

 

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து பட்டதாரி இளைஞர்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்து பெரும் விவாதங்களை எழுப்பியதுடன், போராடும் அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு எதிராக மக்களை நிறுத்தும் சூழலுக்குத் தள்ளியது.

 

அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்திருக்கும் இந்தப் புள்ளிவிரம் சரியானதுதானா?

 

அவர் கொடுத்திருக்கும் நான்கு வகையினங்களையும் மீண்டும் படியுங்கள். நான்காவது வகையினமான, ஆண்டுக்கு அரசு செலுத்தி வரும் வட்டித்தொகை 17.42 சதவீதம் – அதாவது 28,729 கோடி ரூபாய். இந்தத் தொகை அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற கடன் தரக்கூடிய பன்னாட்டு நிதி அமைப்புகள் மற்றும் நாடுகளிடம் வாங்கிய கடனுக்கு தற்போது செலுத்தப்படும் வட்டி ஆகும். ‘உலக வங்கியில் கடன் வாங்கி சாலை போடுகிறோம். ஆசிய வளர்ச்சி வங்கியிடம் வாங்கி ஏரிகளை சீரமைக்கிறோம்’ என்றெல்லாம் அவ்வப்போது முதலமைச்சரும் அமைச்சர்களும் அறிவிப்புகளை வெளியிடுகிறார்களே, அவற்றுக்கு செலுத்தும் வட்டிதான் இவை. இந்த வட்டித் தொகையை எப்படி அரசு ஊழியர் – ஆசிரியர் சம்பளத்தில் சேர்க்க முடியும்? இது மிகப்பெரிய புள்ளிவிவர மோசடியாகும்.

 

அடுத்து மூன்றாவது வகையினம், நிர்வாகச் செலவு 10 சதவீதம் – அதாவது 10,837 கோடி ரூபாய். நிர்வாகச் செலவு என்றால் என்ன? என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அரசு அலுவலகங்கள், அதன் பராமரிப்பு மற்றும் ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து முதல் முதலமைச்சர் பங்கேற்கும் விழாக்கள் வரை அனைத்து செலவுகளும் இதில் சேர்க்கப்படும். இதை எப்படி அரசு ஊழியர் – ஆசிரியர் சம்பள செலவில் சேர்க்க முடியும்? இது அடுத்த புள்ளிவிவர மோசடி.

 

இந்த இரண்டு வகையினங்களையும் கழித்துவிட்டால், மீதி வருவது 43.58 சதவீதம். இதுதான் மொத்த சம்பளச் செலவு. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், குரூப் – 1 அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்குத் தரப்படும் சம்பளமும் இதற்குள் தானே வரும். இவற்றை எல்லாம் கழித்துவிட்டு அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு தரப்படும் உண்மையான சம்பளம் எத்தனை சதவீதம் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். இதைவிடுத்து பொத்தாம் பொதுவான  புள்ளிவிவரத்தை அள்ளிவிட்டு, போராடும் அரசு ஊழியர் – ஆசிரியர்களை மக்களை எதிராக நிறுத்த முயன்றது மிகப்பெரும் சதியாகும்.

 

இந்தப் புள்ளிவிவரங்களை உண்மை என நம்பித்தான், ஜாக்டோ ஜியோ போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி சமூக ஊடகங்களில் பலர் எழுதினர். அரசு ஊழியர்கள் சரியாக வேலை செய்வதில்லை, இவர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்படும் சம்பளமே அதிகம் என்றெல்லாம் அவர்கள் பேசினர். புள்ளிவிவர மோசடி மூலம் மக்களுக்கு எதிராக அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களை நிறுத்தும் முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன.

 

அடுத்து, அரசு ஊழியர்கள் சம்பள உயர்வுக்காகத்தான் போராடினார்களா? அவர்களின் கோரிக்கைகள் தான் என்ன?

 

“2003 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்துவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய முறையையே கொண்டுவர வேண்டும். ஒரு மாத இடைவெளியில் ஒரே பணியில் சேர்ந்தவர்களுக்கு இடையில் மிகப் பெரிய ஊதிய வேறுபாடு இருக்கிறது. இதைச் சரிசெய்ய வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், நகர்ப்புற நூலகர்கள் போன்றவர்களை சிறப்புக் கால முறை ஊதியம் என்ற பெயரில் மிகக் குறைவான சம்பளம் வழங்கி, அரசு நியமனம் செய்துவருகிறது. இதை மாற்ற வேண்டும். அரசுப் பணிகள் பலவற்றை ஒப்பந்த முறையில் தனியாருக்கு கொடுப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும், இல்லாவிட்டால் எதிர்கால வேலை வாய்ப்புகளைக் கடுமையாகப் பாதிக்கும். ஏறத்தாழ 5 ஆயிரம் பள்ளிக்கூடங்களை மூடவும், மற்றவற்றுடன் இணைக்கவும் திட்டமிட்டிருப்பதை கைவிட வேண்டும். இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், பள்ளிக்கூடங்களை இணைப்பதால் பல தலைமையாசிரியர் பணியிடங்கள் இல்லாமல் போய்விடும். ஊதியக்குழு சம்பளத் தொகையை அறிவித்த பிறகு, விடுபட்ட 21 மாத நிலுவைத் தொகையை தர வேண்டும்” இவைதான் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள்.

 

இதில் எங்கே சம்பள உயர்வு இருக்கிறது?

 

இவற்றில் முக்கியமானது,

  1. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
  2. அரசுப் பணிகளை தனியாருக்கு ஒப்பந்த முறையில் வழங்கக் கூடாது.
  3. பள்ளிக்கூடங்களை மூடக்கூடாது என்பதுதான்.

 

இவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

 

அரசு ஊழியர் – ஆசிரியர் போராட்டம் இவ்வளவு தீவிரமடைவதற்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS- Contributed Pension Scheme) தான் முக்கிய காரணம். 2004 -ம் ஆண்டு முதல் அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்தான் நடைமுறையில் உள்ளது.  தொடக்கத்தில் இந்தத் திட்டத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாமல் இருந்தது. சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு, பணி ஓய்வின்போது அரசின் பங்களிப்புடன் கணிசமான தொகை திரும்பக் கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து, பணியில் இருந்தபோது உயிரிழந்த அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடைகள் மற்றும் பலன்கள் எதுவும் தரப்படவில்லை.  விபத்தில் இறந்தவர்களுக்கும் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்டவை கிடைவில்லை.

 

அதன் பிறகுதான் ஜாக்டோ ஜியோவில் உள்ள சங்கங்கள் இது குறித்து அலசி ஆராய்ந்தன.

அதில் 2004 ஆம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் செலுத்திய தொகைக்கான கணக்கு என்னவானது என்றே தெரியவில்லை, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் கிடைத்த பல்வேறு கொடைகள், பணப் பலன்கள் எதுவும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு தொடர் போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்ட பிறகும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படாமல், துயரத்தை சுமந்து கொண்டிருக்கின்றனர்.

 

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கொண்டுவரப்பட்ட இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஜனவரி 1, 2004 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதற்கான சட்டத்தை 2013 ஆம் ஆண்டு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, பா.ஜ.க.வின் முழு ஒத்துழைப்புடன் நிறைவேற்றியது.

 

இந்தத் திட்டத்தை எதற்கு எதிர்க்க வேண்டும்?

 

ஓய்வூதியம் என்பது ஒரு ஊழியரின் ஓய்வுபெற்ற காலத்துக்கான சமூகப் பாதுகாப்பு.  தங்களின் வாழ்நாளை சிக்கலின்றி எதிர்கொள்வதற்கான ஏற்பாடு. இதனை சந்தைக்கான முதலீடாக மாற்றியதுதான் இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் சாதனை. மாதாமாதம் பிடிக்கப்படும் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளர் ‘வருங்கால வைப்பு நிதி வாரியம்’ என்ற மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்தது. இந்த நிதியை முதலீடு செய்யும் பணியில் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்பட்டது. பொதுத்துறை வங்கிகள் திறம்பட முதலீடு செய்யும் ஆற்றல் கொண்டதாக இல்லை என்று கூறி ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டன. இங்குதான் பிரச்சனை தொடங்கியது.

 

சமூகப் பாதுகாப்பாக இருந்த ஓய்வூதிய நிதி, சந்தைக்கான முதலீடாக மாற்றப்பட்டது. இதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம். இது உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்றவற்றின் நிர்பந்தத்தால் மேற்கொண்ட நடவடிக்கை என்பதற்கு பெரிய விளக்கங்கள் தேவை இல்லை. இதே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் உலகின் பல்வேறு நாடுகளில் நடைமுறைக்கு வந்துள்ளது. அங்கும் இதே பிரச்சனை, போராட்டங்கள் நடக்கின்றன.

 

இந்தத் திட்டத்துக்கு முன்னோடியாக, அமெரிக்காவில் முதலீட்டு நிறுவனங்கள் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் போட்டன. 2000க்குப் பிந்தைய பத்து ஆண்டுகளில் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மட்டும் ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்தி 1,700 கோடி அமெரிக்க டாலர்களுக்கு (85,000 கோடி ரூபாய்) மேல் லாபம் ஈட்டின. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட நெருக்கடியில் அமெரிக்க பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் 3 லட்சம் கோடி டாலர் ஓய்வூதிய சேமிப்புத்தொகை கானல் நீர் போல் மறைந்துவிட்டது. இந்தத் துயரத்தை இங்கும் எதிர்கொள்ள வேண்டுமா என்பதுதான் அவர்களின் கேள்வி.

 

புதிய ஓய்வூதியச் சட்டத்தில், “குறைந்தபட்ச உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியம் வழங்க முடியாது; சந்தையில் திடீர் இழப்புகள் ஏற்பட்டால், சேமிப்புத்தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பித் தருவதற்குக்கூட உத்தரவாதம் அளிக்க இயலாது” என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்தப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்க்காமல் இருக்க முடியுமா? புதிய ஓய்வூதியத் திட்டம் தங்களின் வாழ்வாதாரத்தின் மீது அரசு தொடுத்திருக்கும் மிகப்பெரிய தாக்குதல் என அரசு ஊழியர் – ஆசிரியர்கள் கருதுவதில் தவறு இருக்கிறதா?

 

அடுத்து, 5 ஆயிரம் அரசுப் பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனை கைவிடவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. அரசுப்பள்ளிகளை மூடுவது ஏழை எளிய மக்கள் மீதான தாக்குதலாகும். கல்வியை தனியார் மயமாக்கும் அரசின் கொள்கையின் தொடர்ச்சியாகும். உலக மயமாதல் வலையில் சிக்கி, இந்திய மேற்கொண்டுவரும் இதுபோன்ற நடவடிக்கைகள் கார்பரேட்டுகளின் நலனுக்காகவும் தனியார் முதலாளிகளை கொழுக்க வைப்பதாகவும் மட்டுமே உள்ளது.

 

கால வரம்பற்ற வேலைநிறுத்தம் என அறிவித்து ஒன்பது நாட்கள் நடத்தியும் உடன்பாடு எதுவும் எட்டப் படவில்லை. பழிவாங்கல் நடவடிக்கை எதுவும் இருக்காது என்ற ஒரே ஒரு அம்சத்தைக் கொண்ட உடன்பாடு கூட இல்லாமல் வேலைநிறுத்தத்தை ஜாக்டோ ஜியோ ஒருதலைப்பட்சமாக முடித்துக் கொண்டிருப்பது அமைப்பு ரீதியாக பெரும் பின்னடைவு மட்டுமல்ல, இதன் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும். இதற்கான காரணத்தை தொழிற்சங்கத் தலைமைகள் தன்னாய்வாக  கண்டறிய வேண்டும்.

 

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் போராட்டத்துக்கு எதிராக வெகு மக்களை நிறுத்தம் முயற்சி ஓரளவுக்கு வெற்றி பெற்றதில் சமூக ஊடகங்களின் பங்கு முதன்மையானது. அரசுப் பணிகள் வெகுவாக குறைந்திருக்கும் இன்றைய சூழலில், தனியார் நிறுவனங்களில் ஊழியர்கள் மீதான சுரண்டல்கள் பல்வேறு மடங்கு அதிகரித்துள்ளன. ஓய்வூதியம், விடுப்புச் சலுகைகள் கிடையாது. ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. நன்றாகப் படித்து பட்டங்களைப் பெற்றும் வேலையில்லா திண்டாட்டத்தில் அவதிப்படுவோர் ஏராளம். இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி, ‘அரசு ஊழியர்களுக்கு என்ன கேடு வந்தது? ஏன் போராடுகிறார்கள்?’  என அரசு ஊழியர் – ஆசிரியர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி சமூக ஊடகங்களில் பதிவுகள் பல வந்தன. இவற்றை எதிர்கொள்வதற்கும், அமைச்சர் ஜெயக்குமாரின் வேண்டுகோள் விளம்பரத்தின் புள்ளிவிவர மோசடியை அம்பலப்படுத்தவும் தவறிவிட்டன.

 

சமூக ஊடகங்களின் இந்தப் போக்கு குறித்தும், இவற்றைக் கையாள்வது குறித்தும் தொழிற்சங்கத் தலைமைகள் கற்றுக்கொள்வதற்கான பாடங்கள் பல உள்ளன.

 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமா? மக்களுக்கு எதிரானது. ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிரான போராட்டமா? மக்களுக்கு எதிரானது. அரசு ஊழியர் – ஆசிரியர்கள் போராட்டமா? மக்களுக்கு எதிரானது என அரசு கட்டமைக்கும் இந்தக் கருத்தியல் – பொது மக்களின் ஏற்பாக, பொதுப்புத்தியாக நிலவி வருகிறது. இவற்றுக்கு எதிரான கருத்தியல் போராட்டத்தை கட்டமைப்பதுடன், சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் திரட்டிக்கொள்ள வேண்டும். இத்தகைய போராட்டம்தான் தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கையையும் உரிமையையும் வென்றெடுக்க அவசியமாகும்.

 

-வ. மணிமாறன், ஊடகவியலாளர்

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW