கக்கன் ஜி நகர் – குடிசையில் வாழ்ந்த மக்களை சாலைக்கு தள்ளியது எடப்பாடி அரசு….
நாளிதழில் அனைவருக்கும் வீடு என்று அறிக்கை ஒருபக்கத்தில் வருகிறது. அதே நாளிதழில் அதே நாளில் இன்னொரு பக்கத்தில் கக்கன் ஜி காலனி வாழ் குடிசை பகுதி மக்களின் வீடுகள் அரசால் இடிக்கப்பட்டதால் மக்கள் நடுத்தெருவில் வாழ்கின்றனர் என்ற செய்தியும் வருகிறது. இந்த மிக அப்பட்டமான முரண்பாட்டின் மூலம் அரசின் மக்கள் விரோதத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். இன்று கக்கன் ஜி காலனி, நேற்று திடீர் நகர், மக்கீஸ் தோட்டம், அதற்கு முன் சூளைமேடு ஸ்டாலின் நகர் என சென்னை நகரத்து ஆற்றங் கரையோர மக்கள் தெருவில் நிறுத்தப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
1971 இல் குடிசை மாற்று வாரியம் தொடங்கப்பட்டு குடிசைகள் இல்லா நகரத்தை உருவாக்குவோம் என்று சொல்லப்பட்டது. குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர். இரு பத்தாண்டுகளில், 1990 களில் சென்னை பெருநகர ரயில் பாதை போடுதல், புதிய மேம்பாலங்கள் என சென்னையில் உள்ள கூவம், பக்கிங்காம், அடையாறு ஆற்றங்கரையோரம் வாழும் மக்களும் குடிசை வாழ் மக்களும் அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு நகரத்துக்கு வெளியே விரட்டப்பட்டனர்.
2000 ஆம் அண்டுக்கு பிறகு ஆளுங்கின்ற தி.மு.க – அதிமுக அரசுகள் சென்னையை ‘எழில்மிகு சென்னை- சிங்காரா சென்னை’ ஆக்கபோகிறோம் என்று அறிவித்து குடிசைகளில் வாழும் மக்களை விரட்டியடிக்கும் வேலையைத் தீவிரமாக செய்யத் தொடங்கியது. இன்றைக்கு கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்ற நகரத்தின் மையத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இருக்கும் இடங்களில் தூக்கி வீசப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 2 இலட்சத்தை தொடும். திரையரங்குகளும், வணிக வளாகங்களும், மேம்பாலங்களும் ரயில் பாதைகளும் சென்னை நகரத்தை நிரப்ப, குடிசை வாழ் மக்கள் புதிய துணை நகரத்திற்கான உழைப்புச் சக்திகளாகப் பிய்த்தெறியப்பட்டு நகரத்திற்கு வெளியே வீசப்பட்டனர்.
ஓரிரவில் இம்மக்கள் சொந்த மண்ணில் ஏதிலியாக்கப்பட்டதில் இருந்து வாழ்க்கையை திசை தெரியாப் புள்ளியில் தொடங்குகின்றன. ஒருபுறம் தண்ணீர், போக்குவரத்துக்கு, கல்வி, மருத்துவம் போன்ற ஒவ்வொரு இன்றியமையாத் தேவைகளையும் அரசிடம் இருந்து பெறுவதற்கு அம்மக்கள் பல காலம் போராடியாக வேண்டும். இன்னொரு புறம் வாழ்வாதாரத்திற்கானப் போராட்டத்தை நடத்தியாக வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளின் படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் நின்று போதல், வேலையில்லாத் திண்டாட்டம், குடும்ப வருவாய் இழப்பு ஆகியவை ஏற்பட்டு இந்த பெருந்தொகுதியான மக்களின் வாழ்க்கையை இருபது ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிடுகிறது அரசு.
இந்த நீண்ட நெடிய கதையின் இன்றைய படலம் தான் அண்ணாநகரை அடுத்த, நியூ ஆவடி சாலையில் உள்ள கக்கன் ஜி நகர். இங்கே மொத்தம் சுமார் 1700 வீடுகளில் பெரும்பான்மை சொந்த வீட்டுக்காரர்கள் சுமார் 35 குடும்பங்கள் மட்டும் வாடகைக்கு குடியிருப்போர் ஆவர்.
ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடித்து தள்ளும் அரசாங்கத்தின் புல்டோசர் டிச்மபர் 26 விடியற் காலை கக்கன் ஜி காலனிக்குள் நுழைகிறது; காவல்துறை குவிக்கப்படுகிறது; குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வருகின்றனர்; குடிநீர் வாரிய அதிகாரிகள் வருகின்றனர்; இதை கண்டு கக்கன் காலனி மக்கள் ஒரு வித அச்சத்தில் இருக்க, மாநகராட்சி ஊழியர் விடுகளை இடிக்கப்போகிறோம் என்று சொல்ல பேரிடியாய் அன்றையப் பொழுது விடிகிறது. பெரும் குழப்பக் கூச்சல்களுக்கு இடையே மக்கள் காவல்துறையிடமும் அதிகாரிகளிடமும் கெஞ்சுகின்றனர்; பிறகு போராடுகின்றனர்; காவல்துறை மக்களை மிரட்டுகிறது. அதற்கு பயந்து, ’கிடைக்கிற வீடும்கூட கிடக்காமல் போய்விடும்’ என்ற அச்சத்தில், கையறு நிலையில் சொந்த வீடு உள்ள மக்கள் பொருட்களை எடுக்க நகர்கின்றனர்.
67,500 ருபாய் முன்பணம் செலுத்திய 1400 குடும்பங்கள் அம்பத்துர் அடுத்துள்ள அத்திபட்டி குடியிருபிலும் மிதம்முள்ள சொந்த வீட்டுக்காரர்கள் பெரும்பாக்கம் அனுப்பட்டனர். வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த 35 குடும்பத்தினரும் தங்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புகின்றனர். ’சொந்த வீட்டுக்காரர்களுக்கு வீடுகள் கொடுத்துவிட்டு உங்களுக்கு கொடுக்கிறோம்’ என்று சொல்கின்றனர். இதை நம்பி வாடகை வீட்டுக்காரர்களும் தமது பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டைக் காலி செய்கின்றனர். தமக்கும் வீடுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் திசம்பர் 26 முதல் இப்போது வரை அந்த குடும்பங்கள் தெருவில் வாழ்ந்து வருகின்றன.அவர்கள் பெரும்பாலும் தினகூலிகள் குடிசை மாற்று வாரிய அலுவலகவாசலில் தினமும் காத்துக் கொண்டிருக்கின்றனர். வேலைக்கு போக முடியாமல் குப்பை பொறுக்கி தங்கள் வாழ்க்கை நடத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.
குடிசை வாசிகளை சாலைவாசிகல் அக்கியதும், தொழிலாளர்களை குப்பை பொறுக்க வைத்தது தான் எடப்பாடி அரசின் ஆகப்பெரும் நல்லாட்சி.
(களஆய்வில் தோழர்கள் பரிமளா, ராஜா)
– ராஜா