பட்ஜெட் 2019: காவி-கார்ப்பரேட் அரசின் பாப்புலிச அறிவிப்பு !

02 Feb 2019

விவசாய வருவாயை இரட்டிப்பாக்குவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன்,வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் என வாய்க்கு வந்த  பொய்  உறுதிமொழிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடிஅமித் ஷா கும்பலானது,தற்போது தனது  ஐந்தாண்டு கால ஆட்சியின் அந்திமக்கால தோல்வியை மறைக்க மீண்டும் தனது பாபுலிச தேர்தல் அறிக்கையை  இடைக்கால பட்ஜெட்ட்டாக தாக்கல் செய்துள்ளது. GST மற்றும் பணமதிப்பு நீக்கம் என்ற இரட்டைத் தாக்குதலை நிகழ்த்தி சிறு குறு தொழில் நசிவிற்கும்,வேலை வாய்ப்பின்மைக்கு காரணமானவர்கள்தான் தற்போது இந்த பட்ஜெட்டை ஏழை எளியோனாருக்கானது என்கிறார்கள்..பட்ஜெட் உரை தாக்கல் செய்த பியூஷ் கோயல் முதலாக பிரதமர் மோடி வரையிலும்,தமிழக பாஜக தலைவர் தமிழசை தேசிய தலைவர் முதலாக  அமித்ஷா வரையிலும்  இந்த பட்ஜெட்டை “அனைத்துமக்களுக்கான பட்ஜெட்” என பட்ஜெட்டின் இலக்கு குறித்து ஒரே குரலில் பேசி வருகின்றனர்.பாஜகவின் ஐந்தாண்டு காலசீரழிவு ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ள  சிவில் சமூகத்தின் அனைத்து வர்க்கங்களும்(பெரு முதலாளியா வர்க்கம் நீங்கலாக) அதிருப்தியில் இருப்பதால் சமூகத்தின் ஒவ்வவொரு  வர்க்கப் பிரிவினருக்கும் சலுகை வழங்கி தணிக்கிற ஆளும்வர்க்க உத்தியின்  வெளிப்பாடாக இந்த இடைக்கால பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதைத்தான் அனைவருக்கமான பட்ஜெட் என்கிறார்கள்.இந்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய அறிவிப்புகள் எவ்வாறு முரண்பாடு உடையதாக உள்ளது,தாராளமய சகாப்தத்தின் ஏற்றத் தாழ்வுகளை அவ்வாறே நீடிக்க வைக்க உதவுகிறது,முதலாளித்துவ அமைப்பின் சொந்த முரண்பாடுகளை கையாள இயலாத நிலைக்கு வந்துள்ளது என்பதை சற்று சுருக்கமாக பார்ப்போம்.

விளிம்பு நிலை விவசாய வர்க்கம்

அறிவிப்பு:

2 ஹெக்டேருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000  வழங்கப்படும்,இதனால் நாட்டின் 12 கோடி விவசாயிகள் பயனடைவர் எனவும் இந்த உதவி திட்டத்திற்கு ரூ. 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளதாக  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதார்த்தம்:

இந்திய விவசாயத் துறையின் சிக்கல்களை,விவசாயிகளின் வறுமையை, தற்கொலைகளை இந்த அறிவிப்பு தீர்க்குமா?என்றால் நிச்சயம் தீர்க்காது என்பதே  எதார்த்த உண்மை.

இந்திய வேளாண் துறை சீரழிவை அதன் அடிப்படையை மாற்றாமல் மேம்போக்காக மாதம் ஐநூறு ரூபாய் வழங்குவதால் தீர்க்க முடியும் என பாஜக பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த பொய் பிரசாரம் ஆகும்.

நிலச்சீர்திருத்தம் முழுமையாக மேற்கொள்ளாத காரணத்தால்,நில உரிமையில் சமச்சீரற்ற நிலைமை தொடர்வதாலும்,பசுமை புரட்சியின் வன்முறையாலும் வேளாண் பொருளாதாரம் வேகமான சீரழிந்து வருகிறது.தாராளமயத்தின் கொள்கை விளைவால் ஒட்டுண்ணி ரக விதைப் பயன்பாடு,ரசாயன உரங்களின் பயன்பாடு அதன் தொடர்சியான விலையேற்றம்,உற்பத்தி பொருட்களுக்கு விலை கிடைக்காமை,மத்திய அரசின் மானிய வெட்டுக்கள் விவசாயத்தை சீரழித்து வருகிறது.

இந்திய வேளாண்  பொருளாதாரத்தின் சீரழிவிற்கான  காரணம் இந்த அமைப்பின் தாராளமய கொள்கை கட்டமைப்பில் உள்ளது.இந்த கட்டமைப்பு சிக்கல்களுக்கு தற்காலிக 6,000  ரூபாய் சலுகைகள் எந்த வகைகளிலும் நிரந்தரத் தீர்வை வழங்கிடாது.

இந்த கட்டமைப்பு சிக்கலை தீர்ப்பதற்கு வக்கற்ற முந்தைய காங்கிரஸ் அரசோ,முரண்பாட்டை தணிப்பதற்கு  கடந்த காலத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை கொண்டு வந்ததது.கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களின்  கோபத்தை தற்காலிகமாக தணிக்க உதவியது.வேளாண் பொருளாதார கட்டமைப்பு தோல்வியை மூடி மறைக்க உதவியது.இப்போது இதுவும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

தற்போதைய 2019-20 பட்ஜெட் அறிவிப்பில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 60,000 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.இது 2018-19 இல் ஒதுக்கீடு செய்துள்ளதைக் காட்டிலும் 1.8 விழுக்காடு குறைவாகும்.மேலும் ஊரக வேலை  வாய்ப்புத் திட்டத்தற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிற நிதியும்,நடைமுறையில் விநியோகிக்கிற தொகைக்கான இடைவெளியும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.ஊரக  திட்டத்தில் வேலை செய்து பணியாளர்களுக்கான நிதி நிலுவைத் தொகையினை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்கவேண்டும் என கடந்த 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டது.ஆனால் நிலைமையில் முன்னேற்றம் இல்லை.

பட்ஜெட் அறிவிப்பிற்கு சில மாதங்கள் முன்பாக NREGA சங்கார்ஷ் மோர்ச்சாவை எனும் அமைப்பின் சார்பாக ஊரக  வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை சுமார் 80,000 கோடியாக உயர்த்த வேண்டும்,சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் வழங்கியது.ஆனால் இந்த பட்ஜெட்டில் இந்த கோரிக்கைகளுக்கு மாறாக நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.மேலும் அறிவிக்கப்பட்ட நிதியை  தாமத்திக்காமல் மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும்,கூலியை முறையாக உடனுக்குடன் வழங்கவேண்டும் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி சிக்கல்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை!

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு  6,000  ரூபாய் வழங்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு மூலமாக சில்லறை சலுகைகளை பெறுகிற வர்க்கங்களாக சிறு குறு விவசாயிகளை நீடிக்க வைப்பதும் துண்டு நிலமில்லாத உதிரி விவசாய தொழிலாளர்களை முற்றிலும் கைவிட்டதையும்தான் அறிவிக்கிறது.

நடுத்தர வர்க்கம்

அறிவிப்பு:

ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் பொறுப்பு நிதியமைச்சர் பியூஷ் கோயல்.இதை பெரிமிதமாக பாஜக தலைவர் தமிழசை ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

எதார்த்தம்:

இந்த அறிவிப்பு முற்றிலும் தவறான வகையில் புரிந்துகொள்ளப்பட்டும் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

நடுத்தர வர்க்கத்தின் அதிருப்தியை தணிக்கிற வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்பானது ஆண்டு வருமானம் 2,5000 -5,00000 வரை உள்ளவர்கள் வருமான வரி விலக்கு அளிக்கப்படவில்லை.வருமான வரி சட்ட சரத்து 87A மாற்றம் கொண்டு வருவதன் மூலமாக,கட்டுகிற வரியானது அடுத்த ஆண்டில் திருப்பி வழங்கப்படும்.அதாவது ரூ 5,0000ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரியாக செலுத்துகிற  12,500  ரூபாய் மீண்டும் திருப்பி வழங்கப்படும்(REBATE).

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 சலுகை எந்தவித பயனையும் வழங்காதது போலவே நடுத்தர வர்க்கத்திற்கு வழங்கிற சுமார் 12,500 சலுகை எந்தவிதத்திலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போவதில்லை.ஏனெனில் நடுத்தர வர்க்கம் எதிர்கொள்கிற முக்கியப் பிரச்சனையாகிய பெட்ரோல் விலை ஏற்றம்,விலை வாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு எந்தவித அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

மேலும் வேலை இல்லாதோர் எண்ணிக்கை கடந்த 45  ஆண்டில் இல்லாத அளவில் உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளி விவர ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.நாட்டில் அதிகரித்து வருகிற வேலையில்லா திண்டாட்டம் குறித்து பட்ஜெட்டில் மருந்துக்கும் எந்த அறிவிப்பும் இல்லை.

மேலும் GSTவரி விதிப்பால் நலிவடைந்து வருகிற சிறு குறு தொழில்துறையை காப்பாற்றுகிற எந்த உறுதியான அறிவிப்பும் இல்லை. GST அறிவிப்பிற்குப் பிந்தைய காலத்தில் சிறு குறு தொழில்துறையில் வேலை இழந்தோர்களும் நிற்கதியாக கைவிடப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டாவோசில் நடைபெற்ற உலகப்  பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனிடம் இந்தியாவின் அதிவேக ஜிடிபி வளர்ச்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.அதற்கு நாட்டின் ஜிடிபி வளர்ச்சியை விட வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்து அதிக கவனம் செலுத்தவேண்டும்  என பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.தாராளமய பொருளாதார அறிவுஜீவியான ரகுராம் ராஜன்,வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி குறித்து கவனம் கொள்ளவேண்டும் என்பது இந்த அமைப்பின் சிக்கலை வெளிப்படுத்துகிறது அன்றி ஒன்றுமில்லை.

பாட்டாளி வர்க்கம்

அறிவிப்பு:

60 வயதில் ஓய்வு பெற்ற பின்னர், தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 3000 வழங்கப்படும். இதனால் 10 கோடி தொழிலாளர்கள் பயனடைவர் எனவும் இதற்கு 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளரின் வயதுக்கு தக்கப்படி ஒவ்வொருவருக்கும் ரூ. 50 முதல் ரூ. 100 வரை அரசு வழங்கவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதார்த்தம்:

இந்த அறிவிப்பானது தொழிலாளர் மீதன  பாஜகாவின் இரட்டைப் பண்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது,ஒருபுறம் தொழிலாளர் வருமானத்தில் இருந்தே பிடித்தம் செய்து ஓய்வூதிய திட்டம் பட்ஜட்டில் அறிவித்து பிரச்சாரம் செய்வது மறுபுறம் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் உழைப்பைச் சுரண்ட தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை நீர்த்துப் போக செய்துவருகிறார்கள்.

கடந்த காலங்களில் மூலதன முதலைகளுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்ற பல அரசியல்,பொருளியில் உரிமைகளை காங்கிரசை விஞ்சுகிற வகையில் மோடி அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் வேகமாக  பறித்து  வருகிறது.

முதலீட்டாளர்களின் நன்மதிப்பை பெறுவது என்ற  இலட்சியத்தின்பேரில், ஆலை முதலாளிகள் உழைப்பாளர்களின் ஊதியமற்ற உழைப்பின்(உபரி மதிப்பு) மதிப்பை பெறுவதற்கு தடையாக இருக்கிற அனைத்து தொழிற்சாலை சட்டத்திலும் வேகமாக திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர் விரோத கொள்கைக்கு சற்றும் சலைக்காத காங்கிரஸ் உள்ளிட்ட இதர முதலாளிய ஆதரவு கட்சியின் ஆதரவுடன் பல தொழிலாளர் விரோத சரத்துகளை மாற்றிவருகிறது. 1948 தொழிற்சாலை சட்டம்,.அப்ரண்டீஸ் சட்டம் 1961,  1988 சட்டங்களை ஏற்கனவே லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் தாக்கல் செய்துவிட்டது.இதுபோக, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்திலும் அபாயகரமான மாற்றங்களை மேற்கொண்டுவருகிறது.இவர்கள்தான் தற்போது அமைப்புசார தொழிலாளர்கள் நலன்களுக்கு ஓய்வூதியம் வழங்குவோம் என உறுதி கூறுகிறார்கள்!

இந்த அரசு கோமாதாவை பாதுகாப்பதை என்றுமே தவறியது இல்லை என பட்ஜெட் உரையில் பேசிய பியூஷ் கோயல் பசுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 750 கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். சங்கின் மோகன் பகவத் கோரிக்கைகளை ஏற்று இந்த அறிவிப்பை மேற்கொண்ட அரசிற்கு இந்துத்துவ அசிப்படைவாத அமைப்புகள் பாராட்டு தெரிவித்துவருகின்றன.

அமைப்புசார தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு 500 கோடி  ஒதுக்குகிற  இந்த அரசுதான் கோமாதா பாதுகாப்பிற்கு 750 நிதி ஒதுக்குகிறது.தொழிலாளர்களை விட பசுவிற்கு  பரிவு காட்டுகிற பாசிச அரசு!

 

மோடி அமித்சாவின் கும்பலாட்சியின் ஏகாதிபத்திய ஆதரவு,இந்திய பெரு முதலாளிகளின் நலனுக்கான ஆட்சியில் நாட்டில் ஒருபுறம் மக்களின் வரிப்பணத்தையும் நாட்டின் வளத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடிக்கிற கார்ப்பரேட் கொள்ளையர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகின்றனர். இவர்களுக்கு உழைத்தே தேய்ந்த போன சொத்தற்ற உழைக்கும் வர்க்கம்,மென் மேலும் ஏழைகளாக வறியவர்களாகின்றனர்.

இந்நிலையில்,ஒட்டு வங்கி தேர்தல் அரசியல் நலனிற்கு ஏற்ப, பாதிப்படைகிற சமூகப் பிரிவினர்களுக்கு சலுகைகளை வழங்குவதும் அதையே சாதனையாக பல மடங்கு ஊதிப்பிரச்சாரம் செய்வதும் பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவதும்,சாதிய சமூக கூட்டணி அமைத்து வெற்றி பெற முயல்வதும்  பாஜகவின் மரபான தேர்தல் அரசியல் உக்தியாகும்.இதன் ஒரு பகுதியாகவே இந்த இடைக்கால பட்ஜெட்டை பார்க்க வேண்டும்.

 

-அருண் நெடுஞ்சழியன்

ஆதாரம்:

https://www.thewire.in/labour/budget-2019-mgnrega-allocation

https://www.newsclick.in/budget750-crore-cows-500-crore-workers-pension?fbclid=IwAR2FVuzY9AMn1htnvIc2KAZCFNWWZ4ANDZ5DlHEUheyUbqauTt4SyesK57E

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW