ஜாக்டோ-ஜியோ போராட்டம் – தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு யார் காரணம்?

27 Jan 2019

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆரம்ப பள்ளி மூடலை கைவிடவேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதலாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோரில் 468 பேரை  சிறையில் அடைத்தும், சுமார் 500 ஆசிரியர்களை  பணியிடை நீக்கம் செய்து வருகிற  தமிழக அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகள் கடுமையான கண்டனத்திற்குரியது.

ஊழியர்களின்  கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின்  மூலமாக பரிசீலித்து நிறைவேற்ற  வக்கற்ற தமிழக அரசு, போராட்டத்தை சட்டப்பூர்வ வன்முறையின் வழியே ஒடுக்க நினைக்கிறது. பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என மிரட்டுவது, சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது, தற்காலிக ஆசிரியர்களை  நியமிப்பது, கைது செய்வது, பணியிடை நீக்கம் செய்வது, எஸ்மா சட்டதைக் காட்டி பயமுறுத்துவது  என மக்களாட்சியின் பேரால் அராஜக காட்டுமிராண்டித்தன ஆட்சியை எடப்பாடி அரசு நடத்துகிறது.

இந்நேரத்தில், தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்ட ஊழியர் விரோதக் கொள்கை குறித்தோ, ஊதிய முரண்பாடு குறித்தோ, ஆரம்ப பள்ளிகளின் மூடல் மற்றும் சத்துணவு திட்ட ஒழிப்பு குறித்தோ அறியாதவர்கள், சமகால அரசுப் பள்ளி நிர்வாக கட்டமைப்பு மீதான தாக்குதலை  உணராதவர்கள, அரசின் கல்வி கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை, ஊழல் ஆட்சியை கண்டும் காணாத பிரிவினர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை எதிர்த்து வருகின்றனர். சந்தடி சாக்கில், சமூக நீதியின் அடிப்படையில் அரசுத் துறையில் பணியாற்றுகிற ஊழியர்களுக்கு எதிராக காவிக்கும்பல்களும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை எதிர்க்கின்றன.

இப்போராட்டத்தை எதிர்க்கிற பிரிவினர், அரசின் நிதிநிலை மேலாண்மையின் தோல்வி குறித்தோ, கல்விக் கொள்கையில் அரசின் தனியார் ஆதரவு நிலைப்பாடு குறித்தோ மறந்தும் விமர்சிப்பது இல்லை. தவறான நிதி நிலை மேலாண்மையை, மோசமான செலவீனங்களை சரிக் கட்டுவதற்கு ஊழியர்களின் ஊதியத்திற்கு ஒதுக்கப்படுகிற நிதியை தமிழக அரசு கையாடல் செய்வது, அவர்களின்  சமூகப் பாதுகாப்பு நலத் திட்டங்களை  வெட்டுவது உள்ளிட்ட ஊழியர்  விரோத செயல்பாட்டை  அரசு மேற்கொண்டு வருகிறது.

பணிநிரந்தரம், பணியிடப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு  உள்ளிட்ட அடிப்படை ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரு ஆண்டுகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் மின்வாரியத் தொழிலாளர்கள், செவிலியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கட்ட  போராட்டங்களை மேற்கொண்டனர். தற்போதைய ஜாக்டோ ஜியோ போராட்டத்தோடு இப்போராட்டங்களையும் நாம் இணைத்து பார்க்க வேண்டும்.

மேற்கூறிய அனைத்து தொழிலாளர் போராட்டங்களையும் நிதி நிலைமையை காரணம் காட்டியே தொழிலாளர்களை அரசு வஞ்சித்து ஏமாற்றி வருகிறது. இப்போராட்டங்கள் யாவும் நீதிமன்ற வழிகளிலோ,பொய் உறுதி மொழிகளின்  அடிப்படையிலோ, போலீஸ் ஒடுக்குமுறையாலோ நீர்த்துப் போகச் செய்யப்படுகிறதே தவிர நிரந்தரமாக தீர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு யார் காரணம்?

அரசுக்கு கடும் நிதிச்சுமை உள்ளதால், கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது; போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோர் பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர், ஜெயகுமார் ஜாக்டோ ஜியோ போரட்டத்தத்திற்கு எதிராக  அறிக்கை விட்டு வருகிறார்.

இந்திய மாநிலங்களில் ஒப்பீட்டளவில் மிக முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழகம். தமிழகத்தின் தனிநபர் வருமானம் பீகாரைவிட நான்கு மடங்கு அதிகமாகும். மத்திய அரசிற்கு அதிக வருமானம் ஈட்டித் தருவதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேநேரத்தில்  நாட்டிலேயே அதிக நிதிப் பற்றாக்குறை கொண்ட மாநிலங்களிலும் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.  தற்போது தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.40,530 கோடியாக உள்ளது.

2012-13-ல் தமிழக அரசிடம் ரூ.1,760 கோடி உபரி நிதி இருந்தது. ஆனால் அது அடுத்த ஆண்டு ரூ.1,790 கோடி பற்றாக்குறையாக மாறியது. 2014-15-ம் ஆண்டு நிதி ஆண்டில் 258 சதவீதமும், 2015-16-ல் 48 சதவீதமும், 2016-17-ல் 67 சதவீதமும் பற்றாக்குறை அதிகரித்து உள்ளன. இந்த பற்றாக்குறை சுமைகளை தமிழக அரசு டாஸ்மாக் பெருக்கத்தின் மூலமாக சரிக் கட்டுவது, அரசு ஊழியர்களின் செலவை வெட்டுவதுஎன  அப்பட்டமான மக்கள் விரோத செயல்பாட்டில் இறங்கியுள்ளது.இந்தப் பற்றாக்குறைக்கு என்ன காரணம்?

1)மாநில அரசின் மீதன மத்திய அரசு திட்டங்களின் நிதிச் சுமை அதிகரிப்பு

கடந்த 2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர்,மத்திய அரசின் திட்டங்களுக்கான மாநில அரசின் நிதிப் பங்கீட்டை 10 விழுக்காடு உயர்த்தப்பட்டது.முன்னர் 70:30 ஆக இருந்து மத்திய மாநில அரசின் நிதிப் பங்கீடு 60:40 ஆக மோடி அரசு மாற்றியது.மேலும் மத்திய அரசின் தொகையை சேர்த்தே மாநில அரசு 100% நிதியை முதலில் செலவு செய்கிறது.பின்பு மத்திய அரசின் பங்கான 60 விழுக்காட்டை தாமதப் படுத்தியே மாநில அரசிற்கு வழங்குகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த போது தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை நிலை குறித்து நிதித்துறைச் செயலர் க. சண்முகம் இது குறித்து அளித்த விளக்கம் இது

“மாநில அரசு செயல்படுத்தும் மத்திய அரசு திட்டங்களுக்கான செலவுத் தொகையை உடனடியாக வழங்கவில்லை. சர்வ சிக்ஷ அபியான், பேரிடர் மேலாண்மை, கிராம சாலை திட்டம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.6 ஆயிரம் கோடி வரை நிலுவை உள்ளது. இத்தொகை கிடைத்தால் அரசின் பற்றாக்குறை குறையும்”என்றார்.

மத்திய அரசின் தலைமேல் ஏறிநின்று நிலுவையை வாங்க வக்கற்றவர்கள்தான் ,தங்களது உரிமையை கேட்போரை எஸ்மா சட்டத்தில் கைது செய்வேன் என மிரட்டுகிறார்கள்.

2)தமிழக மின் பகிர்மான நிறுவனத்தின்  இழப்பு

கடந்த 2017 – 18ல், மின் வாரியம், 4,720 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளது. 2016-17 இல் ஏற்பட்ட இழப்பு ரூ.22,815 கோடியாகும்.இந்த இழப்பை தமிழக அரசு ஏற்று வருகிறது.அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பிற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் .மேலும் மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்த பிறகு தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு ஏற்பட்டு லாப நட்ட அறிக்கை,ஒப்பந்த ஊழல்கள்,நிலக்கரி கொள்முதல்,கார்ப்பரேட்களுக்கு வழங்குகிற சலுகை உள்ளிட்ட அம்சங்களை தணிக்கைக்கு உட்படுத்தினால் மின் பகிர்மான நிறுவனத்தின் இழப்பை சரிக் கட்ட இயலும்.இது குறித்து அமைச்சர்கள் தங்கமணி  ஜெயகுமார்,செங்கோட்டையன்,முதல்வர் பழனிசாமி கள்ள மௌனம் காப்பதேன்?

3)பிற காரணங்கள்:

மோடி அரசு நள்ளிரவில் அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை,முத்திரைத் தாள், பதிவுக் கட்டணம் வருமான குறைவு மாநிலத்தில் வரி வருமானக் குறைவிற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதற்கும் ஊழியர்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

அரசு ஊழியர்களுக்கு எதிரான பொது மக்களின் கருத்துநிலை ஆக்கத்திற்கு பலி ஆகலாமா?

அரசின் வருவாயில் 71%விழுக்காடு அரசு ஊழியர்ககளின் சம்பளத்திற்கும் ஓய்வூதியதிற்கும்  வழங்கப்படுகிறது எனவும் அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் பட்டியலிட்டு இவ்வளவு தொகை போதாதா என  அமைச்சர் ஜெயக்குமார் இன்று அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அறிக்கை அளித்துள்ளார்.உழைப்பிற்கு ஊதியம் தருவது எந்த ஒரு நிறுவனத்தின் கடமையாகும்.அரசாங்க நிறுவனமோ தனியார் நிறுவனமோ இது ஊழியர்களின் அடிப்படை உரிமை. பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது போல ஊதியத்தை  பட்டியலிடுவதும் ,ஊதியக் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதியம் நிர்ணயக்கப்படுகிறது என்பது கூட அறியாமலும் மிகவும்  இழிவான வகையில் இந்த அறிக்கையை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.இதை விளம்பரமாக அறிவிக்கிற அமைச்சர், அரசின் நிதிப் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என அறிவிக்கத் தயாரா?.

பொதுமக்களில் சில பிரிவினர்,குறிப்பாக படித்து வேலை இல்லாதோரிடமும்,தனியார் நிறுவனங்களில் குறைவாக .ஊதியம் பெறுகிற பிரிவினரிடம் அரசின் இந்த அறிக்கை தவறான பொதுக் கருத்து உருவாக்கத்தை கட்டமைக்க முயல்கிறது.தனது நிதிப்பற்றாக்குறைத் தோல்வியை மறைக்க விஷயத்தின் மையத்தை மடைமாற்றுகிறது.

தாராளமய சகாப்தத்தில்,வளர்முக நாடான இந்தியாவின் தொழில்மய வளர்ச்சியானது  முழுக்க முழக்க பன்னாட்டு பெருமுதலாளிகளை நம்பியே உள்ளது. இந்த பன்னாட்டு முதலீடுகளை சார்ந்தே வேலை இல்லாத பட்டாளம் உள்ளது.ஒருபுறம் முதலாளித்துவ ஊடுருவலால்  கிராமங்களில் திவாலகிற வேளாண் பொருளாதார நிலையானது,விவசாய  குடும்பத்தை ஓட்டாண்டி ஆக்கி நகருக்கு தள்ளுகிறது.நகரிலோ முதலாளித்துவ அரை குறை வளர்ச்சி,வேலை வாய்ப்பை வழங்குகிற அளவிற்கு இல்லாத நிலையால் வேலை வாய்ப்பில்லாமல் மக்கள் அல்லாடுகிறார்கள்.

கூடவே பணமதிப்பு நீக்கம்,ஜி எஸ் டி வரி விதிப்பு சிறு குறு முதலீடுகளை துடைத்து எரிந்து வருகிறது.இந்நிலையில் வேலை இல்லாதோர் பட்டாளாம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.தனியார் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைவான கூலிக்குஉழைப்பை உறிஞ்சி எடுக்கின்றது.இந்நிறுவனங்களில் தொழிலாளிக்கு எந்த சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் இல்லை.இஷ்டம் போல ஒரே நாளில் பணி நீக்கம் செய்யலாம். சிக்கல் இந்த அமைப்பில் உள்ளது.வேலை இல்லாத பிரிவினர் வேலை வாய்ப்பை உருவாக்காத அரசை எதிர்க்க வேண்டும்,தனியார் நிறுவனங்களில் நடைபெற்றுவருகிற உழைப்புச் சுரண்டலை எதிர்க்க வேண்டும்

போராட்டத்திற்கு எதிராக அரசு பயன்படுத்துகின்ற இன்னொரு பிரச்சாரம் போரட்டத்தால் பொது மக்கள் மாணவர்கள் அவதி என்பது.

போக்குவரத்து தொழிலாளர் போராட்டங்களின் போது, பொது மக்கள் அவதி என்பது,செவிலியர் போராட்டத்தின்போது நோயாளிகள் அவதி என்பது,துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தின் பொது மக்கள் அவதி என்பது,அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டங்களால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு என்பது ஆளுவர்க்க பிரச்சார உத்திகளின் ஒன்றாக கையாளப்படுகிறது.போராட்ட சக்திகளைதனிமைப் படுத்த அரசால் இப்பிரச்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

ஊழியர் போராட்டங்களுக்கு எதிரான தவறான பொய் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல்,ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை உணர்ந்துகொண்டு தொழிலாளர் பிரிவை அந்நியப்படுத்தாமல்,ஊழியர்களோடு  கரம் கோர்த்து   ஊழல்மய கார்ப்பரேட் அரசை அந்நியபடுத்த வேண்டும்.

.கடந்த காலங்களில் மூலதன முதலைகளுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்ற பல அரசியல்,பொருளியில் உரிமைகளைத்தான்  நாம் கேட்கிறோம்.காங்கிரசை விஞ்சுகிற வகையில் தற்போதைய  மோடி அரசு மேற்கொண்டுவருகிற  தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக கைகோர்ப்போம்.மாறாக நமது நண்பர்கள் அணியில் உள்ளவர்களை எதிரியாக கைகாட்டுகிற அரசின் நய வஞ்சக வலைக்குஇரை ஆகக் கூடாது.

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு துணை நிற்போம்.

தமிழக அரசே,

  • ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை நிறைவேற்று!
  • கைது செய்தோரை உடனடியாக விடுதலை செய்!
  • பணியிடை நீக்க ஆணையை திரும்பப்பெறு!

சோசலிச தொழிலாளர் மையம்

9940963131

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW