காவி-கார்பரேட் சர்வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை
தோழமைகளே,
பாசிச பா.ச.க’வை தோற்கடிப்போம் ! கார்பரேட் ஆதரவு அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்துவோம்’ என்ற நோக்கோடு காவி –கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து இரண்டாவது கட்ட பரப்புரை பயண இயக்கத்தை வருகின்ற சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளில் தொடங்கி, மாவீரன் பகத்சிங் தூக்கு கயிற்றை முத்தமிட்ட ஈகத்திருநாள் மார்ச் 23 வரை தொடர்ந்து நடத்தவிருக்கிறோம். இது ஒரு தொடக்க முன்னெடுப்புதான் உங்களின் மேலான ஆதரவோடு பாசிச எதிர்ப்பு – தமிழக உரிமை மீட்பு வெகுமக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதுதான் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் வேண்டுகோளும் விருப்பமும் ஆகும்.
ஆட்சியிலே அமர்ந்திருக்கின்ற மோடி தலைமையிலான பாசிச சங்பரிவார சக்திகள் அடுத்த பலபத்தாண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டின் மக்களின் தலைவிதியை தீர்மாணிப்பதற்கான தாக்குதலை நடத்திகொண்டிருக்கிறார்கள். தமிழகம் போராடி ஈன்றெடுத்த சிறப்புரிமைகளையும், வரலாற்று தனித்தன்மைகளையும் அழித்துவிட துடிக்கின்றனர். பிழைப்புவாத அடிமைகளயும், முற்போக்கு தமிழ்த்தேச உணர்வற்ற சாதிய பிளவுவாத ஒட்டுண்ணிகளையும் அரசியல் கூட்டாளிகளாக சேர்த்து கொண்டு தமிழகத்தை கைப்பற்றிவிடலாமா என ஒரு படையெடுப்பைபோல் திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஒவியர்களின் கேலிச்சித்திரங்களை கண்டும், நடிகர்களின் சினிமா வசனங்களை கேட்டும், பேரழிவு திட்டங்களுக்கான போராட்டங்களை பார்த்தும் அச்சமுற்ற பொன்.ராதாகிருஸ்ணன், எச்.ராஜா வகையறாக்கள் தேச விரோதிகள் இந்து விரோதிகள் கிருத்துவ மிசினரிகள் அன்னிய கைக்கூலிகள் என வாலறுந்த நரிகளை போல சினங்கொண்டு ஊளையிடுகிறார்கள். கழகங்களின் மீது சவாரி ஏறி பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆட்சியையும் ருசிபார்த்தவர்கள் இன்று பெரியாருக்கே கடப்பாரை போடுவோம் என்கிறார்கள்.
அரசியல் பண்பாட்டு படையெடுப்பு மட்டுமல்ல தமிழர் நிலத்தை கூறுபோட்டு அதானிக்கும் அம்பானிக்கும் ஸ்டெர்லைட் வேதாந்தாவிற்கும் கொடுத்துவிட்டு தமிழர் தேசம் என்ற கனவு கூட எஞ்சி இருக்க கூடாது என அழித்துவிட துடிக்கும் இரும்புகரத்தின் குல சின்னத்தை கொண்டவர்கள்தான் அவர்கள்.
கல்வி உரிமை, வரிவிதிப்பு உரிமை, நிலவுரிமை, சிறுகுறு தொழில் நடத்தும் உரிமை, தொழிலாளர் உரிமை மாநில அதிகார உரிமை, போலீஸ் உரிமை, அனைத்தையும் பறித்து பெரும் ஏக போக முதலைகளிடம் ஒப்படைத்துவிட்டு, ஓரிந்திய, இந்து தேசிய கனவில் அரசமைப்பு சட்டத்தையும் தூக்கியெறிந்துவிட்டு, இறுதியில் அரசு வடிவத்தை காவி கார்பரேட் சர்வாதிகார அரசாக மாற்றி நிறுவுவார்கள். எனவேதான் சொல்கிறோம் நமது அரசியல் இயக்கம் ஒரு கட்சிக்கெதிரான செயற்பாடு மட்டுமல்ல, பாசிச சக்திகள் அனைத்தும் தழுவிய அளவில் முழுமையாக அரசதிகாரத்தை கைப்பற்றுவதை தடுப்பதற்கான மாபெரும் சனநாயக இயக்கமாக மாறுவதுதான் காலத்தின் தேவையாக இருக்கிறது.
எதிர்கட்சிகளின் நிலைப்பாடோ நாம் அனைவரும் அறிந்ததுதான். பா.ச.க’வின் வன்மையான இந்துதுவ, உலகமயமாக்கல் கொள்கைக்கு மாற்றாக காங்கிரஸ் மென்மையாக அமுல்படுத்தும் போக்கை கொண்டது. சமூகநீதி மாநில உரிமை பேசும் கட்சிகள், காங்கிரசோடும் பா.ச.க’வோடும் கூட்டணி வைப்பதில் என்றைக்கோ எல்லைக்கோடுகளை அழித்துவிட்டன. எனவே இவர்களுக்கு தேவை ஐந்து ஆண்டுகால ஆட்சிமாற்றம்தான். பாசிச எதிர்ப்பில் உறுதியானவர்கள் கிடையாது. பாசிச சக்திகளை 5 ஆண்டுகால ஆட்சி மாற்றத்தில் மட்டும் வீழ்த்திவிட் முடியாது. ஒருவேளை வருகின்ற ஐந்து ஆண்டுகால ஆட்சியின் கார்பரேட் ஆதரவு கொள்கையால் பாசிச சக்திகள் முந்தைய பலத்தோடு மேலதிக தீவிரத்தோடு எழலாம், எனவேதான் சனநாயகத்தையும் தமிழ்த்தேசத்தின் உரிமையையும் காக்க விரும்புகின்ற சனநாயக சக்திகளுக்கு இரண்டு கடமைகள் முன்நிற்கின்றன….ஒன்று பாசிச பா.ச.க’வை வருகின்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்! இரண்டு சந்தர்பவாத எதிர்கட்சிகள் கார்பரேட் ஆதரவு மென்மையான இந்துவ கொள்கைகளை கைவிடுவதற்கான நெருகுதலை கொடுப்பதற்கான செயற்திட்டங்களையும் மக்கள் இயக்கங்களையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கான தொடக்க முனைப்புதான் சனவரி 25 ல் தொடங்குகின்ற காவி-கார்பரேட் எதிர்ப்பு அர்சியல் இயக்கம்.
வாருங்கள் தொடர்ந்தும் இனைந்தும் முன்னெடுப்போம்.
பாலன், பொதுச்செயலாளர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
vasan08@rediffmail.com, 70100084440