எதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.

15 Jan 2019

இட ஒதுக்கீட்டு வகைப்பாட்டுக்குள் வரும் பிரிவினர் அல்லாத, பொருளாதார ரீதியாகப் பலவீனமானப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்குகின்ற 124 ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை அவசர அவசரமாக மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலைப் பெற்று முதலாவதாக குஜராத் மாநிலத்தில் அமல்படுத்துவதற்கான தேதியை மோடி அரசு குறிப்பிட்டுள்ளது.

மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் கோத்த பிரபாகர் ரெட்டி சனவரி 8 காலை 11 மணி அளவில் ’ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ தொடர்பான தனது 4475 எண்ணிட்ட கேள்விக்கு சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரிடம் இருந்து பதிலைக் கேட்கும் போது அமைச்சர் கிருஷ்ணன் பால் குஜார் இதுபற்றி எந்த முன்வைப்பும் இல்லை எனவும் யாரிடம் இருந்தும் கோரிக்கைகளும் வரவில்லை எனவும் பதிலளிக்கிறார். ஆனால், அதற்கு முந்தைய நாள் அமைச்சரவையில் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. அதே நாளில் 11 மணிக்குப் பின்பு அதே அவையில் அந்த சட்டத்திருத்த மசோதா முன்வைக்கப்படுகிறது. இதுநாள் வரை சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின் தங்கியிருந்தப் பிரிவினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற அரசமைப்பு சட்ட உறுப்பு விதிகளை மாற்றியும் 50% மேல் இட ஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது என்கிற உச்ச நீதிமன்றத்தின் விளக்கமான தீர்ப்பையும் மறுத்து 10% இட ஒதுக்கீட்டுக்கான சட்ட திருத்தத்தைக் அமல்படுத்தியுள்ளது.

எவ்விதமான ஆய்வுகளும் பாராளுமன்ற நிலைக்குழுக்களின் விவாதங்களும் இன்றி பொதுவெளியில் இது பற்றிய விவாதம் எழுவதற்கான சூழலைத் தவிர்ப்பதற்கான எச்சரிக்கையோடு கூட்டத் தொடர் முடியும் வேளையில் இச்சட்டத் திருத்தத்திற்காக ஒரு நாளை நீட்டித்து  இரகசியமாகவும் சதித்தனமாகவும் அவசரச் சட்டம்போல் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சட்டத் திருத்தத்தின் பொருட்டான பா.ச.க.வின் அவசரகதியான செயல்பாடு தேர்தல் நோக்கம் கொண்டது, எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ததால் பா.ச.க..வின் அடித்தளமாக விளங்கும் உயர்சாதியினரிடையே எழுந்திருக்கும் அதிருப்தியை சரிகட்டும் நோக்கம் கொண்டது என்ற இவ்விரு காரணங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகளால் பா.ச.க. விமர்சிக்கப்படுகின்றது. ஆனால், வழமையான விவாதங்கள் கூட நடக்காமல், எதிர்க்கட்சிகள் வெறுமனே விமர்சிக்க, மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் வெறுமனே ஒற்றை இலக்கத்தில் எதிர்ப்பு வாக்குகள் பெற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பேராதரவுடன் இச்சட்டத்திருத்த மசோதா வெற்றிப் பெற்றுள்ளது.

கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நடப்பு நாடாளுமன்றத்தின் சமூகநீதி  வாய்வீச்சுகளின் எல்லையை திரைவிலக்கிக் காட்டியுள்ளது. சாதாரண மசோதாக்களுக்கே பல நாள் நாடாளுமன்றத்தை முடக்குகிற அரட்டைமன்றப் பேர்வழிகள், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறில் ஒன்றை மாற்றுகின்ற சட்டத் திருத்தத்தை தேர்தல் சதிராட்டத்திற்காக இவ்வளவு எளிதாக நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம் என  இவர்களே கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் நாடாளுமன்றம், அரசமைப்புச் சட்டம் பற்றியெல்லாம் இவர்கள் சொல்லுகின்ற புனிதக் கதைகளை சுக்குநூறாக்கி யுள்ளது. உயர்சாதி அடித்தளம் கொண்ட பா.ச.க. முன்வைக்கும் சட்டத்திருத்தை காங்கிரசு, சி.பி.ஐ.(எம்) மட்டுமின்றி பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சமூக அடித்தளம் கொண்ட சமாஜ்வாதிக் கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் லோக் ஜனசக்தியும் ஆதரித்திருப்பது உணர்த்தும் செய்தி என்ன?

சாதிக் குழுக்களின் அதிருப்தியை சரிகட்டுவது, சாதிக் குழுக்களின் வாக்கு வங்கிகளை திடப்படுத்திக் கொள்ளும் பொருட்டு சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதற்காக இத்தகைய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றச் செய்திருப்பது இந்நாட்டின் உயர்ந்த சட்ட அவைகள்கூட ஒரு கிராமத்து சாதிக் கட்டப்பஞ்சாயத்து வரம்பைக் கொண்ட சாதிநாயக அவைகள்தான் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

சமூக நீதியா? சாதி நீதியா?

பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் என வகைப்பாட்டை ஏற்பாடு செய்து பின்தங்கிய சமூகப் பிரிவினர் என்ற பொது வகைப்பாட்டிற்குள் இதுநாள்வரை அதிகாரமளிக்கப்படாமல், முன்னேற்றம் அடைய முடியாமல் பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மையாக இருக்கின்ற பெரும்பான்மையான மக்களை முன்னேற்றுவதற்குத்தான் சமூக நீதி அதன் அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்ற கொள்கையை நமது முன்னோடிகள் வகுத்துத் தந்தார்கள். ஆனால், யதார்தத்தில் இந்திய சமூக அமைப்பின் வரலாறு மேற்கண்ட வகைப்பாட்டின் அடிப்படையிலான போராட்ட வரலாறாக மட்டுமின்றி அதையும் கடந்து சாதிக் குழுக்களின் பிரதிநிதித்துவதற்கான, சனநாயகக் கோரிக்கைகளுக்கான, சட்டத் திருத்தங்களுக்கானப் போராட்ட வரலாறாகவும் உருண்டோடி வந்துள்ளது. ஒவ்வொரு வகைப்பாட்டிற்குள் இருக்கின்ற சாதிகளுக்கு இடையிலானப் பங்கீட்டுப் போராட்டம் உள் இடஒதுக்கீடு வழங்கக்கோரும் புதிய வகைப்பாட்டையும் உருவாக்கி வந்துள்ளது.

அதுதான், தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புறத்தினர், பெண்கள், சிறுபானமையினர், அருந்ததியர்  என இட ஒதுக்கீட்டுப் பயனீட்டாளர்களின் தொகுதிகளை உருவாக்கியது. அது மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் முன்னேறியப் பிரிவினராக வகைப்படுத்தப்பட்ட சாதிகள்கூட தமிழ்நாட்டில் பிற்படுத்தப்படோர் பட்டியலுக்கு கொண்டுவரப்பட்டதும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த பின்தங்கியப் பிரிவினர் துப்பாக்கி சூட்டைச் சந்தித்த போராட்டங்களின் ஊடாக மிகவும் பிற்படுத்தப்பட்டோராக வகைப்படுத்தப்பட்டதும் நடந்துள்ளது. இப்போதும் வன்னியர் சாதிக்கு தனித்த 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. பள்ளர்கள் மத்தியில் தலித் அரசியலை கொண்டு சென்ற தலைவர்கள் இன்றைக்கு தாழ்த்தபட்டோர் பட்டியல் பிரிவில் இருந்து அச்சமூகப் பிரிவை வெளியேற்றக் கோரியும் தனி இடஒதுக்கீடு கேட்டும் கோரிக்கை விடுக்கின்றனர்.

அண்மைய ஆண்டுகளில் வட மற்றும் மேற்கு மாநிலங்களில் எண்ணிக்கையில் பெரியதாக உள்ள, விவசாயத்தில் ஈடுபட்டுள்ள, கிராமபுறங்களில் சாதி மேலாதிக்க அந்தஸ்த்தில் உள்ள சாதிக் குழுக்கள் இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி இட ஒதுக்கீட்டில் தமது சாதியை உள்ளடக்கக் கோரியும் தனித்த இடஒதுக்கீடு கேட்டும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அங்கு தமிழகத்தைப் போல் பெரும்பாலான விவசாய சாதிகள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படாமல் வெளியே இருக்கின்றனர். 1999 இலேயே இராஜஸ்தானில் உள்ள ஜாட் சாதியினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இப்போது மகாராஷ்டிராவில் 30% மக்கள் தொகை கொண்ட மராத்தா சாதியினர், குஜராத்தில் படேல் சாதியினர், உத்தரப் பிரதேசத்தில் தாகூர் சாதியினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோருகின்றனர். இராஜஸ்தானில் குஜ்ஜார் சாதியினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடிப் பட்டியலில் சேர்க்க கோருகின்றனர். தமிழகத்தைப் போலன்றி முன்னேறிய சாதியினர் என்ற வகைப்பாட்டில் வரக்கூடிய சாதிகள் பெரும் எண்ணிக்கையில் – குறைந்தபட்சம் சுமார் 25% வரை உள்ளனர்.

இந்தப் பின்னணியில்தான், பா.ச.க. மட்டுமன்றி பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நலன் பேசக் கூடிய  பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, லோக் ஜன சக்தி, இந்தியக் குடியரசு கட்சி(அத்வாலே பிரிவு) என கட்சி வேறுபாடின்றி, இட ஒதுக்கீட்டை சமூக நீதி என்ற கண்ணோட்டத்தில் அணுகாமல் சாதிகளை அனுசரிப்பது, அவற்றின் கோரிக்கைகளோடு சமரசம் செய்வதன் வழி சாதிகளைக் கையாளும் அரசியல் உத்தியைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.  தொடர்ந்து மாறிவரும் புறநிலைமைகளால் மக்களிடையே இருந்து எழும் கோரிக்கைகளை சமூக நீதிக் கண்ணோட்டத்தில் அணுகி, சமகால நிலைமைக்கு ஏற்றாற் போல் சமூக நீதித் தளத்தைப் புதுப்பித்துக் கொள்வது என்பதற்கு மாறாக சந்தர்ப்பவாதமாக, சனநாயக விரோதமாக இக்கோரிக்கைகளை எழுப்பும் சாதிகளைக் கையாள்கின்றனர்.

சாதிநாயகத்தை சீர்திருத்துவதற்காக எழுந்த சமூக நீதிக் கோட்பாடு என்பது ஆளும் வர்க்க சக்திகளால் இறுதியில் சாதி நீதியாக கையாளப்பட்டு சாதிநாயகத்திற்கே சேவை செய்வதில் போய் முடிகிறது.

சாதிகளைக் கையாளும் அரசியல்:

முழு இந்தியாவும் காங்கிரசின் தலைமையில் என்று தொடங்கிய குடியரசு இந்தியாவின் வரலாற்றில் பின்வரும் இருபோக்குகள் வளர்ந்துள்ளன. உயர் சாதியினர் அடித்தளத்தை மட்டும் கொண்டிருந்த பா.ச.க. வரலாற்று ரீதியாக இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாகவும் இந்தியாவுக்கு வர்ணாசிரம முறையே சரியானது என்ற கொள்கையுடையதாகவும் இருந்தது. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் வந்தபோது அதற்கெதிராக உயர் சாதியினரைத் திரட்டிப் பெரும் வன்முறைக்கு வித்திட்டது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பா.ச.க. 80 களின் தொடக்கத்தில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரிடையே தமது சமூக அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டு கடந்த நூற்றாண்டின் இறுதியில் கூட்டனி ஆட்சி அமைத்து, இந்நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டில் முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்திவிட்டது. இன்னொருபுறம், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் எழுச்சி அரசியலாக உருப்பெற்ற கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதிக் கட்சி, லோக் ஜன சக்தி கட்சி போன்ற கட்சிகள் தமது பகுஜன் அரசியலைக் கைவிட்டு சர்வஜன அரசியலை முன்னெடுக்கத் தொடங்கின.

இவ்வாறாக தாம் தொடங்கிய இடத்தில் இருந்து மேலும் கீழுமாகப் பயணித்து சாதிகளை தமது வாக்குவங்கி அடித்தளமாக்குவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவது, தக்க வைப்பது என்பதாக உயர் சாதி முனையிலிருந்தும் ஒடுக்கப்பட்ட சாதி முனையிலிருந்தும் புறப்பட்ட நேரெதிர் போக்குகள் ஒன்றை ஒன்று தழுவி வளர்ந்துள்ளன. சாதி இறுக்கத்தைத் தளர்த்தி, சாதி ஒழிப்பை நோக்கிப் பயணிக்கும் விருப்பத்தில் முன்னெடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு அரசியல் இச்சக்திகளால் சாதிகளை திடப்படுத்தி கையாள்வதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுவதைக் காண முடிகின்றது. நாடாளுமன்றக் குடியரசு அரசியலை வசப்படுத்துவதற்கு சமூகப் பொறியமைவு( social engineering) என்ற உத்தியுடன் சாதிகளின் எண்ணிக்கை, வாழ்நிலை, கல்வித் தகுநிலை, வர்க்க ஏற்றத் தாழ்வுகள், அக்கம்பக்க சாதிகளுடனான முரண்பாடு எனப் பலவற்றையும் தன்னுணர்வுடன் கணக்கில் எடுத்து காய்களை நகர்த்துவதன் மூலம் சாதியத் திடப்படுத்தலை விளைவித்து வருகின்றன. ஆளும் வர்க்க்த்தின் சமூகப் பொறியமைவு என்ற உத்தி தீவிர ஆபத்தானப் போக்காக வளர்ந்து வருகின்றது. தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள் உள் இட ஒதுக்கீடு கொடுப்பது சாதியைத் திடப்படுத்தும் என்பதால் வேறு வழிகளில் இச்சிக்கலைத் தீர்ப்பதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று ஆனந்த டெல்டும்டே சொல்கிறார். உள் இட ஒதுக்கீடு போன்றே இட ஒதுக்கீடும் நேர்நிறைப் பாகுபாடு பார்த்தல்(Positive Discrimination) என்பதாக மட்டும் அல்லாமல் ஆளும் வர்க்கம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் கையாள்கின்ற முறை சாதிகளைத் திடப்படுத்தும் விளைவையும் ஏற்படுத்துகின்றது.

 

பொருளாதார அளவுகோலா? சமூக அளவுகோலா?

அரசமைப்புச் சட்டத்தின்படி சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்புகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது என்று சொல்லப்பட்டுள்ளது. சமூக ரீதியாக பின் தங்கிய நிலைமை என்பதை தீர்வுசெய்வதற்கு அந்தக் குறிப்பிட்ட சாதியின் சராசரி பொருளாதார நிலைமைகள் கருத்தில் கொள்ளப்படுவது மண்டல் ஆணையத்தின் பரிந்துரையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவ்வகையில் சமூக ரீதியான பின் தங்கிய நிலைமையில் பொருளாதார நிலைமை ஒரு காரணியாக உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இன்னொருபுறம் உயர் சாதியினர் என்று வகைப்படுத்தப்பட்ட சாதிகளில், குறிப்பாக வட மாநிலங்களில் விவசாய சாதிகள், பெரும் எண்ணிக்கையில் நிலமற்றவர்கள், கூலி விவசாயிகள், உடலுழைப்பில் ஈடுபடக் கூடியவர்கள் இருக்கின்றனர். இதற்கும் வெளியே இஸ்லாமியர் என்ற பெருந்தொகையான சமூகப் பிரிவினரின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சச்சார் ஆணையம் பரிந்துரை செய்தது. ஆளும் வர்க்கம் பிற்படுத்தப்பட்டோரிடையே ‘கிரீமி லேயர்’ என்ற பொருளாதார அளவுகோலை ஏற்படுத்தி இட ஒதுக்கீட்டின் மீதான தாக்குதலை நடத்திவிட்டு, தாழ்த்தப்பட்டோரிடையேயும் அதை அமல்படுத்த முயன்று வருகிறது.

அதுமட்டுமின்றி, இந்த 70 ஆண்டுகால குடியரசு வாழ்வில் இட ஒதுக்கீடுப் பெற்றுள்ள சாதிகளில் தெள்ளத் தெளிவாக உடைமை வர்க்கங்கள் தோன்றி வர்க்கக் கோடுகள் உருப்பெற்றுள்ளன. நீட் சிக்கலில் இது தெள்ளத் தெளிவாக வெளிப்படுகிறது. மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் வர்க்கத்தினருக்கும் மத்திய பாடத் திட்டத்தில் படிக்கும்  வர்க்கத்தினருக்கும் இடையிலான மருத்துவ இடங்களைப் பங்குபிரிக்கும் முரண்பாடாகவே அது உள்ளது. அந்நேரத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 50 % இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததுகூட அதன் சாறத்தில் பொருளாதார அளவுகோலே. முன்பு கிராமப்புற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அமலில் இருந்து பின்னர் உச்ச நீதிமன்றத்தால் அது நீக்கப்பட்டதும் தமிழகத்திற்கு கிடைத்துள்ள ஓர் அனுபவம் ஆகும். கலைஞர் பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஐந்து மதிப்பெண்கள் வழங்கும் அரசாணை ஒன்றை இயற்றி அதை நடைமுறைப்படுத்தினார்.

சமூக நிலைமையில் பின் தங்கிய வகுப்புகள் என்று வகைப்படுத்தப்பட்டவர்களிடையே உள்ள பிரதேச, கிராம-நகர வேறுபாடுகள், பாலின, வர்க்க வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்ததையும் எழுந்து கொண்டிருப்பதையும் தமிழ்நாடு கண்டுள்ளது. இந்திய நிலைமையில் சாதியும் வர்க்கமும் பிரிக்க முடியாததாக, ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கும் நிலையில் சமூக அளவுகோலா? பொருளாதார அளவுகோலா? என்று ஒன்றை ஒன்று விலக்கியும் மறுத்தும் சீர்தூக்கும் பார்வை முற்றிலும் தவறானது. இந்திய சமூகம் அடிப்படையில் சாதிய சமூகமாக இருக்கிறது என்பதால் அந்த சாதிகளுக்குள் வர்க்கங்கள் இல்லை என்றோ உருப்பெறவில்லை என்றோ பொருளில்லை. அதனால்தான், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சாதிகளின் எண்ணிக்கை, நிலவுடைமை, வேலை வாய்ப்பு, கல்வித் தகுதி, வாழ்நிலை ஆகியவை அறியப்பட வேண்டும் என்று சமூகநீதியின் பால் அக்கறை கொண்டோர் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் ஆளும் வர்க்கம் இந்த கோரிக்கையை மறுத்து வருகின்றது. சாதிகளுக்குள் வர்க்க, பாலின, பிரதேச வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு வாய்ப்பு மறுப்பின் அடியாழம் வரை சென்று சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் இட ஒதுக்கீட்டு முறையை வளர்த்தெடுக்கும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். சமூகநீதியை ஏற்கக்கூடியவர்களிலேயே உள்ள உடைமை வர்க்க சக்திகள் சாதிகளுக்குள் இருக்கும் பல்வேறு வகை ஏற்றத்தாழ்வுகளை மறுத்துக் கொண்டு, இட ஒதுக்கீட்டு முறையில் வளர்த்தெடுக்க வேண்டிய விசயங்கள் பற்றி அக்கறையற்று இருக்கின்றன. அதே நேரத்தில், இந்த நிலைமைகளை சமூகநீதிக்கு எதிரான ஆளும் வர்க்க சக்திகள் நுட்பமாகப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கு திட்டமிட்ட வகையிலான தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. இட ஒதுக்கீட்டு முறையில் அக்கறை கொண்ட தரப்பினரில் ஒரு சாரார்  நூறு விழுக்காடு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற தீர்வை முன்வைக்கின்றனர். அதுவும்கூட இட ஒதுக்கீட்டின் வழி சாதியமைப்பை தளரச் செய்து சாதி ஒழிப்பை நோக்கி முன்னகர்வதற்கு மாறாக சாதி இறுக்கத்தையும் சாதி இருத்தலையும் நிரந்தரமாக்குவதற்கு வழிவகுத்துவிடும். இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கலுக்கு அப்பால் சாதியமைப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் அதை ஒரு தேங்கிய குட்டைப் போல் பார்ப்பதன் விளைவே இந்த முன் வைப்பாகும்.

எனவே, சமூக அளவுகோலா? பொருளாதார அளவுகோலா? என்ற மேலோட்டமான, முடிவற்ற தர்க்கத்திற்குள் செல்லாமல் குடியரசு காலத்தின் 70 ஆண்டுகாலப் பயணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் துல்லியமாக கண்டறியும் வகையில் சாதியடிப்படையிலான வகைப்படுத்தலுக்குள் இருக்கும் வர்க்க, பாலின், பிரதேச நிலைமைகளையும் கண்டறியும்  சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில், சாதியை அடித்தளமாகக் கொண்டு அதற்குள் பாலின, பிரதேச, வர்க்க காரணிகளையும் உள்ளடக்கி இட ஒதுக்கீட்டுமுறைப் புதுப்பிக்கப்படுவதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் இக்கணக்கெடுப்பு மீண்டும் எடுக்கப்பட்டு நிலைமைகளை மதிப்பிட்டு புதுப்பித்தலை மேற்கொள்வதென்ற இட ஒதுக்கீட்டுக் கொள்கை வேண்டும். அதுமட்டுமின்றி, அனைந்திந்திய அளவிலான சாதிகள் என்றில்லை, சாதிகள் மாநில அளவில்தான் இருக்கின்றன. எனவே, அந்தந்த மாநிலங்களில் உள்ள குறித்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற ஏற்பாடுகளுடன் கூடிய வகைப்பாட்டையும் வரையறைகளையும் மேற்கொள்ளும் வகையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமைய வேண்டும்.

50% இட ஒதுக்கீடும், உச்ச நீதிமன்றமும் :

அளவுமீறிய இட ஒதுக்கீடு என்பதில் வாய்ப்புகளில் சமத்துவத்தை அழிப்பதாக அமைந்துவிடும் என்ற பொருள்படும் அம்பேத்கரின் வாதத்தைக் மேற்கொள் காட்டி அனைத்து தரப்பினருக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நூறில் ஐம்பது விழுக்காட்டை இட ஒதுக்கீடு தாண்டக் கூடாது என்று அரசமைப்பு சட்ட உறுப்புக்கு விளக்கமளித்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வாதத்தை இதுநாள் வரை எதிர்மறையாகப் பார்த்த சக்திகள் இந்த அரசமைப்பு சட்ட திருத்தத்தை எதிர்ப்பதற்கு இந்த தீர்ப்பை தனக்கான ஒரு வாதப் பொருளாக எடுத்துக் கொள்வதும் இதுநாள் வரை இந்த தீர்ப்பைச் சுட்டிக் காட்டி பல்வேறு மாநிலங்கல் 50% க்கும் அதிகமாக இட ஒதுக்கீடு தர முற்பட்ட போது அதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ஒப்புதலைத் தர மறுத்தவர்கள் அதே நீதிமன்ற தீர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்காக 50% மேல் 10% இட ஒதுக்கீட்டுக்கு அரசமைப்பு சட்ட திருத்தம் செய்திருப்பதும் வரலாற்றில் ஒரு நகைமுரணாகும். இந்த சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் பெரும்பாலானோர் நீதிமன்றத்தையே இறுதி நம்பிக்கையாக கொண்டிருக்கிற சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு 9 ஆவது அட்டவணையில் இருப்பதால் நீதிமன்றத்தின் முழுமையான விசாரணைக்கு வராமல் இருக்கிறது. அதே நேரத்தில் ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் மதச் சிறுபான்மை அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கும், குஜ்ஜார் போன்ற சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் பொருட்டு 50% க்கும் மேலான இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உச்ச நீதிமன்றம் அரசமைப்பு சட்டத்திற்கு விளக்கும் தரும் அதே வேளையில் சமூகப் பொருளாதார நிலைமைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள், ஏழைகளின் நிலைமை, மாநிலங்களின் குறிப்பான நிலைமை, மதச்9 சிறுபான்மையினர் நிலைமை ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், இது வரைகாலம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் வட இந்திய அளவிலும் மத்திய அரசுப் பணிகளிலும் இருக்கும் பாரதூரமான இடைவெளிகளைப் பற்றி கவலைக் கொண்டதுமில்லை. மேலும் அரசமைப்புச் சட்ட விவாதத்தின் போது அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும் என்றும் கல்வி,வேலைவாய்ப்பிலான இட ஒதுக்கீடு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் அம்பேத்கர் வாதிட்டார். அரசியல் பிரதிநிதித்துவத்திலான இட ஒதுக்கீடு அதன் தேவை காரணமாகப் பத்தாண்டுகளைக் கடந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறை, 50% அளவு ஆகியவையும் மீள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இட ஒதுக்கீட்டு முறையை மேம்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.  எனவே, 50% க்கும் மேல் இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்தக் கூடாதென்ற உச்ச நீதிமன்றத்தின் உச்ச வரம்பை இவ்விசயத்தில் வாதப் பொருளாகக் கொள்ள வேண்டியதில்லை, அந்த அளவுகோலை உயர்த்திப் பிடிப்பதென்பது மாநிலங்களின் குறிப்பான தேவையில் இருந்தும் மதச் சிறுபான்மையினர், பாகுபாட்டுக்கு உள்ளானப் பல்வேறு பிரிவினருக்கான தேவையில் இருந்தும் இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கைகளைத் தோற்கடித்துவிடும்.

(தொடரும்)

குறிப்பு: பா.ச.க.வும் இட ஒதுக்கீடும், கம்யூனிஸ்ட் கட்சியும் இட ஒதுக்கீடும், விவசாய நெருக்கடியும் இட ஒதுக்கீடும் தனியார்மயமும் இட ஒதுக்கீடு ம் புரட்சிகர சீர்த்திருத்தமும் எதிர்ப்புரட்சிகர சீர்த்திருத்தமும் ஆகிய தலைப்புகளின் மீதான கருத்துகள் அடுத்தப் பத்தியில்.

 

-பாலன்,

பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

vasan08@rediffmail.com, 7010084440

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW