ஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்!

14 Jan 2019

அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரியான மெட்ராஸ் தொழில் நுட்பக் கழகத்தில் (MIT) தற்காலிக பேராசிரியராக செப்டம்பர்  மாதம் பணியில் சேர்ந்த 30 வயதே ஆன பேரா. வசந்தவாணன் 12.11.2018 அன்று தற்கொலை செய்து கொண்டார்.  அவரின் தற்கொலை கல்லூரி ஆசிரியர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

ஆசிரியர் பணியை ஒரு சேவையாய் செய்தவர்

பேரா. வசந்தவாணன், அண்ணா பொறியியல் கல்லூரியில் 2010 ஆண்டு படித்து  தங்கப் பதக்கம் வென்ற மாணவர். தனியார் தொழிற்சாலைகளில் மாத சம்பளம் லட்சத்திற்கு மேல் வேலை கிடைத்த போதும், கல்வித் துறையில் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தோடு ஆசிரியர் பணியை தேர்வு செய்திருக்கிறார். தனியார் பொறியியல் கல்லூரிகளில் 7 ஆண்டுகள் பணி புரிந்த அனுபவம் பெற்றவர்.  அர்ப்பணிப்போடு ஆசிரியர் பணியை செய்திருக்கிறார்.  குறுகிய காலமே ஷிரீ சாஸ்த்தா கல்லூரியில் பணிபுரிந்தாலும் மாணவர்களுக்கு அவர் கொடுக்க வேண்டிய பாடக்குறிப்புகள் உள்ளிட்டு அனைத்தையும் கொடுத்திருக்கிறார். மாணவர்களுக்கு கற்று கொடுப்பதை பெரு விருப்பத்தோடு செய்ததாக அவருடன் பணிபுரிந்த நண்பர் கூறுகிறார்.

கடைசியாக பணி புரிந்த ஒரு கல்லூரியில் எந்த காரணமுமின்றி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த நிர்வாகம் இவரை மட்டும் பணியில் வைத்திருக்கிறது. அதை விரும்பாத பேரா.வசந்தவாணன் அந்த கல்லூரியை விட்டு வெளியேறி இருக்கிறார். 2018 ஆகஸ்டு மாதம் சென்னை, செம்பரம்பாக்கத்தில் உள்ள ஷிரீ சாஸ்த்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். பணியில் சேரும் போதே தான் எம்.ஐ.டி யில் தற்காலிக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து இருப்பது பற்றியும், அங்கே வேலை கிடைத்தால் சென்று விடுவதாகவும் சொல்லித்தான் வேலையில் சேர்ந்து இருக்கிறார்.

 

சாஸ்த்தா கல்லூரியிடம் அசல் சான்றிதழை பெறுவதற்கான போராட்டம்

ஒரே மாதத்தில் அவருக்கு எம்.ஐ.டி யில் தற்காலிக ஆசிரியர் பணி கிடைத்திருக்கிறது. எம்.ஐ.டி யில் வேலை கிடைத்த தகவலை சொல்லி சாஸ்த்தா கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரத்திடம் தன்னுடைய பணி விலகல் முடிவை தெரிவித்து இருக்கிறார். ஆனால், ஆசிரியர் பணியை சேவையாக நினைத்து ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கூட வகுப்பு எடுக்க தயங்காத வசந்தவாணன் போன்ற ஒருவரை இழக்க சாஸ்த்தா நிர்வாகம் விரும்பவில்லை. ’அரசு வேலையே கிடைத்தாலும், அடுத்த ஒரு வருடத்திற்கு உங்களை விடுவிக்க முடியாது’ என்று முதல்வர் சண்முகசுந்தரம் மிகவும் அதிகாரத்திமிருடன் மிரட்டி இருக்கிறார். (வாட்ஸ் அப் தகவல்). இதை அடுத்து எம்.ஐ.டி தற்காலிக ஆசிரியர் பணியில் செப்டம்பர்  மாதம் வசந்தவாணன் சேர முடிவெடுத்து இருக்கிறார்.

சாஸ்த்தா கல்லூரியில் சேர்ந்த போது கல்வித் தகுதிக்கான 10 & 12 வகுப்பு, இளங்கலை,முதுகலை பொறியியல் அசல் சான்றிதழ்களை சாஸ்த்தா கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்து இருக்கிறார். அவர் அங்கு பணிபுரிந்தது வெறும் 22 நாட்கள் தான்(ஆகஸ்ட் 9-30). இந்த குறுகிய காலத்தில், அவர் சாஸ்த்தா கல்லூரியில் வேலை பார்த்ததற்கான பணி நியமன ஒப்பந்தத்தை கூட பெறவில்லை. ஒரு மாத சம்பளம் கூட பெற வில்லை.  அசல் சான்றிதழ்களை பெற தொடர்ந்து முயற்சி எடுத்து இருக்கிறார். கல்லூரி நிர்வாகம் கொடுக்க மறுக்கவே, அருகில் இருந்த நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். ஆனால், பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கிறோம் எனச் சொல்லி காவல்துறையினர் வசந்தவாணனை கல்லூரி நிர்வாகத்திடமே அழைத்து வந்து இருக்கின்றனர். அங்கே கல்வி நிறுவனத்தின் டிரெஸ்ட் தலைவர் கார்த்திகேயன் ‘காவல் நிலையத்திற்க்கு போகிறாயா? பார்த்தாயா, 2 ஏ நிமிடத்தில் இங்கே கொண்டு வந்து விட்டோம், உன்னால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று வசந்தவாணனை பார்த்து கூறி இருக்கிறார். மேலும், குண்டர்களை வைத்து மிரட்டியும் தாக்கியும் இருக்கிறார்கள் என்கிறார் அனைத்து இந்திய தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் திரு. கே.எம். கார்த்திக்.

போராடியும் சான்றிதழை பெற முடியாததால் தற்கொலை முடிவு

அப்துல் கலாம் போன்று மாணவர் சமூகத்திற்கு நல்ல ஆசிரியராக, முன் உதாரணமான மனிதராக இருக்க வேண்டும் என்ற கனவோடும் கொள்கையோடு தன் வாழ்க்கை அமைத்து இருக்கிறார் வசந்த வாணன். இத்தனை கல்வி கற்றும், இந்த கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து தன்னுடைய சான்றிதழ்களை பெற முடியவில்லையே என்ற மன உளைச்சலும், கல்லூரி நிர்வாகத்தால் தான் அவமானப்படுத்தப்பட்டதும் அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. மேலும் இதை தட்டிக்கேட்க வேண்டிய காவல் துறையும் கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்ததும் அவருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அப்துல் கலாம் போல் ஒரு உதாரண மனிதராக வாழ நினைத்த வசந்தவாணன், ஆசிரியர் பணியை சேவையாக நினைத்தவர், தீராத மன வேதனையில் 12.11.2018 அன்று தற்கொலை செய்து கொண்டார். ஒரு லட்சிய மனிதனாக வாழ்க்கையை வாழ நினைத்தவர், ஒரு தனியார் கல்லூரியின் லாப வேட்டைக்கு பலியாகிபோனார்.

’ஒருவேளை அவர் எம்.ஐ.டி யில் அவரது பணியை தொடர்ந்து இருந்தால், அங்கே ஆராய்ச்சி படிப்பை முடித்து நிரந்தர பணியில் அமர்ந்து 65 வயது வரை பணி செய்து மாணவ சமூகத்திற்கு ஒரு முன் உதாரணமான ஆசிரியராக வந்து இருப்பார். சாஸ்த்தா கல்லூரி அசல் சான்றிதழை கொடுக்காமல் வசந்தவாணனை அலைகழித்து, அவமானப்படுத்தியதே, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் ’ என்கிறார் தனியார் ஆசிரியர் சங்கத் தலைவர், திரு.கே.எம் கார்த்திக். தான் இறந்த பிறகாவது, தன்னுடைய கல்வி சான்றிதழ்களை பெற்று தன்னுடைய பூத உடல் அருகே வைக்க வேண்டும் என்பது வசந்தவாணனின் கடைசி ஆசை. இந்த தகவலை சொன்ன பிறகும், கல்லூரி நிர்வாகம் மறு நாள் 13.11.2018 மாலை தான் அசல் சான்றிதழ்களை ஒப்படைத்து இருக்கிறது! இத்தனை அநீதியாக நடந்து கொண்டதற்கு பிறகும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 12.12.2018 தேதியிட்ட கடிதத்தில் ’அசல் சான்றிதழ்களை நாங்கள் வைத்துக்கொள்வதே இல்லை. சரிபார்த்து விட்டு கொடுத்து விடுவோம்’ என்று சொல்லி முழு பூசணைக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது, சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்.

தானாகவே தற்கொலை செய்து கொண்டார் என முடித்து வைக்க முயற்சி

ஒரே மகனை இழந்த சோகத்தில் இருந்த பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட புகார் என்பதாக ‘தூக்கம் சரியாவராததால் கடந்த 8 ஆண்டுகளாக மருந்து எடுத்துகொண்டு இருந்ததாகவும், அந்த மன வேதனையால், நோய் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார்’ என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இந்த குற்றத்தில் இருந்து சாஸ்த்தா கல்லூரி நிர்வாகத்தை முழுமையாக காப்பாற்ற முயற்சி செய்து இருக்கிறது தாம்பரம் காவல் நிலையம். சமீபத்தில் ஒரு சிறிய ஐ.டி நிறுவனம் வேலை கொடுப்பதாகச் சொல்லி இளைஞர்களை ஏமாற்றி மோசடி செய்கிறது என வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது, அந்த நிறுவனம் அப்படிப்பட்டதுதான் என்று தெரிந்து இருந்தும், காவல் துறை உதவி ஆய்வாளர் அப்படியெல்லாம் புகார் எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி அவர் என்ன சொல்கிறாரோ அதையே புகாராக எழுத வேண்டும் என மிரட்டியது இந்த இடத்தில் நினைவு கூற வேண்டி இருக்கிறது.

அசல் சான்றிதழை கட்டாயமாக வைத்திருப்பது சட்ட விரோதம்

வசந்தவாணனின் தற்கொலைக்கு பிறகு அனைத்து இந்திய தொழில் நுட்பக் கழகமும், அண்ணா பல்கலைக் கழகமும் அனைத்து தனியார் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. ‘அசல் சான்றிதழ்களை சரிபார்த்து விட்டு ஆசிரியர்களிடம் உடனடியாக ஒப்படைத்து விட வேண்டும். மீறுகிற கல்லூரி நிர்வாகங்கள் மீது அனுமதி ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அசல் சான்றிதழ்கள் ஒப்படைத்தது குறித்து டிசம்பர் 17, 2018 க்குள் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என எச்சரித்தது.

இது குறித்து சில தனியார் கல்லூரி ஆசிரியர்களிடம் பேசியபோது, ‘என்ன சுற்றறிக்கை வந்தாலும், கல்லூரி நிர்வாகங்கள், அசல் சான்றிதழை கொடுக்காது. ஆசிரியர்களும் வேலை போய் விடும் என்ற பயத்தில் கேட்க மாட்டார்கள், ஆசிரியர்களிடம் சான்றிதழ்களை கொடுத்து விட்டதாக மிரட்டி கையெழுத்து வாங்குவதும் நடக்கும்’ என்றனர்.

”பலமுறை சுற்றறிக்கை அனுப்பிய பிறகும் பல கல்லூரி நிர்வாகங்கள் அசல் சான்றிதழை கொடுக்காமல் வைத்திருப்பதாக’ ஏ.ஐ.சி.டி.இ தென்மண்டல இயக்குனர் திரு. சுந்தரேசன் கூறுகிறார்.

வசந்தவாணனை தற்கொலைக்கு தூண்டிவிட்ட சாஸ்த்தா நிர்வாகத்தின் மீதான சட்ட நடவடிக்கை

சட்ட விரோதமாக அசல் சான்றிதழ்களை பறித்து வைத்து பேரா.வசந்தவாணனை குண்டர்களை வைத்து தாக்கியும், மிரட்டியும், அவமானப்படுத்தியும், தீரா மனஉளைச்சலை ஏற்படுத்தி, தற்கொலைக்கு தூண்டிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகத்தினர் மீது இன்று வரை ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்பட வில்லை.

இது போன்று பல புகார்கள் வருவதாகவும், கல்லூரி நிர்வாகங்கள் சட்ட விரோதமாக அசல் சான்றிதழ்களை பறித்து வைத்துக்கொள்வதும், சான்றிதழை திரும்ப தருவதற்கு, வருடம் முழுவதும் உழைத்து பெற்ற சம்பளத்தை கூட வாங்கிக்கொள்ளும் அநியாயங்கள் நடப்பதாகவும் கூறுகிறார் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்க தலைவர் திரு. கே.எம். கார்த்திக்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 படி சாஸ்த்தா கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வசந்தவாணன் குடும்பத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பை ஈடுகட்ட 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், சாஸ்த்தா கல்லூரி நிர்வாகத்தை அரசாங்கமே நிர்வகிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு ஒரு பொது நல வழக்கை தொடர்ந்திருக்கிறார்,  திரு. கே.எம். கார்த்திக். வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அனைத்திந்திய தொழில் நுட்பக் கழகம்(AICTE) விளக்கம் அளிக்க மெட்ராஸ் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ ஒரு விசாரணை குழு அமைத்து பேரா. வசந்தவாணனின் பெற்றோரிடம், கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி இருக்கிறது. விசாரணைக்கு முன் நாள் கல்லூரி நிர்வாகம் வசந்தவாணனின் பெற்றோரை அத்துமீறி சந்தித்து சமரசம் செய்ய முயற்சித்து இருக்கிறது.

என்னதான் தீர்வு?

தனியார் கல்வி நிறுவனங்களில் கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் மற்ற பணியாளர்கள் என அசல் சான்றிதழை வாங்கி வைத்துக்கொள்வது என்பது ஒரு பொது போக்காக இருக்கிறது. சான்றிதழை ஒப்படைக்க பல மாத சம்பளத்தை கேட்பதும், கொடுக்க மறுப்பவர்களை மிரட்டுவது, காவல் துறையினர் இது போன்ற புகார்கள் மீது மெத்தனமாக இருப்பதும் யதார்த்தமான ஒன்றாக இருக்கிறது.

அரசு துறை வேலை வாய்ப்புகள் மிக சொற்பமான அளவில் இருக்கிற இந்த கால கட்டத்தில் தனியார் நிறுவனங்களே பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கின்றன. பெரும்பாலான கல்லூரிகள் மிகக் குறைந்த அளவு சம்பளம், அதிகமான வேலை என போதிய ஆசிரியர்களை நியமிக்காமல், ஆசிரியர்களின் உழைப்பை சுரண்டி லாபத்தில் கொழுக்கின்றன.

நியாயமான காரணங்களுக்காக, முறையாக பணி விலகல் கடிதம் கொடுத்தாலும் அசல் சான்றிதழ்களை பறித்துக் கொண்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கையோடு விளையாடுகின்றன கல்லூரி நிர்வாகங்கள். பெரும்பாலான கல்லூரிகள் பெரும் முதலாளிகளாலும், அரசியல் பலம் கொண்டவர்களாலும் நடத்தப்படுகின்றன. இந்த பணபலமும், அதிகார பலமும் கொண்ட தனியார் கல்லூரி நிர்வாகத்தினரை எதிர்கொள்ள முடியாமல் ஆசிரியர்களும், மாணவர்களும் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால், தற்கொலை தீர்வல்ல.

மாறாக, சுயமரியாதை இன்றி அடிமையாக நடத்துகின்ற தனியார் கல்லூரி நிர்வாகத்தின் அதிகார திமிரை ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்று பட்டு எதிர் கொள்ள வேண்டும். அனைத்து துறையிலும் தனியார்மயம் கோலோச்சுகின்ற கால கட்டத்தில், தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிராக, பாதுகாப்பான வேலைக்காக, தகுந்த ஊதியத்திற்காக, சுரண்டல் அற்ற பணியிட சூழலுக்காக நாம் ஒன்று சேர்வது  ஒன்றே நாம் சுயமரியாதை கொண்ட மனிதர்களாக வாழ உதவி செய்யும்.

தமிழக அரசே!

  • சட்ட விரோதமாக அசல் சான்றிதழை பறித்து வைத்து, பேரா.வசந்தவாணனை தற்கொலைக்கு தூண்டிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 படி வழக்கு பதிவு செய்து நிர்வாகிகளை கைது செய்.

அண்ணா பல்கலைக்கழகமே, அனைத்து இந்திய தொழில் நுட்பக் கழகமே!

  • அசல் சான்றிதழ்களை கட்டாயமாக பறித்து வைத்திருக்கிற கல்லூரிகளை அடையாளம் கண்டு அனுமதியை ரத்து செய்!

– பரிமளா, ஃபோரம் ஃபார் ஐ.டி எம்ப்ளாயீஸ், (FITE)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW